பல விஷயங்களில் இந்திய ஒன்றியத்துக்கு முன்னோடியாக தமிழகம் பீடுநடை போடுவதை சற்றே இறுமாப்போடு கடந்து செல்கிறோம். இம்முறை நம்மை பெருமை கொள்ளச் செய்திருப்பது உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு. கடந்த வியாழன் அன்று உச்ச நீதிமன்றம் வழக்கு ஒன்றில், ‘தந்தை உயில் எழுதிவைக்காமல் மரணமடைந்தால்கூட, அவருக்கு சொத்தில் (சுய சம்பாத்தியம்/அல்லது பரம்பரை சொத்தில் பங்கு) மகளுக்கு முழு உரிமை உண்டு’ எனத் தீர்ப்பளித்துள்ளது.

தந்தை உயில் எழுதிவைக்காத பட்சத்தில், அவரது சொத்தில் பங்கு கோரி மகள்கள் தாக்கல் செய்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில், உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. நீதிபதிகள் அப்துல் நசீர் மற்றும் கிருஷ்ண முராரி அளித்த 51 பக்கத் தீர்ப்பில், ‘மகள்களும், விதவைகளும் உயில் எழுதாமல் இறந்துபோன ஆணின் வாரிசுகள் ஆவார்கள்’ எனத் தெளிவுபடுத்தியுள்ளனர். காலமான ஆணின் நேரடி வாரிசுகள் அல்லாமல், குடும்ப இணை ஆண் உறுப்பினர்களைவிட, நேரடி வாரிசுகளான மகள், விதவைக்கே முன்னுரிமை வழங்கப்படவேண்டும் எனவும் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பெண்களுக்கு சொத்துரிமை குறித்து 2022ம் ஆண்டில் இவ்வாறு வழக்குகள் நடந்துகொண்டிருக்க, 93 ஆண்டுகளுக்கு முன்பே, இதற்கான முதல் குரலை எழுப்பியவர் தந்தை பெரியார். 1929ம் ஆண்டு பிப்ரவரி 17,18 நாள்களில் செங்கல்பட்டில் நடைபெற்ற முதல் சுயமரியாதை மாகாண மாநாட்டில், நிறைவேற்றப்பட்ட 20 தீர்மானங்களில், ‘ஆண்களைப் போலவே பெண்களுக்கு சொத்தில் சம உரிமையும், வாரிசு உரிமையும் தரவேண்டும்’ என்ற தீர்மானம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. இந்தத் தீர்மானம் சட்டப்பேரவையில் சட்டமாக மாற, இன்னொரு 60 ஆண்டுகாலம் பிடித்தது.

1989ம் ஆண்டு கலைஞர் முதலமைச்சராக இருந்தபோது சட்டசபையில் கொண்டுவரப்பட்ட வாரிசுரிமை சட்டத்திருத்தம், பல நூற்றாண்டுகால அடிமைத் தளையிலிருந்து பெண்களை விடுவித்தது. பெண்ணுக்கு பொருளாதார விடுதலை எவ்வளவு முக்கியம் என்பதை திராவிட அரசியல் தமிழகத்தில் தெளிவாக உணர்ந்து முன்னெடுத்தது. தமிழகம் இச்சட்டத்தை இயற்றி 16 ஆண்டுகளுக்குப் பின், 2005ம் ஆண்டுதான் மத்திய அரசு, சொத்தில் ஆணுக்கும் பெண்ணுக்கும் சம உரிமை என்ற திருத்தத்தை இந்து வாரிசுரிமை சட்டத்தில் கொண்டுவந்தது.

இன்று தமிழகத்தில் ஓரளவுக்கேனும் பெண்ணை ‘பொருளாகப்’ பார்க்காமல், மகளாகப் பார்க்கும் பாங்கு வளர்ந்திருக்கிறது எனில், அதற்கு கலைஞர் கொணர்ந்த சட்டம் மிக முக்கிய காரணி எனலாம். ஆனால் நாம் செல்லவேண்டிய தூரம் இன்னும் அதிகம் உள்ளது.

‘சொத்து’ என்பதை பொருளாகக் கொள்ளாமல், அனுபவங்களாகக் கட்டமைக்கும் புதிய சமுதாயம் இங்கு உருவாகி வருகிறது. மீனை குழந்தையின் வாயில் உண்ணத் தருவதைவிட, அதற்கு மீன் பிடிக்கக் கற்றுத்தரும் பெற்றோர் அதிகரித்து வருவது மகிழ்வே. பணமும் பொருளும் பிள்ளைகளுக்கு சேர்த்துவைக்காமல், அவர்களுக்கு வாழக்கற்றுத் தருவதுதான் உண்மையில் நாம் தரும் ‘சொத்து’.

ஆனால் அந்நிலையை எட்டும்வரை, ஆணுக்கும் பெண்ணுக்கும் இங்குள்ள அனைத்திலும் ‘சம உரிமை’ என்பதை நிலைநாட்டுவதில் பெண்களாகிய நமக்குப் பொறுப்பு அதிகமிருக்கிறது. “எனக்கு எதுக்குப்பா இதெல்லாம்?”, என்ற தயக்கத்தை விட்டொழித்து, “அவனும் நானும் ஒண்ணுதான், அவனுக்கு தருவதை எனக்கும் நீங்க தந்தேயாகணும்” எனக் கேட்டு வாங்கும் பிள்ளைகளாக பெண் பிள்ளைகளை வளர்ப்பதில் தவறில்லை! பெண் இங்கே தியாகத்துக்கும் அர்ப்பணிப்புக்கும் எடுத்துக்காட்டு அல்ல; சமத்துவத்துக்கும், சுயமரியாதைக்கும் எடுத்துக்காட்டு.