நாளை விடியாமலே போகட்டுமே…

எழுந்து வரும் சூரியனை தடுத்து நிறுத்த முடியுமா? சேவலுக்கு இன்று கூவும் திறனற்றுப் போகாதா? நடுவானில் அந்த நிலவு அகலாமல் அப்படியே இருக்கட்டுமே… இரவின் கருப்பு என் விழித்திரையை விட்டு விலகாமல் இருக்காதா? நட்சத்திரங்கள் வானிலேயே இருந்து கொள்ளட்டுமே… யார் வீட்டு வாசலிலும் புள்ளிகளாக இடம்பெற்று விடவேண்டாம் … இன்று மட்டும் பறவைகளின் சங்கீத ஒலி குரல் தானம் செய்து கொள்ளட்டும்.

‘வேண்டாம் இன்று விடியவே வேண்டாம்’, என்று மன புழுக்கத்தில் வியர்த்துக் கொண்டிருந்தாள் சங்கீதா.

வழக்கம்போல் அம்மாவின் வடை பாயாசத்துடன் சாப்பாடு, அப்பாவின் கிப்ட், தோழிகள் தோழர்களின் வாழ்த்துச்செய்தி, பிரபலமான துணிக்கடைகளின் சேலை பரிசு என எல்லாமும் கிடைக்கும். சில ஆண்டுகள் அம்மா நகைகளைக் கூட பரிசாகத் தந்ததுண்டு. ஆனால் இந்த வருடம் இவை அனைத்தையும் விலக்கிக் கொள்ளவேண்டும் என துடித்தாள் சங்கீதா. இந்த பிறந்த நாளைக்கு அவள் தனக்கென்று ஒரு கைக்குட்டையைக்கூட புதியதாக வாங்கவில்லை.

விடியவிருக்கும் நாளைய தினத்தையே வெறுத்து ஒதுக்கினாள் அவள். அவளுடைய உயிர்த்தோழி கஸ்தூரி, நாளை எங்காவது வெளியூர் சென்று விடக்கூடாதா? நாளை அவளை சந்திக்கவே கூடாது என்றெல்லாம் மனதிற்குள் நினைத்துக் கொண்டாள்.

இப்போது அவள் மனதில் என்றோ எங்கோ வாசித்த கவிதைவரி ஒன்று தான் நினைவுக்கு வந்தது. “ராமர் கூட வேண்டாம். எங்களைத் தூக்கிச்செல்ல ராவணன் வந்தால் போதும்” என்ற கவிதை வரி.

அவளுடைய சாப்பாட்டு முறை, உடற்பயிற்சி, ஆடை அலங்காரம் போன்றவை சங்கீதாவின் வயதை மறைத்தாலும் இயற்கை அவளை அவளின் வயதை கொஞ்சம் வெளிக்காட்டித்தான் விடுகிறது. ஆம் சங்கீதாவுக்கு வயது முப்பத்தி ஒன்பது. நாளை அவளின் வயது 40. அவள் மணமாகாத கன்னிப் பெண். ஆனால் அவளை சமூகம் ‘முதிர்கன்னி என்ற அடைமொழியோடுதான் அடையாளப்படுத்துகிறது.

ஆதவனை மறைப்பதில் தோற்றுப்போனாள் சங்கீதா. வழக்கம்போல் அவளின் பிறந்த நாள் வந்து போனது. அவள் பெயருக்கு முன்பு செல்வி என்ற வார்த்தையை போட்டுக்கொண்டு, வயது என்ற கட்டத்துக்குள் நாற்பது என்று விண்ணப்பப்படிவங்களை பூர்த்தி செய்வதை நினைத்து இன்னும் கொஞ்சம் அசிங்கப்பட்டுக்கொண்டாள் சங்கீதா.

பிரபல கல்லூரி ஒன்றில் பேராசிரியராக இருந்து ஓய்வு பெற்றவர் சங்கீதாவின் அப்பா ராமமூர்த்தி. அம்மா அரசாங்கப் பள்ளி ஆசிரியை, இன்னும் பணிக்குச் செல்கிறார். சங்கீதாவும் ஒரு பிரபல கல்லூரியில் ஆங்கிலப் பேராசிரியர்தான். மகளுக்கு வசதியாக அவள் வேலை பார்க்கும் கல்லூரிக்கு அருகிலேயே வீடு வாங்கி வந்துவிட்டனர் சங்கீதாவின் பெற்றோர். வீடும் கல்லூரியும் நடைதூரம்தான்.

காலையில் வந்து போன ராமமூர்த்தியின் நண்பன் செல்வத்தின் வருகைக்குப்பின் ராமமூர்த்தியின் மனதில் ஒரு புதுத் தெம்பும் உற்சாகமும் பரவியிருந்தது. மனைவி பள்ளியில் இருந்தும், மகள் கல்லூரியில் இருந்தும் வருவதையே எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்.

ஐந்து மணிக்குள் அவர் ஹோட்டலுக்குப் போய் குடிக்கும் இரண்டு காபிகளைக்கூட அன்று அவர் குடிக்கவில்லை.

மகளும் மனைவியும் வந்தாச்சு… செல்வம் வந்து போன விபரங்களைப் பற்றி மனைவி, மகளிடம் சொல்லியாச்சு …

“சரிப்பா உங்களுக்கு இஷ்டம்னா எனக்கும் சம்மதம்”, என்று மிகவும் வெளிப்படையாகவே சொல்லி உள்ளே சென்றாள் சங்கீதா.

“நல்ல வரன் மீனாட்சி… பையன் பிசினஸ் பண்றான். சங்கீதாவை விட நாலு வயசு மூத்த பையன். ஆனா பாரு முகத்துல கொஞ்சம்கூட வயசு தெரியல. இதையே முடிச்சுடுவோம் மீனாட்சி…”

முதிர் கன்னி திருமதி ஆனாள்.

சங்கீதாவுக்குத் திருமணமாகி ஐந்து ஆண்டுகள் உருண்டோடிவிட்டன. இப்போது சங்கீதாவுக்கு வயது 45. தலையில் ஆங்காங்கே வெள்ளிக் கம்பிகள்… முகத்தில் சிறு சிறு சுருக்கக் கோடுகள் வந்துதான் விட்டன…

இப்போது திருமதி சங்கீதா மலடி என்ற அடைமொழியோடு…

சங்கீதாவுக்கு முதிர்கன்னி என்ற பட்டத்தைவிட மலடி என்ற பட்டம் மிகவும் கனத்தது. அவளால் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை. அவளின் புன்னகை புதைந்து போய் பல வருடங்கள் ஆகிவிட்டன. தன் வயிற்றில் புழு பூச்சி ஏதும் உண்டாகாதா என காக்கா குருவிக்கெல்லாம் உணவு வைக்கிறாள். தெருக்களில் எந்த குழந்தையைப் பார்த்தாலும் சிரிக்கிறாள். அவர்களோடு குழந்தையாகவே மாறிப்போகிறாள்.

இந்த ஐந்து வருடங்களில் அவள் போகாத மகப்பேறு மருத்துவமனைகள் இல்லை. ஆனால் இந்தத் தம்பதியில் யாருக்கும் எந்த குறையும் இல்லை என்பதே மெடிக்கல் ரிப்போர்ட். ‘கடவுள்தான் கண்ணைத் திறக்கவேண்டும்’ என்று கண்மூடித்தனமாக சங்கீதா மேற்கொள்ளும் பிரார்த்தனைகளுக்கும் விரதங்களுக்கும் அளவே இல்லை. ஆனால் எந்த தெய்வமும் கண் திறக்கவில்லை.

அன்று சரியான மழை.
‘இன்று கொஞ்சம் சீக்கிரம் வீட்டுக்கு வந்துவிடு’ என்று கணவர் காலையில் சொன்னது நினைவுக்கு வந்தது. கல்லூரியிலிருந்து கொஞ்சம் வேகமாகவே ஸ்கூட்டியில் புறப்பட்டாள்.

“சங்கீதா கொஞ்சம் வெளியே போகணும்”, என்றான் சங்கீதாவின் கணவன். “எங்க?”

“என்னோட பிரெண்ட் கிஷோர் வக்கீலா இருக்கான்னு உனக்கு தெரியும்ல?அவன் ஆபீஸ் வரை போகணும்…”

முதல் மடக்கு டீ தான் சங்கீதாவின் தொண்டைக்குள் இறங்கி இருக்கும். இரண்டாவது மடக்கு தொண்டைக்குள் இறங்குவதற்குள்ளேயே, “எதற்கு?” என்று கேட்டாள் சங்கீதா. சில நிமிடங்கள் பேச்சு வரவில்லை சங்கீதாவின் கணவனிடமிருந்து. மாறி மாறி ஒவ்வொரு அறைக்கும் சென்று வந்தான்; ஹாலில் வைக்கப்பட்டிருந்த பூந்தொட்டிகளுக்கு தண்ணீர் ஊற்றினான்; பிரிட்ஜை திறந்து கொஞ்சம் தண்ணீர் எடுத்து குடித்துக்கொண்டான்.

Photo by Vidar Nordli-Mathisen on Unsplash

பதில் ஏதும் சொல்லாமல் காலம் கடத்தினான் அவன்.

“எதுக்கு உங்க பிரண்டு ஆபீசுக்கு?” என்றாள் மறுபடியும் சங்கீதா.

“இல்ல எனக்கு குழந்தை வேணும்…”என்றான் ஜன்னலின் அருகே நின்று கொண்டு வெளியே பார்த்தபடி.

“அதுக்கு ஏங்க வக்கீல் ஆபிசுக்கு?”

“சொல்லுங்க” என்று எழுந்து தன் கணவனின் தோளில் பரிவோடு கை வைத்தாள் சங்கீதா. படக்கென்று அவளின் கைகளை உதறி தள்ளினான் அவன். சங்கீதாவின் வற்புறுத்தல் அவனைப் பேச வைத்தது.

“இல்ல சங்கீதா நான் உன்னை டைவர்ஸ் பண்ணலாம்னு முடிவு பண்ணிட்டேன். எனக்கு ஒரு வாரிசு வேணும். இப்ப எனக்கு 49 வயசு உனக்கு 45 வயசு… இனியும் உனக்கு குழந்தை பிறக்கும்ன்ற நம்பிக்கை எனக்கு இல்லை .”

“போதும் நிறுத்துங்க. 45 வயசுக்கு மேல எனக்கு குழந்தை பிறக்காது. ஆனா நாற்பத்தி ஒன்பது வயசுக்கு மேல் உங்களுக்கு குழந்தை பிறக்கும் அப்படித்தானே…? நீங்க ரெண்டாவது கல்யாணம் பண்ணனும் அவ்வளவுதானே…?”

மடமடவென பக்கத்தில் இருந்த பாட்டிலில் இருந்த தண்ணீரைக் குடித்துக் கொண்டே தன் புடவை முந்தானையால் கழுத்துப் பகுதியில் சிந்திய தண்ணீரைத் துடைத்துக் கொண்டாள்.

“நீங்க என்னங்க என்னை டைவர்ஸ் பண்றது? நானே உங்களை டைவர்ஸ் பண்றேன்… நமக்கு குழந்தை இல்லைன்ற குறை தெரியக் கூடாதுங்கறதுக்காக உங்ககூட நான் மனைவியா வாழ்ந்ததைவிட குழந்தையா அதிகம் வாழ்ந்திருக்கேன். சரி பரவாயில்லை. எங்க கையெழுத்துப் போடணும் சொல்லுங்க, வந்து போடுறேன்…” என்றுவிட்டு வெளியேறினாள்.

முதிர்கன்னி, மலடி, என்ற பட்டங்களைத் தாண்டி, இனி ‘வாழாவெட்டி’ என்ற கூடுதல் பட்டத்தோடும் அவள் வாழவேண்டும் இங்கே…

படைப்பு:

கமல லியோனா

தூத்துக்குடி மாவட்டம் வீரபாண்டியன்பட்டணம் என்னும் கடற்கரை கிராமத்தில் பிறந்தவர். இருபது வயது முதலே கவிதைகள் சிறுகதைகள் எழுதி வருகிறார். பல மாத இதழ்களிலும் தினசரி பத்திரிகைகளிலும் இவரது படைப்புகள் வெளிவந்துள்ளன. இதுவரை இரண்டு கவிதை நூல்களை வெளியிட்டுள்ளார். அதற்காக விருதுகளும் பெற்றுள்ளார்.