லட்சுமி டீச்சரின் வாழ்க்கையில் மறக்க முடியாத ஒரு குழந்தை ஜானவி. அது ஒரு பின்தங்கிய கிராமத்துப் பள்ளி. ஜானவி அப்போது பத்தாம் வகுப்பில் பயின்று வந்தாள். ரொம்ப சுட்டியான பெண், அந்தப் பள்ளியில் முதல் மதிப்பெண் என்பது 400க்கும் குறைவாகவே எப்போதும் இருக்கும். பொதுவாகப் போட்டி போட்டுக்கொண்டு படிக்கும் மாணவர்களைவிட, மனிதம் நிறைந்த குழந்தைகளாகவே அந்தப் பள்ளிகளில் பெரும்பாலும் இருந்தது ஒருபுறம் லட்சுமி டீச்சருக்கு சந்தோஷத்தைத் தந்தாலும் இன்னொரு புறம், அவர்களைப் பத்தாம் வகுப்பில் நல்ல மதிப்பெண் பெற வைக்க வேண்டிய பொறுப்பும் இருந்தது. ஏனெனில் மதிப்பெண் சார்ந்த கல்வி முறை தானே நமக்குத் தரப்பட்டுள்ள ஒரே வாய்ப்பு.

ஜானவிக்குக் கணக்கு, தமிழ் ஆகிய இரண்டின் மீதும் ஒரே மாதிரியான ஆர்வம்தான். மாவட்ட ஆட்சித் தலைவராக வர வேண்டும் என்று ஒரு நாள் வகுப்பறை உரையாடலின் போது சொல்லி, ஜானவி தன் எதிர்கால விருப்பத்தைக் கூறியது லட்சுமி டீச்சருக்கு நன்றாக நினைவில் இருந்தது. தனது சக வகுப்பு மாணவர்கள் அனைவரையும் தன் குரல் வளத்தாலும் கம்பீரத்தாலும் நொடியில் அமைதி காக்கவோ ஒரு வகுப்பறை செயலில் ஈடுபடுத்தவோ ஜானவியால் முடியும். ஆங்கிலப் பாடம் மட்டுமே அவளுக்கு மிகவும் கடினமாக இருப்பதாகக் கூறுவாள். அவளுக்கு மட்டுமன்று, பெரும்பாலான குழந்தைகளுக்கு ஆங்கிலப் பாடம் எட்டிக் காயாகத் தான் இருந்தது. அரசு பள்ளிகளில், குறிப்பாக கிராமப்புறப் பகுதிகளில் தமிழ்நாட்டில் காலம் காலமாக உள்ள பிரச்னை இது. ஆங்கில மொழிப் பாட ஆசிரியர்கள் இல்லாததும், இருந்தாலும் ஆங்கிலத்தை ஒரு மொழியாக சரியாகக் கற்றுக் கொடுக்கப்படாததும் கவனிக்கத் தக்க பிரச்னை.

அந்த ஆண்டு இறுதித் தேர்வில் 436 மதிப்பெண் பெற்று முதலாவதாக வந்த ஜானவி மேல்நிலை வகுப்பில் கணக்குப் பாடத்தை எடுத்துப் படிக்க ஆரம்பித்தாள்.

காலப்போக்கில் லட்சுமி டீச்சர் வேறு ஊருக்கு பணி மாறுதல் பெற்றுச் சென்றிவிட, அவ்வப்போது அந்தப் பள்ளி விளையாட்டு ஆசிரியர் வேலு வழியாக மாணவர்கள் குறித்த செய்தியை அறிந்துகொண்டார்.

பத்தாண்டுகள் கழித்து ஏதேச்சையாக ஜானவியை லட்சுமி டீச்சர் சந்திக்கும் தருணம் அமைந்தது. பரஸ்பர நல விசாரிப்புகளுக்குப் பிறகு, ஜானவியின் படிப்பு, பணி, திருமணம் எனச் சாதாரணமாக விசாரிக்கப் போக, ஜானவியின் முகம் மாறியது.

பன்னிரண்டாம் வகுப்பு முடித்த உடன் தன் விருப்பமான இளநிலை தமிழ்ப் பட்டப் படிப்பைப் படிக்க விவசாயியான அப்பா சம்மதிக்கவில்லை. தனது மூத்த மகளை பி.இ. படிக்க வைத்ததால், இளைய மகளான ஜானவியையும் அப்படியே படிக்க வைக்க ஆசைப்பட்டுள்ளார் தந்தை.

தன்னையும் அதே போல ஒரு பொறியியல் பட்டதாரி ஆக்குவதே அப்பாவின் ஆசையாகப் போக, அவரின் மனம் நோகக் கூடாதென தனியார் பொறியியல் கல்லூரியில் பி.இ.  படிக்கச் சேர்ந்து முதல் இரண்டாண்டு காலம் சுதந்திரப் பறவையாக கல்லூரி மாணவிக்கே உரிய உற்சாகத்துடன் படிக்கச் சென்றுள்ளாள். ஆனால், தேர்வு காலத்தில் அப்பாவை மிகவும் கடிந்துகொள்வாளாம் .”உங்களால் தான் புரியாத பாடங்களை மனப்பாடம் பண்ணிக் கஷ்டப்பட்டு பரீட்சை எழுதப் போறேன் அப்பா. மார்க் கம்மியா வாங்கினாலோ ஃபெயில் ஆயிட்டேனாலோ என்னைக் கேட்கக் கூடாது என்று ஒவ்வொரு தேர்வின் போதும் சண்டை போடுவேன்” மிஸ் என்றாள்.

ஆனாலும் எல்லாத் தேர்வுகளிலும் நல்ல மதிப்பெண் பெற்று,

தேர்ச்சி பெற்றுவிட்டேன் என்றும் கூறுகிறாள். சூழ்நிலை மாறுகிறது, இதயப் பிரச்னையால் அவதியுற்ற தந்தை காலமாகிவிட்டார். அந்த நிமிடத்தில் உலகமே இருண்டது போலாகி விட, ஜானவிக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை.

இரண்டு வருடங்களாகக் கல்லூரிக் கட்டணமும் கட்ட முடியவில்லை. தனியாகக் குடும்ப பாரத்தைச் சுமக்கத் தயாரானாள் ஜானவி. ஆனால், கல்லூரிப் படிப்பை முடித்து வெளியே வர வேண்டும். விளையாட்டு ஆசிரியர் வேலுவின் உதவியால் கட்டணம் ஏற்பாடு செய்யப்படுகிறது. கல்லூரிப் படிப்பை ஒரு வழியாக முடித்தாள்.

ஏற்கனவே அக்காவின் திருமணத்திற்கு அப்பா வாங்கிய கடன், வட்டி, அன்றாடம் வீட்டுச் செலவு, அம்மாவின் மருத்துவச் செலவு என அனைத்தையும் சமாளிக்க வேண்டி இருந்தது. தனது படிப்புக் கேற்ற வேலை கிடைக்கவில்லை. கிடைத்த வேலை செய்து, குறைவான ஊதியத்தில் இவற்றையெல்லாம் சமாளித்து வாழும் தெம்பிற்கு வந்த சில நாட்களிலேயே அக்காவின் கணவனுக்கு வெளிநாட்டு வேலை போய்விட்டது எனக் கூறி குழந்தையுடன் ஜானவியின் வீட்டிலேயே வருடக் கணக்கில் குடும்பத்துடன் தங்கிவிட்டனர். குழந்தைக்குப் பால் பாட்டில், சோப்பு டப்பா முதல் அக்கா, மாமாவுக்கு உணவு, போக்குவரத்து என எல்லாவற்றுக்கும் பொறுப்பேற்கும் ஜானவிக்கு 24 வயதில் 60 வயது அனுபவம் கிடைத்து விட்டது.

இப்போ எங்கே வேலை பார்க்கிறே ஜானவி என்றபோது, “8 ஆயிரம் ரூபாய்க்கு தான் டீச்சர் கெடச்சுது. குடும்பத்த சமாளிக்க முடியல. இப்போ அமெரிக்கக் குழந்தைகளுக்கு கணக்கு சொல்லித் தரேன். நைட் ஷிப்ட் தான். 25 ஆயிரம் சம்பளம். 4 லட்ச ரூபாய் கடனை அடைச்சு முடிச்சிட்டேன்.’’

அவளிடம் நீ தைரியமாக இரு என்று சொல்ல லட்சுமி டீச்சருக்கு வாய் வரவில்லை. அவள் மிக தைரியமாக வாழ்க்கையை எதிர்கொண்டு வருகிறாள். ஜானவியை இறுக அணைத்துக்கொண்டார் லட்சுமி டீச்சர்.

இப்படித்தான் சூழ்நிலைகளால் கனவுகள் நொறுங்கி , குடும்பத்திற்காகத் தங்களை மெழுகுவர்த்திகளாக மாற்றிக்கொள்ளும் பெண் குழந்தைகள் நிரம்பிய சமூகம் இது. குறிப்பாகக் கிராமங்களில் இன்னும் பெண்களுக்கு விருப்பம் சார்ந்த படிப்பு கிடைப்பதில்லை.

இங்கு ஒன்றைக் கவனிக்க வேண்டும். ஆங்கிலமே சரியாக வராத ஜானவி, அமெரிக்கக் குழந்தைகளுக்கு அந்த நாட்டு உச்சரிப்பில் கணக்குப் பாடம் நடத்தும் அளவிற்குத் தன்னை வலுப்படுத்திக்கொண்டது ஒவ்வொருவரும் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்.

(தொடரும்)

படைப்பாளர்:

சு உமாமகேஸ்வரி

உமாமகேஸ்வரி , அரசுப் பள்ளியில் ஆசிரியர் , கல்வி முறை குறித்தும் வகுப்பறை செயல்பாடுகள் குறித்தும் தொடர்ந்து பேசியும் எழுதியும் வருபவர். பாடப்புத்தகம், பாடத்திட்டம் ஆகியவற்றைத் தாண்டி குழந்தைகளது மன உணர்வுகளையும் மகிழ்ச்சியையும் மதித்து, அதற்கு ஏற்புடைய சூழலை அமைத்துத் தர முயற்சி மேற்கொள்பவர்.