வகிட்டில் குங்குமம் வைக்கும் வழக்கம் கேரளாவில் தான் தோன்றியது. தொடக்கத்தில் ராஜவம்சம் மற்றும் உயர்குடிப் பெண்களை முதன்முதலில் நம்பூதிரிகளே ‘கன்னி கழிப்பர்’.

தரவாட்டுக்கு விருந்தினராக நம்பூதிரிகள் வந்தால்கூட தன் வீட்டுக் கன்னிப் பெண்களைத்தான் அவர்களுடன் தங்கவைத்தனர். மன்னர்களின் முதல் குழந்தை நம்பூதிரியின் வித்தாக இருப்பதை கௌரவம் என நினைத்தனர். அதுவே தரவாட்டுக்குச் செல்வம் என்றும் நினைத்து, கடைப்பிடித்துவந்தனர்.

அப்படிப் போய்த் தங்கும் பெண்களை, மூன்று நாள்கள் முதல் ஒரு வாரம், ஒரு மாதம் என நம்பூதிரிகள் விருப்பத்திற்கு ஏற்ப, கூட வைத்துக்கொள்வர். பின் நம்பூதிரிகள் தரவாட்டுக்குப் பெண்களை மீண்டும் அனுப்பும்போது, அவர்கள் ‘கன்னிகழிக்கப்பட்டதை’ குறிக்கும் வகையில், அப்பெண்களுக்கு வகிட்டில் குங்குமம் வைத்து அனுப்பிவைத்தனர்.

இப்படித்தான் வகிட்டில் குங்குமம் வைத்துக் கொள்ளும் பழக்கம் உருவானது. இது போன்ற வரலாறைத் தெரிந்துகொள்ளாமலும், ஏன் எதற்கு என கேள்வி கேட்காமலும், வகிட்டுப் பொட்டில் தான் கணவனின் ஆயுசு இருக்கிறது; சுமங்கலிப் பெண்கள் என்றால் கட்டாயம் வகிட்டில் குங்குமம் வைக்கவேண்டும் என்றும் அவர்களுக்கு சொல்லித்தரப்படுகிறது. இந்தப் பழக்கம் உருவான வரலாறை மூடிமறைத்துவிட்டார்கள். தென்னிந்தியாவில் வகிட்டில் குங்குமம் வைக்கும் வழக்கம் இப்படித் தோன்றியதே.

ஆனால் வடக்கிலும் இந்த வழக்கம் உண்டே எனக் கேட்கிறீர்கள், அல்லவா?

இந்தியாவின் வடக்கு மற்றும் வடகிழக்கில் இந்தப் பழக்கம் எப்படி வந்துருக்கிறது எனப் பார்த்தோமென்றால், பெண்ணின் முதல் மாதவிடாய் வந்ததும், அதைத் தொட்டு வகிட்டில் பொட்டு வைத்தனர். அந்தப் பெண் உடலுறவுக்குத் தயாராகிவிட்டாள் என்பதை சிறுவயதிலேயே திருமணம் முடித்த அவளது கணவர் வீட்டாருக்கும், ஊருக்கும், வகிட்டுப்பொட்டின் மூலம் பிறந்தவீட்டினர் அறிவித்திருக்கின்றனர்.

முதல் உடல் உறவு முடிந்ததும், கன்னித்திரை கிழிந்து இரத்தம் வந்தால்தான் அவள் பத்தினி எனவும், இல்லையேல் அவள் குடும்பம் நடத்தத் தகுதியில்லாத வேசி எனவும் கூறும் பழக்கம் நடைமுறையில் இருந்தது.

முதல் இரவின்போது கன்னித்திரை கிழிந்து, குருதி வெளியேறியதை, தன் வீட்டார் அனைவருக்கும் சொல்ல அந்த இரத்தத்துடன், குங்குமத்தையும் சேர்த்து, அப்பெண்ணின் வகிட்டில், கணவன் பொட்டு வைத்து வெளியே அனுப்பிவைக்கும் வழக்கம் உண்டு. ஒரு வேளை முதல் உடல் உறவின்போது இரத்தம் வரவில்லையெனில், அப்பெண் ‘பத்தினி’ இல்லையென குற்றம் சுமத்தப்பட்டது. வாழவெட்டியாய் பிறந்த வீட்டுக்கோ, அல்லது தலைமுடியை மழித்து ஊரை விட்டு விரட்டி அடித்தனர்.

இன்னும் ஒருபடி மேலே போய், மேற்கு இந்தியாவின் சில பகுதிகளில், குறிப்பாக ராஜஸ்தான், உத்திரப்பிரதேசத்தில்அப்பெண்ணைத் தீவைத்து எரித்தே கொன்று அழித்தனர். அப்பெண் வம்சத்துக்கே அவமானம் எனக் கருதியதால், இதுபோன்ற கொடூரமான தண்டனைகள் நிறைவேற்றப்பட்டன.

தான் ஒரு பாலியல் அடிமை என்பதனை அப்பட்டமாகப் பெண்களே ஒத்துக்கொண்டு, பெருமையாக வைத்துக்கொள்ளும் ஒரு அடையாளம்தான் வகிட்டுக் குங்குமம். ஏன், எதற்கு, எதனால், எப்படி என்ற கேள்விகள் மூலம் சுயமரியாதையான வாழ்வினை வாழ முயற்சிசெய்வோம்.

தரவுகள்:

  • அக்னிஹோத்ரம் ராமானுஜ தாத்தாச்சாரியார் எழுதிய ‘இந்து மதம் எங்கே போகிறது?’ புத்தகத்தில், ‘சடங்குகளின் கதை’ பகுதி.
  • சி.அச்சுதமனோன்- கொச்சின் மாநிலக் கையேடு, பக்கம் 193
  • கேரள வரலாற்றின் இருண்ட பக்கங்கள், இளம்குளம் குஞ்ஞன் பிள்ளை, பக்கம் 147
  • கேரளம், பிரான்சிஸ் புக்கனன், பக்கம் 75
  • கேரள பிராமண வாழ்க்கையில், ஸ்மிருதி..- டாக்டர் பி.வி.ராமன் குட்டி
  • கண்ணீரும் கனவும்- வி.டி.பட்டதிரிபாடு, பக்கம் 120
  • ஜாதிப் பாகுபாடும் கேரள வரலாறும், பி.கே.பாலகிருஷ்ணன், பக்கம் 159
  • கொச்சி நாட்டின் வரலாறு, கே.பி.பத்மநாப மேனோன், பக்கம் 896
  • கேரள நம்பூதிரிப் பெண்களின் கடந்தகால வரலாறும் நிகழ்கால நிலைமையும் – கே.பி. ஸ்ரீதேவி
  • படைப்பு:

    கார்த்தினி

    வரலாறு, தொல்லியல் துறைகளில் பட்டப்படிப்பை முடித்தவர்; ஹோம் மேக்கர். வாசிப்பின் மேல் தீவிர ஆர்வம் கொண்டவர்.