விஜயமங்கலம் சந்தைதான் சுத்துப்பட்டு கிராமங்களுக்கு சூப்பர் மார்க்கெட். அங்கு கிடைக்காத பொருள்களே இல்லை. இரண்டு ஏக்கர் பரப்பளவில் அமைந்திருக்கும் அந்தச் செவ்வக வடிவ சந்தையில் செவ்வாய்க்கிழமை காலை கோழி வியாபாரத்தில் இருந்து தொடங்கும்.

“ராசாத்தி, பாரேன் துண்டை போட்டு ரெண்டு பேரும் கைகளைப் பிடிச்சிட்டு இருக்காங்க. எதுக்கு இப்படிப் பிடிக்கிறாங்க?” என்று கேட்டாள் சுபா.

“எனக்கு என்ன தெரியும்? நானும் உன்கூடத் தானே இருக்கேன்?” என்றாள் ராசாத்தி கோபமாக.

“அட, உங்க வீட்ல தான ஆடு மாடெல்லாம் இருக்கு. அதான் உனக்குத் தெரியும்னு கேட்டேன்.”

“என்னது?” என்றாள் கோபமாக ராசாத்தி.

“இல்ல ராசாத்தி, பக்கத்துல கோழி இருக்கு. ஒருவேளை கோழிக்கு வெலை பேசுவாங்களோ? உங்க வீட்ல தான் அதெல்லாம் இருக்கு இல்ல. உங்க வீட்டில் வந்து இப்படி விலைபேசி இருக்காங்களோனுதான் கேட்டேன்” என்றாள் சுபா.

“உங்க தோட்டத்திலும் தானே இருக்கு… எனக்கு இந்த ஆடு, மாடு, கோழி எல்லாம் பார்த்தாலே பத்திக்கிட்டு வருது… பிடிக்கவே பிடிக்காது. நீ வேணும்னே எப்பப் பாத்தாலும் அதப் பத்திக் கேட்கிறே. நான் உன்கூட பேசவே மாட்டேன் போ” என்று முகத்தை திருப்பிக்கொண்டு, கையில் வைத்திருந்த மஞ்சள் பையைத் தோளில் மாட்டியபடி விடுவிடுவென்று பள்ளியை நோக்கி நடக்க ஆரம்பித்தாள் ராசாத்தி.

“சரி, சரி மன்னிச்சுக்கோடி. தெரியாம சொல்லிட்டேன். இனி சொல்ல மாட்டேன்” என்று ராசாத்தியின் பின்னாடியே ஓடினாள் சுபா.

பள்ளி மணி அடிக்கவும் இருவரும் பள்ளியை அடையவும் சரியாக இருந்தது.

அன்று மாலைவரை ராசாத்தி சமாதானம் ஆகவில்லை. மாலை பள்ளியில் இருந்து கிளம்பும்போது, “ராசாத்தி, இன்னைக்கு முழுசும் நீ என்கூடப் பேசவேயில்ல. பேசுவியா, பேசமாட்டியா? தெரியாம சொல்லிட்டேன். இனிமேல் நான் அதைப் பத்தி பேசவே மாட்டேன். உன்கூட பேசாம என்னால எப்படி இருக்க முடியுமா?”

“சின்னச் சின்ன புள்ள

அழகு அழகு புள்ள

குட்டிக் குட்டி புள்ள

யார் அந்தப் புள்ள

எங்க ராசாத்தி புள்ள

ராசாத்தி புள்ள” என்று சுபா கூறக் கூற ராசாத்தியின் கண்கள் முதலில் சிரிக்க ஆரம்பித்து, உதடுகள் பிளந்து வெடிச்சிரிப்பு ஒன்றைச் சிரித்துவிட்டு, சுபாவைக் கட்டி அணைத்துக்கொண்டாள்.

“எப்படித்தான் சாயங்காலம் வரைக்கும் பேசாம இருந்தேன்னு தெரியல” என்றாள் ராசாத்தி.

“உனக்கு அழுத்தம் அதிகம்.”

“அப்படி இல்ல, எனக்குப் பிடிக்காதுன்னு சொன்னதுக்கப்பறமும் நீ அடிக்கடி சொல்லும் போது எனக்குக் கோபம் வரத்தானே செய்யும்?”

A doodle kid reading a book cartoon character isolated illustration

“சரி, விடு. இப்ப கோவம் எல்லாம் தீர்ந்துச்சா வா போலாம்” என்று சுபா கூற‌, இருவரும் கைகோத்தபடி பள்ளியை விட்டு வெளியேறினார்கள்.

பள்ளிக்கு மிக அருகிலேயே சந்தை. சந்தை நாள் என்றாலே ராசாத்திக்குக் கொண்டாட்டம் தான். சந்தைக்கு வெளியிலும் உள்ளேயும் இருக்கும் கடைகளை ரசித்துப் பார்த்துக்கொண்டே செல்வாள். என்றேனும் ஒருநாள் சந்தைக்குள் செல்ல வேண்டும் என்ற ஆசை ராசாத்திக்கு இருந்துகொண்டிருந்தது.

“சுபா எனக்குச் சந்தைக்குள்ள போயி என்னென்ன இருக்குன்னு பார்க்கணும் போல இருக்கு.”

“வேணா ராசாத்தி, சந்தைகுள்ள போனா தொலைஞ்சு போய்டுவோம். அதுமட்டுமில்லாம புள்ளை புடிக்கிறவன் புடிச்சிட்டுப் போயிருவான் தெரியுமில்ல.”

“தெரியும் தெரியும். ஆனா, ஒரு நாளாச்சும் போகணும். பூ, பிஸ்கட், மிட்டாயி, ஆப்பிள், ஆரஞ்சு, பொரிகடலை எத்தனை தெரியுது பாரு. இன்னும் உள்ளுக்குள்ள எப்படி இருக்குமோ!” என்றாள் ராசாத்தி.

“எனக்கும்தான் ஆசையா இருக்குது. நான் மட்டும் போயா பாத்து இருக்கேன். ஆனா, எங்க அம்மா சொல்லி இருக்காங்க புதுத்துணிகூட கிடைக்குமாமா…”

“ஓ, அப்படியா நீ துணிக்கடைக்குப் போய் இருக்கியா?” என்று கேட்டாள் ராசாத்தி.

“நான் எங்க போயிருக்கேன்? ஆனந்தை மட்டும் கூட்டிட்டுப் போவாங்க. என்னைக் கூட்டிட்டுப் போக மாட்டாங்க. எல்லாரும் ரொம்ப மோசம். இந்தப் பொம்பள பிள்ளைங்கனாவே ஒதுக்கிடுவாங்க. இது எனக்குப் புடிக்கல” என்றாள் சுபா.

“உங்க வீட்லகூடப் பரவால்ல. உங்க அப்பா உன்ன என் தங்கம் தங்கம்னு கொஞ்சறாரு. எங்கூட்ல எல்லாம் எதுவும் கிடையாது” என்றாள் ராசாத்தி.

“ஆமா, எங்க அப்பாவுக்கு என் மேல கொள்ளைப் பிரியம். எங்க பாட்டி மட்டும்தான் பொட்டக்கழுதைனு திட்டுவாங்க.”

சந்தை வாயிலின் இடது புறத்தில் பெரிய பாத்திரத்தில் மூடி போட்டு வைத்திருந்தார்கள். அதற்குள் செக்கச் சிவந்த நிறத்தில் ஜிலேபி இருந்தது. தேவைப்படுவோருக்கு ஒரு பேப்பரில் எடுத்துக் கட்டித் தருவார்கள். ஜீரா அதில் ஒழுகிக்கொண்டிருக்கும். ஒவ்வொரு வாரமும் ராசாத்தியும் சுபாவும் அதைப் பார்த்து எச்சில் விழுங்கிக்கொண்டே செல்வார்கள்.

வலது புறத்தில் பூக்கடை. ஒரு பெரிய ஸ்டாண்டில் பூக்கூடையில் ரோஜா, டேலியா, மல்லிகை, முல்லை என்று விதவிதமான பூக்களை அழகாக அடுக்கி வைத்திருப்பார்கள். அந்தப் பூக்களை வைத்த கண் வாங்காமல் பார்த்துக்கொண்டே செல்வார்கள்.

சந்தையை ஆரம்பித்த இடத்திலிருந்து முடியும் இடம் வரை பல்வேறு வாசனையை நுகர்ந்துகொண்டே வருவார்கள். சந்தை முடியும் இடத்தில் வந்தவுடன் மூக்கைப் பொத்திக்கொள்வார்கள்.

சந்தையின் எதிர்ப்புறம் மலையாங்குட்டை என்ற பெரியகுட்டை. அந்தக் குட்டையின் மேட்டில் கறிக்கடை.

இந்த வாசனைதான் ராசாத்தியையும் சுபாவையும் மூக்கைப் பொத்த வைத்தது. சந்தை தாண்டி சிறிது தூரம் சென்றவுடன் தான் கையை மூக்கிலிருந்து எடுப்பார்கள்.

“ராசாத்தி, இந்தக் கறிய வாங்கி எப்புடி ஆக்கித் திங்கறாங்க?”

“ஆமா, சுபா இந்த நாத்தம் நாறுது” என்றாள் ராசாத்தி.

இருவரும் பேசியபடியே சுபா வீட்டை அடைந்தார்கள். ராசாத்தியின் வீட்டுக்கு ஐந்தாறு வீடு முன்பே சுபாவின் வீடு இருந்தது. சரி நான் வரேன் என்று வீடு நோக்கி நடை போட்டாள் ராசாத்தி.

“ஏய் ராசாத்தி, குங்ஃபூ கிளாசுக்குக் கேட்டியா? உங்க அம்மா என்ன சொன்னாங்க?”

“போடி எங்க அம்மா விட மாட்டேன்னு சொல்லிட்டாங்க.அப்பாகூட ஒன்னும் சொல்லல.”

“அப்ப நீ வரமாட்டியா? நீ வந்தா ரொம்ப நல்லா இருக்கும் தெரியுமா, அடிக்கிறதுக்கு எல்லாம் சொல்லித் தர்றாங்க. ஆனால், கை கால் வலிக்குது.”

“எனக்குக் கை கால் வலிச்சாலும் பரவாயில்லை. இன்னைக்குப் போய் எப்படியாவது எங்க அம்மாட்ட கேட்டுட்டு வர்றேன். வேலையை முடிச்சுக் குடுத்து அம்மாவுக்கு ஐஸ் வைச்சு, அடுத்த வாரம் வந்து சேர்ந்துடுவேன்” என்றாள் ராசாத்தி.

“சரி சரி நான் வரேன்” என்று கூறிக்கொண்டே வேகமாக ஓடினாள் ராசாத்தி.

வீட்டின் முன்பு கூட்டமாக நின்றுகொண்டிருந்தார்கள். ’என்ன இவ்வளவு கூட்டமா இருக்குது? ஏதாவது நோம்பினாதான இவ்வளவு கூட்டம் வருவாங்க. மாரியம்மன் பொங்கலுக்கு இன்னும் நாளிருக்கு. எதுக்கு இவ்வளவு கூட்டம் தெரியலையே… எதுக்கு இத்தன பேரு வந்திருக்காங்கன்னு தெரியலையே…’ என்று யோசித்தவாறு வீட்டை நோக்கி வேகமாக ஓடினாள்.

வீட்டிற்குள் நுழையும் முன்பே, “ஐயோ… பேயிட்டயே…” என்ற ராசாத்தியின் அம்மா குரல் ராசாத்தியை பேரதிர்ச்சி அடைய வைத்தது.

படைப்பாளர்

சரிதா

கதைசொல்லி, சிறார் எழுத்தாளர், பண்பலைத் தொகுப்பாளர் Scan foundation India animal welfare அமைப்பின் தூதுவர். Skillware Founder இதன் வழியாக கதைசொல்லல் பயிற்சிகளும் வழங்கி வருகிறார். கருவுடன் கதையாடல் இந்த தலைப்பில் கர்ப்பிணி பெண்களுக்கு இணைய வழியாகக் கதைகளைக் கூறி வருகிறார்.