குழந்தையின் குரலுக்குக் காது கொடுங்கள் -3

“பொதுவா சமூகத்துல சாதாரணமா ஒரு குற்றம் நடக்கும்போது, குற்றத்தால் பாதிக்கப்பட்டவருடன் சமூகம், அரசாங்கம், நீதித்துறை என ஒருங்கிணைந்து அதற்கான நீதியைப் பெற்றுத் தருது; தண்டனை வாங்கித்தருதுன்னு கூட வைச்சுக்கயேன். குற்றம் நடக்காம தடுக்க, நடவடிக்கையும் எடுக்கறாங்க. பாலியல் வன்முறையைப் பொறுத்தவரை காக்க வேண்டிய சமூகம், குடும்பமெல்லாம் குற்றத்துக்கு உள்ளானவரையே குற்றவாளி ஆக்கிடறது மிகப்பெரிய வேதனைக்குரிய விடயமா இருக்குது மகா. என்ன செய்யறது?”

“சமீபத்தில் பாலியல் குற்றம் பற்றிய தகவல்கள் வெளிவருவது அதிகரிக்கத் தொடங்கியதாலயும், சமூக ஆர்வலர்கள் , பெண்ணியலாளர்கள் வேண்டுகோளுக்கிணங்கவும் அரசாங்கம் ‘போக்சோ’ன்னு பாலியல் குற்றத்துக்குனே தனிசட்டத்தைக் கொண்டு வந்திருக்கு. போக்சோ சட்டம் பற்றி ஆசிரியர்கள், காவல் துறைன்னு குழந்தைகளை அணுகுறவங்களுக்கு அரசாங்கம் பயிற்சி தருது. அது குழந்தைமையோடும் உரிமைகள் சார்ந்தும் விளிம்புநிலை வரை சென்று சேராதது வருத்தம்தான்.”

“கேரளா அரசாங்கம்கூட போக்சோ சட்டதைச் சின்ன சின்ன பாக்கெட் புத்தகங்கள் போல போட்டு, பெட்டிகடைகள் வரை கிடைக்க வழிவகை பண்ணுச்சுன்னு கேள்விப்பட்டேன். அதுபோல சட்டத்தின் சரத்துகள் மற்றும் நடைமுறைகள் பல்வேறு வழிகளில் விளிம்புநிலை மக்கள் வரை சென்று சேர்வதை அரசாங்கம் உறுதிப்படுத்தணும். அது காலத்தின் இன்றியமையாத தேவையாவும் இருக்கு மகா.”

“ஆம் மிஸ். போக்சோவில் கைதுன்னு டிவியில் பார்த்திருக்கேன். போக்சோ பற்றி தெரிஞ்சுக்கணும். பள்ளி மாணவி தற்கொலைன்னு செய்தி பார்க்கறேன். ஏன்தான் பெண்கள் அப்படி முடிவெடுக்கறாங்களோன்னு தெரியல போங்க மிஸ். அவங்கள பெத்தவங்க எவ்ளோ கவலைப்படுவாங்கன்னு கொஞ்சங்கூட நினைச்சுப்பார்க்க மாட்டிங்கிறாங்களே இந்தப் பொண்ணுங்க”, என்று தன் மனதில் உள்ள கவலையை மகா பகிர்ந்தாள்.

“போக்சோவுல கைதுன்னு சொன்னவுடனே தண்டனை கிடைக்காது. அது சட்ட நடவடிக்கைகளின் தொடக்கம்தான் மகா. போக்சோ பத்தி தனியா சிறப்பு கருத்தாளர்கள் எடுக்கும் சிறப்பு வகுப்பு ஒண்ணை பள்ளில ஏற்பாடு பண்ணப் போறோம். அப்போ போக்சோ பத்தி அனைத்து குழந்தைகளும் தெரிஞ்சுக்கலாம். ஒருத்தர் வேறெந்த வழியும் இல்லாமல் வாழ்வில் நிர்கதியாய் நிற்கும்போதே தற்கொலை போன்ற விசயத்திற்குத் தூண்டப்படறாங்க.”

“தற்கொலைக்கு மன அழுத்தம் மிகப்பெரிய காரணம். தற்கொலை, கொடூரமா தாக்குண்டு கொலை, பாலியல் துன்புறுத்தப்பட்டு உடல் எரிக்கப்படுதல் போன்றவை நிகழும்போது மட்டும், ஒட்டுமொத்த சமூகமும் வெகுண்டெழுந்து அவனை ரோட்ல நிக்க வைச்சு சுடணும், தூக்குல போடணும், ஆணுறுப்பைத் துண்டிக்கணும்ன்னு விதவிதமா சொல்லுவாங்க. உணர்ச்சி கொப்பளித்து காட்டாறென பெருக்கெடுத்து ஓடும் காலப்போக்குல மறைஞ்சும் போய்டும்…”

“இது மாதிரி உணர்ச்சி பொங்கல், சுயக்கழிவிரக்கத்துக்கு வேணா உதவலாமே ஒழிய பிரச்னையைத் தீர்க்காது. தொடுதல், தடவுதல், இன்னும் பிற என்று தொடக்கும்போதே, அல்லது அது போன்று நடக்கும்போதே அதை குற்றத்துக்குள்ளானோருடன் நின்று பிரச்சனையைத் தீர்க்க இனியாவது இந்த சமூகமும் குடும்பமும் முன்வர வேண்டும். காலம் மாறும்ன்னு நம்புவோம் மகா. உன்னை மாதிரி பெண்கள் யோசிக்கத் தொடங்கிட்டிங்கல்ல? மாற்றம் வருவது நிச்சயம்.” 

“அப்போ கொன்னவனுங்கள அப்படியே விட்டுடலாம்ன்னு சொல்றிங்களா? என்ன சொல்றிங்க இதெல்லாம் மன்னிக்கிற குத்தமா மிஸ்?”, என மகாவிடம் கேள்வி ஊற்றுப்போல பிறப்பெடுத்துக் கொண்டே இருந்தது.

“குற்றம் புரிந்தவரைச் சட்டத்தின் முன் நிறுத்தி சட்டத்தின்படி தீர்வு காணனும். அதைவிட்டு உணர்ச்சி பெருக்குல ஒரு நாளைக்குப் பேசறதும், நீ அங்க போனதாலதான? இப்படி ட்ரெஸ் போட்டிருந்ததாலதான்னு இன்னும் குற்றத்திற்குள்ளானவரையே குற்றம் சாட்டிக்கிட்டு இருக்காம, தீர்வு காண முற்படணும். ஒரு வயதுக்குள்ளான குழந்தைகள் முதல் பாட்டிகள் வரை பாலியல் குற்றம் நடக்குது. கைக்குழந்தைகள் என்ன ட்ரஸ் போட்டிருக்கும் மகா, சொல்லு? அதுவுமில்லாம அடுத்தவர் உடலை அனுமதியின்றி தொடுவது குற்றம் என முதலில் ஆண் குழந்தைகளுக்குச் சிறுவயது முதலே சொல்லி வளர்க்கணும். பெண் குழந்தைகளுக்குத் தைரியம் குடுத்து குற்றம் நிகழும்போது துணை நிற்கணும் மகா.”

“தொடக்கத்திலேயே குழந்தைகளின் பிரச்சனைகளுக்குக் காது கொடுத்து கேட்டு, துணை நிற்கணும்ன்னு சொல்றிங்க மிஸ். இது என்ன மாதிரி குழந்தைகள், பெத்தவங்கன்னு எல்லாருக்கும் போய் சேர்ற மாதிரி சொல்லணும் மிஸ்.” மெல்ல மெல்ல பற்றியிருந்த இருள் ஒளியால் நிரம்பி வருவதை உணர, அறிவார்ந்த கேள்விகளும் முளைத்து நிறைத்துக் கொண்டிருந்தது மகாவிடம்.

Photo by Umesh Soni on Unsplash

“இதையெல்லாம் தொலைக்காட்சி நாடகம், சினிமா, விளம்பரம்னு ஒரு பண்பாடா மக்களைச் சென்றடையும் ஊடகம் மூலம் கருத்துப் பரப்பல் செய்து, ஒட்டுமொத்த சமூகமும் அரசாங்கமும் ஒன்றிணைந்து செயல்படணும். பாலியல் குற்றத்தை வெளியில் சொன்னா யாரும் கல்யாணம் பண்ணிக்கமாட்டாங்க என்பதும் பெற்றோரை அச்சுறுத்துது. இதுபோன்று பாலியல் பிரச்சனைகளைச் சந்தித்த பெண்களைத் திருமணம் செய்து கொள்ள ஆண்கள் முன்வரணும்.” 

“இதை முழுமையாத் தடுக்கறது யாருடைய பொறுப்புன்னு சொல்றிங்க மிஸ்?” 

“இதனை குடும்பம், சமூகம், அரசாங்கம் என ஒன்றிணைந்து பொறுப்போட செயல்பட்டுத் தடுக்கணும். ஒன்றியம், மாநிலம், மாவட்டம், வட்டாரம் என அரசாங்கம் குழந்தைகளுக்கான பாதுகாப்பு அலுவலர்களை குழுவாக நியமித்து, அரசாங்கத்திலிருந்து ஊதியம் அளித்து, குழந்தை பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை எடுத்துவருகிறது. இந்த அமைப்புகள் இன்னும் சீரிய முறையில் செயல்பட அரசாங்கம் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.”

“சமூகத்தின் முதுகெலும்பான ஊராட்சிகளில் பெயரளவில் இருக்கும் VCPC Village Child Protection Committee – கிராம குழந்தை பாதுகாப்பு குழுவை வலுவாகக் கட்டமைச்சு குழந்தை பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் செயல்பட அரசாங்கம் அறிவுறுத்தல் வழங்குவதுடன், கண்காணிக்கவும் செய்ய வேண்டும். பள்ளியிலும் குழுக்கள் இருக்கு. அவை முறையா செயல்படணும்.”

“ VCPC யில் யார் யாரெல்லாம் இருக்கா? ஏன் அதை முக்கியமா யோசிக்கறிங்க மிஸ்?” 

“பாலியல் குற்றத்துல ஈடுபடறவங்க பெரும்பாலும் குழந்தைகளுக்கு நெருங்கியவர்களாக இருப்பதால, ஊராட்சில இருக்கும் குழுவை வலுப்படுப்படுத்தறது நிலையான தீர்வை நோக்கி நகர்த்தும். ஊராட்சி மன்றத் தலைவரைத் தலைவராகக் கொண்டு மகளிர் குழு, வார்டு மெம்பர், கல்வியாளர், தன்னார்வலர், மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர்கள், ஆசிரியர், பெற்றோர், பொதுமக்கள் என உண்மையாய் செயல்படும் குழுவாய் இருந்தாலே கிராமத்துல நடக்கும் பாலியல் குற்றத்தை அனைவரும் கைகோத்து ஒருமித்த மனதோடு குழந்தைகள் பாதுகாப்பை உறுதி செய்யலாம்.”

“நம் பள்ளிலயும் ‘மாணவர் குடிமக்கள் மன்றம்’ அமைத்து ஒவ்வொரு மாதமும் ஆசிரிய மாணவ உறுப்பினர்கள் கூடி, மாதமொரு தலைப்பில் உரையாடுவதுடன், அவ்வப்போது பிரச்சனைகள் சார்ந்தும் உரையாடணும். இதற்காகவே நம் பள்ளியில கருத்து சுதந்திரப் பெட்டியும் வைச்சிருக்கோம்னு உனக்கே தெரியும். இப்போ நம் கல்வித்துறையே எல்லா பள்ளிகளிலும் வைக்கச் சொல்லி குழந்தைகள் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை எடுத்திருப்பது பெருவாரியான  மக்களால் பாராட்டப்பட்டு வருகின்றது.” 

“நானும் VCPC , மாணவர் குடிமக்கள் மன்றம், கருத்து சுதந்திரப் பெட்டியைப் பற்றி ஊர்லயும் என் நண்பர்கள்கிட்டயும் சொல்வேன். எனக்கு பிரச்சனை வந்தா மட்டுமில்லாம, நம் பள்ளில யாருக்கு பிரச்சனை வந்தாலும் உடன் நின்று தீர்வு காண முயல்வேன் மிஸ். மிக்க மகிழ்ச்சி மிஸ். இப்ப எனக்கு தெளிவாகிடுச்சு எல்லாமே! “, என்று பெருவெளிச்சத்துடன் ஒளியாய் நகர்ந்தாள் மகா. பல ஒளியை ஏற்ற…

தொடரின் முந்தைய பகுதி:

படைப்பாளர்:

சாந்த சீலா

சாந்த சீலா கடந்த 17 ஆண்டுகளாக ஆசிரியராகப் பணிபுரிகிறார். கும்முடிப்பூண்டியை அடுத்த பூவலை கிராமத்தின் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ஆசிரியர். பேருந்து வசதி கூட சரியாக இல்லாத இந்த ஊரிலேயே தங்கி, பெரும்பாலும் ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த குழந்தைகளுக்கு கல்வியறிவு தருகிறார். இவரால் இந்தப் பள்ளியில் இடைநிற்றல் குறைந்திருக்கிறது. பள்ளி மேலாண்மைக் குழுவின் ஆசிரிய உறுப்பினராகவும் இருக்கிறார். கல்வியின் நோக்கமான படைப்பாற்றல் வெளிப்பட குழந்தை மையக் கல்வி அமைய வேண்டும் என்றும் விளிம்புநிலை குழந்தைகளும் மையநீரோட்டத்தில் இணைய வேண்டும் செயல்படும் அரசு பள்ளி ஆசிரியர். குழந்தைகளைக் கொண்டாடுவோம் கல்வி இயக்கம், குழந்தைநேயப் பள்ளிகள் கூட்டமைப்பு போன்ற அமைப்புகளில் செயலாற்றிக் கொண்டுவருகிறார்.