தான் வாழும் அழகிய கிராமம் பருத்திப்பள்ளியில் ஒவ்வொரு பாதையும் எங்கு செல்கிறது, எந்தப் பக்கம் என்ன இருக்கிறது என குயிலியிடம் கேட்டால் கூகுள் நிலவரைபடத்தைக் கேட்டாற்போல் பட்டென சொல்லிவிடுவாள்.  அவள் வாழும் ஊர் அவ்வளவு அத்துப்படி! பெண்பிள்ளை ஊரைப் பற்றி தெரிந்து வைத்திருப்பது கேட்க நன்றாகத்தானே இருக்கிறது?

தன் குழந்தைப் பருவத்திலிருந்து ஊர் சுற்றி பயணம் மேற்கொள்வது என்றால், குயிலிக்குக் கொள்ளைப் பிரியம். அதில் அவள் அலாதி இன்பமும் தேடலும் அவள் கொள்வதை அவள் அம்மா நாச்சியும் அறிந்தே இருந்தாள். குயிலியை அவள் வீட்டில் காண்பது அரிது. இரவில்  வேண்டுமானால் பார்க்கலாம். எப்போதும் ஆடு மேய்க்கும் தன் பாட்டி தங்கம்மா, தன் அண்ணன் ஜெகன், தம்பி முருகன் என யாரோ ஒருவருடன் அல்லது நட்புகளுடன் சேர்ந்து சுற்றுவதுதான் அவள் பெருவிருப்பமே!

அம்மா நாச்சியும் அவள் பெண் என  பெரிதாகக் கட்டுப்பாடு விதிக்காமல் அவள் விருப்பபடியே விட்டிருந்தார். ஓயாமல் எங்கே எனத் தேட வைத்தாலும் ஒரு நாளும் அவளை அடித்துக் கண்டித்ததில்லை நாச்சி. குயிலியோ பயணம் மேற்கொள்வதே தலையாய பணி என ஊரைச் சுற்றிக் கொண்டிருப்பாள். கிராமம் ஆனதால் அங்கே குழந்தைகளுக்குச் சமூக பாதுகாப்பும் இருந்தது. 

பயணம் மேற்கொள்கையில் தாத்தா, பாட்டிகளிடம் ஒவ்வொரு பகுதியின் கதைகளைக் கேட்டு மனதில் இறுத்தியிருந்தாள் குயிலி. அந்த இடத்தைக் காணும் போது, அக்கதைகள் உண்மையாக இருக்குமோ என அவள் ஊரில் ஆய்வு செய்யாத இடமில்லை.

பெருமழை பொழிந்து கிணறுகளில் நிலத்தடிநீர் பாம்பேறி எட்டிப்பார்க்க, சிறுவர்களுக்கும், நீச்சல் பிரியர்களுக்கும் ஒரே குதூகலம்தான். விடுமுறை என்றால் தண்ணீரும் கிணறும் சகிதமாக இருந்தனர். ஊர் பயணத்தில் இருந்த குயிலிக்கு வேடிக்கைப் பார்ப்பதும் அவர்கள் கொண்டாட்டத்தை இரசிப்பதும் வாடிக்கையாய் மாறியிருந்தது அப்போது.

ஒரு நாள் தானும் அந்தக் கொண்டாட்டத்தில் மையல் கொண்டால் என்ன என நினைத்து கிணற்றில் இறங்கி, நீச்சல் பயின்றுகொண்டிருந்த சிறுவர்களோடு ஜோதியில் கலந்தாள். இப்படி தானே களத்தில் குதித்த குயிலியின் பேராவலுக்கு தாத்தா தனசாமி சுரைக்குடுவையைக் கடன் வாங்கிக் கொண்டு வந்து நீச்சல் பழக்கி தீனி போட்டார். சுரைக் குடுவையைக் கட்டி அவளது தம்பி முருகனை முதலில்  கிணற்றில் தூக்கிப் போட, மேலெழுந்து வந்த  பையன், பயந்து போய் திரும்பிக்கூட பார்க்காமல்  வீட்டுக்கு ஓடியே போய்விட்டான்.

அடுத்து குயிலியைத் தூக்கி உள்ளே போடும்போது பயம் ஒருபுறம் இருந்தாலும் கற்கும் பேராவல் பயத்தையெல்லாம் தின்று செரித்தது. ஒரே நாளில் சுரையின் உதவியின்றி தனியே நீச்சல் பழகிக் கொண்டாள் குயிலி. எதையும் வெறிகொண்டு கற்கும் பேரார்வம் குயிலியிடம் இருந்தது.

PaperBoys

அவ்வளவுதான்… வானத்தையே வில்லாக வளைத்த உணர்வு நீச்சல் கற்றதும் வந்திருந்தது குயிலிக்கு. அன்றிலிருந்து விடுமுறை என்றால் காலை உணவு முடிந்து கிணற்று நீரில் குதித்தால் மாலை முடிய கிணறுதான் வாழ்விடமே! அப்பா மட்டும் திட்டுவாரோ என்ற பயத்துடன் கூடவே கிணற்று வாழ்விட வாசம் இருந்தது.

“நீச்சல் கற்றுக் கொண்டாச்சில்ல?  இன்னும் என்ன செய்யப் போறாங்க?” என்று கேட்கும் வாய்களுக்கெல்லாம், உட்கார்ந்து டைவ் அடித்தல், நின்று டைவ் அடித்தல், முன்பக்க நீச்சல், பின்பக்க நீச்சல், மேலிருந்து குதித்தலில் உயரம் அதிகரித்தல், கை கால் அசைக்காமல் மிதத்தல், மேலிருந்து கல் ஒருவர் கிணற்றில் எரிய உள்ளே ஓடிச்சென்று பிடித்தல், உள்ளே ஷாம்பூ தாளை மறைத்து வைக்க நீருக்குள் சென்று தேடல் என ஒவ்வொன்றிலும் முதல் வகுப்பிலிருந்து முனைவர் பட்டம் வரை பெற முயற்சித்துக் கொண்டிருந்தாள் குயிலி. 

நீச்சல் நண்பர்களுடனே எப்பொழுதும் குயிலியை அந்தக் காலத்தில் பார்க்க முடிந்தது. நாள் முழுக்க நீரிலேயே இருந்ததால் தலைமுடியும் செம்பட்டை ஆகிக் கொண்டிருப்பதைக் குறித்தெல்லாம் கவலை எழாமல், நாள்தோறும் புதுப்புது விளையாட்டுகள் கண்டுபிடித்து நண்பர்களுடன் விளையாடிக் கொண்டிருந்தாள். இவ்வித உன்னத அனுபவம் கிட்டியது எண்ணி பூரிப்பும் கொள்வாள். ‘ஒரே நாளில் நீச்சல் கற்றுக் கொண்டேன்’, என்ற பெருமிதமும் அவளுக்கு இருந்தது. அதை நண்பர்களிடம் அடிக்கடி சொல்லிக் கொள்வாள்.

கற்றுக் கொண்ட ஊர் பெரியக் கிணறு தாண்டி, ஊரில் படிக்கட்டுடன் கூடிய அனைத்து கிணறுகளிலும் அவள் இறங்காத கிணறே இல்லை என்ற அளவில் சொல்லிவிடலாம் என்ற நிலைமையும் வந்தது குயிலிக்கு.

இப்படியாக சென்ற நாள்களில், ஒரு தாத்தா அந்த ஊரில் உள்ள மலை மேல் ஆங்கிலேயர்கள் எதோ புதையல் புதைத்து வைத்திருப்பதாகச் சொன்னார். அதன் உச்சியில் உள்ள பாறையில் வட்டமிட்டு இருப்பதாகவும் தாத்தாவின் கதை கேட்டதிலிருந்து, சோமாசி கரடின் ( மிகச்சிறிய மாலைக்குப் பெயர் கரடு ) உச்சிக்குச் சென்று பார்த்துவிடும் ஆர்வம் மேலோங்கியது குயிலிக்கு. மலைப் பயணத்தை எப்படி சாத்தியப்படுத்துவதென மூளையில் திட்டம் தயார் செய்து கொண்டிருந்தாள். அவள் அண்ணன் ஜெகன் எப்போதும் அவள் எண்ணங்கள் ஈடேற துணை நிற்பவன். அவனிடம் உதவி கோரியதும் ஒப்புக்கொண்டான். அண்ணன் உதவியுடன் பயணம் திட்டமிடப்படது. கிணற்றில் நீச்சல் தோழர்களில் அவனும் ஒருவனாயிற்றே!

இறந்த முருங்கை மரத்தின் இரண்டு பெரிய கட்டைகளை வெட்டி தலைக்கும் காலுக்கும் வீதம் கிணற்றில் போட, அப்படியே நீரில் அதன் மீது படுத்து மிதக்கும் வித்தையை அண்ணன் குயிலிக்குக் கற்றுக்கொடுத்திருந்தான். அவ்வப்போது கன்று ஈன்று வெட்டப்பட்ட வாழைமரத்தையும் கிணற்றில் போட்டு நேரம் காலம் போவது தெரியாது மிதந்து மகிழும் வித்தையைக் கற்றுத் தந்த அண்ணனாயிற்றே! என்றும் அவன் மீது பேரன்பைக் கொண்டிருந்தாள் குயிலி. அண்ணன் மட்டுமல்ல, அவளுக்குத் தோழன் அவன்.

இப்படியாக இந்த உலகில் என்னவெல்லாம் இருக்கிறதோ அதையெல்லாம் தன் வாழ்நாளில் சென்று பார்த்துவிட வேண்டும் என்ற எண்ணம் மனதில் தீயாய் எரிந்து கொண்டிருந்தது குயிலிக்கு. 

விடுமுறை நாளில் ஒரு நாள், ஜெகன், குயிலி, முருகன், இன்னொரு நண்பன் ஆனந்தன் ( மலையைப் பற்றி அறிந்தவன் ) சேர்ந்து மலையில் பாதை இல்லாத பகுதியில் ஏறத் தொடங்கினார்கள். கரடின் ஒவ்வொரு பகுதியையும் ஆனந்தன் விளக்கிக் கோண்டே வந்தான். அந்நாள் குயிலிக்கோ வாழ்வில் ஒரு உன்னதமான  மறக்கமுடியாத நாளாக இருந்தது.

படம்: Minkaithadi

முதலில் கரடின் கீழே உள்ள தடுப்பணை, மெல்ல ஏற ஏற என்றும் வற்றாத பாலி ( சிறு ஊற்று ) அதில் இருந்த தாமரையைக் கண்டார்கள். நீர் அவ்வளவு உயரத்தில் எவ்வாறு வற்றாமலிருக்கிறது என்ற ஆராய்ச்சியுடன் பிரமிப்பையும் ஏற்படுத்தியிருந்தது அனைவருக்கும். பாலிக்கு நீர் எங்கிருந்து நீர் வருகிறது என பல வகைகளில் ஆய்வும் செய்தனர். அப்படியே பாறைகளில் ஏறிச் சென்றனர். கரடின் உச்சியில் உள்ள கோயிலை  இலக்காகக் கொண்டு இவர்களே வழியைத் தெரிவு செய்து ஏறினர். மிகுந்த சவாலாகவும் பேரின்பமாகவும் இருந்தது. 

அப்படியே சீதாப்பழ மரங்கள் நிறைந்த மலையில், சீதாப்பழத்தின் சுவையோடே கரட்டில் ஏறினர். ‘சீசனின் போது மூட்டை மூட்டையாய் பழங்களைப் பறித்து சென்று விற்பனைக்கு எடுத்துச் செல்வர்’ என்றான் ஆனந்தன். மலையே சீதா மரத்தால் நிரம்பியிருந்தது; விளைச்சலை அடிவாரத்தில் இருந்த மக்கள் பயன்படுத்திக் கொள்கின்றனர் என்றான். பின் நரிகள் வாழும் குகையைக் காண்பித்துவிட்டு அவை இரவில்தான் நடமாடும் என குறிப்பும் சொன்னான் ஆனந்தன். குகையை எட்டிப் பார்த்துவிட்டு கிளம்பிவிட்டனர்.

உச்சி நோக்கி தொடர்ந்தனர், உச்சியில் சோமாசிநாதர் கோயில் இருந்தது . தினமும் வீட்டிலிருந்து பார்க்கையில் மலைமேல் தெரியும் கோயில் தற்போது பக்கத்திலயே நிற்பது, ஏதோ வானத்தின் உச்சியைத் தொட்டாற்போன்ற மகிழ்வைக் குயிலிக்குத் தந்தது.

தாத்தா சொன்ன பாறையின் மீது வட்டம் போட்ட கல் இருக்கிறதா எனத் தேடினாள் குயிலி. அங்கே பாறையிலொரு வட்டம் போன்று போடப்பட்டிருந்தது. ஆனால் இதெல்லாம் ஆங்கிலேயர்தான் போட்டார்களா என்ற ஐயமும் இருந்தது. யார் எதைக் கூறினாலும் மெய்ப்பொருள் தேடும், பகுத்துப் பார்க்கும் அறிவைக் கைக்கொண்டிருந்தாள் குயிலி. அந்தக் கரடின் மீதிருந்து அவள் வீடு, தான் கடந்து வந்த பாதை, அடிவாரத்தில் இருந்த தடுப்பணை என பலவற்றைக் கண்டுபிடித்து ஆவலோடு தேடிப் பார்த்துக் கொண்டிருந்தாள். “ப்பா எப்படி சின்னூண்டா தெரியுது!”, என்ற ஆச்சர்யத்தையும் நண்பர்களிடம் வெளிப்படுத்திக் கொண்டிருந்தாள்.

கரடின் மேலே இருந்து அதன் உச்சியை அடையும் முறையான வழிப்பாதையைக் காட்டினான் ஆனந்தன். இதில்தான் மக்கள் ஏறி வருவர் நாம் கரடின் பின்புறம் பாறைகளின் மேலே ஏறிவந்திருக்கிறோம் என்றதும் நாமே வகுத்த வழி என குயிலிக்கு ஒருபுறம் பெருமையாக  இருந்தது. “இதுபோல நாமே உச்சியைப் பார்த்து பார்த்து பாறைகளின் வழி ஏறி வருவது இன்னும் செம்ம திரில்லாக இருக்குதில்ல?” என்றவள், கரடிக்கென அமைந்த வழியைக் காட்டி, “இந்த வழில ஒருநாள் ஏறணும்”, என்றாள். “இது வேறொரு ஊரில் தொடங்குது. அங்கிருந்து ஏறி வரணும்; அது முறையான பாதையா இருக்கும். இப்ப ஏறின அளவு கடினமா இருக்காது குயிலி”, என்றான் ஆனந்தன்.

“இந்தக் கோயிலுக்குப் பண்டிகை வரும். அப்பக்கூட நாம வந்து பார்த்தா நல்லா இருக்கும். ஜாலியா நிறைய பேர் ஏறுவாங்க. அப்போ கூட்டமா இருக்கும், நாமும் ஏறலாம்”, என்றான் ஆனந்தன். 

தேடித்தேடி ஆய்வுத்தாகம் ஓரளவு தீர்ந்தபின், எப்படி உச்சிக் கோயிலை இறுதிப்புள்ளியாக வைத்து மேலேறினார்களோ, அதேபோல இப்போது கீழிறங்கும்போது அணையை இலக்காக வைத்து, பாறைகளைத் தாண்டி கரடின் அடிவாரத்தை அடைந்தனர். இறங்கும்போது இன்னொரு முறை பாலியைப் பார்க்கத் தவறவில்லை அனைவரும். 

இப்படியாக பள்ளி செல்வதும் விடுமுறையில் நீச்சலும் அவ்வப்போது புது இடங்களுக்குப் பயணமும் என வாழ்வில் அதிஉன்னதத்தை மட்டுமே கண்டு கொண்டிருந்தாள் குயிலி. ‘நாள் முழுக்கப் படிக்காமல், தண்ணிலயே இருக்க!’ என அப்பா திட்டினாலும் அவருக்குத் தெரியாமல் அவர் வீடு திரும்பும் முன் வந்துவிடுவதைக் கவனமாகக் கடைபிடித்தாள் குயிலி. படிப்பிலும் முன்பைவிட அதிக கவனம் செலுத்தினாள். இடையிடையே கிணறு குறித்த நிலத்தடிநீர் மட்ட ஆய்வு வேறு நடந்து கொண்டிருந்தது. 

பேரானந்தப் போய்க்கொண்டிருந்த குயிலியின் வாழ்க்கைப் பயணத்தில் அன்றொரு நாளும் விடிந்தது. பள்ளி கிளம்பிக் கொண்டிருந்த குயிலிக்குப் பேரதிர்ச்சி. சந்தேகப்பட்டு தன் பாட்டியிடம் வினவ, அவர் பருவமெய்தியதை உறுதிப்படுத்தினார். கூடவே அம்மாவை அழைத்தும் சொல்லிவிட்டார்.

அப்போது பத்தாவது படித்துக் கொண்டிருந்ததால் படிப்பும் வீணாகும் என மனக்கண்ணில் ஓட, அதுவுமில்லாமல் சடங்கு , சம்பிரதாயங்கள், இனி வரப்போகும் கட்டுப்பாடுகள் என அத்தனையும் குயிலியை அப்படியே உறைய வைத்திருந்தன. அம்மாவிடம், “பத்தாவது படிக்கிறேன். சடங்கெல்லாம் வேண்டாம். படிப்பு கெடும்”, எனக்கேட்டதில் வெற்றி கிட்டியது குயிலிக்கு.

கிராமத்தில் அது போன்று முடிவெடுக்க தனி தைரியமும் பல சிக்கல்களைச் சந்திக்கும் துணிவும் அவள் பெற்றோருக்குத் தேவைப்பட்டது. எப்படியோ குயிலியைச் சடங்கு செய்யாமல், தொடர்ந்து பள்ளி அனுப்பச் சம்மதித்து அனுப்பி வைத்தனர். குயிலிக்கு மாபெரும் சாதனை நிகழ்த்திவிட்ட உணர்வு. இந்த முடிவால் அவள் அம்மா நாச்சி சமூகத்தில் பெரும் நெருக்கடியையும் கேள்விகளையும் எதிர்கொண்டாள். சாதாரணமாக போகிற போக்கில் மக்கள் மாற்றத்தை நிகழ்த்திக்கொண்டுதான் இருக்கின்றனர். 

பருவமெய்திய பிறகும் குயிலி தன் வழக்கம்போல பயணம் மேற்கொண்டாள். ஏனெனில் அவளின் உள்ளார்ந்த ஆர்வமும் தேடலும் அதுதானே? பதின்ம வயதைத் தொட்டதும் இரண்டாம்நிலை பால் பண்புகளின் ஹார்மோன்களின் விளைவால் இன்னும் அதன் வேகம் அதிகரித்து இருந்தது.

குயிலி பெரிதும்  எதிர்பாராத நிகழ்வு அன்று நடந்தேறியது. உலகமே இடிந்து தலைமேல் விழுந்துவிட்ட உணர்வில் தவித்தாள். ‘ஏன்தான் பெண்ணாகப் பிறந்தேனோ?’ என்று தன் பிறப்பை நொந்து கொண்டாள் குயிலி. அப்படி என்ன அவள் அம்மா சொல்லியிருப்பார்?

தொடரும்…

தொடரின் முந்தைய பகுதியை இங்கே வாசிக்கலாம்:

படைப்பாளர்:

சாந்த சீலா

சாந்த சீலா கடந்த 17 ஆண்டுகளாக ஆசிரியராகப் பணிபுரிகிறார். கும்முடிப்பூண்டியை அடுத்த பூவலை கிராமத்தின் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ஆசிரியர். பேருந்து வசதி கூட சரியாக இல்லாத இந்த ஊரிலேயே தங்கி, பெரும்பாலும் ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த குழந்தைகளுக்கு கல்வியறிவு தருகிறார். இவரால் இந்தப் பள்ளியில் இடைநிற்றல் குறைந்திருக்கிறது. பள்ளி மேலாண்மைக் குழுவின் ஆசிரிய உறுப்பினராகவும் இருக்கிறார். கல்வியின் நோக்கமான படைப்பாற்றல் வெளிப்பட குழந்தை மையக் கல்வி அமைய வேண்டும் என்றும் விளிம்புநிலை குழந்தைகளும் மையநீரோட்டத்தில் இணைய வேண்டும் செயல்படும் அரசு பள்ளி ஆசிரியர். குழந்தைகளைக் கொண்டாடுவோம் கல்வி இயக்கம், குழந்தைநேயப் பள்ளிகள் கூட்டமைப்பு போன்ற அமைப்புகளில் செயலாற்றிக் கொண்டுவருகிறார்.