ராசாத்தியின் கதை…-5

இறந்து போன ரேணுகாவின் நினைவாக ஆறு மாதங்கள் விளக்கு ஒன்று ஏற்றி அதை ஒரு கூடையில் மூடி வைத்துக் கும்பிட்டார்கள்.

“ஓடு ராசாத்தி… கை கால் கழுவிட்டு வா. பாப்பாவுக்கு வெளக்கு வை”, என்றார் மாணிக்கம்மா.

வேலைகளை முடித்துவிட்டு, ராசாத்தி கை கால் முகம் கழுவி விளக்கை ஏற்றி கூடை வைத்து மூடிவிட்டு வெளியே வந்தாள்.
“அம்மா நாளையோட முடிஞ்சுடுமா அம்மா? ஏன்னா அடுத்த வாரம் பொங்கல் வருது?”
“முடிஞ்சது..”
“அப்ப நம்ம அம்மத்தா ஊருக்கு போலாமா?” 

“போலாம் போலாம்” 
“ஏம்மா நாம பொங்க வைக்கிறது இல்ல? நம்ம வீட்டுலயும் மாடு ஆடு எருமை கோழிகள் இருக்குதுல்ல? நாம அதுகளக் குளிப்பாட்டி கொம்புக்குக் கலர் பூசி கும்பிடலாமா? எனக்கு ஆசையா இருக்குது. நாமும் பொங்க வைக்கணும்னு”

“அதுக்கு எல்லாம் நமக்கு எங்க புள்ள நேரம். கட வேலையைப் பார்த்துட்டு பண்டம்பாடியப் பாக்கவே செரியா இருக்குது. அம்மத்தா ஊரில் போய் சாமி கும்பிட்டுபோட்டு வந்துரலாம். அது மட்டுமில்ல ராசாத்தி, இங்க யாருமே பொங்க வைக்கறது இல்லியே…நமக்கு மட்டுமென்ன புது பழக்கமா வச்சுட்டு”, என்றாள் மாணிக்கம்மா.

“சரி பொங்க வைக்காட்டி பரவால்ல எனக்கு ரோஸ் கலர் சுடிதார் வேணும்னு கேட்டிருந்தேனே? அப்பாகிட்ட சொல்லுறியா அம்மா?”

“என்னடா பொங்கலுகிங்கலுனு கரிசனமாக வந்து பேசுறியேன்னு பாரத்தே.. இப்பதான் தெரிஞ்சது எலி ஏ எட்டு முழ வேட்டி ஓட வந்துச்சுன்னு…போ போயி பொழப்ப பாப்பியா”

“செரி அத நான் அப்பாட்டியே கேட்டுக்குறே. வருஷா வருஷம் சிந்தாமணி சித்தியோடதாம் போறோம். இந்த வருஷமாச்சி ஒரு நாள் முன்னாடியே அப்பாவும் நீயும் வாவேம்மா” 

“பொங்கலுக்கு முன்னாடி வந்தா, கட வேலையதாரு செய்யறது. பண்டம் பாடியப் பார்க்கோணும். இதெல்லாம் தாரு பாக்குறது?”

“எப்பப் பாரு கட வேலை. எருமைமாடு வேலை. எனக்குப்புடிக்கல”

“உன்னையும் உங்கக்காகாரியையும் கட்டிக்கொடுக்கனு. நானென்ன ஆம்பள புள்ளயா பெத்து வச்சிருக்கே. நாளைக்கு பயஞ்சம்பாரிச்சுப் போடுவான்னு சொல்றதுக்கு?”

ஒரு வாரம் கடந்த நிலையில்..

“சாயங்காலம் வரேன் பயணம்பண்ணீட்டு… இருங்க அம்மத்தா ஊருக்குப் போகலாம்”, என சிந்தாமணி சித்தி சொல்லிச் சென்றார்.
“சிந்தாமணி வரதுக்குள்ள முன்னாடி தொட்டிக்குத் தண்ணியும் குடிக்கிறதுக்கு தண்ணியும் எடுத்து ஊத்திட்டு, வாசலத் தொளிச்சு கூட்டி, இந்த டேபிள் எல்லாம் எடுத்துப் போட்டுட்டு, வெங்காயத்தை வெட்டி வச்சுட்டு கிளம்புங்க” என்றார் மாணிக்கம்மா. 

“ஊருக்குப் போறன்னைக்குக்கூட வேலையை பார்த்துட்டுத்தான் போவணுமா” என முகம் சுளித்தாள் ராசாத்தி. 
“நான் ஒருத்தியே கெடந்து எத்தன வேலையச் செய்கிறது. அந்த மனுஷ போனா போன இடம் வந்தா வந்த இடம்”, என கோபத்தோடு மாணிக்கம்மா கத்தினார்.

மகள் மலர் எதுவும் பேசாமல் வெங்காயத்தை எடுத்து உரிக்க ஆரம்பித்தாள். வேலைகளை முடித்து மலரும், ராசாத்தியும் தயாரானார்கள். கோபத்தில் அம்மாவிடம் சொல்லாமல் கூட, ராசாத்தியும் மலரும் சிந்தாமணி சித்தியுடன் கிளம்பினார்கள்.

விஜயமங்கலத்திலிருந்து கிட்டத்தட்ட ஐந்து ஆறு கிலோமீட்டர் தூரத்தில் தான் அம்மத்தா ஊர். வழக்கமாக சிந்தாமணி சித்தி தன்னுடைய மகள் ரோஜா, மலர், ராசாத்தி மூவரையும் நடத்தியேதான் கூட்டிச் செல்வார். போகும் வழியெங்கும் அரட்டை அரட்டை அரட்டை. அப்படி ஒரு அரட்டை. ஆயிரம் கேள்விகள் கேட்டுக் கொண்டே செல்வார்கள் மூவரும். விளையாடிக் கொண்டே போகும் வழியில் இருக்கும் மரங்களில் புளியங்காய் மாங்காய் பறித்து சாப்பிட்டுக் கொண்டே செல்வார்கள். அவ்வளவு தூரம் நடந்தாலும், ஒருநாளும் அவர்களுக்கு அலுப்பே தெரிந்ததே இல்லை. அன்றும் அப்படித்தான்.

” சித்தி எனக்கு ரொம்ப நாளா ரோஸ் கலர் சுடிதார் போடணும்னு ஆசை. அப்பாட்ட சொல்லி பார்த்துட்டேன் எடுத்துத்தர மாட்டேங்குது. நீங்க சொல்றீங்களா?”

” நீ சொல்லியே எடுத்து கொடுக்கல நான் சொன்னா எடுத்துக் கொடுத்துடப் போறாங்களா?”

“இல்லைனா அம்மாட்ட சொல்றீங்களா?”

“அய்யோ அப்பாட்ட கூடச் சொல்லிடுவேன். அம்மாகிட்ட நான் சொல்லவே முடியாது” என்றார் சிந்தாமணி. 

“எங்களுக்குத்தான் அம்மாவப் பாத்தா பயம்னா… உங்களுக்குமா?” என்று ராசாத்தி கேட்க, சிந்தாமணியைப் பார்த்து மூவரும் சிரித்தார்கள்.

ராசாத்தியின் அம்மா மாணிக்கம்மாவின் இரண்டாவது தங்கைதான் சிந்தாமணி. திருமணமாகி மூன்று வருடத்தில் இரண்டு வயது மகளுடன் கணவனை இழந்து தாய் வீடு வந்தவள். தம்பிக்கு நேரம் சரியில்லாத காரணத்தால், மாணிக்கம்மா அவரைத் தன்னுடன் அழைத்து வந்துவிட்டார். தன் வீட்டில் சில வருடம் தங்கவைத்தவர், பிறகு ஒரு இடம் வாங்கி அந்த இடத்தில் வீடு கட்டித்தந்து குடிவைத்தார். தங்கை நிர்க்கதியாய் நின்ற நேரத்தில், மாணிக்கம்மா கை கொடுத்தவர். ராசாத்தியின் வீட்டுக்கு அருகிலேயேதான் சிந்தாமணியின் வீடும்.

“என்ன இவ்வளவு நேரமா? நேத்தே வரச் சொன்னேனே” என்று ஆசாரத்தினுள் நுழையவும் கேட்டார் ராசாத்தியின் அம்மத்தா வள்ளியம்மை. 
“அங்க இருக்கிற வேலையெல்லாம் பார்த்துட்டு இதுகளக் கெளப்பி கூட்டிட்டு வரதுக்குள்ள உசுரே போயிருச்சு”, என மூவரையும் பார்த்தாள் சிந்தாமணி. 
“சரிசரி பொங்க வைக்க எல்லாம் எடுத்து வைக்கணும், வாங்க வாங்க” என்று அவர்களை அழைத்துக் கொண்டு தொண்டும்பட்டிக்குச் செல்ல, அங்கே
தொண்டுப் பட்டியில் மாட்டைக் குளிப்பாட்ட தண்ணீர் வைத்து இருந்தார்கள்.

நன்றி: kalviseithi.net

இவர்கள் மூவரும் சென்று மாட்டைக் குளிப்பாட்ட தயாராகும் பொழுது பாப்பாத்தி சித்தி பிள்ளையும் பையனும் வந்து சேர்ந்துகொண்டார்கள். அதோடு அங்கேயே இருக்கும் சரஸ்வதியின் மகள்கள் இருவரும் சேர்ந்து கொள்ள, அனைவரும் சேர்ந்து மாட்டைக் குளிப்பாட்டுவது, மாட்டின் கொம்பிற்கு வர்ணம் பூசுவது என வேலைகளைத் துரிதமாகச் செய்தார்கள்.
பொங்கல் வைக்கும் இடத்தைச் சுத்தம் செய்து, சாணம் தெளித்து, கோலம் போடச் சொன்னார் அம்மத்தா.

ஏதோ அவரவர்களுக்கு தெரிந்த 4 புள்ளிக் கோலத்தைப் போட்டு முடித்து கரும்பு வாழை வைத்துக்கட்டினார்கள். மூன்று கற்களை வைத்து அடுப்புக் கூட்டி சூரிய பகவானை நோக்கிக் கையெடுத்து கும்பிட்டார்கள். “இந்த வருஷம் விளைச்சல் அமோகமாக இருக்கோனுந் தாயே!”, என சூரியனைப் பார்த்துக் கும்பிட்டு, அடுப்பில் விறகு வைத்து, தீ பற்றவைத்தார் அம்மத்தா. பொங்கல் பொங்கி விழும் நேரம், “இந்த வருஷம் பொங்கல் வடக்க உழுந்து அத்தனையும் வரவாய் இருக்கோனும்”, என்று கையெடுத்துக் கும்பிட்டார். அனைவரும் பொங்கல் எந்தத் திசை நோக்கி விழுகிறது என்று பார்த்துக்கொண்டே இருந்தார்கள். பொங்கல்…

தொடரும்…

பட்டி பொங்கல் பற்றி இங்கே கூடுதல் தகவல் காணலாம்.

படைப்பாளர்

சரிதா

கதைசொல்லி, சிறார் எழுத்தாளர், பண்பலைத் தொகுப்பாளர் Scan foundation India animal welfare அமைப்பின் தூதுவர். Skillware Founder இதன் வழியாக கதைசொல்லல் பயிற்சிகளும் வழங்கி வருகிறார். கருவுடன் கதையாடல் இந்த தலைப்பில் கர்ப்பிணி பெண்களுக்கு இணைய வழியாகக் கதைகளைக் கூறி வருகிறார்.