வழியில் பார்த்தவள் என்னுடைய பவானியே அல்ல…

அவள் எதைப்பற்றியும் கவலைப்படாமல் என் கைகளை பற்றி நடுத்தெருவிலிருந்து அவளது வீட்டிற்குள் அழைத்து சென்றாள்…

டிசம்பர் பூக்களை இரு ஜடைகளுக்கிடையில் பாலங்களாகக் கட்டி, மதியம் இன்டர்வல் பீரியடுக்குப் பிறகு ஊஊ என குண்டாக இருக்கும் கன்னம் இன்னும் பெரிதாக சிரித்தபடி, நெத்தியில் டப்டப்பென வெடிக்கும் பவானியை நான் தேடிக்கொண்டிருக்கிறேன்.

“படிக்கிறியாப்பா? நல்லா படி… இவரை பிடிச்சிருந்தது, அப்பதான் பேச ஆரம்பிச்சோம். அப்பாவுக்கு கண்பார்வை குறைஞ்சதால அம்மா கட்டிவச்சிட்டாங்க…”

இடுப்பில் ஒரு குழந்தை, காலை கட்டியபடி யாரோ ஒருவரின் வருகைக்கு என்ன விதமாக ரியாக்ட் செய்வது என தெரியாமல் மலங்க மலங்க விழிக்கும் இன்னொரு குழந்தை.

“தவிர இப்போ மாசமாக வேற இருக்கேன்…”

இப்போது நான் அதிர்ச்சியாகி, “ஏன் புள்ள ஆபரேஷன் பண்ணியிருக்கக்கூடாதா?” என்றேன்.

“அப்போ சத்து இல்லைன்னாங்க, இப்போ கலைக்க பிடிக்கலை”, என்றாள்.

அசால்டாக, ஓயர்கூடையில் டீயும் ஆட்டுக்கால் வர்க்கியும் கொண்டுவந்தவனிடம், “நல்ல வேளை முட்டைபோண்டா வாங்கிவரலை, இவ சைவம்”, என்றாள். தலையை குனிந்தபடி சென்றவனை யாரெனவே ஊகிக்க முடியவில்லை‌ என்னால்.

குழந்தைகளைக் காட்டியபடி பேசத் தொடங்கினாள்.

“இவர்தாம்பா, இவங்க அப்பா… ” பிரபல ரௌடியின் பெயரை சொல்லி, “அவர்ட்டதான் இருக்காரு. அப்பல்லாம் எனக்கு தெரியலை. இப்போ பயமா இருக்கு, பிள்ளைகள் வளர்றாங்க. உன் அப்பா யாருன்னு கேட்டா என்ன சொல்ல? வீட்டுக்கு வரும் வரை திக்திக்னு இருக்கும்”, என்பதை சுலபமாக, ‘இன்னைக்கு வெள்ளிக்கிழமை’ என்பதைப் போலச் சொன்னாள்.

நல்ல அழகி; தினமும் பூக்களோடும், விதவிதமான அச்சுப் பொட்டுகளோடும்தான் பள்ளிக்கு வருவாள். நல்ல புஷ்டியாக கொழுக் மொழுக் என சிகப்பாக வேறு இருப்பாள். குண்டு குண்டு கண்கள்… எப்போதும் சிரிப்போடே இருப்பாள்.

காதல் வர போதுமான சகல சாமுத்திரிகா லட்சணமும் பொருந்தியவள். பேச ஆரம்பித்தபோதே கண்டு, அவளைப் புரிந்துகொள்ளாமல், ‘பொறுப்பு’ என நினைத்து, கட்டிவைத்த பெற்றோர்.

பதின்மங்களில் அந்நிய ஆண்கள்மீது வரும் இயல்பான குறுகுறுப்பை காதல் என்று இவள் நினைத்தது பிசகா… ?

இவளே அறைகுறையாக இருக்க, ‘நீ நினைச்சவனை கட்டிவைச்சிட்டோம்’, என பொறுப்பான பெற்றோராக நினைத்துக்கொண்ட அவர்கள் செய்தது பிசகா?

சரி எது தப்பு எது என ஆராயாமல், அவளின் விருப்பம்; நமது பொறுப்பு, பெண்ணுக்கு கல்யாணம் செய்வதே ஆகச்சிறந்த கடமை என நினைத்து அவசரப்பட்ட பெற்றோரின் அறியாமையா?

ஏதோ ஒன்று தப்பாகப் போனதன் விளைவு.

நான் பவானியை சந்தித்த இரண்டே ஆண்டுகளில் அந்த பிரபல ரௌடியை என்கௌண்டரில் சுட்டு காவல்துறை கணக்கை முடித்தது. பவானியின் கணவனையும் ஏதோ சண்டையில் கொன்றுவிட்டனர்.

அவளை நான் பிறகு சந்திக்கவேயில்லை…

நினைத்தாலே நெஞ்சம் வலிக்கும்.

ஒருமாலையில் எதேச்சையாக பவானியின் தாய் மாமனை பார்த்தேன்.

“எப்படி இருக்கா? தைரியமா இருக்காளா?”

“நாங்க வேற பையனை பார்த்து கட்டிவச்சிட்டோம், எங்க காலத்துக்கு பிறகு யார் பார்த்துக்குவா?” என்றார்.

“ஆஹா… நல்லதா போச்சு குழந்தைகள்?”என்றதும்,

“அண்ணன்மார்கள் வளர்க்கிறாங்க. பவானி அம்மா இருக்கும்வரை குழப்பமில்லை. அதுக்குப் பிறகு தாய்கிட்ட போய்க்கிடலாம்”, என்றார்.

“மாப்பிள்ளை என்ன பண்றாரு?”

அசால்டாக சொன்னார் மாமா… “அதே கட்டப் பஞ்சாயத்து, அடிதடிதான்.”

பானுபிரியாவுக்கும், பவானிகளுக்கும் எத்தனை தேவாக்கள் வந்தாலும், இந்த காதல் என்பது மட்டும் கைகூடுவதில்லை.

படைப்பு:

சுபா கண்ணன்

ஆசிரியர், எழுத்தாளர், கதைசொல்லி. பாடல், கதை என கலை வடிவில் குழந்தைகளுக்கு பாடங்களைக் கொண்டு சேர்ப்பதில் அதிக ஆர்வம் கொண்டவர். அவள் விகடன் இதழில் இவர் எழுதிய ‘மனுஷி’ தொடர் பெரும் ஆதரவைப் பெற்றது.