இந்தக் கேள்விக்கான பதில், ‘இல்லை’, என்று நான் சொன்னால் சரியாக இருக்கும். வரதட்சணை மரணங்கள் இன்று நேற்றல்ல, பல்லாண்டுகளாக நடந்து கொண்டிருக்கும் நாட்டில், இந்த ஒற்றை மரணம் என்ன செய்துவிடப் போகிறது? இதையும் தாண்டித்தான் போகப் போகிறோம், என்று நினைப்பவர்கள்…மேலே படிக்க வேண்டாம்!

‘நோய் நாடி, நோய் முதல் நாடி’, என்று 2000 ஆண்டுகளுக்கு முன்பே எழுதிவிட்டுச் சென்றார் வள்ளுவப் பெருந்தகை. ஆதியிலிருந்தே இந்த “வரதட்சணை” வந்த வழியை ஆராயவேண்டும். வரதட்சணை தமிழ்ச் சொல்லுமல்ல, தமிழ்ப் பண்பாடுமல்ல! சங்ககாலம் தொட்டே, பெண்ணின் தந்தைக்கு மணமகன் ‘பரிசப் பணம்’ தந்து மணம் செய்துகொள்வது தமிழர் பண்பாடாக இருந்துள்ளது. அகநானூறு 90ம் பாடலை எழுதிய மருதன் இளநாகனார்,

இரும்பு இடம் படுத்த வடுவுடை முகத்தர்

கருங் கட் கோசர் நியமம் ஆயினும்

உறும் எனக் கொள்ளுநர் அல்லர்

நறு நுதல் அரிவை பாசிழை விலையே‘, என்கிறார். தோழி ஒருத்தி பெண் கேட்டு வரவிரும்பும் மணமகனிடம், ” இரும்புத் தொழில் செய்யும் வடுக்களுடைய கருத்த உருவம் கொண்ட ‘கோசர்’ வசிக்கும் ‘நியமம்’- ஊரை ‘பெற்றுக்கொள்ளும்’ என்று மணக்கும் நெற்றியைக் கொண்ட என் தோழிக்கு நீ விலையாகத் தந்தால்கூட, ‘கொள்ளுநர் அல்லர்’- அவளைப் பெற்றோர், பெற்றுக்கொள்ள மாட்டார்கள்”, என்று சொல்கிறாள்.

ஆக, பெண்ணுக்கு ‘விலை’ தந்தே மணம் புரியும் வழக்கம் சங்க காலத்தில் இருந்துள்ளது. அங்கு ‘கன்னிகா தானம்’ இல்லை, ‘யாகம்’ இல்லை, தாலி இல்லை, அட…திரும்ணங்களில் ஆண் வாடையே இல்லை! திருமணங்கள் மறை விளக்கின் வெளிச்சத்தில், மூத்த ‘மங்கலப்’ பெண்கள் மலர்களும், புது நெல்லும் கலந்த நன்னீர் சொறிந்து, புது மணல் பரப்பிய பந்தலில் மணப்பெண்ணை நீராட்டி, புத்தாடை, அணிகலன் அணிவித்து, ‘பெருங்கிழத்தி வாழ்வாங்கு வாழ்’ என வாழ்த்தி அனுப்புவதாக நடந்துள்ளன(அகநானூறு- 86). ஜானவாசமும் இல்லை, ஜன சந்தடியும் இல்லை!

தாய்வழி சமூகமே தமிழ்ச் சமூகம். இன்றைய கேரளா அன்றைய தமிழகத்தின் பகுதி என்பதால், அங்கும் இதே முறைமை இருந்துள்ளது. சங்க கால வழக்கமான பெண்வழி சொத்துரிமை, ‘மருமக்கதாயம்’ என்ற பெயரில் கேரளத்தில் வழங்கிவந்துள்ளது. மருமகனே சொத்தின் வாரிசு என்ற முறை அது. மன்னனுக்குப் பின் அரசாள, அவனது சகோதரியின் மகனே ஆட்சிபீடம் ஏறமுடியும். இந்த முறை 13ம் நூற்றாண்டுவாக்கில் எப்படி மாறிப்போனது என்பதை, 1330ம் ஆண்டு கொல்லம் வந்த முதல் ரோமை கத்தோலிக்க ஆயரான பிஷப் ஃப்ரயர் ஜோர்டனஸ் தன் ‘மிரபிலியா டெஸ்கிரிப்டா’ நூலில் குறிப்பிடுகிறார்.

“இந்தியாவில் மன்னரின் சட்டப்பூர்வமான மகனோ, இளவரசனோ, அரசகுடும்பத்தினனோ ஆட்சிப் பொறுப்புக்கு வருவதேயில்லை. மன்னரின் சகோதரி மகன்களுக்கே அந்த உரிமை இருக்கிறது. அதற்கு அவர்கள் சொல்லும் காரணம் வினோதமானது. தன் மகன், உண்மையில் தன் மகன் தானா என்று ஆணால் அறுதியிட்டுச் சொல்லமுடியாது. தன் சொந்த மனைவி மேல் அவர்களுக்கு நம்பிக்கையில்லை. ஆனால் அதே சமயம், அவர்கள் சகோதரி அந்தக் குலம் வழி வந்தவள். அவள் கணவன் யாராக இருப்பினும், வித்து வளரும் இடம் இந்தக் குடும்பமே, அது கட்டாயம் இவர்கள் ரத்தமே என்பதில் அவர்கள் தெளிவாக இருக்கிறார்கள். அதனால் இந்தப் பழக்கம் நிலவுகிறது”, என்று எழுதுகிறார்.

தாய்வழி சமூகம் தாய்வழி சொத்துக் கைக்கொள்ளலை செய்து கொண்டிருந்தாலும், அதில் ஆணாதிக்கம் ஒட்டிக்கொண்டு ரகசியமாக தன் ‘ரத்தத்தின் தூய்மையை‘ நிலைநாட்டிக்கொண்டது. ஆண்- அவனிடமிருந்து மீண்டும் ஆண்- இப்படித்தான் வழிவழியாக குடும்ப சொத்து கைமாறியது. அப்படியானால் பெண்ணுக்கு என்ன தான் கிடைக்கும் என்ற கேள்விக்கு பதிலாக, அவளுக்கு ‘அழகு’, ‘ஆடை’, ‘நகை’ மேல் மோகம் ஏற்படுத்தப்பட்டது. பெண்ணுக்கான அடையாளமே தங்கம், வைரம், நகை என்று மாறிப்போக, கொஞ்சம் தங்கமும், திருமண செலவும் மட்டுமே பெண்ணின் உரிமை என்றானது.

மெல்ல மெல்ல சமூகம் ஆணாதிக்க சமூகமாக மாறத் தொடங்கிய போது, பெண் ஆணுக்கு பணமும், சொத்தும், நகையும் தந்தே திருமணம் செய்துகொள்ளும் சூழல் உருவானது. சொத்தில் உரிமை இல்லை என்று பெண்ணுக்கு சமத்துவம் மறுக்கப்பட்ட போது, அவளுக்கு நகை என்ற ‘மிட்டாயை’ ஆசைகாட்டி ஏமாற்ற சமூகம் முற்பட்டது. பெண்ணும் தங்கம் மேல் பேராவல் கொண்டாள்; அக்ஷய திருதியை முதல், ராக்கி வரை நம் மண்ணுக்கு சம்பந்தமே இல்லாத விழாக்கள், நகையை முன்னிறுத்தி பெரும்வணிகமாயின.

விஸ்மயா-கிரன் தம்பதி, அவரது தந்தையுடன், manoramaonline

கேரளாவில் பெரும்பான்மை ‘தரவாடுகள்’ இன்று சுருங்கிவிட்டன. அங்கு ஒரு காலத்தில் கொழித்த பணமும், நிலமும் தாராளமயமாக்கலால் கரைந்து போயின. ஆனால் புதுப் பணக்காரர்களை ‘கல்ஃப்’ பணம் உருவாக்கியது. மேற்குக் கடற்கரையோரம் நகரங்களும், கிராமங்களும் முதியோர் வாழும் பேய் ஊர்களாக மாறிப்போயின. மகள் குப்புறப்படுத்தது முதல், முதலடி எடுத்து நடந்தது, முதல் ‘அப்பா’ சொன்னது, முதல் நாள் பள்ளி சென்றது, பெரியவளானது, கல்லூரி சென்றது, படித்து முடித்து பட்டமேற்றது வரை எந்த நாளையும் அவளுடன் கழித்திராத தந்தை என்ற ஆண், தன் இல்லாமையை ‘காம்ப்ரமைஸ்’ செய்ய அவளுக்கு பொன்னும், பொருளும் வாரியிறைத்து திருமணம் செய்வித்தான். அதுவும், அவன் கை காட்டும் யாரோ ஒரு கல்ஃப் மணமகனாகவோ, அமெரிக்க மணமகனாகவோ இருக்கும் பட்சத்தில் தான்!

இப்படிப் பணத்தை வாரியிறைத்து மணம் செய்துகொடுப்பதும், முரட்டு பங்களா வீடுகளில் தனித்து பெண்கள் வாழ்வதும் அங்கு சர்வசாதாரணம். தங்கள் தனிமைக்கு பெண்கள் தரும் விலை இந்த நகையும், பணமும், காரும்! எல்லோரும் இப்படியான வாழ்க்கையா வாழ்கிறார்கள், என்றால் நிச்சயம் இல்லை. ஆனால் பக்கத்து வீட்டில் பினாயில் பாட்டில் வாங்கினாலே, தானும் அதே பினாயில் பாட்டிலை வாங்கினால் தான் நிம்மதியாகத் தூங்கும் சமூகம் நாம். பினாயிலுக்கே இப்படி என்றால் திருமணங்களை விடுவோமா? ஆடம்பர திருமணங்கள் வாடிக்கையாகிப் போயின. தலையை அடமானம் வைத்தாவது, லட்சக்கணக்கில் செலவு செய்து திருமணங்கள் செய்துவைக்கிறார்கள்.

விஸ்மயா, நன்றி:The Quint

அப்படித்தான் கடந்த ஆண்டு விஸ்மயாவின் திருமணமும் நடந்தது. 25 ஆண்டுகளாக சவுதி அரேபியாவின் சூப்பர்மார்க்கெட் ஒன்றில் ரத்தமும், வியர்வையும் சிந்தி உழைத்த விஸ்மயாவின் அப்பா திருவிக்ரமன் நாயர், 23 வயது மகளின் திருமணத்தை 100 சவரன் நகை, 1.5 ஏக்கர் நிலம், 10 லட்சம் மதிப்புள்ள கார் எல்லாம் தந்து முடிப்பதாக ஒப்புக்கொண்டார். அவரது குற்ற உணர்விலிருந்து அவருக்கு விடுதலை கிடைத்திருக்கவேண்டும். தன் ஆன்லைன் மேட்ரிமோனியல் ப்ரொஃபைலை தானே நிர்வகித்த பெண் விஸ்மயா. அங்கு தான் கிரன் குமாருடன் பரிச்சயம், இருவர் சம்மதத்துடன் தான் திருமணமும் நடந்துள்ளது.

பிறந்தது முதலே தந்தை வெளிநாட்டில். தாயும், சகோதரனும் தாங்கி வளர்த்த விஸ்மயா, துணிச்சல் இல்லாத பெண் அல்ல. என்.சி.சி. கேடட்டாக, தேசிய அளவு அண்டர் ஆஃபிசராக இருந்துள்ளார். கொரோனா அவர் வாழ்க்கையிலும் விளையாடிவிட்டது. அசையா சொத்துகள் வாங்கியிருந்த குடும்பத்தால் அதை விற்க முடியாத சூழல் ஏற்பட, ஒப்புக்கொண்ட 100 சவரன் நகையும், மாப்பிள்ளை பெயரில் 1.5 ஏக்கர் நிலமும் தர முடியாமல், 80 சவரன் நகை, டொயோட்டா யாரிஸ் கார் தரப்பட, திருமணம் நடந்தது. திருமணமாகி சில நாள்களிலேயே, கார் மைலேஜ் தரவில்லை என்று கணவன் கிரன் தொடங்கிய நச்சரிப்பை, 8 மாதங்கள் குடும்பத்தினரிடம் சொல்லாமல் தனியே சகித்துக்கொண்டார் விஸ்மயா.

மீதமுள்ள நகை, நிலத்தைக் கேட்டு துன்புறுத்தப்பட்ட விஸ்மயா, ஒரு கட்டத்தில் முடியாமல் தாய் வீடு திரும்ப, குடும்பம் சமாதானம் செய்துவைக்க முயற்சித்தது. சி.பி.ஐ. உறுப்பினரான திருவிக்ரமன் நாயர், கட்சி மூலமும் சமாதானம் செய்துவைக்க முயன்றுள்ளார்; ‘நாயர் சர்வீஸ் சொசைட்டி’ அமைப்பு மூலமும் தம்பதியை ‘ஒன்று சேர்க்க’ முயற்சித்திருக்கிறார். அப்போது இரு குடும்பங்களின் முன்பே விஸ்மயாவை கணவன் அடித்து உதைக்க, காவல் நிலையம் வரை பிரச்னை சென்றது. அங்கும் ‘சமாதானம்’ செய்துவைக்கப்பட்டு விஸ்மயா கணவர் வீட்டுக்கே அனுப்பப்பட்டார். அதிலிருந்து மூன்று மாதங்களில், கணவர் வீட்டில் சந்தேகத்துக்கு இடமான முறையில் குளியலறையில் தூக்கில் தொங்கியிருக்கிறார்.

விஸ்மயாவின் தந்தை, கொலைக்குற்றம் சாட்டப்பட்டுள்ள கிரன், malayalamanorama

இறப்புக்கு சில நாள்களுக்கு முன்புகூட கணவர் தன்னை அடித்து துன்புறுத்தியதை படங்களுடன் தன் உறவினர்களுக்கு வாட்சப் மூலம் செய்தியாக அனுப்பியுள்ளார் விஸ்மயா. நடந்த கொலைக்கான (இதை சமூகம் செய்த கொலையாகவே நான் பார்க்கிறேன்) முக்கியக் காரணி, ‘சமாதானமாகப் போ’ என்ற சராசரி இந்தியப் பெற்றோரின் மந்திரம் தான். ‘என்ன நடந்தாலும் சரி, அங்கேயே வாழ்ந்துவிடு, திரும்பிவிடாதே‘ என்று பெற்ற மகளுக்கு ஒன்-வே டிக்கெட் எடுத்து அனுப்பும் கொடூரம் இந்தியக் குடும்பங்களில் மட்டுமே சாத்தியம். செத்து பிணமாகத் திரும்பினாலும் பரவாயில்லை, ‘வாழாவெட்டியாக’ திரும்பிவிடாதே என்ற அறிவுரையை இங்கு அம்மா தொடங்கி ஒன்றுவிட்ட சித்தப்பாவின் மூன்றாவது மகளின் இரண்டாவது கொழுந்தியாள் வரை நமக்கு அறிவுறுத்துவார்கள்.

ஏன்? திருமணங்கள் தோற்றுப் போகவே கூடாதா? யாரும் விழவே கூடாதா? விழுந்து, எழுந்து தானே சைக்கிள் ஓட்டவே கற்றுக்கொள்கிறோம்? தம்மாத்தூண்டு சைக்கிள் ஓட்டவே இந்த நிலை என்றால், திருமணங்கள் என்ன விழவே கூடாத, அடிபடவே கூடாத ‘புனிதத்தன்மை’ வாய்ந்தவையா? விழுந்து, எழுந்து வர பெண்களுக்கு சொல்லித்தர வேண்டாமா? ஒரு முறை மட்டுமே பூ பூக்கும் போன்ற பத்தாம்பசலித்தனமான பழைய பஞ்சாங்க டயலாகுகளால் யாதொரு பயனும் இல்லை.

பெண் நினைத்த வாழ்க்கையை அவளே அமைத்துக்கொள்ள அனுமதி ஏன் மறுக்கப்படுகிறது? அவளது பெண்ணுறுப்பில் இன, சாதியத் தூய்மையை ஏன் நிலைநாட்டுகிறோம்? ஆயிரம் இருந்தாலும் வேறு சாதி ஆண் என் மகளைத் தொடக்கூடாது என்று இன்றும் சிந்தித்தால், உங்களுக்கு ரத்தத்தை விட எவனோ உங்களை சுட்டிய உங்கள் சாதி முக்கியம் என்றால், விஸ்மயாக்கள் இங்கே செத்துக்கொண்டே தான் இருப்பார்கள்.

நீங்களும் நானும் நினைத்தால் இவ்வாறான மரணங்களைத் தடுக்க முடியும். ஒரே ஒரு முடிவு தான். ‘ என் மகனோ, மகளோ, அவளை நான் படிக்கவைப்பேன், அதற்கு எவ்வளவு வேண்டுமானாலும் செலவு செய்வேன். ஆனால் திருமணம் அவள்/அவன் உரிமை; அந்த முடிவை அவர்கள் எடுக்கட்டும். அதற்காக யாருக்கும் லஞ்சம் தரமாட்டேன். என் மகளே தங்கம், அவளுக்கு ஏன் தங்கம்…?’ அவ்வளவுதான். முடியுமா உங்களால்? செய்வீர்களா?

படாடோப மண்டபங்களில் லட்சங்களைக் கொட்டி கல்யாணங்கள் செய்து உணவை வீணடிப்பதை விட, உங்கள் மகனுக்கும் மகளுக்கும் வேண்டிய வாழ்க்கைக்கல்வியை கற்றுத் தாருங்கள். மீன் பிடிக்கக் கற்றுக்கொடுங்கள் போதும்; குளத்தையே வாங்கிக் கொடுக்கிறேன் என்று நிற்காதீர்கள். அவர்கள் எங்கே, எப்படி மீன் பிடிக்கவேண்டும் என்பதை கைபிடித்து நீங்கள் செலுத்தவேண்டாம். அதை அவர்களே விழுந்து, எழுந்து கற்றுக்கொள்வார்கள். ‘உனக்குத் தெரியாது, எனக்கே தெரியும்’, என்று மேட்டிமைத்தனம் பேசும் எதிராளிகளல்ல நம் குழந்தைகள். நம் வழி இந்த மண்ணில் வந்தவர்கள்.

உங்கள் வீட்டிலிருக்கும் பிள்ளை சவலைப் பிள்ளை அல்ல, தனக்கு என்ன வேண்டும் என்று தெரிந்த, புரிந்த ஆரோக்கியமான பிள்ளை. மேட்ரிமோனியல் ப்ரொஃபைல் தயாரிப்பதைவிட, அவனுக்கோ, அவளுக்கோ யாரைப் பிடித்திருக்கிறது என்று கரிசனத்துடன் கேட்டுப்பாருங்கள். கனவுகளைக் கருக்காதீர்கள். அதற்கு விலை பேசாதீர்கள்.

நாம் செய்துவைக்கும் சாதிக்குள், மதத்துக்குள், இனத்துக்குள்ளான ‘அரேஞ்ச்டு திருமணங்களை’ விட, அவர்களே தேடிக்கண்டடையும் லைஃப் பார்ட்னர் தான் அவர்களுக்குத் தேவை என்பதையும், சரியான தேர்வு என்பதையும் உணருங்கள். திருமணம் ஊர் கூடி செய்துவைக்கவேண்டிய ‘சடங்கு’ அல்ல. இருமனங்கள் இணைந்து வாழும் ‘வாழ்க்கை’. அவரவர் வாழ்க்கையை வாழவிட்டால், விஸ்மயாக்கள் வாழ இங்கு எந்தத் தடையுமில்லை. வரதட்சணை கொடுக்கவும் மாட்டோம்; வாங்கவும் மாட்டோம் என்று தலைநிமிர்ந்து சொல்லுங்கள்.

விழுப்புரம் மாவட்டத்தில் ஒரு சிறு கிராமம் அது. வேறொரு ஆய்வுக்கு சென்ற இடத்தில் சில பெண்களுடன் பேசிக்கொண்டு இருந்தேன். திருமணத்துக்கு மாப்பிள்ளை வீட்டில் வாங்கும் பரிசப் பட்டின் முந்தானைப் பகுதியில், மணமகனின் அம்மா அவரால் இயன்ற அளவு பணத்தை முடிந்து, சேலையை பரிசம் போடும் நாளன்று பெண்ணிடம் தருவாராம். மணப்பெண்ணின் தாய் தான் அந்த முடிச்சை அவிழ்த்து, அதிலுள்ள பணத்தை எடுத்துக்கொள்ள வேண்டுமாம்.

அதற்குப் பெயர் ‘பால் காசு’/’பால் பணம்’. ஏன் என்று ஆச்சர்யத்துடன் கேட்டால் அந்த எளிய பெண்கள் சொன்ன பதில் ஆச்சர்யப்படுத்தியது. ” தாய்ப்பால் குடுத்து பொண்ணோட அம்மா வளக்குது இல்லையா, அதை சும்மா கூட்டினு வந்துற முடியுமா? அதை மதிச்சு, அந்த பாலுக்குக் காசு குடுத்து, இனிமே எங்கூட்டு பிள்ளையா பாத்துக்குவோம்னு சொல்லி பொண்ணைக் கூட்டினு வருவோம்”, என்று சொல்லிவிட்டு சிரித்தார்கள். பரிசம் போடுவதில், பரிசச் சேலையில் முடிந்து தரும் பணத்துக்குப் பின் இத்தனை பொருள் பொதிந்திருக்கிறது. இப்படி வாழ்ந்த நாம்…எங்கே போய்க்கொண்டு இருக்கிறோம்?

கட்டுரையாளர்:

நிவேதிதா லூயிஸ்

எழுத்தாளர், வரலாற்றாளர்.