வாங்க, வாழ்வைக் கொண்டாடலாம் – 1

“உங்களுக்கு என்ன வேண்டும்?”

என்னிடம் மனநல ஆலோசனை கேட்டு வருபவர்களிடம் பொதுவாக நான் கேட்கும் முதல் கேள்வி இது. பெரும்பாலான பதில்கள் இவ்வாறாக இருக்கும். 

“என் கணவர் நான் சொல்வதை கேட்பதே இல்லை”

“குழந்தைகள் என்னை மதிப்பதே இல்லை”

“மனைவி என்னைப் புரிந்து கொள்வதே இல்லை”

“வீட்டில் நிம்மதியே இல்லை, மனைவி கத்திக்கொண்டே இருக்கிறாள்” 

“என்னை யாரும் சரிவர கவனிப்பதில்லை”  

“என் குடும்பத்தார் என்னை ஒரு பொருட்டாகக் கருதுவதில்லை”  

“நான் 10 அல்லது 20 வருடங்களாக எனது குழந்தைகளுக்காகத்தான் இந்த நரகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறேன்” 

“சுதந்திரமாக வெளியில் செல்வதற்கு அனுமதிப்பதே இல்லை” 

“வெளியே செல்லவும், சுயமாக காரியங்களை செய்வதற்கான அனுமதியை கணவரும் குழந்தைகளும் தருவதே இல்லை”

‘கேள்விக்கு பதில் இவை எதுவும் இல்லையே’, எனத் தோன்றுகிறதா? ஆச்சரியமாக இருக்கிறதல்லவா? ஏனென்றால் நம்மில் பெரும்பாலானவர்களுக்கு நமக்கு என்ன வேண்டும் என்பதே தெரிவதில்லை.  

எடுத்துக்காட்டாக, தற்சமயம் பெரும்பாலான பெற்றோர்களின் புலம்பல் இதுதான் – “என் பையன் அல்லது மகள் சீக்கிரம் எழுவதில்லை.” உங்களுக்கு உங்கள் குழந்தை காலையில் சீக்கிரம் படுக்கையை விட்டு எழும்பாமல் இருப்பது பிரச்சனையா? இல்லை, படிப்பில் நன்றாக கவனம் செலுத்தாமல் இருப்பது பிரச்சனையா? இதற்கான பதில் பெரும்பாலும் படிப்பில் நன்றாக இருக்க வேண்டும் என்பதே. அப்படி எனில் எதற்காக, காலையில் சீக்கிரம் எழுவதில்லை என்று புலம்ப வேண்டும்? 

நீங்கள் நின்று கொண்டிருக்கும் இடம் அல்லது நிலை, நீங்கள் சுயமாக எடுத்த தேர்வு (Conscious choice) என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். அதாவது, நீங்கள் தாங்கிக்கொண்டு, 10 அல்லது 20 வருடங்களாக உங்களை வருத்திக் கொண்டு நின்றுகொண்டிருக்கும் இந்த நிலை, உலகில் நீங்கள் மட்டுமே அனுபவித்த நிலையல்ல. பல மனிதர்கள் அனுபவித்த ஒன்றாகத்தான் இருக்கும். இல்லை அனுபவித்துக் கொண்டிருக்கிற ஒன்றாகவே இருக்கும்.  இந்த நிலையில் இருந்து மீண்டு, வாழ்வை தங்களுக்கானதாய் கொண்டாட்டமாய் மாற்றிக் கொண்டவர்களைப் பாருங்கள். 

அவர்களுடைய தேர்வு (choice) என்ன என்பதைக் கவனியுங்கள். எந்த மாதிரியான எதிர்வினையை செய்து, அல்லது எந்த விதமான முயற்சிகளை செய்து, தனக்கான சுயத்தை தேடிக் கொண்டார்கள் என்று உற்றுநோக்குங்கள். நீங்கள் எடுத்துக்கொண்ட இந்தத் தேர்வு சரி என்றோ தவறு என்றோ சொல்லவரவில்லை. ஆனால் நீங்கள் தேர்வு செய்ய, நீங்கள் மகிழ்ச்சியோடு இருக்க, பல வழிகள் இருக்கின்றன என்பதை உணர்ந்து கொள்ளுங்கள். குறை சொல்வதை விட்டு விடுங்கள்.

மற்றவர்களைப் போல் உங்களால் தேர்வு செய்யமுடியவில்லை என்றால், அது உங்களின் இயலாமை என்று புரிந்தால் அந்த இயலாமையை நீங்கள் நியாயப்படுத்திக் கொண்டிருக்காதீர்கள். ஏனென்றால், இயலாமைகள் அனைத்தும் முயலாமைகள் மட்டுமே, அதை மாற்றலாம்.   

நீங்கள் உங்களை “பாதிக்கப்பட்டவர் (victim)” என நம்பும் போது, இயலாமைக்கான புலம்பல்கள் எளிதாகத் தோன்றும். அதிலிருந்து மாறி,  சாதனையாளர் அல்லது வெற்றியாளர் ஆகவேண்டுமென்றால், என்னால் முடியும், என்னால் இந்த பிரச்சனையை எளிதாக கையாள முடியும் என முயலுங்கள். இப்போது உங்களுக்கு முன்னோக்கி நகர்வது, அந்த பிரச்சனையை கடப்பது, அல்லது கையாள்வது எளிதாக இருக்கும். 

பெண்களுக்கு , உங்களுக்கு என்ன வேண்டும் என்ற கேள்விக்கான பதில், சுதந்திரம் என்றால், உங்கள் தேர்வு சுதந்திரமாக இருந்தால், அதற்கான முயற்சிகளை எடுங்கள். ஏனென்றால் நீங்கள் இந்த உலகத்தில் பார்க்கின்ற, சுதந்திரமாக சுற்றித் திரிகின்ற பெண்கள் எல்லோருக்கும் அது எளிதாக அமைந்த ஒன்றல்ல. சுதந்திரம் என்பது யாருக்கும் தங்கத்தாம்பாளத்தில் வைத்து கொடுக்கப்படவில்லை!

முயற்சிசெய்து, பல இன்னல்களையும் தாண்டி பெற்றுக்கொண்ட ஒன்று விடுதலை. உங்களுக்கு வேண்டியதை நோக்கி அதை அடைந்துகொள்ள முன்னோக்கி நகரும்போது, அதற்கான தடங்கல்கள் பெரிதாக தோன்றுவதே இல்லை. எடுத்துக்காட்டாக, பெண்கள் தனித்து பயணம் செல்லும்போது, அதற்கான ஏற்பாடுகளைச் செய்வதும், குடும்ப உறுப்பினர்களை சமாளித்துக்கொண்டு வெளியே வருவதும் “சவாலே சமாளி”தான்! 

எனவே, உங்கள் தீர்மானமான பதில் “சுதந்திரம்” என்றால், அதற்கான விடைகளையும், வழிகளையும், நீங்கள் உடனே கிடைக்கப்பெறுவீர்கள். ஆனால், நம்மில் பெரும்பாலானவர்களுக்கு சுதந்திரமும் வேண்டும், குடும்ப உறுப்பினர்களிடமிருந்து அதாவது எல்லா உறுப்பினர்களிடமிருந்து அங்கீகாரமும் வேண்டும்!

பிறரிடம் அங்கீகாரம் எதிர்பார்ப்பதை விட்டுவிட்டு  அந்த அங்கீகாரத்தை, முதலில் நீங்கள் உங்களுக்கு கொடுங்கள். ஏனென்றால், நீங்களே உங்களுக்கு கொடுக்கவில்லை என்றால் மற்றவர் உங்களுக்கு அதை எப்படிக் கொடுப்பார்கள்? 

நீங்கள் தேடினால் மட்டுமே பாதைகள் புலப்படும். உங்களுக்கு வேண்டியதை உருவாக்கிக்கொள்வதற்கு உங்கள் மனதுக்கும், அறிவுக்கும் “பெரும் ஆற்றல்” உள்ளது. அதை அனுமதித்தால் மட்டும் போதும். சும்மா புலம்புவதை நிறுத்துங்கள்!

Photo by Rachit Tank on Unsplash

ஆண்கள் சமூக வலைத்தளங்களில் பகரும் மனைவிகள் குறித்த காமெடிகளுக்கு பஞ்சமே இல்லை. வாட்ஸ் அப்பைத் திறந்தால் மனைவிகளைக் குறித்து பகடி செய்யும் குறுஞ்செய்திகளுக்குக் குறைவில்லை. சரி, உங்களுக்கு என்னதான்  வேண்டும்? மனைவியிடமிருந்து உங்களுக்கு வேண்டியது அன்பும் அனுசரணையும் என்றால், ஏன் இந்த மாதிரியான செய்திகளை அனுப்பவேண்டும், பின் புலம்பவேண்டும்? எப்படியான குறுஞ்செய்திகளை அனுப்பினால் அன்பும் அனுசரணையும் கிடைக்குமோ, அதைத்தானே அனுப்ப வேண்டும்?

எப்படி உரையாடலை ஆரம்பித்தால் அது உறவை பலப்படுத்தி, உங்கள் மீதான நம்பிக்கையையும், மரியாதையையும் அதிகரிக்குமோ, அப்படிப் பேசுங்கள்

“பொண்ணுங்க எல்லாம் இப்படித்தான்”, “எல்லா மனைவிமார்களும் இப்படித்தான்”, என குறை சொல்லி புலம்பிக்கொண்டு இருப்பது, உங்கள் வாழ்வில் நீங்கள் விரும்புவதை கண்டிப்பாகக் கொண்டுவரப் போவதில்லை. 

இளைஞர்கள், “திருமணம் என்பது ஜெயில் வாழ்க்கை. கல்யாணம் முடிந்ததும் எனது சுதந்திரம் பறிபோய்விடும். நான் நினைத்தபடி ஊர் சுற்றமுடியாது. ஆயிரம் சிக்கல்கள்”, எனச் சொல்லும் உங்கள் மனதிடம் கேளுங்கள், ‘உண்மையில் உனக்கு என்ன வேண்டும்?’

அது, ‘எல்லாமும் நிறைவான ஒரு வாழ்க்கை வாழவேண்டும்’ எனச் சொன்னால், குறைந்தபட்சம், “நான் முரட்டு சிங்கிள்”, எனப் பெருமை பேசுவதையாவது நிறுத்துங்கள். திருமண வாழ்வில் மகிழ்ச்சியாக வாழும் தம்பதிகளை கவனியுங்கள். இதைப் போன்று எனக்கும் அமையலாம் என நினைத்துக் கொள்ளுங்கள். அது வாழ்வில் உறவின் மீதான, மனிதர்களின் மீதான நம்பிக்கையை அதிகரிக்கச் செய்யும். 

பெரியவர்கள், இளைய தலைமுறை குறித்து கோபத்துடனும், எரிச்சலுடனும், “இந்த காலத்து பசங்களே இப்படித்தான்”, என்று சபித்து துதி பாடுவதற்கு முன்னால், உங்கள் மனதைக் கேளுங்கள் – ‘உனக்கு என்ன வேண்டும்?’ என்று. அதற்கு, ‘ஆரோக்கியமான இளைய தலைமுறை, நம்பிக்கையான அடுத்த தலைமுறை’, என்று பதில் வந்தால், தேவையான முன்னெடுப்பைச் செய்ய ஆரம்பியுங்கள். ஏனென்றால் நீங்கள் குறை கூறியோ, புலம்பியோ அல்லது  இளைஞர்களைக் குற்றம் சுமத்தியோ, எந்த நல்ல மாற்றத்தையும் அவர்களிடம் கொண்டுவர முடியாது. 

அடுத்த முறை புலம்பும் மனதிடம், நீங்கள் கேட்ட வேண்டியதெல்லாம் ஒன்று தான். ‘உனக்கு என்ன வேண்டும்? உண்மையில் உனக்கு என்ன வேண்டும்?

 படைப்பு:

ஜான்சி ஷஹி

மனநல ஆலோசகர். மன நலத்திற்கான தெரப்பிகளையும் ஆற்றுப்படுத்துதலையும் வழங்கி வருகிறார். வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழவும், பிடித்த எதிர்காலத்தை அமைத்துக்கொள்ளவும், பொது மக்களுக்கு பயிற்சிப் பட்டறைகளை நடத்திவருகிறார். இவர் பெங்களூர் கிரைஸ்ட் பல்கலைக்கழகத்தில் மாணவர் மன நல ஆலோசகராக (student counsellor) பணியாற்றியது குறிப்பிடத்தக்கது.