தோழியொருவர் தனக்குத் தெரிந்த நண்பருக்குப் பெண் பார்த்துக்கொண்டிருப்பதாகவும், யாராவது இருந்தால் சொல்லுங்கள் என்றும் கேட்டார். “பையனுக்கு 41 வயசாச்சு. அருமையான குணம். நல்ல வேலையில் இருக்கிறார்” என்றார். “அப்புறம் ஏன் இதுவரைக்கும் கல்யாணம் பண்ணிக்கலை? ” “அவருக்கு மூணு தங்கச்சிங்க.. எல்லாருக்கும் நல்லபடியா கல்யாணம் பண்ணிக் குடுக்கணுமேன்னு, தன்னோட கல்யாணத்தைப் பத்தி யோசிக்கவே இல்லை. இப்ப எல்லாரும் செட்டிலாயிட்டாங்க. இவர் கல்யாணம் செஞ்சுக்கலாம்னு நினைக்கறப்ப, ’மாப்பிள்ளைக்கு வயசு ஜாஸ்தி’ன்னு தட்டிப் போயிட்டே இருக்கு” என்று வருத்தப்பட்டார். அந்த நண்பரை நினைத்தால் பாவமாக இருக்கிறது.அந்த நண்பரைப் போல பல ஆண்கள் இருக்கிறார்கள். தன் சகோதரிகளுக்கெல்லாம் கல்யாணம் செய்துவிட்டு, வயதாகி மணம் செய்வது, இல்லாவிட்டால் கல்யாணம் செய்துகொள்ளாமலே இருப்பது என்று தம் வாழ்வை உடன் பிறந்தவர்களுக்காகத் தொலைக்கிறார்கள். ஏன் இந்த நிலைமை ?

பருவ வயது வந்த ஆணுக்கும், பெண்ணுக்கும், தனக்கான துணையைத் தேர்ந்தெடுத்து கல்யாணம் செய்துகொண்டு, இல்லற இன்பங்களை உரிய வயதில் அனுபவிக்கும் உரிமை இருக்கிறது. ஆனால், ஆணாகப் பிறந்ததினாலே, அக்கா, தங்கைகளின் கல்யாணம் என்பது, அப்பாவுக்குப் பிறகு, சகோதரனின் பொறுப்பாகிவிடுகிறது. சகோதரிகளின் கல்யாணத்திற்குப் பணம், நகை, பாத்திர பண்டங்களைச் சேர்த்தே ஆண்கள் களைத்துப் போகிறார்கள். சம்பாத்தியம் போதாமல், கடன் வாங்கி, அந்தக் கடனை அடைக்க அதிகமாக உழைத்து, தன் இளமையைத் தொலைத்து, மன அழுத்தம் கூடி, சோர்ந்து போகிறார்கள். சகோதரிகளின் கல்யாணக் கடனை அடைப்பதற்காகவே வெளிநாடுகளுக்கு வேலைக்குப் போகும் இளைஞர்களின் எண்ணிக்கை அதிகம்.

இது ஒருபுறம் என்றால், மகளின் கல்யாணத்திற்காகச் சேர்த்து வைத்து, தன் மொத்த வாழ்நாள் வருமானத்தையும் பெண்ணின் வரதட்சணையிலும், நகையிலும், கல்யாணச் செலவுகளிலும் தொலைக்கும் அப்பாக்கள் மறுபுறம். கல்யாணத்திற்காக வாங்கிய கடனை அடைக்க வீட்டை விற்பது, நிலபுலங்களை அடமானம் வைப்பது என்று தனது சொத்தையும் இழக்கிறார்கள்.

கொஞ்சம் ஆழமாகச் சிந்தித்தால், இங்கு பெண் என்பவள் ’ஒரு பொறுப்பாக’ப் பார்க்கப்படுகிறாள் என்பதும், ஆண் என்பவன் ’பொறுப்பேற்பவனாக’ இருக்கிறான் என்பதும் புரியும். வயது வந்த பெண்ணை ஒருவன் கையில் பிடித்துக் கொடுப்பது என்பது குடும்பத்தின் மிகப்பெரிய கடமை என்று பொதுச் சமுதாயம் வரையறுத்து வைத்துள்ளது. இதற்குப் பலியாவதென்னவோ ஆண்கள்தாம். இன்னும் எவ்வளவு காலத்திற்கு ஆண்களைச் சுமைதாங்கியாக வைத்திருக்கப் போகிறது இந்த ஆணாதிக்க சமுதாயம் ? பாவம் ஆண்கள்.

’ஆணாதிக்க சமுதாயம்னு சொல்றீங்க, ஆண்கள் பாவம்னு சொல்றீங்க, என்னங்க குழப்பறீங்க?’  என்ற உங்க மைண்ட் வாய்ஸ் கேட்கிறது தோழர்களே. இரண்டும் உண்மைதான். இந்தச் சமுதாயம் இன்னும் ஆணாதிக்கத்தோடுதான் இருக்கிறது, பெண்ணைத் தன் கட்டுக்குள் வைத்திருக்க ஆண்களின் உரிமைகளையும் பறித்துக்கொண்டுதான் இருக்கிறது. என்னவொரு முரண்பாடு?

நமது ஆண்களின் உரிமைகளைக் காக்க ஒரே வழிதான் இருக்கிறது. அது, பெண்ணுக்கு, அவளுக்கான உரிமைகளை அளிப்பதுதான். பெண்ணுக்கு ஏன் உரிமை தரவேண்டும், அவள் எடுத்துக்கொள்ள வேண்டியதுதானே என்று பலர் வாதிடுகிறார்கள். பெரும்பான்மைப் பெண்களால் தன் உரிமைகளை எடுத்துக்கொள்ள முடியாது என்பதுதான் யதார்த்தம். அப்படி எடுத்துக்கொள்ள முயன்றால், சமயத்தில் உயிரைக்கூட இழக்க வேண்டியிருக்கும், ஜாதி ஆணவக் கொலைகளில் நடப்பது போல.

சரி, என்ன உரிமைகளைப் பெண்ணுக்குத் தரவேண்டும்? பெண் குழந்தைக்குக் கல்வியும் சத்தான உணவும் தர வேண்டும். அவள் விரும்பும் படிப்பைப் படிக்க வைக்க வேண்டும். குடும்பம் அதற்கு மட்டும் செலவழித்தால் போதும். அவளுக்கு நகை நட்டோ, பாத்திரப் பண்டங்களோ சேர்க்காதீர்கள் தோழர்களே. பெண்ணுக்கு அறிவியலையும் எந்தச் சவாலையும் எதிர்கொள்ளும் துணிவையும் சொல்லித்தந்து, ஆற்றல் மிக்கவளாக, ஆரோக்கியமானவளாக வளர்க்க வேண்டியதுதான் முக்கியம். படிப்பை முடித்து, அவள் விரும்பும் வேலைக்குப் போகவிடுங்கள். பொருளாதாரத் தற்சார்பு அவளுக்கு அவசியம். தனக்குப் பிடித்த வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுத்து, தனக்கான வாழ்வை அவள் அமைத்துக் கொள்ள அனுமதியுங்கள். இப்படி ஒரு பெண்குழந்தையை வளர்த்தெடுத்துவிட்டால், அப்பாவுக்கோ சகோதரனுக்கோ எந்தச் சுமையும் இருக்காது. இந்த ஆண்களும் தம் வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழலாம்.

கல்யாண விஷயம் ஒரு சின்ன உதாரணம்தான். பல விஷயங்களில், பெண்களை முன்நிறுத்தி, ஆண்களின் உரிமைகளைப் பறிக்கிறது இந்தச் சமுதாயம். ஓர் ஆணுக்கு வேலைக்குப் போவது நிர்பந்தம்,  பெண்ணுக்கோ அது சாய்ஸ்தான். வேலைக்குப் போக மாட்டேன் என்று பெண்ணால் சொல்ல முடியும், ஆணால் சொல்ல முடியாது. இது அடித்தட்டு மக்களுக்குப் பொருந்தாது, அங்கு ஆணும் பெண்ணும் இணைந்து உழைப்பார்கள், சம்பாதித்து குடும்பம் நடத்துவார்கள். நடுத்தர, மேல்தட்டு குடும்பங்களிலும் ஜாதிப் பெருமை பேசும் குடும்பங்களிலும், மதங்களின் மீது பற்றுள்ள குடும்பங்களிலும் பெண்ணை வேலைக்கு அனுப்புவதை அவமானமாகக் கருதுகிறார்கள். இன்றும் இந்த நிலைமைதான். இந்தக் குடும்பங்களில், மொத்த பொருளாதாரச் சுமையும் ஆணின் தலையில்தான் விழுகிறது. அவனால் முடியாவிட்டாலும், பெண்ணை வேலைக்கு அனுப்ப மாட்டான். ஆண் இதிலிருந்து விடுபட, பெண் பணிபுரிந்து தன் காலில் நிற்பதை வலியுறுத்தும் பெண்ணியத்தைப் பின்பற்றுவதுதான் ஒரே வழி.

ஜெண்டர் ஸ்டிரியோடைபிங் (Gender stereotyping) என்று ஆங்கிலத்தில் சொல்வார்கள். ஆண் என்றால் வலிமை, தைரியம், எதற்கும் கலங்காதவன் என்றும், பெண் என்றால் மென்மை, கருணை, அன்பு, நளினம் என்றெல்லாம் பொதுப்புத்தி வரையறுத்துள்ளது. இந்தப் பாலின வரையறை செயற்கையாகக் கட்டமைக்கப்பட்டது. பெண், ஆண் இருபாலருக்கும் எதிரானது.

தைரியமில்லாத ஆண்களும் உண்டு, வலிமையான பெண்களும் உண்டு. பொதுஇடத்தில் பெண்ணுக்கு ஏதேனும் பிரச்னை என்றால், ஆண்தான் தட்டிக் கேட்க வேண்டும் என்பது எழுதப்படாத விதி. கேட்க தைரியமில்லாத ஆணை ’நீயெல்லாம் ஒரு ஆம்பளையா?’ என்று ஏசுவார்கள். கண்ணீர் வடிக்கும் ஆணிடம், ’ஏண்டா பொம்பள மாதிரி அழுதுட்டு இருக்கே?’ என்பார்கள். துக்கத்தை வெளிக்காட்டுவது இருபாலருக்கும் பொதுவானது. ஆனால், ஆண் தனது துக்கத்தை, இயலாமையை வெளிக்காட்டக் கூடாது என்று பொதுப்புத்தி எதிர்பார்க்கிறது. இதனால் மன அழுத்தம் கூடி, ஆண்களுக்குத்தான் அதிகமாக ’மாரடைப்பு’ வருகிறது.

ஒரு விஷயத்தில் தமக்கிருக்கும் பயத்தை, பல ஆண்களால் பொதுவெளியில் மட்டுமல்ல, சராசரி குடும்பத்தில் அம்மாவிடம், மனைவியிடம், சகோதரியிடம்கூட வெளிப்படையாகச் சொல்ல முடியாது. ’ஒரு ஆம்பள இப்படிப் பயப்படலாமா?’ என்று அதனை மறுத்துவிடுவார்கள். பயப்படும் ஆண்களையும் பலவீனமான ஆண்களையும் மனிதர்களாகவே மதிப்பதில்லை. பயமும் பலவீனமும் பெண்களுக்கானவையாக இந்த ஆணாதிக்க சமுதாயம் சொல்கிறது. வேறு வழியில்லாமல், ஆண்கள் தைரியமாக இருப்பதாக நடித்துக்கொண்டு உள்ளுக்குள் ஒடுங்கிப் போகிறார்கள்.

நன்கு படித்திருந்தாலும், வேலைக்குப் போக விரும்பாமல், வீட்டில் இருந்துகொண்டு குழந்தைகளை, சமையலை, வீட்டு வேலையைப் பார்த்துக் கொள்ள விரும்பும் ஆண்களும் இருக்கிறார்கள். தனது மனைவி வெளியே வேலைக்குப் போய் சம்பாதிக்கட்டும் என்று முழுமனதுடன், எந்த ஈகோவும் இல்லாமல் ஏற்றுக்கொள்கிறார்கள். இப்படிப்பட்ட கணவர்களையும், அவர்களின் மனைவிகளையும் நான் அறிவேன். இவர்களுக்குள் எந்தப் பிரச்னையும் இல்லாமல், மகிழ்ச்சியாகவே இருக்கிறார்கள். ஆனால், பொதுவெளியில் இத்தகைய ஆண்களை ’ஹவுஸ் ஹஸ்பண்ட்’ என்று கிண்டலடித்து, இழிவாகப் பேசுவது இன்றும் நடக்கிறது. இந்த ஆண்களை முன்னோடிகளாக முன்நிறுத்த, ஆணாதிக்க சமுதாயம் மறுக்கிறது. இவர்களை ஏற்றுக்கொண்டால், பெண்ணை அடிமைப்படுத்த முடியாதே, அவளை வீட்டுக்குள் அடக்கி வைக்க முடியாதே என்று பயப்படுகிறது.

பாத்திரம் தேய்க்கும், துணி துவைக்கும், வீட்டைப் பெருக்கும் ஆணைக் கேலி செய்து வரும் ஜோக்குகளுக்கு இன்றும் குறைவில்லை. இந்த வேலைகளில் மனைவிக்குக் கரிசனத்தோடு உதவும் ஆண்களை, ’பொண்டுக சட்டி’, ’பொண்டாட்டி தாசன்’ என்று கிண்டலடிக்கிறார்கள்.

தன் குழந்தைகளைக்கூட இருந்து வளர்க்க விரும்பும் ஆண்கள் இந்தத் தலைமுறையில் அதிகம். அரசுப் பணியில் இருக்கும் பெண்களுக்குத் தன் குழந்தைகளைக் கவனிப்பதற்காக அளிக்கப்படும் ’சைல்ட் கேர் லீவ்’ இந்த ஆண் அலுவலர்களுக்கு வழங்கப்படுவதில்லை. தன் குழந்தையை வளர்க்க விரும்பும் ஆண்களுக்கு இந்தச் சலுகை ஏன் மறுக்கப்படுகிறது? அரசு ஆணாதிக்கத்துடன் செயல்படுகிறதா? இந்தக் கேள்விகளையும் நாம் எழுப்ப வேண்டியிருக்கிறது.

ஆணாதிக்க சமுதாயம் செயற்கையாகக் கட்டமைத்திருக்கும் பிம்பங்களைத் தகர்த்து, இயல்பாக வாழ்ந்துகொண்டிருக்கும் ஆண்களை, கேலி செய்வதை ஆண் பெண் இருபாலரும் செய்கிறார்கள். இதனை நிறுத்த வேண்டும் தோழர்களே. இவர்கள் பெண்ணுரிமைப் பயணத்தில் நம்மோடு பயணிக்கிறார்கள் என்பதைப் புரிந்துகொள்வோம் தோழிகளே. இந்த ஆண்களை ஆரோக்கியமான முன்னோடிகளாகக் கொண்டாட வேண்டும்.

தோழர்களே, ஆண்கள் தேவையற்ற பொருளாதாரச் சுமைகளிலிருந்து மீளவும், தனது இயல்பான உணர்வுகளை வெளிப்படுத்தவும், பிடித்தவாறு வாழவும், முதலில் பெண்களுக்கு அவர்களுக்கான இயற்கை உரிமைகளை அளித்து தற்சார்புள்ளவர்கள் ஆக்க வேண்டும். பெண்ணியச் சிந்தனையும்  செயல்பாடுகளும்தான் ஆண்களுக்கு, அவர்களின் நியாயமான உரிமைகளுக்கு துணை நிற்கின்றன என்பதைச் சுட்டிக் காட்ட விரும்புகிறேன். ஆணின் விடுதலைக்கும் அறைகூவல் விடுக்கிறது பெண்ணியம். உணர்ந்து பின்பற்றுவோம், வாருங்கள்!

(தொடரும்)

படைப்பாளர்:

கீதா இளங்கோவன்

‘மாதவிடாய்’, ‘ஜாதிகள் இருக்கேடி பாப்பா’ போன்ற பெண்களின் களத்தில் ஆழ அகலத்தை வெளிக்கொணரும் ஆவணப் படங்களை இயக்கியிருக்கிறார். சமூக செயற்பாட்டாளர்; சிறந்த பெண்ணிய சிந்தனையாளர். அரசுப் பணியிலிருந்த தோழர் கீதா, சமூக வலைதளங்களிலும் தன் காத்திரமான ஆக்கப்பூர்வமான எழுத்தால் சீர்திருத்த சிந்தனைகளை தொடர்ந்து விதைத்து வருகிறார்.

ஹெர் ஸ்டோரீஸ் இணையதளத்தில் ‘கீதா பக்கங்கள்’ பகுதியில் இவர் எழுதிய காத்திரமான கட்டுரைகள், ‘துப்பட்டா போடுங்க தோழி’ என்ற பெயரில் ஹெர் ஸ்டோரீஸ் வெளியீட்டில் புத்தகமாக வந்து, மிக முக்கியமான பெண்ணிய நூல் என்கிற அங்கீகாரத்தைப் பெற்றிருக்கிறது!