அன்று புதன்கிழமை. பள்ளியில் பிரேயர் முடிந்தவுடன் அனைவரையும் அமரச் சொன்னார்கள். இப்படி அமரச் சொன்னார்கள் என்றாலே ஏதாவது சிறு நிகழ்ச்சி அல்லது யாராவது வந்து பேசுவார்கள் என்று அனைவரும் அறிந்ததே.

ராசாத்தி மனசுக்குள்ளே, ’இன்னைக்கு முதல் பீரியட் இங்கிலீஷ்… எப்படியோ தப்பிச்சோம். யார் வந்து என்ன பேசினா என்ன?’ என்று நினைத்துக்கொண்டு அமர்ந்திருந்தாள்.

அப்போது கறுப்புச் சட்டை கறுப்பு பேண்ட் போட்டு பத்துப் பதினைந்து பேர் வந்தார்கள். எட்டு வயதிலிருந்து 25 வயது வரை இருந்தார்கள். என்னென்னவோ சண்டை போட்டார்கள். கட்டையோடு சங்கிலியும் இணைத்த ஒன்றை வைத்து வேகமாகச் சுழற்றினார்கள். சிலம்பம் ஆடினார்கள்.

“ஆ… ஊ….” என்று கத்தி கைகளையும் கால்களையும் நீட்டினார்கள். பார்க்க சினிமா சண்டை போல் இருந்தது. அந்தப் பிரமிப்பிலிருந்து விலக முடியவில்லை.

அவர்கள் செய்து முடித்ததும் தலைமையாசிரியர் முருகேசன், “இன்று இதுவரை நடந்தது குங்ஃபூ என்ற தற்காப்புக் கலை. இதைக் கற்றுக் கொண்டால் எதிரியிடமிருந்து நம்மைப் பாதுகாத்துக்கொள்ள முடியும்.

Karate martial art silhouette of woman in sword fight karate pose

அடுத்த மாதம் முதல் மாஸ்டர் ராம் பிரசாத் உங்களுக்கு வகுப்பு எடுப்பார். விருப்பமுள்ளவர்கள் இணைந்துகொள்ளலாம். மாதம் 50 ரூபாய் இதற்கான தொகை” என்று கூறினார்.

எப்படியாவது நாமும் இதைக் கற்றுக்கொள்ள வேண்டும் என்று நினைத்த ராசாத்தி, பக்கத்திலிருந்த கலைச்செல்வியிடம், “இதுல சேரலாமா?” என்று கேட்டாள். “ஐயோ, எனக்குப் பயமா இருக்குப்பா… நானெல்லாம் வரல… நீ சேர்ந்துக்கோ” என்றாள் கலைச்செல்வி.

அன்று மாலை பள்ளியிலிருந்து வீடு சென்றதும் வழக்கம்போல கடை வேலைகள் ஆரம்பித்தன. நெடுஞ்சாலையில்தான் ராசாத்தியின் வீடு.

வீட்டின் முன்பு ஒருபக்கம் ஆலமரம். மற்றொரு பக்கம் குல்முகர் மரம். இவர்கள் வீட்டுக்குப் பக்கத்தில் பெரியப்பா வீடு, சித்தப்பா வீடு, மாமா வீடு என்று உறவினர்கள் வசித்துவருகிறார்கள்.

பெரும்பாலான வீடுகள் இரவு நேரக் கடைகள் ஆகிப் போனதால் ராசாத்தியின் வீடும் கடையாகிப் போனது. கடை என்றால் நீங்கள் நினைப்பது போல இல்லை.

வீட்டின் முன்பு மரத்தால் செய்யப்பட்ட நீளமான டேபிள்கள். ஒரு தோசை சுடும் நீளமான அடுப்பு. கை கழுவ ஒரு தொட்டி. இட்லி பாத்திரம் வைக்க ஓர் அடுப்பு. சாம்பார் வைக்க ஓர் அடுப்பு. அவ்வளவுதான்.

இந்தக் கடைக்கு ராசாத்தியின் அப்பா கருப்புசாமி தான் முதலாளி.

அம்மா மாணிக்கம் தான் தோசை மாஸ்டர். ராசாத்தியோடும் ராசாத்தியின் அக்கா மலர்கொடியோடும் சேர்ந்து சர்வராகவும் மாறிவிடுவார்.

கடையில் இவர்கள் நால்வரின் உழைப்பும் கொட்டிக்கிடக்கும்.

வாசலைப் பெருக்கி, தண்ணீர் தெளித்தாள் ராசாத்தி. குழம்பு வைப்பதில் பரபரப்பாக இருந்த அம்மாவிடம் வந்தாள்.

”எங்க ஸ்கூல்ல புதுசா குங்ஃபூ சொல்லிக்கொடுக்கறாங்க. நானும் போகட்டுமா? என்று கேட்டாள் ராசாத்தி

“குங்ஃபூ வா! அப்படின்னா?”

“அதான் சினிமாவில் சண்டை போடுற மாதிரி. அது கத்துக்கிட்டா தைரியமா இருக்கலாம்” என்றாள் ராசாத்தி.

“ஓஹோ… நீ சும்மாவே சண்டைக்காரி. பேச்சுக்குப் பேச்சு பேசுற! இது வேறயா? வேலையப் பாரு” என்றார் அம்மா.

அம்மாகிட்ட இப்படிக் கேட்டால் வேலையாகாது. அம்மாவுக்கு உதவி செய்து, சம்மதிக்க வைக்கலாம் என்ற எண்ணத்தில் வேலைகளை இழுத்துப் போட்டுக்கொண்டு செய்தாள் ராசாத்தி.

அப்பா ஆட்டுக்கல்லில் சட்னி ஆட்டிக்கொண்டிருக்க, “நான் ஆட்டவா?” என்று அப்பாவை எழுப்பி விட்டு, சட்னி அரைக்க ஆரம்பித்தாள்.

“என்ன இன்னைக்கு ஒரே ஆச்சரியமா இருக்கு. கை வலிக்குதுன்னு கூப்பிட்டாகூட வந்து ஆட்டிக் கொடுக்க மாட்டே… இப்ப என்ன?” என்று கேட்டார் அப்பா.

“சோழியன் குடுமி சும்மா ஆடுமா? இவங்க பள்ளிக்கூடத்தில் குங்ஃபூ கத்துக் கொடுக்கறாங்களாம். இவளும் கத்துக்கணுமாம். அதையும் கத்துக்கிட்ட யாரையாவது அடிக்க வேற செய்வா” என்றார் அம்மா.

“சரி, ஆசைப்படறா கத்துகிட்டு தான் போறா” என்றார் அப்பா.

“வேலை இருந்தா பாருங்க. ராசாத்தி, மாட்டுக்குத் தண்ணி வச்சுட்டு வா. உங்க அப்பா இது ஆட்டி முடிக்கட்டும்” என்றார் அம்மா.

”எப்பப் பாரு வேலை வேலை… ஏதாவது கேட்டா மட்டும் செய்வதில்லை” என்று சொல்லிக்கொண்டே சென்ற ராசாத்தியின் முகம் வாடிவிட்டது. கோபமாக வீட்டின் பின்புறம் அவள் வைத்திருந்த செடிகளின் அருகில் சென்றாள். ”ரோஜா, நீ சொல்லு நான் குங்ஃபூ கத்துக்கக் கூடாதா?” என்றாள்.

அங்கு பறந்துகொண்டிருந்த பட்டாம்பூச்சியைப் பிடித்து, “நான், உன்ன மாதிரியே பிறந்திருக்கலாம்” என்று கூறியபடி விட்டுவிட்டாள். அது வானை நோக்கிச் சிறகடித்துப் பறந்தது. “ஏய், பட்டாம்பூச்சி உன்கிட்ட பிடிச்சதே இதுதான். எப்போ நான் பிடித்தாலும் விடும்போது வானத்தை நோக்கி நம்பிக்கையோட பறக்கிறே! நானும் உன்ன மாதிரி நிச்சயம் பறக்கப் போறேன்!” என்று சொல்லிக்கொண்டே ஒரு முடிவோடு வீட்டுக்குச் சென்றாள் ராசாத்தி.

படைப்பாளர்

சரிதா

கதைசொல்லி, சிறார் எழுத்தாளர், பண்பலைத் தொகுப்பாளர் Scan foundation India animal welfare அமைப்பின் தூதுவர். Skillware Founder இதன் வழியாக கதைசொல்லல் பயிற்சிகளும் வழங்கி வருகிறார். கருவுடன் கதையாடல் இந்த தலைப்பில் கர்ப்பிணி பெண்களுக்கு இணைய வழியாகக் கதைகளைக் கூறி வருகிறார்.