ஆஷா ஆசிரியரின் வகுப்பு எப்பொழுதும் மகிழ்வாகவும் துடிப்பாகவும் இருக்கும். எப்போதும் எட்டாம் வகுப்பில் ஒற்றுமையா மாணவர்கள் இருப்பார்கள். ஒருவர் கவலையாக இருந்தால் அவர்களாகவோ அல்லது ஆசிரியரின் உதவியோடோ கவலையாக இருக்கும் மாணவரைச் சமாதானப்படுத்துவர்.

அன்று வகுப்புகள் மாறிக்கொண்டிருந்தாலும் மணிகண்டனின் மனம் மலராமலேயே இருந்தது, வகுப்பு தோழர்களுக்கு மலர மறுத்த தாமரைக் குளம் போலத் தோன்றியது.

இதைக் கவனித்த பூஜா, மெல்ல வகுப்பாசிரியர் ஆஷாவின் காதைக் கடித்தாள்.

ஆசிரியர், “காலையிலிருந்து கவனித்தே வருகிறேன். என்னதான் ஆச்சு பூஜா அவனுக்கு?” என்று கேட்டார்.

“அதென்னவோ எதுவும் சொல்ல மாட்டிங்கிறான் மணிகண்டன். ஆனா, நேத்து அவங்க அப்பாகிட்ட சில பேர் சண்டை போட்டாங்களாம்” என்று பூஜா பெரிய கதவிற்கான சிறு தொறப்புக்குச்சியைக் கண்டுபிடிப்பதற்கான வழியும் கூறினாற்போல இருந்தது.

“ சரி, நாம் பேசுவோம்” என ஆஷா கூற, பூஜாவுக்கு நிம்மதியாக இருந்தது.

வகுப்பு தொடங்கியதிலிருந்து ஆஷா, காலநிலை – வானிலைக்கான காணொலியைக் காட்டி விளக்கிக் கூறிக்கொண்டிருந்தார். அப்போதும் மணிகண்டன் மனம் மலர மறுத்தது.

“மணி, என்னப்பா விஷயம்? உன் துடிப்பு இல்லாம வகுப்பே உயிரில்லாம கிடக்கு. உன் நண்பர்களும் உன்னையே நினைச்சுக்கிட்டு இருக்காங்க” என்று கேட்டார் ஆஷா.

“அதொண்ணுமில்ல மிஸ். அது வந்து…” என இழுத்தான் மணி.

“ நேத்து உங்க வீட்ல சண்டையாமே! அதனால அப்படி இருக்கயோ? என்னன்னாலும் சொல்லு. இல்ல தனியா சொல்லணும்னாலும் சொல்லுப்பா “ என்றார் ஆஷா.

“நேத்து எங்கப்பாவுக்கும் உறவினர்களுக்கும் சண்டை. அப்பா எப்பவும் நிதானமாக இருப்பார். சண்டைக்கு வந்தவர் ரொம்ப ஆக்ரோசமா பேசினார். அதுல ஒரு உறவினர் ரொம்பக் கோபப்பட்டு எங்கப்பா கொஞ்சம் பொறுமையா இருக்காரேன்னு அப்படி கேட்டுட்டார். அதைக் கேட்டதுல இருந்து எங்கப்பா, அம்மா எனக்கெல்லாம் பயங்கர மனவருத்தமாச்சு. என்னன்னே கேட்கலியேப்பா. அப்படின்னா வழக்கம்போல அவர்தான் அறியாமைல பழக்கத்துல கேட்கறார்னா நாமளும் ஏட்டிக்குப் போட்டியாகப் பேசக்கூடாது. அப்படியெல்லாம் பேசாத மாமா, என்று ஒத்த வார்த்தையோடு முடிச்சுக்கிட்டார்” என்று மனம் திறக்கத் தொடங்கினான் மணி.

“அப்படி என்னதான் சொன்னார் அவர்? விருப்பம் இருந்தா சொல்லு இல்லன்னா பரவால்ல”.

“அத எப்படிச் சொல்லுவேன். சண்டைக்கு வந்தவர் அடிதடின்னு கூப்பிட்டா அடிதடின்னு போகணுமாம். அப்படி அப்பா போகாம சமாதானமா பேசிக்கலாம்னா, அவரைப் போடா பொட்டை, போயி உன் பொண்டாட்டியோட புடவைய எடுத்துக் கட்டிக்கோன்னு சொல்றார் மிஸ். புடவைங்கிறது கேவலமான உடையா அதுவும் எங்கம்மா கட்டறது. ஏன் அப்படி அவர் சொன்னார்னு ஒரு பக்கம் புரியல. ஒரு பக்கம் இப்படிப் பொதுவுல பேசிட்டாரேன்னு வருத்தமா இருக்கு மிஸ் “ என்றான் மணி.

“ஓ, இதுதான் பிரச்னையா? உடை என்பதில் ஏன் இப்படி உயர்வு, தாழ்வு வந்துச்சுன்னு பேசுவோம். ஆதிமனிதர்கள் உடை போட்டிருந்தாங்களா? இன்னும் சில பழங்குடி மக்கள் முதன்மை வாழ்க்கை முறையில் உடை இல்லாம இருக்காங்க. ஆதிமனிதர்கள் தொடக்கத்தில் உடை போடாமத்தான் இருந்தாங்க. நாமதான் குரங்குல இருந்து பல கோடி வருசமா பரிணாமம் அடைஞ்சு மனிதனா வளர்ந்திருக்கோம்னு அறிவியல் அறிஞர் டார்வின் சொன்னார்ல்லயா…” எனத் தொக்கி நின்றது வாக்கியத்தோடு நிறுத்தினார் ஆஷா.

“ஆமாம் மிஸ். டார்வின் பரிணாம வளர்ச்சிக் கண்டுபிடிப்புக்குப் பிறகே மனிதக் குலத்தின் மூலம் மனித குலத்திற்கே தெரிய ஆரம்பித்தது” என்றாள் சவிதா.

“நல்ல கேள்வி. பொதுவாக எப்ப உடை அணியத் தொடங்கினாங்கன்னு தொல்லியல் ஆய்வுல பெருசா கிடைக்கல. ஆனா, சமீபத்துல நடந்த மரபியல் ஆய்வுல மார்க் ஸ்டோன்கிங் என்ற மரபியல் அறிஞர் பூமியின் குளிர்பனிக் காலத்தில் (Ice Age) பனியிலிருந்து காப்பாற்றிக்கொள்ள ஆடைகளைப் பயன்படுத்தினதா சொல்றாங்க. இன்னும் ஆய்வு செய்ய, காலம் மாற வேறுவிதமாவும் முடிவுகள் வரலாம். ஆனா, மனிதர்கள் குளிர்பனில தகவமைச்சுக்க ஆடையைப் பயன்படுத்தியிருக்காங்க” என்று அறிவியலைத் துணைக்கழைத்து நிறுவ முற்பட்டார் ஆஷா.

“ஆனா, மானம் காக்கவே உடை போடறோம்னு சொல்றாங்களே மிஸ்?” எனப் புதியதாகக் களத்தில் குதித்தாள் தனலட்சுமி.

“பனிக்காலத்தில் தகவமைப்புக்குப் பிறகு, ஆண், பெண் குறிகளைப் பிறரிடம் இருந்து மறைத்துக்கொள்ளவும் பயன்படுத்தினதா சொல்றாங்க. அப்போவெல்லாம் இது ஆண் ஆடை, பெண் ஆடைன்னு பிரிவுகள் இருந்திருக்கும்னா நினைக்கறீங்க” என்று கேள்வியோடு முடித்தார் ஆஷா.

“இருந்திருக்காதுன்னு நினைக்கிறேன். இருந்தாலும் எப்படின்னு சொல்லிருங்க” என்றான் சிவா.

“முதன்முதலில் மனிதர் இலை, தழை, மரப்பட்டை, விலங்குகளின் தோல் ஆகியவற்றை அணியத் தொடங்கினாங்க. பனிக்காலத்துல ( Ice Age ) நம் முன்னோர்கள் தாவரங்கள் கிடைக்காததால் தற்காத்துக்க விலங்குகளை உண்டு பிழைக்கத் தகவமைச்சுக்கிட்டாங்கன்னு படிச்சதா நினைவு. குளிரில் இருந்து தற்காத்து தகவமைக்க விலங்கு தோல் மிகவும் உதவியிருக்கும். அப்போ கிடைத்த விலங்குத் தோலைப் போர்த்தி குளிரிலிருந்து தப்பித்திருப்பர். பின்னாளில் மெல்லிய ஊசி போன்ற கண் வைத்த எலும்புகள் கிடைத்ததை அடுத்து ஆடைகள் தைத்து பயன்படுத்தியிருக்காங்கன்னு தொல்லியல் கண்டுபிடிப்புகள் சொல்லுது” என்றார் ஆஷா.

“அப்போ ஆதிகாலத்துல ஆண், பெண் பாகுபாடு இல்லாமதான் உடைகளில் இருந்திருக்கு மிஸ். எப்போ பெண் பயன்படுத்தும் உடைகள் கீழானதா மாறுச்சு?” என்றான் பிரவின்.

“தேரைச் சரியான திசைக்குத் திருப்பிவிட்டிருக்கான் பிரவின். ஆதியில பெண், சமூகத்துல தலைமைப் பொறுப்புல இருந்திருக்கா. சொத்துகள் பொதுவுடமையா இருந்தது. ஆண் ஆதிக்கம் செலுத்தத் தொடங்கியதில் இருந்து பெண்ணும் சரி, அவளின் ஆடை மற்றும் இன்ன பிற எல்லாம் சமூகத்தில் வீரமில்லாததாகவும் கீழானதாகவும் பார்க்கப்படுது. இதுல இன்னொன்னும் மறைஞ்சு இருக்கு. ஆடை, சொத்து எல்லாம் பொதுவுல இருந்தப்போ பாகுபாடு இல்லை. பல்வேறு காரணங்களுக்காக , காலங்கள் மாற ஆண் கை மேலோங்க, ஆதிக்கம் பெற ஆண் வலிமையுடையவனாகவும், பெண்ணை வீட்டிற்குள்ளே முடக்கியதன் விளைவாய் வலிமை இல்லாதவளாக மாற்றப்பட்டு வலிமை இல்லாதவளாகச் சித்தரிக்கப்படுகிறாள். ஆண் என்றால் வீரமா இருக்கணும், அது இல்லாத ஆணை, பெண் அதாவது பெண், பொட்டை என கேலிக்குரியதாக சமூகம் மட்டம்தட்ட முனையுது” என்றார் ஆஷா.

“அது சரிங்க மிஸ். பெண் ஆடைகள் ஏன் கீழானதாகப் பார்க்கப்படுது? பொண்ணுனா இந்த ஆடைதான் போடணும்னு சமூகத்துல எழுதப்படாத விதியா இருக்கே, அது சரிங்கிறீங்க?” என்றான் இஸ்மாயில்.

“ஆண்கள் ஆதிக்கம் செலுத்த பெண் கீழானவளாக மாற்றப்படும் போது, அவளது உடை, செயல்களெல்லாம் தாழ்த்தப்படுது. அந்த வகையில் பெண் அணியக்கூடிய உடைகள் அப்படிச் சொல்லப்படுது.

பொதுவாக ஆடைகள் அணிவது அவரவர் தனிப்பட்ட விருப்பம். ஆனால், பெண்ணிடம் ஏன் இதைப் போடல, இதப் போட்ட… அப்படி உடை உடுத்த வேண்டியதானனு சமூகத்துல முக்கிய பொறுப்புகள்ல இருக்கவர்லயிருந்து எளிய குடிமக்கள் வரை பெண்ணை நோக்கிக் கை, யார் எவரென்று அறியாமல் நீளவே செய்கின்றதை நடைமுறையில் பார்த்திருக்கோம். எங்க பாப்பா சபானாவுக்கு அனைத்து விதமான உடையும் உடுத்திக்கிட்டு இருந்தோம். இப்போ கொஞ்சம் வளர்ந்ததும் பெண் மட்டும் உடுத்தணும்ன்னு சொல்ற உடைகள்தான் போடுவேன்னு சொல்றா… ஏன்னு கேட்டா எல்லாரும் பையன் உடையைப் போடறேன்னு கிண்டல் பண்றாங்கன்னு சொல்றா… சிறுவயதிலிருந்தே சமூகத்தால திணிக்கப்படுது நம் மண்டைக்குள்ள… எங்க பாப்பாவே சான்று… எப்பவும் பாவாடை, ப்ராக் போன்ற ஆடைகள்தான் போடுவேன்னு அடம்பிடிக்கறா. உச்சகட்டமா பெண் உடையின் காரணமாகவே பாலியல் வன்முறை ( Sexual Harassment ) நடக்கறதாவே சொல்வாங்க பாருங்க.

“உடைகளில் பாலினம் பார்த்து அணிவது தேவையற்றதுதான். இந்த நவீனயுகத்தில் உடைகள் ஆண், பெண், திருநர் என வித்தியாசமின்றி அணியறவங்க இருக்காங்க. ஒரு வேளை ஆண், பெண் உடல் இயல்புக்கு ஏற்ற வகையில் உடைகள் தேவையெனில் அணியலாம்.

பெண்ணுக்குச் சிறுநீர் கழிக்க பாவாடை எளிமையா இருக்கலாம். ஆனாலும் அதற்கெல்லாம் Use and Throw Pee and Go வந்துவிட்டது, மேலை நாடுகளில் பயன்படுத்தவும் செய்றாங்க. எது எப்படி இருப்பினும் விரும்பிய உடையைப் பெண் அணியலாம். சமூகம் அதைப் புரிந்துகொள்ளும் இடத்திற்கு நகர்வது காலத்தின் இன்றியமையாத தேவை” என்று தீர்க்கமாக முடித்தார் ஆஷா.

“நாங்க பேண்ட், சட்டை போடும்போது பெண் மாதிரி ட்ரெஸ் போடுன்னு சின்னப் பசங்ககூடச் சொல்றாங்க. இது போல தெருக்களில் சண்டைல சொல்லும் போது எங்களுக்கு வருத்தமாதான் இருக்கு மிஸ்” என்றாள் நான்சி.

“சில இடங்களில் பெண் உடைகளாகக் கருதப்படும் புடவை, சுடிதார் போன்றவை ஆண்கள் அணிந்து, உடைகளைப் பாலின பாகுபாடு இல்லாமல் ஆக்க வேண்டும் என்று சமத்துவத்தை விரும்பும் ஆண்கள் முன்னெடுக்கிறார்கள். கேரளா பள்ளிகளில் ஆண், பெண், திருநர்கள் மற்றும் ஏனையோரும் ஒரே மாதிரியான பள்ளிச் சீருடைகள் அணியலாம் என்று கல்விக்கூடங்களில் முன்னெடுப்பது நல்ல மாற்றமாக சமத்துவ விரும்பிகள் வரவேற்கிறார்கள். பெண் அடிமை ஆக்கப்பட்டு பல்லாயிரம் ஆண்டுகளாகிவிட்டது. நாம் சேர்ந்து பேசிப் பேசி நடைமுறைப்படுத்த உடையில் பாகுபாடு இல்லாமல் மாறும் என்று நம்புவோம். இதற்காகப் பலர் பெண் இப்படித்தான் உடை அணிய வேண்டும் என்று வரலாறு நெடுக மறுத்து மாற்றுப்பாதை இட்டிருக்கிறார்கள். இதில் முதலாளித்துவமும் உடையில பெண்களைக் கவர்ச்சிப் பொருளாக வைத்திருக்கச் செய்கிறது. பெண்ணுக்கான ஆடைகளில் தொடைப்பகுதி இறுக்கமாக, இடுப்புப் பகுதி இறக்கமாகவுமெல்லாம் வடிவமைக்கப்படுகிறது. ஆணுக்கென வடிவமைக்கப்படும் ஆடைகளில் இது போன்ற விஷயங்கள் இல்லை. இந்த உடை அரசியலையும் நாம் உள்வாங்கிக்கொள்ள வேண்டிய தேவையும் இருக்கிறது. இனி சண்டைகளில் பேசப்பட்டாலும் நம்மை யாராவது பேசினாலும்கூட நாம் வருத்தமடைய வேண்டியதில்லை. யோசிங்க குட்டிகளே” என்றார் ஆஷா.

“ஆடைகளுக்குள்ள இத்தனை விஷயம் மறைஞ்சு இருக்கா? நன்றி மிஸ். இனி வருத்தப்பட மாட்டோம். இதைப் பக்குவமா அணுகுவோம். மாற்றத்தை முன்னெடுக்க நம்மாலான விஷயங்களைச் செய்வோம்” என்றனர் கூட்டாக.

பின்குறிப்பு – சீரை – சீலை

காய்ந்த இலை, தழைகளான ஆடையே தமிழில் சீரை என அழைக்கப்பட்டது. ( சான்று : தென்னஞ்சீரை ) காலம் செல்லச் செல்ல ரை விகுதி லை விகுதியாக மருவிடு விட்டது என்று தமிழ் சொல்லாராய்ச்சில் சொல்லப்படுகிறது. அநேகமாகச் சீலையை ஆதிகாலத்தில் பாலின பாகுபாடில்லாமல் அனைவரும் அணிந்திருப்பர்.

படைப்பாளர்:

சாந்த சீலா

சாந்த சீலா கடந்த 17 ஆண்டுகளாக ஆசிரியராகப் பணிபுரிகிறார். கும்முடிப்பூண்டியை அடுத்த பூவலை கிராமத்தின் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ஆசிரியர். பேருந்து வசதி கூட சரியாக இல்லாத இந்த ஊரிலேயே தங்கி, பெரும்பாலும் ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த குழந்தைகளுக்கு கல்வியறிவு தருகிறார். இவரால் இந்தப் பள்ளியில் இடைநிற்றல் குறைந்திருக்கிறது. பள்ளி மேலாண்மைக் குழுவின் ஆசிரிய உறுப்பினராகவும் இருக்கிறார். கல்வியின் நோக்கமான படைப்பாற்றல் வெளிப்பட குழந்தை மையக் கல்வி அமைய வேண்டும் என்றும் விளிம்புநிலை குழந்தைகளும் மையநீரோட்டத்தில் இணைய வேண்டும் செயல்படும் அரசு பள்ளி ஆசிரியர். குழந்தைகளைக் கொண்டாடுவோம் கல்வி இயக்கம், குழந்தைநேயப் பள்ளிகள் கூட்டமைப்பு போன்ற அமைப்புகளில் செயலாற்றிக் கொண்டுவருகிறார்.