சமீபத்தில் வலைத்தளத்தில் வெளிவந்த ஒரு படம் என்னைப் பல கோணங்களில் யோசிக்க வைத்தது. ஒரு மேல் ஓடு முழுவதும் அகற்றப்பட்ட ஆமையின் படம். அதன் கீழ் எழுதபட்ட வாசகம், ‘இன்றைய கால பெண்கள் இதைத்தான் சுதந்திரம் என எண்ணுகின்றனர்.’

சமூகம் பெண்ணின் மீது திணித்துள்ள கட்டுப்பாடுகள் ஆமையின் ஓடாகவும், அந்த ஓட்டைக் கலைந்தால் அது ஆபத்தாகவும், அதைத்தான் சுதந்திரமாகப் பெண்கள் நினைப்பதாகவும் வரையப்பட்ட ஒரு தகவல் படம்.

சுதந்திரம் என்றால் என்ன? பறவையைப் போல எந்தக் கட்டுப்பாடுகளும் இல்லாத, நாளைய தினத்தைக் குறித்த எந்தப் பிரக்ஞையுமின்றி தன் நிகழ்காலத்தின் சந்தோஷங்களை அனுபவித்துப் பறந்து செல்வதுதானே!

சமூகம் கருதுவது போல இங்கு நடைமுறையில் பெண்கள் இருக்கின்றனரா? நவீன யுகத்தில் எங்கோ ஒரு சில பெண்ணின் வாழ்வியல் முறைகளை வைத்துக் கொண்டு பெண் இனமே இப்படித்தான் இருக்கிறது என்று அருதியிட்டுக் கூற முடியுமா?

பேருந்துப் பயணத்தில்கூடத் தன் வீட்டின் நினைவுகளைத்தான் பெண்கள் சுமந்தபடி செல்கின்றனர். ஒரு மழைத்துளி நிலத்தில் விழுவதற்கு முன்பே அவள் தன் குழந்தைகளை மனதில் ஏந்திக்கொள்கிறாள். என் குழந்தைகள் மழையில் என்ன செய்து கொண்டிருப்பார்கள் என்றே கலக்கம் கொள்கிறாள்.

தன்னைப் பற்றிய ஒரு துளிச் சிந்தனையும் இல்லாமல், தன்னைச் சுற்றி நடக்கிற நிகழ்வுகளை அசை போட்டபடி தன் குடும்பத்தின் நலனையும் எதிர்காலத் தேவையையும் சதா சிந்தித்துக்கொண்டிருக்கும் பெண்களுக்கு நீங்கள் கொடுத்து இருப்பது சுதந்திரம்தானா?

பொருளாதார தேவைக்காகத் தற்போது பெண்கள் வேலைக்குச் செல்வது ஒன்றுதான் சுதந்திரம். அதுவும் சொல்லப் போனால் சில இல்லங்களில் அவளின் ஊதியத்தையும் சேர்த்து சுரண்டுவதற்குத் திட்டம் போடப்படுகிறது.

பல இல்லங்களில் பணிக்குச் செல்வதும், வீட்டு வேலைகளைச் செய்வது மட்டுமே பெண்ணின் வேலை. அவளின் வங்கிக் கணக்கிலிருந்து அத்தனை நிர்வாகமும் அந்த வீட்டுத் தலைவனிடம்தான். அவளை மேற்பார்வையிடும் அதிகாரியாக இருப்பது அவனது பணியாக இருக்கிறது

இன்னும் சில வீடுகளில் நிர்வாகத்தைப் பெண்ணிடம் கொடுத்துவிட்டு, அவளைக் கேள்வி மேல் கேள்வி மட்டும் கேட்டு உயிரை வாங்கிக் கொண்டிருப்பது, இன்னொரு வகை மனோபாவம் கொண்ட ஆண்கள்.

என் தலைமுறையின் நிஜம் இதுதானே? நாங்கள் பெண்ணுக்குச் சுதந்திரம் கொடுக்கிறோம் என்று பிதற்றிக் கொண்டிருக்கலாம். தாங்கள் அடிமையாக இருப்பதையே பெண்கள் உணராமல், உணர விடாமல் இந்தச் சமூகம் வைத்து இருக்கிறது. நீங்கள் சுதந்திரம் கொடுத்து இருப்பதே, எங்களை அடிமைத்தனத்தில் இருந்து தப்பாவிடாமல் இருக்க செய்யும் சூட்சுமம்தானே!

சில நாட்களுக்கு முன் என் தோழிக்குத் திருமணம். நானும் மற்றொரு தோழியுமாக அங்கு செல்ல தீர்மானித்திருந்தோம். அவளை அலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியபோது, ‘சரி வரேன்’ என்றாள். நானும் ஆயத்தமாகிவிட்டு மறுபடி அவளைத் தொடர்புகொண்ட போது ‘வரவில்லை’ என்று கூறிவிட்டாள்.

என்னவென்று கேட்ட போது, அவள் கணவன் செல்லக் கூடாது என்று மறுத்துவிட்டதாகச் சொன்னாள். என் தோழி பணிக்குச் சென்று நல்ல சம்பாத்தியத்தில் இருக்கும் பெண். அவளும், என் வாழ்க்கையே இப்படித்தான் என்று புலம்பத் தொடங்கிவிட்டாள்.

“கல்யாணம் முடிஞ்சதுல இருந்து இப்படித்தான் வேலைக்குப் போறதுல இருந்து வீட்டு நிர்வாகம், குழந்தைகள் கடமை வரை எல்லாம் நான்தான் செய்யணும். என் கணவர் எந்த விதத்திலும் இதுல தலையிட மாட்டார். ஆனா, எதைச் செஞ்சாலும் குற்றஞ் சொல்லி வரவு செலவு கணக்கு மட்டும் கேட்பார். எந்தத் தோழிகள் கிட்டயும் பேசக் கூடாது. அப்படியே வீட்டுல இருக்கிறப்ப கால் வந்தாலும் அவர் பக்கத்துல உக்காந்துதான் பேசணும். அவர்கிட்ட இதைப் பத்திக் கேட்டா பாடம் எடுக்க ஆரம்பிச்சிருவார். ‘இப்ப இருக்குற காலம் ரொம்ப மோசம். பொண்ணுங்க என்னவெல்லாம் பண்ணிட்டு இருக்காங்க தெரியுமா? ஒரு கட்டுப்பாடு இல்லை, ஒழுக்கம் இல்லை, புருஷனத் தவிர மற்ற ஆண்கள்கிட்ட பேசிட்டு இருக்காளுங்க. என்னைக்குமே கட்டுப்பாடு இல்லனா அப்படித்தான். வண்டிக்கு கட்டுப்பாடு இருந்ததானே நல்லது” எனப் பொறிந்து தள்ளுவார் என்று சொல்லிக் கொண்டே இருக்கும் போதே, “என் கணவர் வந்துவிட்டார், நீ உடனே கட் பண்ணினா என்ன ஏதுன்னு கேட்டு டார்ச்சர் பண்ணுவார்” என்றாள். நானும் அவர் கணவர் வந்தபின் கொஞ்ச நேரம் வேறு எதையோ பேசிவிட்டு வைத்து விட்டேன்.

அவள் அலைபேசியைத் தூண்டித்ததும், அவளின் நிலைமையும், நான் பார்த்த ஆமையின் புகைப்படமும் என்னை மாற்றி மாற்றி வதைத்தன. எங்கோ ஒரு மூலையில் நடக்கும் ஒரு பெண்ணின் நிகழ்வு வைத்து எல்லாப் பெண்களையும் பொத்தாம் பொதுவாக அடிமைப்படுத்துவது முறைதானா? பணிக்குச் செல்லும் பெண்ணின் நிலைமை இன்னும் பரிதாபம். வீட்டையும் சமாளிக்க வேண்டும், பணியிடங்களில் நடக்கும் அரசியலையும் பஞ்சாயத்தையும் சமாளிக்க வேண்டும். வாங்குகிற ஊதியத்தைக்கூடத் தனக்கென்று ஒரு பொருள் வாங்க முடியாது போனால், பெண்கள் வாழ்கிற வாழ்க்கையின் அர்த்தம்தான் என்ன?

பெண்ணுக்கு என்று தனிப்பட்ட விருப்பு, வெறுப்புகள் இருக்கவே கூடாதா? அவளுக்கென்று நட்பு வட்டம் இருக்கக் கூடாதா? அவளின் அலைபேசியைக்கூட ஆராய்ச்சி செய்யும் ஆண்கள் இருக்கத்தானே செய்கின்றனர். “ஏன், பொண்டாட்டி மொபைல் புருஷன் பார்க்கக் கூடாதா?” என்று ஆதங்கம் வேறு வந்து தொற்றிக் கொள்கிறது ஆண்களுக்கு. மனைவியின் அலைபேசியில் அவளைச் சார்ந்த விஷயம் மட்டும் அல்ல, அவள் தோழியரின் அல்லது பணியிடத்தின் ரகசியங்களும் ஒளிந்திருக்கும் என்று உணர்ந்துகொள்வதில்லை.

கணவன், மனைவி உறவில் கட்டுப்படுகள் தேவையா? காதல் என்ற ஒற்றை உணர்வு தவிர இருவருக்கும் வேறு என்ன விதமான பரஸ்பரத்தைப் பகிர்ந்து கொடுக்க முடியும்? கட்டுப்பாடுகள் பெண்களுக்கு மட்டும்தானா? வண்டிக்குக் கட்டுப்பாடு தேவை என்பது போல பெண்ணுக்குத் தேவையா? பெண்ணும் வாகனமும் ஒன்றா?

எங்கேயாவது ஒருசில பெண்கள் இந்தக் கட்டுப்பாட்டை மீறும்போது அவர்களை இந்தச் சமுதாயம் வாழ விடுகிறதா? இத்தனை கட்டுப்பாட்டையும் பெண்கள் மீது திணித்து சுதந்திரம் என்கிற மேல் போர்வையை மட்டும் போர்த்தி நீங்கள் அழகு பார்ப்பது முறையா? இது சுதந்திரம் ஆகுமா?

எங்களையும் சக மனித இனமாக மதியுங்களேன் என்பதுதான் பெண்களின் விருப்பம். கட்டுப்பாடில்லாத காதல்தான் செய்வோமே!