பத்தாம் வகுப்பு படிக்கும் பிள்ளையின் அம்மாவாக இன்றைய சூழலில் இந்தப் பதிவு அவசியம் என நினைக்கிறேன்.

இன்னும் வெகு சில நாட்களில் பிள்ளைகளுக்குப் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் ஆரம்பித்து விடும்.

இந்த நேரத்தில் பிள்ளைகளை நாம் உற்சாகமாகவும் மகிழ்ச்சியாகவும் வைத்திருக்கிறோமா அல்லது ஒரு படபடப்பிலும் பதற்றத்திலும் பயத்தோடும் வைத்திருக்கிறோமா என்பதுதான் எனது தலையாய கேள்வி?

குதிரையின் குளம்புகள், அது சமதளத்தில் வேகமாக ஓடுவதற்குப் பொருத்தமாக அமைந்திருக்கும். அதேபோல ஒட்டகத்தின் குளம்புகள் பாலைவன மணலில் வேகமாக நடந்து செல்ல தோதாக அமைந்திருக்கும். இவை இரண்டையும் ஒரு வழுவழுப்பான குளிர்ந்த ஐஸ் தரையில் ஓடச் சொல்லி போட்டி வைப்பது போலதான் இன்றைய கல்விமுறை இருக்கிறது.

ஒரு தாய் வயிற்றில் பிறந்த இருவேறு பிள்ளைகளே ஒத்த திறமையுடன் இருப்பதில்லை. அப்படி இருக்க ஒரு வகுப்பில் படிக்கும் பல பிள்ளைகளிடம் ஒரே மாதிரியான ஆற்றலையும் செயற்திறனையும் எப்படி எதிர்பார்க்க முடியும்?

ஒரு குழந்தையுடன் மற்றொரு குழந்தையை ஒப்பிட்டு நாம் எரியும் அம்புகள் அவர்களைக் குத்திக் கிழித்து நம் பிள்ளைகளை மிகவும் பலவீனமானவர்களாக மாற்றிவிடாதா?

ஒவ்வொரு குழந்தைக்குள்ளும் எதோ ஒரு திறமை ஒளிந்தே கிடக்கும். அதைக் கண்டுபிடித்து வெளிக்கொணரும் திறன் ஒவ்வொரு பெற்றோருக்கும் இருக்கவேண்டும். ஆனால், இருக்கிறதா?

ஒவ்வொரு பிள்ளையும் ஒவ்வொரு ரகம். அவரவர் திறமையை அவரவர் அடையாளம் கண்டுகொள்ளவே அதிக கால அவகாசம் தேவைப்படும், அதுவும் ஒவ்வொருவருக்கும் மாறுபடும். அப்படி இருக்க, அவர்களின் திறமையைப் பரீட்சை வைத்து, மதிப்பெண் அடிப்படையில் ஒரே அளவுகோலில் அளவிட இயலாது என்பதே உண்மை.

இந்தச் சமுதாயம் நமக்குக் கொடுத்திருக்கும் ஒரே ஒரு Optionனை மட்டுமே பற்றிக்கொண்டு, அதை விட்டால் நமக்கு வேறு வழியே இல்லை என்ற பதற்றத்தில் அதை நோக்கியே நம் ஓட்டம் இருப்பதால், இது ஒன்றுதான் ‘the best’ என நம்பத் தொடங்கிவிட்டோம்.

அதுவும், பிள்ளைகள் எட்டாம் வகுப்பைத் தொட்டதுமே, மதிப்பெண் அடிப்படையில் அவர்களைச் சலித்தெடுக்கும் பணியைப் பரவலாக இங்கே எல்லாப் பள்ளிகளும் செய்துவிடும், குறிப்பாகத் தனியார்ப் பள்ளிகள்.

ஒன்பதாம் வகுப்பில் கால் வைத்தவுடனேயே பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான பயத்தையும் பொறுப்புணர்வையும் பேசிப் பேசியே பிள்ளைகள் மனதில் விதைத்துவிடுவார்கள்.

ஆனால், இந்த வருடம் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதவிருக்கும் பிள்ளைகள் கொரோனா, லாக் டவுன், ஆன்லைன் க்ளாஸ் என இரண்டு வருடங்கள் சிறைவாசம் அனுபவித்தவர்கள்.

எட்டாம் வகுப்பில் எந்தவித ரசாயன பரிசோதனைக்கும் உட்படாமல் ஒன்பதாம் வகுப்புக்குள் நுழைந்தவர்கள், அதுவும் இடையில் ஏற்பட்ட பெரிய வெற்றிடத்துடன். ஆனால், பரீட்சை முறையிலும் பாடத் திட்டத்திலும் இந்தப் பிள்ளைகளுக்குப் பெரிதாக எந்தத் தளர்வுகளும் இல்லை.

சுமாராக, அதற்கும் கீழாகப் படிக்கும் பிள்ளைகளுக்கு அதிக கவனம் கொடுக்கும் சூழ்நிலைக்கு ஆசிரியர்கள் தள்ளப்பட, மேலதிகாரிகளுக்குப் பதில் சொல்ல வேண்டிய கட்டாயம், பணியிட மாறுதல், சம்பள உயர்வு சிக்கல்கள் என அவர்களுடைய பள்ளி நிர்வாகம் அவர்களுக்குக் கொடுக்கும் அழுத்தத்தில் அவர்கள் தங்கள் சாட்டையை, பிள்ளைகள் மீதும் பெற்றவர் மீதும் சுழற்ற, நாமும் நம் பங்கிற்கு அந்தச் சாட்டையைப் பிள்ளைகள் மீது சுழற்ற வேண்டிய நெருக்கடிக்கு ஆளாகிறோம்.

பள்ளி நிர்வாகங்களுக்கோ 100% தேர்ச்சி, மதிப்பெண் பட்டியலில் முதலிடம், அடுத்த வருடத்துக்கான மாணவர் சேர்க்கை போன்ற காரணிகள்தாம் முக்கியம். அவர்களைப் பொறுத்தவரை பிள்ளைகள் ஒரு ‘product’ அவ்வளவுதான். ஆனால், பெற்றவர்களுக்கோ நம் பிள்ளைகள்தாம் சகலமும்.

அப்படிஇருக்க, படி… படி… படி… இதைத் தவிரப் பிள்ளைகளிடம் நாம் வேறு எதாவது பேசுகிறோமா?

“நீ ஹேப்பியா இருக்கியா?” என என்றாவது நம் பிள்ளைகளைப் பார்த்துக் கேட்கிறோமா?

பதற்றம் நிறைந்த பிள்ளைகளின் முகத்தையும் பயம் சூழ்ந்த அவர்களுடைய மனதையும் நம்மால் படிக்க முடிகிறதா?

பதின்வயது பிள்ளைகளின் ஹார்மோன் மாற்றங்களைப் பற்றியோ அவர்களுடைய உளவியல் சிக்கல்களையோ, அவர்களுடைய புற உலக அனுபவங்களைப் பற்றியோ கடமை தவறாத பெற்றோர்களாகிய நாம் என்றாவது சிந்தித்திருப்போமா?

தலை வலி, வயிறு வலி, பசியின்மை, வாந்தி வருவது போன்ற உணர்வு, உறக்கம் குறைவால் நம் பிள்ளைகளுக்கு ஏற்படும் சோர்வு போன்ற ஏதாவது ஒன்றாவது நம் மனதை இளக வைக்கிறதா?

இந்த வருடம் முழுதும் படிக்காததையா ‘ரிவிஷன்’ செய்ய வேண்டிய இந்தக் கடைசி நேரத்தில் பிள்ளைகள் படிக்கப் போகிறார்கள்?

மிக நன்றாகப் படித்து வகுப்பில் முதலாவதாக வரும் பிள்ளைகளைக்கூட நாம் விட்டுவைப்பதில்லை எனும்போது, சுமாராக / கற்றல் குறைபாடுள்ள பிள்ளைகளை, அவர்களின் இயலாமையை நம்மால் எப்படி மனதார ஏற்றுக்கொள்ள முடியும்?

அதிக மதிப்பெண் வாங்க வேண்டும், நல்ல குரூப் கிடைக்க வேண்டும், எல்லோருமே பொறியியலும் மருத்துவமும் படிக்க வேண்டும் எனும் சமுதாய அழுத்தத்தை நாம் நம் பிள்ளைகள் மீது திணிப்பது எந்த விதத்தில் நியாயம்?

‘கவல படாத செல்லம்! உனக்கு என்ன வருதோ அதைச் செய்! என்ன வந்தாலும் பார்த்துக்கலாம்! நான் இருக்கேன் உன்கூட!’ என்று சொல்ல எத்தனை பெற்றோருக்கு மனம் வருகிறது?

இப்படி மட்டும் செய்தால் பிள்ளைகள் நிச்சயம் தங்களை மேம்படுத்திக்கொள்வார்கள். இல்லாமல் போனால், இயல்பாகவே அவர்களுக்குள் அமைந்திருக்கும் ஆற்றல் அழிந்து போய் ஒரு மந்த நிலைக்குத் தள்ளப்படுவார்கள்.

நம் நட்பு வட்டத்தில், சொந்தங்களில் நம் பிள்ளைகளின் மதிப்பெண்ணையும் ஆற்றலையும் தங்கள் வீட்டுப் பிள்ளைகளுடன் ஒப்பிட்டு கேள்வி எழுப்பும் யாருக்கும் நாம் பதில் சொல்லிக்கொண்டிருக்க வேண்டிய எந்த அவசியமும் இல்லை. ஒரு தலை அசைப்புடன் அவர்களைக் கடந்துபோக நாம்தான் பயிற்சி பெற வேண்டும்.

நம் கெளரவம், பெருமை இதெல்லாம் நம் பிள்ளைகள் வாங்கும் மதிப்பெண்ணுக்குள் ஒளிந்திருக்கவில்லை என்கிற புரிதல் நமக்கு அவசியம்.

படி… படி… எனச் சாட்டையைச் சுழற்ற பிள்ளைகள் ஒன்றும் பண்ணை விலங்குகள் இல்லை. அவர்கள் மார்க் வாங்கும் இயந்திரங்களும் இல்லை. அவர்கள் உணர்வுள்ள நம் பொக்கிஷங்கள்.

விலங்குகளின் மீது சுழற்றப்படும் சாட்டைகளுக்கே நம் சமுதாயத்தில் அனுமதி இல்லை எனும் பொழுது, உணர்வுகளின் மீது சுழற்றப்படும் சாட்டைகளுக்கு?

அவர்களை அவர்களுடைய குறை நிறைகளுடன் அப்படியே ஏற்றுக்கொண்டு இந்தச் சமுதாயத்தை எதிர்கொள்ள நமக்குத்தான் மனப்பக்குவம் வேண்டும்.

இந்தப் பத்தாம் வகுப்பு மதிப்பெண்ணையோ அல்லது பன்னிரண்டாம் வகுப்பு மதிப்பெண்ணையோ மட்டுமே அடிப்படையாகக் கொண்டு அவர்களது மேற்படிப்பு முடிவுசெய்யப் படுவதில்லை. அதற்கெல்லாம் பற்பல தகுதித் தேர்வுகள் பிள்ளைகள் மீது மொத்தமாகச் சுமத்தப்படுகின்றன என்கிற முக்கியமான ஒரு விஷயத்தை நாம் உணர வேண்டும்,

இந்த உலகத்தில் எல்லாருக்கும் அவரவருக்கான ஓர் இடம் இருக்கவே செய்கிறது. நம் பிள்ளைகளைப் பொறுமையாகக் கையாண்டால் நிச்சயம் அவர்கள் நல்ல நிலைமைக்கு வருவார்கள் என்பதில் ஐயமில்லை.

உணருவோம்…

படைப்பாளர்:

கிருஷ்ணப்ரியா நாராயண். தமிழ் நாவலாசிரியர். சென்னையைச் சேர்ந்தவர்.  8 நாவல்கள் புத்தகமாக வெளிவந்துள்ளன. வாசித்தலில் அதிக ஆர்வம் உண்டு.