சங்கரியைப் பற்றி பின்னோக்கிச் சென்ற நினைவுகள் முடிவுக்கு வரும்போது தனது கையிலிருந்த பழுப்பேறிய காகிதத்தில் எழுதிய கடிதத்தைப் பிரித்துப் பார்க்கிறார் லட்சுமி டீச்சர்…

அன்புள்ள லட்சுமி டீச்சருக்கு,
உங்கள் மாணவி ரோகிணி எழுதுவது…
எனக்கு உங்களுடன் பேச வேண்டும்.
இப்படிக்கு
அன்பு மாணவி

இப்படி எழுதியிருந்த கடிதத்தின் பின்னணியைப் புரிந்துகொள்ள லட்சுமி டீச்சருக்கு கொஞ்சம் கால அவகாசம் தேவைப்பட்டது. ஆமாம், பார்ப்பதற்குத்தான் எளிதாக பொட்டப்புள்ளைங்க படிக்குதுங்கன்னு சொல்றாங்க. எத்தனைச் சிக்கல்கள் தெரியுமா?

அது இரு பாலரும் படிக்கும் ஒரு கிராமத்துப் பள்ளி. அந்த ஊரைப் பொறுத்தவரை பெண் குழந்தைகளுக்குக் கல்வி என்பது பெரும்பாலும் பள்ளிக் கல்வி வரை மட்டுமே. காரணம், தொடக்கப் பள்ளியும் மேல்நிலைப் பள்ளியும் அந்த ஊரின் நடுவிலேயே, அடுத்தடுத்த பேருந்து நிறுத்தங்களின் அருகிலேயே இருக்கின்றன. வீட்டில் காட்டு வேலை, கூலி வேலை செய்யும் பெற்றோர்கள், தங்கள் குழந்தைகளைப் பள்ளிகளுக்கு அனுப்பி வைப்பதும், படித்தால் பன்னெண்டாவது பாஸ் பண்ணட்டும், இல்லேன்னா காட்டு வேலைக்குப் போகட்டும் என, பெண் குழந்தைகள் பள்ளிப் படிப்பை முடித்ததும் கல்யாணத்தைப் பண்ணி வைக்கவும் தயாராக இருப்பவர்கள்…

இப்படிப்பட்ட சூழ்நிலையில் லட்சுமி டீச்சர் அந்தப் பள்ளிக்குப் போனபோது பெரும்பாலான குழந்தைகள் படிப்பின் அவசியத்தையோ, அதன் பொருளையோ உணர்ந்திருக்கவில்லை. அவர்கள் அதை உணர்வதற்கான சூழலை அங்குள்ள ஆசிரியர்களும் அமைத்துத்தரவில்லை என்பது கூடுதலான வலி.

ரோகிணி மிகவும் பயந்த சுபாவம் கொண்ட பெண் குழந்தை. பத்தாம் வகுப்புப் படிக்கும் ரோகிணிக்கு ஆசிரியர்களிடம் பேசவும் பயம். இயல்பாக இருக்க மாட்டாள். அதே பள்ளியில் ஆறாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை படித்துள்ளாள். இப்போது பத்தாம் வகுப்பில் பயின்று கொண்டிருக்கிறாள். அவளுக்கென்று பிரத்யேகமாக ஒரு சில பெண் தோழிகள் உண்டு. அவர்களிடம் மட்டுமே தனது மனதைத் திறப்பாள்.

சாதாரணமாக சரளமாகப் பேச முடியாத ஒரு பெண் குழந்தைதான் ரோகிணி. அந்த உள்ளுணர்வினாலேயே, ஒரு தாழ்வு மனப்பான்மையை வளர்த்துக்கொண்டு அவள் பிறருடன் பேச மறுக்கிறாள் என்பதை அறிகிறார் லட்சுமி டீச்சர். ஆசிரியர் யாராவது அவளைக் கொஞ்சம் சத்தமாக கூப்பிட்டாலே பயந்து நடுங்குவாள் என்பது வேறு. இப்படி உளவியல் ரீதியாக பாதிக்கப்பட்ட ஒரு குழந்தையை அணுகிக் காரணம் தேடிய போது, உடலளவிலும் அவள் பாதித்திருந்ததை அறிய முடிந்தது. ரோகிணி சிறு குழந்தையாக இருக்கும்போது கிணற்றில் தவறி விழுந்து காப்பாற்றப்பட்டு இருக்கிறாள். அந்த அதிர்ச்சி சம்பவத்திலிருந்தே அவள் திக்கித் திக்கிப் பேசுவதும், பய உணர்வோடு எப்போதும் இருப்பதும் தொடர்ந்திருக்கிறது. இப்படியான ஒரு சூழலில் வளர்ந்துள்ள பெண்தான் ரோகிணி என்பதை அவளின் தோழிகளிடமிருந்தும் ரோகிணியிடமிருந்தும் பேசிப் புரிந்துகொண்டார் லட்சுமி டீச்சர்.

பள்ளிகளில் ஆசிரியர்கள் பொதுவாக ஒரு கணக்கெடுப்பு செய்வார்கள்… பொதுத் தேர்வு எழுதும் முன்பாகவே, தேர்ச்சி சதவிகிதம் குறித்து. முன்கூட்டியே ஆசிரியர்கள் கலந்துரையாடுவார்கள். அந்தந்த வகுப்பில் எத்தனைக் குழந்தைகள் ஃபெயிலாவார்கள் என்கிற கணக்கு வைத்திருப்பார்கள். ‘இவ தேற மாட்டா… இவன் தேற மாட்டான்… இத்தனை பேரு 35 மார்க் வாங்க மாட்டாங்க’ – இந்த மாதிரியான ஒரு கணக்கீட்டு முறை அவர்களுக்குள் இருக்கும்.

அந்தக் கணக்கீட்டால் பல குழந்தைகளின் மனம் பாதிப்புக்கு உள்ளாகும். ஆனால், எந்தப் பள்ளியும் எந்த ஆசிரியரும் அது குறித்து சிந்திப்பதில்லை. அதனை மாற்றுவதற்கு முயற்சி எடுக்கக்கூடிய கல்வி முறையும் இங்கு கிடையாது. இதுதான் நமது மண்ணின் சாபக்கேடு.

இந்தக் கணக்கீட்டைத்தான் ஆசிரியர்கள் வழியாக ரோகிணி அறிகிறாள். அதை மனத்தில் வைத்துக்கொண்டுதான் லட்சுமி டீச்சரிடம் பேச வேண்டுமென்று மைதிலியிடம் கடிதம் கொடுத்து அனுப்பி இருக்கிறாள். அன்று மதிய வேளை உணவு உண்ட பின்பு, ரோகிணியைத் தேடி வகுப்பறைக்குச் செல்கிறார் லட்சுமி டீச்சர்.

தன்னுடைய சக தோழிகளுடன் எழுத்து வேலை செய்துகொண்டிருந்த ரோகிணியை அழைத்து தனியாகப் பேசுகிறார் லட்சுமி டீச்சர். அப்படிப் பேசும்போது அவள் கூறியதைக் கேட்டு அதிர்ந்து போகிறார். ஏனென்றால், பத்தாம் வகுப்புக்கு வரக்கூடிய அனைத்துப் பாட ஆசிரியர்களும் ரோகிணியை ‘நீ ஃபெயில், இந்த வருடம் பாசாகாத லிஸ்ட்’ என முத்திரை குத்தி உள்ளனர்.

லட்சுமி டீச்சரிடம் ரோகிணி தனக்கு கணக்கு பாடத்தின் மீது ஆர்வம் இருப்பதாகவும், தான் நிச்சயம் படிக்க வேண்டும் என்று ஆசைப்படுவதாகவும் சொல்கிறாள். இவற்றையெல்லாம் மனத்தில் வைத்து லட்சுமி டீச்சர் ரோகிணியிடம், ‘கவலைப்பட வேண்டாம். படித்து பாஸ் பண்ணிடலாம்’ என்று ஆறுதல் கூறி விட்டுச் செல்கிறார். அப்போது பிரியங்கா உட்பட பல குழந்தைகளிடம் இதுபற்றி விசாரிக்கிறார்.

அதோடு மற்ற ஆசிரியர்களுடன் பத்தாம் வகுப்பு மாணவர்கள் குறித்து பேசும்போது ஆசிரியர்களது மனதில் மாற்றிவிட முடியாத ஆழமான ஓர் அவநம்பிக்கை பதிந்து இருப்பதை அறிந்துகொண்டு வேதனைப்படுகிறார். ஒரு குறிப்பிட்ட சதவிகித மாணவர்களை எடுத்துக்கொண்டு, ‘இவர்களெல்லாம் தேற மாட்டார்கள்’ என்று அனைத்துப் பாட ஆசிரியர்களும் கூறுகின்றனர்.

கணக்கு பாடத்துக்கு லட்சுமிதான் டீச்சர் என்பதால், அவர் ‘இவர்களை பாஸ் பண்ணி வைத்து விடலாம்’ என்று கூற, மற்ற நால்வரும் முடியவே முடியாது என்று சவால் விடுகின்றனர். ‘ஆறாம் வகுப்பிலிருந்து ரோகிணியை நாங்கள் பார்க்கிறோம்… அவளாவது பாஸ் பண்ணுவதாவது’ என்று ஒரே புள்ளியில் நிற்கின்றனர். இதற்கு மேல் இவர்களிடம் இதுகுறித்து பேசிப் பிரயோஜனம் இல்லை என்று லட்சுமி டீச்சர் நகர்கிறார்.

இதை மனத்தில் வைத்துக் கொண்டு லட்சுமி டீச்சர் ரோகிணியை எப்பாடுபட்டாவது படிக்கச் செய்து பாஸ் பண்ண வைத்துவிடவேண்டும் என்று எண்ணிக்கொண்டு அதை நோக்கி நகர்கிறார். அலைபேசியில் ரோகிணியின் பெற்றோரிடம் பேசி அவளை விடுமுறை தினங்களில் தனது வீட்டுக்கு வரவழைக்கிறார். பள்ளியில் இருந்து டீச்சரின் வீடு 8 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது. ரோகிணியும் வர சம்மதிக்கிறாள். வாராவாரம் சனி ஞாயிறுகளில் காலை பள்ளிக்கு வருவது போல அங்கு வந்துவிடுவாள். மாலை வரை ஆசிரியரது வீட்டில் அமர்ந்து கணக்கு போடுவதும், மற்ற பாடங்களைப் படிப்பதுமாகத் தொடர்ந்து பழக்கப்படுத்தி வந்தாள்.

தேர்வு வந்துவிட்டது. அதை நல்ல முறையில் எதிர்கொள்கிறாள். திடீரென்று ஒருநாள் ரோகிணியின் அம்மா லட்சுமி டீச்சருக்கு அலைபேசி வழியாக அழைக்கிறார். டீச்சர்… ‘ரோகிணி பாஸ் பண்ணிட்டாங்க’…

  • ஒரே சந்தோஷம் ரோகிணியின் அம்மாவுக்கு!

‘கணக்குப் பாடத்தில் மட்டும் இல்லங்க டீச்சர், 5 பாடங்களிலும் பாஸ்… ஆல் பாஸ் பண்ணிட்டா. 268 மார்க் எடுத்திருக்கா’ என்று கூறிய ரோகிணியின் தாய்க்கும் தந்தைக்கும் சந்தோஷத்துக்கு அளவே இல்லை. ஏனென்றால், தங்கள் குழந்தையை படிக்காத குழந்தை என்றும் பாஸ் பண்ணவே மாட்டாள் என்றும் எல்லா ஆசிரியர்களும் கூறிய நிலையில், அதைக் கடந்து ரோகிணி அனைத்துப் பாடங்களிலும் தேர்ச்சி பெற்று, ஒரு சாதனையை செய்திருப்பதால் அவளின் பெற்றோர் மகிழ்ச்சியின் எல்லையில் நிற்கின்றனர்.

லட்சுமி டீச்சருக்கும் இது மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. பள்ளியில் அனைத்து ஆசிரியர்களும் ஆச்சரியத்தின் விளிம்பில், ‘என்னது… ரோகிணி பாஸ் பண்ணிட்டாளா?’ என்று மூக்கின் மீது விரலை வைக்கின்றனர். ரோகிணி லக்ஷ்மி டீச்சருக்கு எழுதிய கடிதத்தின் ஆழத்தை அந்த ரிசல்ட்டின் வழியாக உணர முடிந்தது.

‘பத்தாம் வகுப்பு பாஸ் பண்ணினாலும் சரி… ஃபெயில் ஆனாலும் சரி… ஏதோ ஒரு மாப்பிள்ளைக்கு கல்யாணத்தைப் பண்ணி வைக்கணும்’ என்றே ரோகிணியின் அம்மா சொல்லிக் கொண்டிருந்தார். அந்த முடிவை மாற்றியது ரோகிணியின் இந்த முயற்சி. பேசுவதில் குறைபாடு இருந்ததினால் அதற்குரிய பள்ளி ஒன்றில் சேர்த்து விடுதியில் தங்கி 11-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு என மேல்நிலைக் கல்வியைப் பெறுகிறாள் ரோகிணி.

Photo by Church of the King on Unsplash

அந்த கிராமத்திலேயே, ‘பார்ரா… பேசவே வராது… இன்னிக்கி படிச்சு பாஸ் பண்ணி பன்னென்டாவது படிச்சுருச்சு இந்த பொண்ணு’ என்ற பேச்சு எழுகிறது. இப்போது ரோகிணி கல்லூரியும் சென்று உயர் கல்வி பெற்றதுடன், ஓர் ஆடை வடிவமைப்பு அலுவலகத்தில் மேலாளராகப் பணியாற்றிக் கொண்டிருக்கிறாள்.

அந்தக் கிராமத்தில் உள்ள பெண்களைக் கல்வியை திரும்பிப் பார்க்க வைத்த ஒரு சம்பவமாக இதைச் சொல்லலாம். இப்பொழுதெல்லாம் அந்த கிராமத்தில் இருந்து பல பெண் குழந்தைகள் கல்லூரிக்குச் செல்கின்றனர், பெற்றோர் சம்மதத்துடனே. அது மட்டுமல்ல… பெற்றோரிடம் குழந்தைகள் எதிர்ப்பு காட்டியும் தங்களது கல்விக்காக போராட அறிந்து வைத்துள்ளனர்.

என்ன செய்யலாம்?

பொதுவாக அரசுப் பள்ளிக்கு வரக்கூடிய குழந்தைகள் – குறிப்பாக கிராமத்துச் சூழலில் இருந்து வரக்கூடிய பெண் குழந்தைகளுக்கு கல்வி எட்டாக்கனியாகவே இருக்கிறது. பள்ளிக்கல்வி கிடைப்பது மட்டுமே எளிமையாக இருக்கிறது. அவர்கள் உயர்கல்வி பெறச் செல்வதற்கு வாய்ப்புகள் மிகவும் குறைவாகவே உள்ளன. அதற்கான சூழ்நிலைகளை உருவாக்குவதிலும் அவர்களுக்கான வழிகாட்டுதல்களையும் தன்னம்பிக்கையை கொடுப்பதற்கும் ஆசிரியர்கள் தயாராக இருக்க வேண்டும். அப்போதுதான் முதல் தலைமுறைக் குழந்தைகள் முழுமையாக உயர்கல்வி வரை செல்ல முடியும்.

ரோகிணியின் விஷயத்தில் அப்படியே விட்டிருந்தால்… ஆசிரியர்கள் கூறியதைப் போல, ‘அவள் படிக்க மாட்டாள்’ என்று ஒற்றை வரியில் அவளை நாம் நகர்த்தி இருந்தால்… அவள் தேர்ச்சி பெற்றிருக்கவும் மாட்டாள். அதோடு அவளுக்கு திருமணம் செய்து வைத்திருப்பார்கள். அவளுக்கு வாழ்க்கை மீது நம்பிக்கையே இல்லாமல் போயிருக்கும். ஆனால், அவளுடைய சின்ன ஆர்வம், அதற்கு உருவம் கொடுத்த லட்சுமி டீச்சர்… இந்தக் காரணங்களால் இன்று ரோகிணி தனது சொந்தக் காலில் நிற்கிறாள்.

இப்படித்தான் ஏராளமான குழந்தைகள் ஆசிரியர்களுடைய வழிகாட்டுதலுக்கும் உளவியல் நீதியான அணுகு முறைக்கும் ஏங்கி நிற்கிறார்கள் அவர்களை இனம் காணவேண்டும். இன்னும் நமது கல்வி முறையில் இருக்கக்கூடிய மதிப்பெண்கள் சார்ந்த இந்தப் பார்வையை ஆசிரியர்களும் சமூகமும் மாற்றிக்கொள்ள வேண்டும். அப்போதுதான் ரோகிணி போன்ற மாணவிகள் காப்பாற்றப்படுவார்கள். இல்லையெனில், இவர்களைப் போன்று குழந்தைகளுக்கு உயர் கல்வி என்பதும் நல்ல வாழ்க்கை என்பதும் பெரும் கனவாகவே மாறிவிடும்.

தொடரும்…

தொடரின் முந்தைய பகுதி:

படைப்பாளர்:

சு உமாமகேஸ்வரி

உமாமகேஸ்வரி , அரசுப் பள்ளியில் ஆசிரியர் , கல்வி முறை குறித்தும் வகுப்பறை செயல்பாடுகள் குறித்தும் தொடர்ந்து பேசியும் எழுதியும் வருபவர். பாடப்புத்தகம், பாடத்திட்டம் ஆகியவற்றைத் தாண்டி குழந்தைகளது மன உணர்வுகளையும் மகிழ்ச்சியையும் மதித்து, அதற்கு ஏற்புடைய சூழலை அமைத்துத் தர முயற்சி மேற்கொள்பவர்