வானவில்லின் எல்லா நிறங்களிலும் குடங்களை வைத்துக்கொண்டு லாரியிலிருந்து தண்ணீர் பிடிக்கும் பெண்களின் படங்கள், பல நூறு அடி ஆழமான கிணற்றுக்குள் ஒரு சிறு கயிற்றில் குடத்தை இறக்கி எட்டிப் பார்க்கும் வட இந்தியப் பெண், தலைக்கு மேல் உடைந்த ப்ளாஸ்டிக் கேன்களைச் சுமக்கும் ஆப்பிரிக்கப் பெண்கள் என்று பல படங்களை நாம் பார்த்திருப்போம். இந்தப் படங்கள் எல்லாமே நீர்ப் பிரச்னை என்ற ஒரு பிரம்மாண்டப் பனிப்பாறையின் நுனியைத்தான் காட்டுகின்றன. நீர் என்பது வெறும் நீரல்ல. அது ஒரு அதிகார மையமாக, ஒடுக்குமுறைக்கான களமாக, பண்டமாக, சுரண்ட வேண்டிய வளமாக, அரசியல் விளையாட்டுக்கான தளமாக, இன்னும் என்னென்னவெல்லாமாகவோ மாறிவிட்டது. அதில் பெண்களுக்கும் நீருக்குமான தொடர்பு மிகவும் சிக்கலானதாக இருக்கிறது என்பதால் அதை விரித்துப் பேசிக்கொண்டிருக்கிறோம்.

இந்தப் பிரச்னையில் சாதியப்படிநிலைகளையும் சேர்த்துப் பார்த்தால் நிலைமை இன்னும் மோசமானதாக இருக்கிறது. சாதிய அடக்குமுறை அதிகமாக இருக்கும் பகுதிகளில் மற்ற பெண்களோடு ஒப்பிடும்போது ஒடுக்கப்பட்ட சாதியைச் சேர்ந்த பெண்கள் கூடுதலான நேரம் செலவழித்தால் மட்டுமே நீர் சேகரிக்க முடிகிறது. இந்த இடங்களில் நீர்நிலைகளிலும் சாதி வேற்றுமை பாராட்டப்படுகிறது என்பதால் தங்களது சாதியினருக்கு ஒதுக்கப்பட்ட நீர்நிலைகளில் மட்டுமே ஒடுக்கப்பட்ட பெண்களால் நீர் சேகரிக்க முடிகிறது, அதற்காகக் கூடுதல் நேரம் செலவழிக்கும் நிலையும் ஏற்படுகிறது. “இவ்வளவு பாடுபட்டு இவர்கள் சேகரிக்கும் நீர் சில நேரத்தில் அசுத்தமானதாகக்கூட இருக்கும், ஆதிக்க சாதியினரின் சுத்தமான நீர்நிலைகளைப் பயன்படுத்த முடியாது என்பதால் வேறு வழியின்றி அசுத்தமான நீரையே அவர்கள் பயன்படுத்துகிறார்கள்” என்று தனது ஆய்வுக்கட்டுரையில் எழுதுகிறார் சுல்தானா.

இந்தப் பின்னணியில் சமீபத்தில் புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயலில் நடந்த நிகழ்வை நினைத்துப் பார்க்கலாம். சாதிரீதியாகத் தனித்தனி குடிநீர்த் தொட்டிகள், ஒடுக்கப்பட்டவர்களின் நீர்த்தொட்டியில் மலம் கலக்கப்பட்டது என்று பெரிய நீர் அதிகாரம் ஒன்று அங்கு இயங்கியிருக்கிறது. அந்த நிகழ்வு நடந்த பின்பு ஊடகங்களில் வெளியான பல செய்திகளில் அங்கு வசிக்கும் பெண்களின் பேட்டியே முன்னிறுத்தப்பட்டது. “எதுவும் தெரியாமலேயே எங்கள் குழந்தைகளுக்கு நச்சுக் கலந்த நீரைக் கொடுத்திருக்கிறோம், வருத்தமாக இருக்கிறது” என்று அந்த ஊர்ப் பெண்கள் கவலையோடு தெரிவிக்கிறார்கள். பெண்-சாதி-நீர் என்ற மூன்று அம்சங்களும் இணையும் புள்ளி இது.

சாதி, வர்க்கம், வசிக்கும் பகுதிகளின் ஆண்மைய மனப்பான்மை ஆகிய எல்லாவற்றையும் பொறுத்து பெண்களின்மீதான நீர்ச்சுமை அதிகரிக்கிறது. இந்தப் படிநிலைகள் நீங்கலாகப் பார்த்தாலும் நீர்ப் பிரச்னைகளால் அதிகமாகப் பாதிக்கப்படுவது பெண்கள்தாம். “உலக அளவில் நீர்த் தட்டுப்பாடு உள்ள பகுதிகளைச் சேர்ந்த 80% குடும்பங்களில் நீர் சேகரிப்பது பெண்களின் தனிப் பொறுப்பாகத்தான் இருக்கிறது. ஆனால், உலக அளவில் நீர் பற்றிய முடிவுகளை எடுக்கும் அதிகாரமிக்க பதவிகளில் 17% மட்டுமே பெண்கள்” என்கிறது ஐக்கிய நாடுகள் அறிக்கை ஒன்று.

நமது நீர்க்காதையின் இரண்டாவது பகுதி இந்த முரணிலிருந்துதான் தொடங்குகிறது. இந்த அறிக்கை 2004ஆம் ஆண்டு வெளிவந்தது என்றாலும் இப்போதும் நிலைமை அவ்வளவாக முன்னேறவில்லை என்பதை அனைவராலும் எளிதில் யூகித்துவிட முடியும். வீடுகளில் நீரைச் சேகரிப்பது பெண்களின் அன்றாடப் பணிகளில் ஒன்றாக இருக்கிறது, பல கிலோமீட்டர் தூரம் நடந்து பெண்கள் நீர் சேகரிக்கிறார்கள், அதனால் கஷ்டப்படுகிறார்கள். ஆனால், நீர்நிலைகள் உருவாக்குவது, செப்பனிடுவது, குடிமராமத்து, நீர்க்குழாய்கள் அமைப்பது போன்ற முடிவுகளை எடுக்கும்போது அவர்கள் கலந்து ஆலோசிக்கப்படுவதில்லை. கிராமப்புற குழுக்கள் மட்டுமல்லாது மாவட்ட, மாநில, தேசிய அளவிலான செயல்பாடுகளில் அவர்களுக்குப் போதுமான பிரதிநிதித்துவமும் வழங்கப்படுவதில்லை.

சமூகப்படிநிலைகளோடு சேர்த்துப் பார்த்தால் நிலைமை இன்னும் மோசம். 1997இல் வெளியான ஓர் இந்தியக் கட்டுரையில், கிராமப்புற நீர் தொடர்பான முடிவுகளை எடுக்கும் தேசிய அளவிலான குழுக்களில் ஒரு தலித் பெண்கூட இல்லை என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. பிற சாதிப் பெண்கள் என்று எடுத்துக்கொண்டால்கூட மொத்தம் இரண்டு பேர்தான் அதிகாரமையத்தில் இருந்திருக்கிறார்கள். இந்தக் குழுக்களில் உறுப்பினர்களை நியமிக்கும் மூத்த அதிகாரிகளிடம் பேசியபோது, “இதென்ன பாலினம் பற்றியெல்லாம் பேசுகிறீர்கள்? பால் வேற்றுமை என்பதெல்லாம் மேலை நாடுகளின் கருத்தாக்கம். நம்முடைய கிராமப்புறங்களுக்கு அது சரிப்பட்டு வராது” என்று அவர்கள் பதிலளித்ததாகக் கட்டுரையாளர் தெரிவிக்கிறார்.

இந்தியாவின் தேசிய நீர்க் கொள்கையின் (2002) முதற்கட்ட ஆவணத்தில் பெண்களின் தனித்துவமான நீர்ப்பிரச்னைகள் பற்றிய குறிப்புகள் இல்லை என்பதும் தேசிய மகளிர் கொள்கையில் மட்டுமே பெண்களுக்கும் நீருக்குமான தொடர்பு பற்றிப் பேசப்படுகிறது என்பதும் கவனிக்கத்தக்கது. நீர் பற்றிய பொது விவாதங்களில் பெண்களின் துயரங்கள் பேசப்படுவதில்லை என்பதையே இது காட்டுகிறது.

ஆவணங்களிலும் பதவிகளிலும் தங்களுக்கான உரிமைகள் மறுக்கப்பட்டிருந்தால்கூட, பெண்கள் தொடர்ந்து நீருக்கான குரலை எழுப்பிக்கொண்டே இருக்கிறார்கள். பதானில் ராணி கி வாவ் கிணறு, அதலஜ்ஜின் ருதாபாய் கிணறு, அசர்வாவின் பாய் ஹரீர் கிணறு போன்ற நீர் ஆதாரங்களை உருவாக்கிய பண்டைய அரசிகள், நீர் உரிமைக்கான போராட்டத்தில் கொல்லப்பட்ட தோழர் லீலாவதி, கலிபோர்னியாவில் மாசுபட்ட நிலத்தடி நீரால் பாதிக்கப்பட்ட மக்களின் பக்கம் நின்று வழக்காடிய எரின் ப்ரோக்கோவிச் என்று அந்தப் பட்டியல் மிகவும் பெரியது.

இவ்வளவு ஏன், நகைச்சுவைத் துணுக்குகளில் வெகுவாக இழிவுபடுத்தப்படுகிற பெண்களின் குழாயடி சண்டைகூட நீருக்கான உரிமைப் போரட்டம்தான். தனக்கு வேண்டிய நீரைப் பெற ஒரு பெண் உரத்துக் குரல் எழுப்புவது பொதுச் சமூகத்தால் கேலிக்குரியதாகப் பார்க்கப்படுகிறது, அதே சமூகம், நீர்ப் பிரச்னையைத் தீர்ப்பதிலோ, “என்ன செய்தால் உங்கள் கஷ்டம் தீரும்?” என்று பெண்களிடம் கேட்பதிலோ ஆர்வம் காட்டுவதில்லை.

தனிப்பட்ட குரல்களாக இல்லாமல் நீர்ப் பிரச்னைக்காக ஒன்றுதிரண்டு பெண்கள் வெற்றிபெற்ற பல நிகழ்வுகள் உண்டு. 2011இல் உத்தரப் பிரதேசத்தின் பண்டல்ஹாண்ட் பகுதியில் உள்ள 60 கிராமப் பஞ்சாயத்துகளைச் சேர்ந்த பெண்கள் ஒன்றுசேர்ந்து, Jal Saheli என்ற பெயரில் 96 நீர்ப் பஞ்சாயத்து அமைப்புகளை உருவாக்கினர். பெரும்பாலும் தலித் பெண்களைக் கொண்ட இந்த அமைப்புகளில் ஒட்டுமொத்தமாக மூவாயிரம் பெண் உறுப்பினர்கள் இருக்கிறார்கள். நீர்நிலைகளைச் சரிசெய்வது, புதிய குளங்களை வெட்டுவது, அரசுக்கு அழுத்தம் கொடுத்து நீர் வளம் பெருக்குவது, குடிநீர்க் குழாய்கள் அமைப்பது என்று எல்லா விதங்களிலும் இவர்கள் நீர்ப் பாதுகாப்பை உறுதிசெய்கின்றனர்.

ராணி கிணறு

1980களில் கர்நாடகாவின் கோலார் மாவட்டத்தில் பெண்கள் கூட்டமைப்பு ஒன்று உருவாக்கப்பட்டது. இதன்மூலம் இன்றும் நீர்நிலைகள் தொடர்ந்து மேலாண்மை செய்யப்படுகின்றன. ஒடிசாவின் நீர்ப் பயன்பாட்டுக் குழுவினர், குடிநீர்க் குழாய்கள் அமைத்துத் தருகிற மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த பிபாரா கிராமத்தின் மகளிர் சுய உதவிக் குழுக்கள், அரசுக்குத் தொடர்ந்து அழுத்தம் தந்து நீர்நிலைகளைச் சுத்தம் செய்யவைத்த போத்தாபத்தரின் மகளிர் சுய உதவிக்குழு எனப் பல்வேறு மகளிர் கூட்டமைப்புகள் நீருக்காகப் போராடி வருகின்றன. பிற உலக நாடுகளிலும் பெண்களுக்கான பல கூட்டமைப்புகள் நீர்சார்ந்த பிரச்னைகளில் கவனம் செலுத்துகின்றன. அதிகார மையத்தில் பெண்களின் பிரதிநிதித்துவம் அதிகரிக்கும்போது அந்தப் பகுதிகளில் நீர்ப்பிரச்னைகள் குறைகின்றன என்று பல ஆய்வுகள் உறுதிப்படுத்தியிருக்கின்றன.

இதில் இன்னொரு நுணுக்கமான கேள்வியையும் கேட்க வேண்டியிருக்கிறது. நீர்ச்சுமை பெண்களுக்கே அதிகம் என்றாலும், நீர் என்பது அனைவருக்கும் பொதுவானதுதானே! அந்தப் பொது வளத்தைப் பேணும் பொறுப்பும் இருபாலருக்கும் இருப்பதுதானே நியாயம்! அதிகம் பாதிக்கப்படுகிறார்கள் என்பதாலேயே பெண்கள் பொறுப்பை எடுத்துக்கொள்ள வேண்டுமா என்ன? இதற்கான பதில் மிகவும் எளிமையானது. அதிகார அமைப்புகளில் பெண்களின் போதிய பிரதிநிதித்துவம் இல்லாவிட்டால் நீர்ப்பிரச்னைகள் கண்டுகொள்ளப்படுவதில்லை என்பது உறுதியாகிவிட்டது. ஆகவே தங்களது பிரச்னைகளைத் தீர்ப்பதற்குப் பெண்களே முன்வந்திருக்கிறார்கள். சரிசமமான ஒரு கனவு உலகில் நீர் என்பது பெண்களின் சிக்கலாக மட்டும் இல்லாமல் பொதுப்பிரச்னையாக இருக்கும். அப்படிப்பட்ட உலகில் நாம் வாழவில்லை என்பதால் பிரச்னையைத் தீர்க்கும் சுமையும் பெண்கள் மீது விழுந்திருக்கிறது. “நீர்ப் பிரச்னையா, பெண்கள் தாங்களாகவே பார்த்துக்கொள்வார்கள்” என்று அதிகார மையங்கள் ஒதுங்கிக்கொள்ளாதவரை இதுதான் தற்காலிகமான தீர்வு.

நீர் நெருக்கடியை நோக்கி உலகமே பயணித்துக்கொண்டிருக்கும் இந்தச் சூழலில், நீர் ஜனநாயகத்தின் அடிப்படைக் கொள்கையாக ஆய்வாளர் வந்தனா சிவா பரிந்துரைக்கும் சில அம்சங்களை நினைவுபடுத்திக்கொள்ளவேண்டும்:

  • நீர் வாழ்க்கைக்கு அவசியமானது.
  • நீர் என்பது அள்ள அள்ளக் குறையாத வளமல்ல, அதுவும் தீரும்.
  • நீரைப் பேணிக்காக்க வேண்டும். நீரைப் பாதுகாப்பதும் அதைச் சூழல் மற்றும் நீதிசார் வரைமுறைகளுக்குள் சரியாகப் பயன்படுத்துவதும் ஒவ்வொரு மனிதனின் கடமை.
  • நீர் என்பது மனிதனின் கண்டுபிடிப்பல்ல, அது ஒரு பொது வளம். அதைத் தனியார் சொத்தாக உடமையாக்கிக்கொள்ள முடியாது, பண்டமாக விற்கவும் முடியாது.
  • நீர் ஆதாரங்களைத் தேவைக்கதிகமாகப் பயன்படுத்துவது, வீணடிப்பது, மாசுபடுத்துவது ஆகியவற்றைச் செய்ய யாருக்கும் உரிமை இல்லை.
  • நீருக்கு மாற்று இல்லை.
  • நீர் என்பது விற்பனைப் பண்டம் இல்லை.

நீர் என்ற ஓர் அடிப்படை வளம் சார்ந்த பெண்களின் பிரச்னைகள் இவை. இன்னும் பல்வேறு இயற்கை வளங்கள் இருக்கின்றனவே, இந்த வளங்கள் மாசுபடும்போதும் சுற்றுச்சூழல் சீர்குலையும்போதும் பெண்கள் எவ்வாறெல்லாம் பாதிக்கப்படுகிறார்கள்?

(தொடரும்)

படைப்பாளர்:

நாராயணி சுப்ரமணியன்

கடல் சார் ஆய்வாளர், சூழலியல் ஆர்வலர் மற்றும் எழுத்தாளர் என்ற பன்முக ஆளுமை இவர். தமிழ் இந்து உள்ளிட்ட முன்னணி இதழ்களில் சூழலியல், கடல் வாழ் உயிரினங்கள் குறித்து தொடர்ச்சியாக எழுதி வருபவர். ஹெர் ஸ்டோரிஸில் இவர் எழுதிய ‘விலங்குகளும் பாலினமும்’ தொடர் புத்தகமாக வெளிவந்து, சூழலியலில் மிக முக்கியமான புத்தகமாகக் கொண்டாடப்படுகிறது!