பெண் படைப்பையும் பெண் மொழியையும் குறித்த பல்வேறு விஷயங்களை இக்காலகட்டத்தில் பேசிக்கொண்டிருக்கிறோம். உண்மையில் பெண்மொழி என்று ஒன்றுண்டா? ஓர் ஆண் கொஞ்சம் மென்மையாகவோ அல்லது வேறு உடல் மொழியையோ கையாண்டால் உடனே ‘என்ன பொம்பள மாதிரி நடந்துக்குற’ என்று சிலர் பேசுவதைக் கேட்டிருப்போம். நான் மிகுந்த நாகரிகத்தோடு இந்த வார்த்தைகளைக் கூறுகிறேன்.

இச்சமூகம் பெண்ணின் உடல்மொழியைக் குறித்து ஓர் அநாகரிகமான பிம்பத்தை வைத்திருக்கிறது. ‘அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு பெண்களுக்கானது. பெண்கள் பெரும்பாலும் வெட்கப்படுவார்கள், அடிக்கடி அழுவார்கள், காதலை முதலில் சொல்லமாட்டார்கள்’ போன்ற தவறான கட்டமைப்புக்களைச் சமூகம் இப்போதும் பெண்களின் மீது திணித்துக்கொண்டுதான் இருக்கிறது. ‘நல்ல பொண்ணுனா நீளமான முடி வெச்சிருக்கணும், பூ வெச்சிருக்கணும், பொட்டு வச்சிருக்கணும், புடவை கட்டிருக்கணும்’ போன்று அவசியமற்ற கட்டமைப்புகளை உடைக்க பெண்மொழி அவசியமானது.

மொழி என்பது ஒன்றுதான். அதில் பெண்மொழி என்று ஒன்று தனியாக இல்லை என்று வாதிடுபவர்கள் இருக்கலாம். பெண்களுக்கான அரசியலை, பெண்களுக்கான வலியை, அவர்கள் உணர்வுகளோடு தொடர்புடைய பிரச்னைகளை, குறிப்பாக உடலரசியலைப் பெண்களே பேசும்போது அல்லது எழுதும்போது அதில் தெறிக்கின்ற உண்மையையும் ஆழத்தையும் பலராலும் அறிந்துகொள்ள இயலும்.

சீனாவின் தென்கிழக்கு பகுதியில் ஜியாங்காங் என்கிற ஒரு விவசாய நிலப்பரப்பு இருக்கிறது. அங்கு பெண்கள் மட்டுமே பேசும் ஒரு மொழி இருந்திருக்கிறது. அதற்கு நுஷு என்று பெயர். பெண்கள் தங்களுக்குள்ளாகவே ரகசியமாகப் பேசிக்கொள்வதற்கான மொழியாக அது இருந்திருக்கிறது. தலைமுறை தலைமுறைகளாக இம்மொழி பெண்களுக்குக் கடத்தப்பட்டிருந்தாலும் இப்போது முற்றிலும் வழக்கொழிந்த மொழியாகவே கருதப்படுகிறது. ஆனால், நான் குறிப்பிடும் பெண் மொழியில் ஏதொரு ரகசியமும் இல்லை. அது எல்லோருக்கும் புரியக்கூடிய பொதுமொழி. ஆனால், அது ஒரு நுட்பமான மொழி. அடக்குமுறைகளுக்கு ஆளாக்கப்பட்ட ஒரு சமூகத்தின் மொழி. சுரண்டல்களுக்கு உட்படுத்தப்பட்ட சமூகத்தில் எதிர்வினையாற்றுவதற்காக கிளர்ந்தெழப்பட்ட மொழி. ஒரு துப்பாக்கியைவிட பேனா மிகப்பெரிய ஆயுதம் என்றால் அதிலும் நுட்பமான பெண்ணெழுத்து மிகவும் பலம் பொருந்திய ஆயுதமே.

சென்னை ராணி மேரி கல்லூரி தமிழ்த்துறையில் பெண் எழுத்து என்னும் தலைப்பில் ஒரு தனித்தாளை அறிமுகம் செய்திருக்கிறார்கள். அது பெண் எழுத்தாளர்களின் படைப்புகளை மட்டுமே கொண்டது. தமிழ்த்துறையின் பட்டமேற்படிப்பு படிப்பவர்களுக்காகத் தயாரிக்கப்பட்டுள்ள பெண் எழுத்து என்னும் தனித்தாளில்

பெண் எழுத்தாளர்களான அம்பையின் ‘காட்டில் ஒரு மான்’ நாவலும் மாலதி மைத்ரியின் கவிதைகளும் சுயமரியாதை இயக்கத்தின் பெண்களின் வரலாறு குறித்த செய்திகளும் இடம்பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

மஹாஸ்வேதா தேவி

ஒடுக்கப்பட்டோர் வாழ்க்கையைப் பேசும் பெண்ணெழுத்து அதிலும் குறிப்பாக வங்க எழுத்தாளர் மகாஸ்வேதா தேவி, எழுத்தாளர் சுகிர்தராணி, எழுத்தாளர் பாமா போன்றவர்களின் படைப்புகள் டெல்லி பல்கலைக்கழகத்தில் பி.ஏ. ஆங்கிலம் படிப்புக்கான பாடத் திட்டத்திலிருந்து நீக்கி சர்ச்சைக்குள்ளானது நாம் அனைவரும் அறிவோம். கைமாறு என்ற தலைப்பில் வரும் தோழர் சுகிர்தராணியின் கவிதை மலம் அள்ளும் தொழிலாளிக் குறித்த கவிதை. நம் நாட்டில் இன்னமும் மனிதர்களைக் கொண்டு மனித மலங்கள் அள்ளப்படுகின்றன. அதுவும் ஒரு பிரிவைச் சேர்ந்த மக்கள் அவ்வேலைகளுக்காகப் பயன்படுத்தப்படுகிறார்கள் அல்லது வேலையைச் செய்ய நிர்பந்திக்கப்படுகிறார்கள் என்பது எவ்வளவு அவலமான விஷயம். அதைப் பற்றிய ஒரு கவிதை பல்கலைக்கழகத்தால் நீக்கப்பட்டிருந்தது. ‘சமூகத்தில் நடப்பதைத்தானே எழுதுகிறோம்? கட்டுக்கதைகளை எழுதவில்லையே’ என்கிறார் தோழர் சுகிர்தராணி.

எழுத்தாளர் பாமாவின் ‘சங்கதி’ நாவல் ஒடுக்கப்பட்ட பெண்களின் போராட்டத்தைப் பற்றிப் பேசுகிறது. எழுத்தாளர் மகாஸ்வேதா தேவி திரெளபதி என்னும் படைப்பு பெண் பாலியல் வல்லுறவுக்கு ஆட்படுத்தப்படும் காட்சிகளை விவரிக்கிறது. முழுக்க முழுக்கப் பெண்களின் வலிகளை, ரணங்களை, சவால்களைப் பேசும் படைப்புகள் எந்த அடிப்படையில் பல்கலைக்கழக பாடப் புத்தகத்திலிருந்து நீக்கப்பட்டன என்பது ஒரு முக்கியமான கேள்வி.

பெரியார்

பெண்ணின் உடல் மொழியைப் பெரும்பாலும் தவறாகவே சித்தரிக்கின்றன சில திரைப்படங்கள். ஓர் ஆண் வீரம் இல்லாதவனாக இருந்தால் உடனே ‘பொம்பளையப் போல புடவை கட்டிக்கோ, வளையல் போட்டுக்கோ, பொம்பளையோட சேலை பின்னாடி ஒளிஞ்சிக்கோ’ போன்ற வசனங்கள் பல திரைப்படங்களிலும் உண்டு. இரண்டாம் பாலினமாகவே நடத்தப்படும் பெண்களின் உடல்மொழி வீரமற்றதாகவோ தாழ்வானதாகவோ பெரும்பாலும் பார்க்கப்படுகிறது.

பெண்மொழி இச்சமூகத்தால் பல நேரம் புறக்கணிக்கப்பட்டதாகவே இருந்திருக்கிறது. ஆணுக்கும் பெண்ணுக்குமான இயற்கை உணர்வின் தேவைகளை ஒரு பெண் தன் காதலன் அல்லது கணவனிடம்கூட வெளிப்படையாகப் பேசுதல் கூடாது என்கிறது தொல்காப்பியம். இது போன்ற விஷயங்களினால்தாம் ஐயா பெரியார் தொல்காப்பியம், சிலப்பதிகாரம் கம்பராமாயணம், திருக்குறளில் பெண்வழிச்சேரல் போன்ற சில அதிகாரங்களை எதிர்த்தார் என்பதை நம்மால் புரிந்துகொள்ள இயலும்.

கற்பு என்ற வார்த்தைக்கும், பூ பொட்டிற்கும், தாலி சென்டிமெண்ட்டிற்கும் தமிழ் சினிமா கொடுக்கும் முக்கியத்துவம் பல நேரம் அபத்தமாகவே இருக்கிறது. அவற்றின் உச்சமாக நான் கருதுவது ஒரு பெண்ணைப் பாலியல் வன்புணர்வு செய்த ஒருவனை மணந்துகொள்வதே அப்பெண்ணுக்கான விமோசனம் என்று பழைய திரைப்படங்கள் எடுக்கப்பட்டன. அதில் பாதிக்கப்பட்ட பெண்ணின் உடல்மொழி மிகவும் பரிதாபத்துக்குரியதாகவும் தன்னை வன்புணர்வு செய்த ஆடவனைத் தவிர, தனக்கு வேறு ஒரு கதியில்லை என்று ஒரு பெண் நினைப்பது போன்று காட்டிய சில ஆண் இயக்குநர்களின் மனோபாவம்தான் இன்றும் சில ஆண்களுக்கு இருக்கிறது.

ஆண்களைக் குறை சொல்வது பெண்ணியம் அல்ல. பெண்களின் முன்னேற்றத்திற்காகப் பாடுபட்ட பல்வேறு ஆண்களால் நிறைந்த சமூகம் இது. தோழர் சுகிர்தராணி பெண்ணியத்தைப் பற்றிக் குறிப்பிடும்போது இப்படிச் சொல்கிறார், ‘நான் எதைச் செய்ய வேண்டுமென்று விரும்புகிறேனோ அதைச் செய்யும் உரிமை எனக்கு வேண்டும். அதைப் போலவே நான் எதைச் செய்ய வேண்டாமென்று நினைக்கிறேனோ அதைச் செய்யாமல் இருப்பதற்கான உரிமையும் எனக்கு வேண்டும்.’ அப்படியான உரிமைகள் எல்லா நேரத்திலும் கிடைக்கப் பெற்றவர்களாகத்தான் பெண்கள் இருக்கிறோமா என்ற கேள்வி முக்கியமானது. மேலும் ‘ஆண்கள் செய்வதையெல்லாம் செய்வது பெண்ணியம் அல்ல. மது குடிப்பது புகைப்பிடிப்பது போன்ற செயல்களை ஆண்கள் செய்கிறார்கள் என்பதற்காகப் பெண்களும் செய்வது பெண்ணியம் அல்ல’ என்று குறிப்படுகிறார்.

பெண் மொழி உடலரசியலைக் குறித்து வெளிப்படையாகப் பேசுகிறது. பெண் உடலரசியல் என்ற கருத்தாக்கம் அமெரிக்காவில் தொடங்கி மற்ற உலக நாடுகளிலும் பேசுபொருளானது. 1960 இல் முதன் முதலில் பெண் உடல் அரசியல் என்ற கருத்து முன்மொழியப்பட்டுள்ளது.

உடல் அரசியலை முன்னெடுக்கும் பல பெண் கவிஞர்களும் பெண்ணின் உடல் பாகங்களான முலை, யோனி போன்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவது குறித்துப் பலரும் விமர்சிக்கின்றனர். பாலியல் ரீதியாகப் பெண்கள் தொடர்ந்து பிரச்னைகளுக்கு ஆளாகிக்கொண்டிருக்கும் போது, இரண்டாம் பாலினமாகவே பெண்கள் பெரும்பாலும் பார்க்கப்படும்போது, வெறும் ஆணுக்கான போகப்பொருளாகப் பெண்ணுடல் சித்தரிக்கப்படும்போது, பல்வேறு வன்முறைகளுக்குப் பெண்ணுடல் தொடர்ந்து ஆளாக்கப்படும்போது, பெண்ணுடல் குறித்த புரிதலை இப்பொது சமூகத்தில் உரையாடுவது என்பது எவ்வளவு முக்கியமானது என்ற கருத்தாக்கத்தை ஏன் இந்த விமர்சகர்கள் புரிந்துகொள்ளவில்லை என்ற கேள்வி எனக்குள்ளும் தோன்றியது.

ஆண்மை மூலம் ஒடுக்குதலும் பெண்மையின் மூலம் ஒடுக்கப்படுதலும் சமூகத்தின் இயல்பான நிலையாக இருக்கிறது. பெண்மொழி என்பது ஆண்கள் தங்கள் மனதில் பெண்கள் எப்படி இருக்க வேண்டும் என்கிற அவசியமற்ற பிம்பத்தைச் சுக்குநூறாக உடைக்கிறது. பெண் மொழி என்பது வெறும் பெண்கள் பேசும் மொழி மட்டுமில்லை. பெண்களின் மேம்பாட்டிற்காக, பாலின சமத்துவத்தை ஆண்கள் பேசுவதும் என்னளவில் பெண் மொழியாகவே நான் கருதுகிறேன். தமிழ்த் திரைப்படங்களில் ஆண்கள்தாம் காதலை முதலில் சொல்ல வேண்டும் என்ற கட்டமைப்பு மறைமுகமாக இருந்திருக்கிறது. எனக்குத் தெரிந்து முதன்முதலாக இயக்குநர் கரு. பழனியப்பன் தன் திரைப்படத்தில் கதாநாயகி தன் காதலை முதலில் சொல்வதாகக் காட்சி வைத்திருப்பார். அங்கு தொனித்த மாற்றுச் சிந்தனை பெண்களுக்கான மொழி.

பெண்கள் கைகளிலிருந்து கரண்டியைப் பிடுங்கிவிட்டு, புத்தகங்களைக் கொடுக்கச் சொன்னார் தந்தை பெரியார். வீட்டு வேலைகளிலிருந்து பெண்களைக் கொஞ்சம் விடுவிக்கும் போதுதான் அல்லது பெண்களே தங்களை விடுவித்துக்கொள்ளும் போதுதான் படைப்பு மனநிலையை அவர்களால் எட்ட இயலும். பெண் எழுத்து, அவர்களுக்கு ஏற்படும் சுரண்டல்கள் குறித்துப் பேசுகிறது. பொருளாதாரச் சுரண்டல் முதல் உடல் சுரண்டல், வன்புணர்வு, பாலியல் சிக்கல்கள் போன்ற பல நுட்பமான விஷயங்களைப் பேசத் தவறுவதில்லை பெண்மொழி.

தொடர்ந்து பெண்கள் மீது நடத்தப்படுகின்ற வன்முறைகள் குறித்து எழுதாமல் வேறு எதை எழுத முடியும் என்ற கேள்வியை முன்வைக்கிறார் கவிஞர் குட்டிரேவதி. பெண் எழுத்து வெறும் தனி மனுஷியின் எழுத்து அல்ல. அது சமூக எழுத்து. சமூகத்திற்கான எழுத்து. ஆணைப் போல பெண்ணும் முழுமையாகச் சமமாகப் பார்க்கப்படும் காலத்தில் ஒரு வேளை பெண் மொழி என்பது அவசியமற்றுக்கூடப் போகலாம். அந் நிலையை எட்டும் வரை தொடர்ந்து பெண் படைப்பு, பெண் அரசியல், பெண்மொழி என்பவற்றை முன்னெடுத்துச் செல்ல வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். இந்தச் சுதந்திர காற்றும் சுதந்திர உலகமும் எவ்விதப் பேதமுமின்றி எல்லோருக்கும் கிட்டும் வரை தொடர்ந்து பேசுவோம். விவாதிப்போம்.

கதைப்போமா?

படைப்பாளர்:

ஹேமலதா

சென்னையில் பிறந்தவர்; தற்போது கொச்சியில் வசித்துவருகிறார். கார்ப்பரேட் செக்ரட்டரிஷிப் பட்டதாரியானவர், யோகக் கலையில் எம்.ஃபில் பட்டம் பெற்றுள்ளார். சில நிறுவனங்களிலும், பள்ளிகளில் யோக ஆசிரியராகவும் பணியாற்றியிருக்கிறார். ‘முழுவல்’ என்ற கவிதை நூல் வெளியிட்டிருக்கிறார். பெண்ணியம் தொடர்பான நிகழ்வுகளில் தொடர்ந்து பங்கெடுத்துக் கொண்டிருக்கிறார்.