குழந்தையின் குரலுக்குக் காது கொடுங்கள் -2

கடந்த பகுதியின் தொடர்ச்சி

மகாவுக்கோ நடைபெற்ற சம்பவத்தின் மீதான குழப்பமே தீர்ந்தபாடில்லை. புல்லட் ஓட்டும்போது அப்பாவின் நண்பர், நீச்சல் கற்றுத்தரும்போது பக்கத்து வீட்டு தாத்தா, பள்ளிப் பேருந்தில் பயணிக்கையில் தெரியாத கைகளின் தீண்டல் என பாதுகாப்பற்ற தொடுதல்கள், மனதை மீண்டு எழ முடியாதபடி அழுக்கிக்கொண்டே இருந்தன. அவளோ சிறு பெண்…பாரம் தாளாமல் கல்வியிலும் கவனம் செலுத்த முடியாமல் தடுமாறினாள். இது தனக்கு மட்டும்தான் தெரியுமென நினைத்தாள். 

தான் துடுக்கான பெண்ணானதாலோ என்னவோ, தனக்கு மட்டும் இவ்வாறு நடப்பதாக நினைத்து வருந்தினாள். ஒவ்வொரு பாதுகாப்பற்ற அத்துமீறலின் போதும், தந்தை, “ ஏன் அங்கு போனாய்? இனி அங்கு போகாதே!”, என்ற சொற்களைத் தவிர்க்காமல், ஏன்…மாற்றாமல் அதையே பயன்படுத்தினார் எனக்கூட சொல்லலாம். 

ஒரு கட்டத்தில் அவரிடம் பகிர்வதே வீண் என்ற மனநிலையை எட்டியிருந்தாலும், இவளே குற்றவாளியாக ஆக்கப்பட்டது மிகுந்த மனவேதனையை அவளுக்கு உண்டு பண்ணியது. 

இறுதிப் புகலிடமாக அம்மாவிடம், “ ஏன் இப்படி?” எனக் கேட்டுவிட்டாள். அவரோ, “ தோ பாரு, இனி இந்த மாதிரி பிரச்சனைகள் வராதவாறு நடந்துக்கோ!”, என்றார். தன் பின்னால் காதல் என்று சுற்றிய பையன் விசயத்தைச் சொன்னதற்கு, “சும்மா இது போல சொல்லிக்கிட்டே இருந்தா அப்பா உன் படிப்பைத்தான் நிறுத்திடுவாரு…”என்பதே அம்மா பூங்கோதையிடமிருந்து பதிலாய் கிடைத்தது.

பெரும் மன அழுத்தத்ததில் இருந்து மீளமுடியாமல், ஆற்றின் சுழலில் சிக்கியவள் போல, சிக்கித் தவித்துக் கொண்டிருந்த மகாவுக்குத் தூக்கம் என்பது சில நாள்களாய் கனவாகிப்போயிருந்தது.

பிடித்த கணக்கு வகுப்பில் அல்ஜீப்ரா பற்றி வாத்தியார் பெலிக்ஸ் பாடமெடுத்துக்கொண்டிருந்தார். அனைவரும் அவரின் கற்பித்தல் ஜாலத்தில் மூழ்கி நீந்தி முத்து எடுத்துக் கொண்டிருந்த வேளையில், பக்கத்து வீட்டு மாமா, அப்பாவின் நண்பர், எதிர்வீட்டு தாத்தா என இவளை வகுப்பிலேயே ஒன்றுவிடாமல் பாடாய்ப் படுத்தினார்கள். போதாகுறைக்கு காதல், காதல் என்று பின்னாடியே சுத்தும் பஷீர் வேறு! அவனிடம் எத்தனை முறைதான் மறுப்பது? இவையெல்லாம் அப்பாவுக்குத் தெரிந்தால், படிப்பையே நிறுத்திடுவார் என அம்மா ஒரே போடாக போட்டது மகாவை தீயாய் அலைக்கழித்தது. அவளது எண்ணங்கள் அவளை பிசாசுகள் போல ஆட்டிப்படைத்தன. வாழ்க்கையில், பதின்ம வயதில், நண்பர்களெல்லாம் கேலி, கிண்டலுமாய் வாழ்வை மகிழ்கின்றனர்… நான் மட்டும் இப்படி தவியாய் தவிக்கிறேனே என மனம் நொந்து கொண்டாள். 

எதைத் தின்றால் பித்தம் தெளியும் என்ற மனநிலையில் உழல்வது அகோரத்தை எப்பொழுதும் கக்கத்திலேயே வைத்துக் கொள்வது போன்ற மனநிலையில் அவள் இருந்தாள். 

மறுநாள் மாவட்ட குழந்தை நல அலுவலர்கள் வகுப்பில் குழந்தைகளோடு உரையாடும் நிகழ்வு நடைபெறவிருப்பதாக வகுப்பில் ஆசிரியர் சொன்னதுதான் தாமதம், அவளை இந்தப் பாதுகாப்பற்ற  சூழலில் இருந்து மீட்கும் மீட்பர்களாகவே அவர்களை எண்ணியது மகாவின் மனது.

“ ஒருவேளை எதாவொரு காரணத்தால் நிகழ்வு நடக்காமல் போய்விட்டால்? அவர்கள் வராமலே போய்விட்டால் என்ன செய்வது, அவர்கள் வந்தாலும் பேசும் சூழ்நிலை அமையுமோ அமையாதோ? பலபேர் சூழ்ந்திருக்க எப்படி என் சுமைகளை இறக்க முடியும்… என தூக்கம் கொள்ளாமல், அப்படி ஆகிவிடுமோ ! இப்படி ஆகிவிடுமோ என வண்டியை எல்லா பக்கமும் செலுத்திப் பார்த்துவிட்டாள். வண்டி செலுத்தப்பட்ட பாதையெல்லாம் முட்டுசந்திலேயே இறுதியாகப் போய் நின்றது. 

“நம்ம மாவட்டத்துக்குக் குழந்தைகளுக்கு ஏதேனும் பாதுகாப்பு பிரச்சனை வந்தாலோ, அவர்கள் எங்களைத் தொடர்பு கொண்டாலோ அல்லது எங்களுக்குத் தெரியவந்தாலோ, அதற்கான விசாரணை செய்து தக்க நடவடிக்கை எடுப்போம். பாதுகாப்பற்ற பாலியல் அத்துமீறல்கள், பாலியல் வன்புணர்வு, குழந்தைத் தொழில் முறை, குழந்தைத் திருமணம், இப்படி எல்லாத்தையும் தடுத்து நிறுத்தற பொறுப்பு அரசின் சார்பா எங்களோடது. வட்டாரம், கிராம அளவுல எல்லாம் குழந்தை நல பாதுகாப்பு குழுமம் இயங்கிவருது. ஆனா இன்னும் முறையா செயல்படுத்தப்படணும்”, என்று வந்தவர்கள் சொன்னார்கள்.

“ மேடம், எப்படி நாங்க உங்களுக்குப் பிரச்சனைகளைச் சொல்றது. நீங்க எங்கோ இருக்குறீங்க? “ என்ற கேள்வி உதயாவிடம் பிறப்பெடுத்தது. 

“ 1098 என்ற இலவச எண்ணுக்கு போன் பண்ணி சொல்லலாம். அது இலவச எண். போன்ல காசே இல்லன்னாலும் சரி, போன் பேசலாம். கால் பண்ணினா பணம் போகாது. உங்க பிரச்சனையை 1098 என்ற எண்ணிற்குச் சொல்லலாம்”, என அலுவலர்கள் சொல்ல, குழந்தைகள் மத்தியில் ஒரு நம்பிக்கை ஒளிக்கீற்று பிரகாசித்தது. 

அலுவலர்களை அழைத்து வந்த ஆசிரியர் பாமா இறுதியாக, “உங்களுக்கு ஏதேனும் பிரச்சனை எனில் உங்களுக்கு நம்பிக்கையான நபரிடம் பேசுங்க. அவங்க உங்க தனிப்பட்ட விசயத்தை மற்றவரிடம் பகிராதவங்களாகவும் மதிப்பளிப்பவராகவும் இருக்கணும். அதற்கு ஆலோசனை வழங்கும் பக்குவம் கொண்டவங்களாக இருக்கணும். விருப்பம் இருந்தா என்கிட்ட கூட நீங்க பேசலாம்”, எனச் சொல்ல, மகா உற்சாகமானாள். வானத்திலிருந்து தெய்வம் நேரில் வந்து வாக்கு வழங்கியதாகவே உணர்ந்தாள். 

வீடு திரும்பிய மகாவுக்கு, ‘ என்கிட்ட கூட நீங்க பேசலாம்’, என்ற பாமா ஆசிரியரின் வார்த்தைகள் தவிர வேறெதும் மன ஓட்டத்தில் இல்லை. ‘எத்தனை நாள் என் புதிர் கேள்விகள் மண்டையில் குடையோ குடைன்னு குடைஞ்சுக்கிட்டு கிடக்கு. நாளை ஆசிரியர் பாமாவைச் சந்தித்து இதற்கெல்லாம் முடிவுகட்டாமல் இந்த மகா ஓயமாட்டாள்’, என சங்கல்பம் வேறு எடுத்துக் கொண்டாள். 

“ வணக்கம் டீச்சர், என் பெயர் மகா, நான் உங்ககிட்ட தனியா பேசணும். நீங்க எப்போ பேச வாய்ப்பிருக்கோ அப்ப சொல்லுங்க”, என்றாள் மகா.

“ சரிம்மா, இப்போ வகுப்பிருக்கு. நானே உன்னக் கூப்பிட்டு அனுப்பறேன்”, என்று வகுப்பிற்கு விரைந்தாள் பாமா. 

மகாவுக்கு கொஞ்சம் தூக்கலாகவே மனதில் ஒரு நிம்மதி பெருக்கெடுத்தது. மாலை 3.30 மணிக்கு, “மகா.. உன்னை பாமா டீச்சர் கூப்பிட்டாங்க”, என்ற குரல் கேட்டதுதான்… “ எங்கே இருக்காங்க?” என்று பறந்தாள். “10 ஆம் வகுப்புல இருக்காங்க. வரச் சொன்னாங்க”, என்றதுதான் தாமதம், அங்கே ஓடிவிட்டாள். 

வகுப்பின் குழந்தைகள் உடற்பயிற்சி வகுப்பிற்குச் சென்றதால் வகுப்பறை காலியாக இருந்தது. யாருமற்ற தனிமையில், “சொல்லு மகா, என்ன என்கிட்ட பேசணும் நெனச்ச, எதாவது பிரச்சனையா?”, என்ற பாமா டீச்சர் பேச்சைக் கேட்டதும், பாலைவனத்தில் ஒரு சொட்டு மழைநீர் பட்டதுபோல் மனம் உணர்ந்தது. 

தலைவர் மாமாவின் ஆபாச பேச்சு, பைக் ஓட்டும்போது அப்பாவின் நண்பர், நீச்சல் கற்றுக் கொள்ளும்போது எதிர்வீட்டு தாத்தா, பேருந்துகளில் முகம் தெரியாத கைகளின் அத்துமீறல்கள் என அணையைத் திறந்த வெள்ளத்தைவிட அதிக வேகமாக தன் மன அழுத்தத்தை இறக்கி வைத்திருந்தாள் மகா.

“இதெல்லாம் எங்க அப்பாகிட்ட சொன்னா, அவரு என்னையே ஏன் அங்கப் போறன்னு குத்தம் சொல்றாரு. ஆனா சின்ன வயசுல தட்டிக் கேட்டாரு. இப்ப கேட்க மாட்டிங்கிறாரு… அதான் மிஸ் எனக்குப் புரியல. இதையெல்லாம் தடுக்கவே முடியாதா? இல்ல நான் இப்படி வெளில போயி கத்துக்கணும்ன்னு நினைக்கறதுதான் தப்பா? எனக்கு ஒரு விசயமும் வெளங்க மாட்டிங்குது மிஸ்” 

“ மகா ஒண்ணு புரிஞ்சுக்கோ! பலபேர் எங்கயும் சொல்ல முடியாம தடுமாறி மன அழுத்தத்துக்கு ஆளாகுறாங்க. இதை என்கிட்ட நீ சொன்னது மிக்க மகிழ்ச்சி. இது போன்ற அத்துமீறல்கள் பெரும்பாலான பெண்களுக்கு நடக்கறதுதான். உனக்கு மட்டும் நடக்கல. ஏன் இப்படி நடக்குது? நாம எப்படி புரிஞ்சுக்கிட்டு எதிர்வினை ஆற்றுவது? இதை எப்படி தடுக்கலாம்? தடுக்கும் பொறுப்பு யார்யாருக்கெல்லாம் உண்டுன்னு அலசி புரிஞ்சுக்கணும் மகா…”

“பொதுவாக மதம், சாதி, ஆண் ஆதிக்க சமூகம்னு நம்ம உடல் மீது கருத்துகளை கட்டமைச்சு வைச்சிருக்காங்க. ஒரு பெண்ணோட உடம்பு அவளைக் கட்டிக்கப்போற ஆணுக்குத்தான் உரிமை. அதைப் பத்திரமா யாரும் தீண்டாம ஒப்படைக்கணும் அப்படிங்கிறதாலதான், சின்ன வயசுல கேட்ட அப்பாவால, இப்போ வயதுக்கு வந்த பிறகு கேட்க முடியல. இந்த அத்துமீறல் வெளில தெரிஞ்சா பெண்ணைத்தான் குற்றவாளியாக்க காலம் காலமா பழமொழி, கதைகள், மத சட்டம்ன்னு பல விஷயங்கள் பொத்தி பொத்தி பாதுகாக்கறம்னு பெண்ணை கொத்தி கொத்திக் கூறு போட்டுக்கிட்டிருக்கு. புனிதம், தீட்டு இதெல்லாம்கூட ஒரு வகைல இதுக்கு உதவுது. பெருசானா நிறைய வாசிக்க வாசிக்க தேடல் மூலம் நிறைய புரிஞ்சுக்குவ. பொதுவா சமூகத்துல பாலியல் சம்பந்தப்பட்ட விஷயங்களைப் பத்தி பேச தடை இருக்கு. அதனால மறைமுகமா இந்த மாதிரி செயல் மூலம் பாலியல் வறட்சியை, கேள்வி கேட்க முடியாத வலிமை குறைந்த உன்னைப் போன்ற குழந்தைகள்கிட்ட நிறைவேத்திக்கிறாங்க மகா”

Photo by Sammy Williams on Unsplash

“ அப்போ நாம என்னதான் பண்றது மிஸ்? “

“நம்முடைய உடல் நமக்குத்தான் சொந்தம். அதை நம் அனுமதியில்லாம யாரும் தொடக்கூடாது. குறிப்பா அந்தரங்க பகுதிகளைச் சொல்லலாம் மகா”

“அப்போ யாரையும் தொடவே கூடாதுன்னு சொல்றிங்களா மிஸ் ? “

“உனக்கு நெருக்கமானவங்க உன்னைத் தொடலாம். அதும் நீ பாதுகாப்பா உணர்றவரைக்கும்தான். நீ பாதுகாப்பற்று உணர்ந்தா, தொடவேண்டாம்ன்னு சொல்லிடலாம் மகா. அந்தரங்கப் பகுதியைப் பொறுத்தவரைக்கும் மருத்துவர் உனக்கு எதாவது பரிசோதனை செய்யும்போது அதும் உங்க பெற்றோர் முன்னிலைல தொடலாம். மற்றபடி நண்பர்கள் கைகுலுக்கறதெல்லாம் நார்மலான விசயம்தான். ஆனா அதை எதிர்பாலின நண்பர்கள் எப்படி புரிஞ்சுக்கறாங்கன்னு பார்த்துக்கோ! ஏன்னா நம்ம சமூகம் அப்படி இருக்கு மகா”

“ எதைச் செஞ்சாலும் நீ ஏன் அங்க போனன்னு கேட்கறாங்களே தவிர, அவங்கள ஒன்னும் சொல்லமாட்டிங்கிறாங்களே மிஸ்? “

” காலங்காலமா பழமொழிகள், கலை, இலக்கியங்கள்ல கூட பாரு, ‘ஊசி இடங்கொடுக்காம நூலு நுழையமுடியுமா?’, ‘ முள்ளு மேல சேலை விழுந்தா சேலைக்குத்தான் ஆபத்தே முள்ளுக்கு ஒண்ணும் ஆகாது!’, ‘ இவ செய்யாமலா அவன் பண்ணிருப்பான்’, ‘அவன் ஆம்பள ஆயிரம் செய்வான் இவளுக்கு எங்க போச்சு புத்தி’,  என குப்பைகளைக் கொட்டோகொட்டுன்னு எல்லோர் மண்டைக்குள்ளயும் கொட்டி வைச்சிருக்காங்க. இன்னொன்னு நம் சமூகத்துல தப்பு செஞ்சாலும், அது வெளில தெரிஞ்சாத்தான் பிரச்சனை. தெரியாம எத்தனை தப்புவேணும்னாலும் பண்ணிக்கலாம். நல்லவன் வேசம் போட்டுட்டு பெரிய மனுசனா வாழ்ந்திட முடியும் மகா”

“ அப்போ இது மாதிரி நடந்தா என்னதான் பண்றது மிஸ்?” 

“ பல அத்துமீறல்கள் நெருங்கின உறவினர்களாலதான் நடக்குதுன்னு ஆய்வுகள், தரவுகள் சொல்லுது. யாரையும் முழுசா நம்பாத! யாருமில்லாத இடங்கள்ல அவங்களுக்கு வாய்ப்பு அதிகம். அதுவுமில்லாம உன்னோட பயம் அவங்களோட முதலீடே!”

“இது போல நடந்தா தைரியமா சத்தம் போடு, அவங்க பிடியிலிருந்து நழுவியோ விலகியோ அந்த இடத்தைவிட்டு ஓடீரு. இன்னொன்னு இதுல உன் தப்பு எதுவுமில்ல; அவங்கதான் அத்துமீறி தொட்டாங்கன்னு நமக்குக் குற்ற உணர்வு இல்லாம அதை நம்பிக்கையானவங்ககிட்ட சொல்லணும் மகா” 

“பேருந்துல தட்றவன என்ன செய்யறது மிஸ்?” 

“ முதல் தடவை தட்டிவிட்டுப்பாரு. திரும்பத் திரும்ப செஞ்சா சேப்டி பின் வைத்தியம் குடுத்துரு…எப்படின்னாலும் நம்ம கிட்ட சேப்டி பின் இருக்கும். அதுல ஒரு குத்து குத்திவிடு. இது தனியா போகும்போதுதான். அப்பா அம்மா உறவினர்கள் மாதிரி நம்பிக்கையானவங்ககூட போகும்போது சத்தம் போட்டு அவங்ககிட்ட சொல்லிடு. அவங்க அப்படி செய்யல பொய் சொல்லுதுன்னு சொன்னாக்கூட விடாம, நீ உறுதியா நின்னு சொல்லு மகா” 

“ காதல் கீதல்ன்னு ஒரு பக்கம் சுத்தறவங்களாலும் ஒரு பக்கம் டார்ச்சர் தாங்க முடியல மிஸ். அப்போ இது மாதிரி அத்து மீறல்களைத் தடுக்க முடியாதா? ஆம்பளப் பசங்க காளைக்குட்டி மாதிரி ஊர் மேய்வாங்களா? யாரோட பொறுப்பு இதெல்லாம் தடுக்கறது? பெத்தவங்களே அப்படி சொன்னா நாங்க எங்கதான் போறது? இது போன்ற அத்துமீறல்கள் ஆண்குழந்தைகளுக்கு நடக்குமா? “ என கேள்விகளை அடுக்கிக்கொண்டே போனாள் மகா.

பாமா டீச்சர் என்ன சொன்னார்?

தொடரும்

படைப்பாளர்:

சாந்த சீலா

சாந்த சீலா கடந்த 17 ஆண்டுகளாக ஆசிரியராகப் பணிபுரிகிறார். கும்முடிப்பூண்டியை அடுத்த பூவலை கிராமத்தின் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ஆசிரியர். பேருந்து வசதி கூட சரியாக இல்லாத இந்த ஊரிலேயே தங்கி, பெரும்பாலும் ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த குழந்தைகளுக்கு கல்வியறிவு தருகிறார். இவரால் இந்தப் பள்ளியில் இடைநிற்றல் குறைந்திருக்கிறது. பள்ளி மேலாண்மைக் குழுவின் ஆசிரிய உறுப்பினராகவும் இருக்கிறார். கல்வியின் நோக்கமான படைப்பாற்றல் வெளிப்பட குழந்தை மையக் கல்வி அமைய வேண்டும் என்றும் விளிம்புநிலை குழந்தைகளும் மையநீரோட்டத்தில் இணைய வேண்டும் செயல்படும் அரசு பள்ளி ஆசிரியர். குழந்தைகளைக் கொண்டாடுவோம் கல்வி இயக்கம், குழந்தைநேயப் பள்ளிகள் கூட்டமைப்பு போன்ற அமைப்புகளில் செயலாற்றிக் கொண்டுவருகிறார்.