இன்று தேசிய பெண் குழந்தைகள் நாள். ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 24 அன்று கொண்டாடப்படும் இந்த நாளை நாமும் #DaughterAndMe, #BetiPadao, #BetiBachao என வெற்று ஹாஷ்டேகுகள் மூலம் கடந்து போகிறோம். அதிகம் போனால் பெண் குழந்தைகளுடன் எடுத்துக்கொண்ட படங்களைப் பகிர்ந்து ‘என் மகள் என் கண், என் முத்து, தங்கம்’ என பதிவுகள் எழுதிக் கொள்கிறோம்.

நம் தங்கம், முத்து, கண்ணுக்கு என்னென்ன தேவை என பார்த்துப் பார்த்து ஓவர்டைம் செய்து பணம் சம்பாதிக்கும் நாம் கண்டிப்பாக நல்ல பெற்றோர் தான்; ஐயமில்லை. ஆனால் நம் வீட்டுப் பெண் குழந்தைகளிடம் நாம் சம்பாதிக்க வேண்டிய மதிப்பிட முடியாத செல்வம் ஒன்று உள்ளது- அது- நம்பிக்கை. மகள் நம் மேல் வைக்கும் நம்பிக்கை. அம்மாவை, அப்பாவை நம்பி நம இதைச் சொல்லலாம், அவர்கள் நமமி நம்புவார்கள்; அம்மா அப்பா நம் தோழமை, அவர்கள் நம்மைப் புரிந்து கொள்வார்கள் என்ற நம்பைக்கையை நாம் சம்பாதித்து வைத்திருக்கிறோமா என்பதை நாம் சுயபரிசீலனை செய்துபார்க்க வேண்டும்.

சமீபத்தில் சமூக வலைதள ஊடகங்களில் சென்னை பி எஸ் பி பி பள்ளியில் படிக்கும் பெண் குழந்தைகள் தங்களுக்கு நேர்ந்த பாலியல் துன்புறுத்தலை தங்கள் சீனியர்கள் மூலம் வெளிச்சத்துக்குக் கொண்டுவந்தார்கள். குழந்தைகள் தங்கள் அம்மா, அப்பா என 24X7 அவர்களுக்காகவே உழைத்து ஓடாய்த் தேய்வதாகச் சொல்லும் பெற்றோரிடம் சொல்லவில்லை. மாறாக தங்களைப் போலவே பாதிக்கப்பட்ட சீனியர்களை நாடினார்கள். சமூகம் என்ன செய்தது? அந்த சீனியர் பெண்களை மிரட்டியது, ஒடுக்கப் பார்த்தது, சம்பந்தப்பட்ட பெண் சொல்லட்டும் என்று நகைத்தது, பார்ப்பன பள்ளியின் மேலான தூற்றுதல் இது என பக்கம் பக்கமாக எழுதியது.

மேற்படி தகவல்களை வெளியிட்டதற்காக நாய்களைப் போல இன்றும் துரத்தப்பட்டுக் கொண்டிருக்கும் அபலைப் பெண்களின் மத்தியில் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம். அரசே புகார்களைக் கவனத்தில் எடுத்துக்கொண்டு நடவடிக்கை எடுக்க முயன்றாலும் நீதி கிடைத்ததா? குற்றம் சாட்டப்பட்டு குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்ட ஆசிரியர் ராஜகோபால் இரண்டு நாள்களுக்கு முன் பிணையில் வெளியே வந்துவிட்டார்.

இப்போது சொல்லுங்கள், உங்கள் வீட்டுப் பெண் குழந்தைகளிடம் நம்பிக்கையை சம்பாதித்து இருக்கிறீர்களா?

Wikipedia

பிணையில் வெளியான ராஜகோபாலை பாதிக்கப்பட்ட குழந்தை பார்க்க நேர்ந்தால் அதன் மன ஓட்டம் எப்படி இருக்கும்? பாதிக்கப்பட்டதை பச்சிளம் குழந்தைகள் முன்வந்து துணிவுடன் சொல்லியும், அதை எள்ளி நகையாடிக் கடந்த சமூகமான நாம், நம் பெண் பிள்ளைகளின் நம்பிக்கையை எப்படி சம்பாதிக்கப் போகிறோம்? கோவை பள்ளி ஆசிரியரின் பாலியல் துன்புறுத்தல் காரணமாக தற்கொலை செய்துகொண்ட மாணவி ஏன் இறுதிவரை பெற்றோரிடம் அதைச் சொல்லாமலே தனியே போராடித் தோற்றார்? இன்று பிணையில் வெளியாகியிருக்கும் அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் மூலம் இந்த சமூகம் பெண் பிள்ளைகளுக்குச் சொல்லும் செய்திதான் என்ன?

பணம் இன்று வரும், நாளை போகும். நம்பிக்கை, அதிலும் ‘என் அம்மாவிடம் எதையும் சொல்லலாம், என் அப்பா என்னைப் புரிந்துகொள்வார்’ என்ற நம்பிக்கையை சம்பாதித்தால், அது காலத்துக்கும் அன்பாக நம்முடன் இணைந்துநிற்கும். குழந்தைகளுக்கு செவி கொடுங்கள், பேசுங்கள், உரையாடுங்கள். அடக்கிப் பேசி, ‘எனக்குத் தெரியாதா?’, ‘நான் பார்க்காததா?’ எனச் சொல்லும் மேட்டிமைத்தனத்தை குறைந்த பட்சம் வீட்டுப் பெண் குழந்தைகளிடம் காட்டாதீர்கள். குழந்தைகளுக்குத் தெரியும், அவர்கள் தங்களைச் சுற்றிய உலகை கவனித்துக்கொண்டே தான் இருக்கிறார்கள். உங்களை விடவும் அதிகமாக விஷயம் தெரிந்தவர்களாகவும் இருக்கிறார்கள் என்பதை ஒப்புக்கொள்ளுங்கள்.

இந்த ஆண்டின் கருப்பொருள்- “Empowering Girls for a Brighter Tomorrow, ஒளிமயமான எதிர்காலத்துக்குப் பெண்களுக்கு அதிகாரம் அளியுங்கள் என்பதே. அந்த அதிகாரத்தை பெண்களுக்குத் தரவல்லது நாம் அவர்களுக்குத் தரும் நம்பிக்கையே. ‘என்ன நடந்தாலும் சரி, அம்மாவும், அப்பாவும் என்னை நம்புவார்கள்’ என்ற நம்பிக்கையை பெண் பிள்ளைகளிடம் சம்பாதிக்க முயல்வோம்.