“சாதியம் 135 கோடி மக்களைத் தொடுகிறது. நூறு கோடி பேரைப் பாதிக்கிறது. 80 கோடி மக்களை மோசமாக பாதிக்கிறது. 50 கோடி மக்களின் அடிப்படை கண்ணியத்தை சூறையாடுகிறது.” சூரஜ் யங்க்டேவின் ‘சாதியைப் பேசத்தான் வேண்டும்’ என்கிற நூலில் வரும் வரிகள் இவை. சாதிய மனப்பான்மையால் இந்தியாவில் எத்தனை பேர் எப்படியெல்லாம் பாதிக்கப்படுகிறார்கள் என்பதை அவர் இவ்வாறு சுருக்கமாகக் குறிப்பிடுகிறார். “நம்முடைய அன்றாட வாழ்வைப் பொறுத்தவரை சாதி என்பது திரையரங்கில் நமக்கான இருக்கையைக் கண்டுபிடிக்க உதவும் பணியாளரைப் போல செயல்படுகிறது. நாம் எங்கே அமர வேண்டும், நிகழ்வுகளை எங்கிருந்து கவனிக்க வேண்டும் என்று சாதிதான் காட்டித் தருகிறது” என்கிறார் அறிஞர் ரித்வஜித் தாஸ். சமூகப் பங்களிப்பு, முடிவுகள் எடுக்கும் அதிகாரம், வர்க்கம் போன்ற பல்வேறு அம்சங்களுக்குப் பின்னால் ஒரு முக்கியக் காரணியாக சாதி ஒளிந்திருக்கிறது. ஆகவே அந்தச் சாதியைச் சூழலோடும் பால் படிநிலைகளோடும் நிச்சயமாகப் பொருத்திப் பார்க்க வேண்டும்.

சாதிக்கும் சூழலுக்கும் உள்ள பிணைப்பு மிகவும் இறுக்கமானது. இந்தியச் சூழலில் நிலம், நீர், தீ, காற்று, வானம், திசைகள், ஒலி, ஒளி, தாவரங்கள், உயிரினங்கள் போன்ற பல்வேறு இயற்கை அம்சங்களின்மீது சாதிக் கறை பூசப்பட்டிருக்கிறது. தூய்மை-அழுக்கு, நல்லது-கெட்டது போன்ற பல்வேறு இருமைகள் சூழல்சார்ந்த அம்சங்கள் மீது ஏற்றிவைக்கப்படுகின்றன. சாதிதான் ஒரு புல் வகையைப் புனிதமானதாகவும் அறிவார்ந்த ஒரு பறவையை இழிவானதாகவும் கட்டமைக்கிறது. சூழல் கூறுகளுக்குத் தரப்படும் பெயர்கள் தொடங்கி, பயன்படுத்தும் முறை வரை எல்லா நிலைகளிலும் சாதியம் எவ்வாறு வெளிப்படுகிறது என்பதை எழுத்தாளர் நக்கீரனின் ‘சூழலும் சாதியும்’ வழியே தெளிவாகத் தெரிந்துகொள்ளலாம். தன்னைச் சுற்றியிருக்கும் சூழலை ஒருவர் எப்படி அணுகுகிறார் என்பதே சாதியின் மூலமாக மாற்றியமைக்கப்படுகிறது. இன்னும் ஆழமாக கவனித்தால், ஒருவரைச் சுற்றியிருக்கும் சூழல் எப்படிப்பட்டது என்பதையே சாதிதான் தீர்மானிக்கிறது. ஆகவே சூழலியல் தளத்தில் சாதியைப் பற்றிப் பேசுவது மிகவும் முக்கியமானது.

நிலம், நீர், விவசாயம் பற்றிய அம்பேத்கரின் எழுத்துகள் சூழலுக்கும் சாதிய அநீதிக்குமான பிணைப்பை மிகத் துல்லியமாக வெளிப்படுத்துகின்றன. 1927இல் அவர் முன்னெடுத்த மகத் சத்தியாகிரகம் நீர் உரிமைப் போராட்டம் மட்டுமல்ல, சூழல் சமத்துவத்துக்கான, சூழல் சமூகநீதிக்கான போராட்டமும்கூட. இன்றும்கூட ஒடுக்கப்பட்டவர்களால் நிலம், நீர், காடுகள் போன்றவற்றைச் சுதந்திரமாக அணுகிப் பயன்படுத்த முடிவதில்லை. அவற்றை உடைமையாக்கிக்கொள்ளும் சொத்துரிமை அவர்களுக்கு மறுக்கப்படுகிறது. இதுபற்றிய முடிவுகளை எடுக்கும் பிரதிநிதித்துவமும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்படுவதில்லை. ஆகவே நிலம், நீர், காடுகள், பொது சுகாதாரம் ஆகியவற்றுக்கான ஒடுக்கப்பட்டவர்களின் உரிமைக்குரல்களையும் போராட்டங்களையும் சூழல்சார்ந்த போராட்டங்களாகவே பார்க்க வேண்டும்.

தலித் சூழல் பெண்ணியம் (Dalit Ecofeminism) பற்றிய விவாதத்தை நாம் வளங்களை அணுகும் உரிமையிலிருந்து தொடங்க வேண்டும். சாதியம் புரையோடிப் போயிருக்கும் பல இந்திய கிராமங்களில் நீர் உரிமை ஒரு பெரிய பிரச்னையாக இருக்கிறது. அன்றாடப் பயன்பாட்டுக்கான நீர் ஆதாரங்கள் அனைத்துச் சாதியினருக்குமானவையாக இருப்பதில்லை. ஒடுக்கப்பட்ட மக்களுக்கான தனி கிணறுகள் அல்லது குடிநீர்த் தொட்டிகள் போன்றவை ஊருக்கு வெளியில் தனியாக வைக்கப்படுகின்றன. இதனால் ஒடுக்கப்பட்ட சாதிகளைச் சேர்ந்த பெண்கள் தண்ணீருக்காக அதிக தூரம் நடக்க வேண்டியிருக்கிறது. ஊரின் மையப் பகுதியில் அரசாங்கம் அமைத்திருக்கும் பொதுக் குழாய்களைப் பயன்படுத்தவும் இவர்கள் அனுமதிக்கப்படுவதில்லை. சில ஆண்டுகளுக்கு முன்னால் தண்ணீர்ப் பிரச்னை இருக்கும் 100 இந்திய கிராமங்களில் ஓர் ஆய்வு நடத்தப்பட்டது. அதில் 48.4% கிராமங்களில் தலித்துகளுக்குப் பொது நீர் ஆதாரங்களைப் பயன்படுத்த அனுமதி இருக்கவில்லை. நீர்த்தட்டுப்பாடு இருக்கும் கிராமங்களில்கூட, இருக்கும் கொஞ்சநஞ்ச நீரையும் யாரெல்லாம் பயன்படுத்தலாம் என்பதைச் சாதியே முடிவு செய்கிறது. இந்தியச் சூழலில் சாதி எந்த அளவுக்கு அதிகாரம் செய்கிறது என்பதையே இது காட்டுகிறது.

விவசாயம் செய்வதற்கான நில உரிமை பெரும்பாலும் ஒடுக்கப்பட்டவர்களுக்கு இருப்பதில்லை. அவர்கள் கூலிகளாக மட்டுமே சுருக்கப்படுகிறார்கள். 2013இல் வெளிவந்த ஓர் ஆய்வில், இந்தியாவில் இருக்கும் ஒடுக்கப்பட்டவர்களில் 60% பேர் நிலமற்றவர்கள் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த 60 சதவீதத்தில் கிராமத்தில் வசிப்பவர்கள் அனைவருமே விவசாயக் கூலிகளாக இருப்பவர்கள்தாம். அன்றாடம் நிலத்தில் உழைக்கும் இவர்களுக்கு நிலம் சொந்தமாக இருப்பதில்லை. ஒருவேளை நிலம் கிடைத்துவிட்டால்கூட அதற்கான பாசன வசதிக்கான உரிமை என்று எல்லா வளங்களுக்கும் ஒடுக்கப்பட்டவர்கள் போராட வேண்டும். சில வட இந்திய மாநிலங்களில், ஊருக்குள் நிலம் வைத்திருக்கும் ஒடுக்கப்பட்டவர்கள், ஊருக்கு வெளியே தள்ளி இருக்கிற, தங்களுக்கான கிணறுகளில் இருந்து நீர்ப்பாசனம் செய்துகொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள். நில உரிமை இருந்தாலும் அவர்களுக்கு நீர் உரிமை கிடைப்பதில்லை. அத்தனை தூரத்தில் இருந்து நீர் வரும்போதும் அந்த நீர்க்குழாய்கள் ஆதிக்க சாதியினரின் வயல்வெளி வழியாகச் செல்லக் கூடாது என்கிற கட்டுப்பாடும் இருக்கிறது.

உணவு, உடை, உறைவிடம், நீர் போன்ற அன்றாட, அடிப்படைத் தேவைகள் நிறைவேறுகின்றனவா, அவற்றின் தரம் என்ன என்பதையெல்லாம் தங்களுடைய சாதிதான் தீர்மானிக்கிறது என்பதால், கிராமங்களைச் சேர்ந்த தலித் பெண்கள் உச்சபட்ச ஒடுக்குமுறைக்கு ஆளாகிறார்கள். இவர்களில் பெரும்பாலானோர் விவசாயக் கூலிகளாக இருப்பவர்கள், இவர்களது பணிச்சூழலிலும் சாதி மற்றும் பாலின வன்முறை மிக அதிகமாக இருக்கிறது. சாதி, பால், வர்க்கம் ஆகிய மூன்றுவிதமான படிநிலைகளிலும் இவர்கள் ஒடுக்குமுறையையும் சுரண்டலையும் எதிர்கொள்கிறார்கள்.

நகர்ப்புற சூழலியல் (Urban Ecology) என்று வரும்போது திடக்கழிவு மேலாண்மையில் ஒடுக்கப்பட்டவர்கள் மீதான சுரண்டல் அதிகமாக இருக்கிறது. சமீபகாலமாக ஒவ்வொரு பெருநகரத்தையும் ஸ்மார்ட் சிட்டியாக மாற்றும் போக்கு அதிகரித்துவரும் நிலையில், ஒரு நகரத்தைத் தூய்மையாக வைத்திருப்பதில் ஒடுக்கப்பட்ட பெண்களின் பங்களிப்பு என்ன என்பதையும் பேசவேண்டியிருக்கிறது. ஓர் உதாரணத்துக்குச் சொல்ல வேண்டுமென்றால், அகமதாபாத்தில் இருக்கும் தூய்மைப் பணியாளர்களில் 95 சதவீதத்தினர் தலித் பெண்கள்தாம் என்கிறது ஓர் ஆய்வு. முக்கிய இந்திய நகரங்களில் தூய்மைப் பணியாளர்களில் பெரும்பாலானோர் தலித் பெண்களே என்றும் அந்த ஆய்வு தெரிவிக்கிறது. சாதிய மேலாதிக்கம் தூய்மைப்படுத்துவதை ரொமாண்டிசைஸ் செய்கிறது ‘தன்னலமற்ற சேவை’ என்றெல்லாம் அதைத் திரித்து, ஒடுக்கப்பட்டவர்களின் மீதான சுரண்டலை நியாயப்படுத்துகிறது. உண்மையில், ‘ஒடுக்கப்பட்டவர்கள் அசுத்தமானவர்கள், அவர்கள் அழுக்கிற்கு அருகில் இருப்பவர்கள்’ என்பது போன்ற நம்பிக்கைகளே தூய்மைப் பணியில் இருக்கும் இந்தச் சாதிரீதியான சுரண்டலுக்குக் காரணம் என்கிறார்கள் சமூகவியலாளர்கள். இதை ‘Naturalising the proximity of Dalits to filth’ – அதாவது, ‘இயல்பிலேயே தலித் மக்கள் அழுக்குக்கு அருகில் இருப்பவர்கள் என்று கட்டமைப்பது’ என்கிறார் ஆராய்ச்சியாளர் இந்துலதா ப்ரசாத். இதே மனநிலைதான் மலம் அள்ளும் தொழிலை நியாயப்படுத்தவும் பயன்படுகிறது. இருக்கிற சாதியக் கட்டமைப்பை அப்படியே வைத்துக்கொண்டு தூய்மையான நகரங்களை நோக்கி நாம் பயணிக்கும்போது, சமூகரீதியாகவும் பாலினரீதியாகவும் ஒடுக்கப்பட்டவர்கள் எல்லாமே மிக அதிகமாக பாதிக்கப்படுவார்கள்.

என் மீது கடுமையான உழைப்பின் நாற்றம் வீசுகிறது

உடல் உழைப்பு, போராட்டம்.

என் அம்மா

அம்மாவின் அம்மா

அம்மாவின் அம்மாவின் அம்மா

ஆகியோரைப் போலவே

என்னையும் இந்த நாற்றம் பின்தொடர்கிறது

எனக்குக் கையளிக்கப்பட்டது இதுதான்

நான் இதைக் கைவிடமாட்டேன்

எல்லா இடங்களிலும்

நான் கைக்குட்டைகளால் வரவேற்கப்படுகிறேன்

கைக்குட்டைகள்

ஸ்கார்ஃபுகள்

போர்வைகள்

புடவைகள்

கைகள்

எதன்மூலமாவது

மூக்கைப் பொத்திக்கொண்டுதான் என்னை வரவேற்கிறார்கள்…

என்று எழுதுகிறார் கவிஞர் மீனா கந்தசாமி. தலித் மக்களுக்கு அழுக்குக்குமான அருகாமையை இந்தச் சமூகம் நியாயப்படுத்திக்கொண்டே இருக்கிறது. இந்தப் பொதுப்பார்வை பல்வேறு விதங்களில் வெளிப்படுகிறது. ஒரு பெருநகரத்திலோ கிராமத்திலோ ஒடுக்கப்பட்டவர்களின் குடியிருப்புகள் எங்கே இருக்கின்றன, அவை இருக்கும் சூழல் என்ன என்பதை உற்றுக் கவனித்தால் நமக்குப் பல விஷயங்கள் புலப்படும். நகரங்களை அழகுபடுத்தும் திட்டங்களின்போது முதலில் வெளியேற்றப்படுபவர்கள் ஒடுக்கப்பட்டவர்களே. பசுமை வெளிகள் நிறைந்த நகரங்களின் மையப்பகுதியில் அவர்களால் வசிக்க முடிவதில்லை என்பதால் அவற்றிலிருந்து கிடைக்கும் சூழல் பயன்களிலிருந்தும் (Environmental benefits) ஒடுக்கப்பட்டவர்கள் மறைமுகமாக விலக்கி வைக்கப்படுகிறார்கள். சூழல் பேரிடர்களின்போதும் இந்தக் கருத்துகள் வெளிப்படுகின்றன என்பதை ஆய்வுகள் உறுதி செய்திருக்கின்றன. உதாரணமாக, சுனாமி பாதிக்கப்பட்ட பகுதிகளில் பிணங்களை அப்புறப்படுத்தும் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டவர்களில் பெரும்பாலானோர் ஒடுக்கப்பட்டவர்கள் என்றும், அவர்களுக்குப் போதுமான பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்படவில்லை என்றும் ஓர் ஆய்வு தெரிவிக்கிறது.

காலநிலை சார்ந்த பேரிடர்களில் மிகவும் அதிகமாக பாதிக்கப்படுபவர்கள் ஒடுக்கப்பட்டவர்களே. ஒரு காலநிலைப் பிரச்னை வந்தால் பிற சாதியினர் அங்கிருந்து வெளியேறுவதைவிட, ஒடுக்கப்பட்டவர்கள் வெளியேறுவதற்கான சாத்தியக்கூறுகளே அதிகம் என்கின்றன ஆய்வுகள், அதிலும் ஒரு சில இடங்களில் ஒப்பீட்டளவில் பார்த்தால் ஒடுக்கப்பட்டவர்கள் புலம்பெயர்வதன் சாத்தியக்கூறுகள் மூன்று மடங்கு அதிகமாம். இப்படி வெளியேறுபவர்கள் யார் என்பது முக்கியமானது, குடும்பமாக வெளியேறுபவர்கள் சந்திக்கும் பிரச்னை வேறு, ஒரு குடும்பத்தின் ஆண் மட்டும் புலம்பெயரும்போது வரும் பிரச்னை வேறு. இந்தப் புலம்பெயர் நிகழ்வுகள் அனைத்துமே அந்தப் பெண்களை அதிகமாகப் பாதிக்கும் என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

ஒடுக்கப்பட்டவர்கள் வசிக்கும் பகுதிகள் ஊருக்கு வெளியில் இருக்கின்றன என்பதால் அவர்களுக்கான நிவாரணம் உடனடியாகக் கிடைப்பதில்லை. அவர்களது வேலைகள் சூழல் சார்ந்தவையாக இருப்பதால் உடனடியாக அவர்களின் வாழ்வாதாரம் அழிந்துவிடுகிறது. நிவாரண முகாம்களில் அவர்கள் தங்கவும் சமூக சூழல் அனுமதிப்பதில்லை. 2009இல் கிருஷ்ணா நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டபோது நிவாரண உதவிகளை வழங்குவதில் கடுமையான சாதிப் பாகுபாடு இருந்ததை உறுதிப்படுத்துகிறார் ஆய்வாளர் சவிதா ஹிரமத். கஜா புயலுக்குப் பின்னான சூழலில் சாதி ஏற்றத்தாழ்வுகள் நிவாரணப் பணிகளை எந்த அளவுக்கு பாதித்தன என்பதை நாம் படித்திருக்கிறோம். ஒரு பேரிடரில் இருந்து மீண்டெழுவதற்கு நல்ல வாழ்வாதாரம் அவசியம், அதையும் சமூகம் அவர்களுக்கு வழங்குவதில்லை. பொதுவாகவே பிரச்னைகளிலிருந்து தற்காத்துக்கொள்வதற்கான நிதி மற்றும் சமூகப் பின்புலம் (Financiel and Social Capital) இவர்களுக்கு இருப்பதில்லை, ஆகவே பாதிப்புகள் அதிகமாகின்றன.

சூழலியலை ஓர் அறிவியல் புலமாக மட்டுமே பார்ப்பதும் ஒரு சூழலைப் பாதுகாப்பது மட்டுமே சூழல் செயல்பாடு என்கிற புரிதலோடு இயங்குவதும் ஆபத்தான போக்குகள். சமூகப் பார்வை இல்லாத சூழல் பாதுகாப்பு மிகப்பெரிய பிரச்னைகளை உருவாக்கும். இந்தியாவின் சூழல் பாதுகாப்பு இயக்கங்களின் பல ஆரம்பகட்ட செயல்பாடுகள் அப்படிப்பட்டவையே. இந்த இயக்கங்கள் காலனியப் பார்வையோடு சூழல் பாதுகாப்பை அணுகின. இந்திய சமூகத்தில் இருக்கும் சாதி மற்றும் பால் ஏற்றத்தாழ்வுகளைக் கணக்கில் எடுத்துக்கொள்ளாமல் இவை செயல்பட்டன. அது மட்டுமில்லாமல் அந்த இயக்கங்களின் முக்கியமான பொறுப்புகளில் ஆதிக்க சாதியினரே அதிகம் இருந்தனர். ஆகவே சூழல் செயல்பாடுகளிலும் அந்த ஆதிக்க மனப்பான்மை வெளிப்பட்டது. இதனால் ஆரம்பகட்ட சூழல் பாதுகாப்பு இயக்கங்கள்மீது ஒடுக்கப்பட்டவர்களுக்குக் கடும் அதிருப்தி இருந்ததை கெயில் ஓம்வேத் உள்ளிட்ட அறிஞர்கள் பதிவு செய்திருக்கின்றனர். அந்த மோசமான சூழல் இப்போது கொஞ்சம் கொஞ்சமாக மாறிவருகிறது. தற்போதைய சுழலியலாளர்கள் பலரும் சமூக-அரசியல் பார்வையோடு சூழலியலை அணுகுகிறார்கள். இது ஆரோக்கியமான போக்கு. இது தொடரவேண்டும்.

சூழல்-சாதி-பெண் ஆகிய மூன்று களங்களும் இணையும் புள்ளியில் சில பிரச்னைகளை மட்டுமே பேசியிருக்கிறோம். ஒடுக்கப்பட்ட பெண்களுக்கும் சூழலுக்குமான உறவு எப்படிப்பட்டது, இந்த உறவு அவர்களின் வாய்மொழி இலக்கியத்தில் எப்படி வெளிப்படுகிறது, புலம்பெயரும் ஒடுக்கப்பட்ட பெண்களின் நிலை என்ன, மத அடிப்படைவாதம் பெருகிவரும் நிலையில் ஒடுக்கப்பட்ட பெண்களுக்கான சூழல் சமூகநீதி எப்படி இருக்கும் என்று பல தொடுகோடுகளில் நாம் விவாதங்களை முன்னெடுக்க முடியும்.

சாதி மற்றும் ஆண்மைய சமூகம் ஆகிய இருவேறு கடும் ஒடுக்குமுறைகளால் பாதிக்கப்படும் தலித் பெண்கள், இருவேறு விதங்களில் பாதிக்கப்படுகிறார்கள். இவர்களுக்கு ஒரு நல்ல சூழலின் பயனும் கிடைப்பதில்லை, சூழல் சீர்குலைவால் ஏற்படும் பிரச்னைகளையும் அவர்கள் சுமக்க வேண்டியிருக்கிறது. சூழல் பேரிடர்களின்போது அதிகமாக பாதிக்கப்படுவதும், பாதிப்புக்கு ஏற்ற நிவாரணம் கிடைக்காமல் அதிகமாகக் கஷ்டப்படுபவர்களும் இவர்கள்தாம். ஆனால், காலநிலை மாற்றம் அல்லது சூழல் சீர்குலைவை உருவாக்கியவர்கள் இவர்கள் அல்லர். அதாவது, காரணத்தில் பங்குபெறாமலேயே இவர்கள் பின்விளைவைச் சுமக்கிறார்கள். இந்தப் பின்னணியில் யோசித்தால் இது எத்தனை பெரிய சூழல் அநீதி என்பது புரியும். இயற்கை வளங்களை அணுகவும் பயன்படுத்தவுமான உரிமை, ஒரு சூழலின் பயன்களைப் பெறுவதில் சமத்துவம், போதுமான பிரதிநிதித்துவம், முடிவுகள் எடுக்கும் அதிகாரம், சூழல் பாதிப்பின்போது அளவுக்கதிமான பாதிப்புகளை சுமக்காமல் இருப்பது, போதுமான சட்டப் பாதுகாப்பு ஆகிய எல்லாமே ஒடுக்கப்பட்டவர்களுக்கு இருந்தால் மட்டுமே சூழல்சார்ந்த சமூக நீதியை நாம் உறுதிப்படுத்த முடியும்.

வெவ்வேறு தளங்கள் மற்றும் கோணங்களில் பெண்களுக்கும் சூழலுக்குமான தொடர்பைப் பேசியிருக்கிறோம். இதை அடிப்படையாக வைத்து எதிர்காலத்துக்கான சரியான சூழல் செயல்பாட்டுத் திட்டத்தை உருவாக்க முடியுமா? அது எப்படிப்பட்டதாக இருக்க வேண்டும்?

(அடுத்த வாரம் நிறைவுபெறும்)

படைப்பாளர்:

நாராயணி சுப்ரமணியன்

கடல் சார் ஆய்வாளர், சூழலியல் ஆர்வலர் மற்றும் எழுத்தாளர் என்ற பன்முக ஆளுமை இவர். தமிழ் இந்து உள்ளிட்ட முன்னணி இதழ்களில் சூழலியல், கடல் வாழ் உயிரினங்கள் குறித்து தொடர்ச்சியாக எழுதி வருபவர். ஹெர் ஸ்டோரிஸில் இவர் எழுதிய ‘விலங்குகளும் பாலினமும்’ தொடர் புத்தகமாக வெளிவந்து, சூழலியலில் மிக முக்கியமான புத்தகமாகக் கொண்டாடப்படுகிறது!