ஆப்கானிஸ்தான் இஸ்லாமிய எமிரேட்ஸ் தொடங்கிய ஆறு மாதங்களில் அதாவது 1997 மார்ச் 11 அன்று ”இஸ்லாமியக் கலாசாரத்தின் மறுமலர்ச்சியை நோக்கிய முயற்சிகள்”  என்ற தலைப்பில் தலிபான் ஆட்சியாளர்கள் இரண்டு நாட்கள் கருத்தரங்கொன்றை நடாத்தினார்கள்.  ஆப்கானிஸ்தானின் தூய்மையான கலாசாரத்தை மீட்பதற்கான ஆதரவு கோரும் அந்தக் கருத்தரங்கில் தாலிபான்களின் தலைவர் முஹம்மது முல்லா உமர் இவ்வாறு கூறினார். 

முஹம்மது முல்லா உமர்

“கலாச்சாரத் துறைகளில் ஈடுபடுபவர்களின் ஆதரவிற்காக, எதிர்கால சந்ததியினரின் கல்விக்காக, நமது உண்மையான கலாச்சாரத்தைப் பாதுகாப்பதற்காக என்னால் முடிந்ததைச் செய்வேன் என்று உறுதியளிக்க விரும்புகிறேன். ஆப்கானியர்கள் எல்லோரும் வெளிநாட்டு கலாச்சாரங்களை நிராகரிக்க வேண்டும். ஆப்கானியர்கள் தங்களின் சொந்தக் கலாச்சார மதிப்புகளைக் கடைப்பிடிக்க வேண்டும்” 

மேடையில் பேச்சாளர்களின், “காலனித்துவ கலாச்சாரத்திற்கு எதிரான போராட்டம் ஒவ்வொரு முஸ்லிமின் கடமையாகும்” என்ற அறிவித்தலை வலுப்படுத்தும் ஒரு பேனர் தொங்கவிடப்பட்டிருந்தது.

தலிபான்கள் தோற்றம் பெற்ற நாளிலிருந்தே தங்கள் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் உள்ள பெண்களை பர்தா அணியும்படி கட்டாயப்படுத்தி வந்தனர். பாரம்பரிய ஆப்கானிஸ்தான் பெண்கள் உடை  தலை முதல் கால்வரையிலான முக்காடு என வலியுறுத்தினர்.  கண்களை மறைக்காத சவூதி நாட்டுப் பாணி முக்காட்டுக்கும் அனுமதியில்லை என்று அறிவித்தனர். 

ஷரிஆ அல்லது இஸ்லாமிய சட்டம் என்று கூறி பர்தா தொடர்பான அரசாணை பகிரங்கமாக நியாயப்படுத்தப்பட்டாலும் தலிபான் அரசாங்கத்தின் உயர் நீதிமன்றத்தின் தலைவர் ”இஸ்லாமிய ஷரிஆ பெண்கள் முகத்தை வெளிக்காட்ட அனுமதிக்கிறது” என்று கூறினார். இது  தாலிபான்களிடையேயும் பெண் மீதான ஷரிஆ சட்ட நடைமுறை தொடர்பில் குழப்பம் இருப்பதைக் காட்டுகிறது. 

”பெண்களின்  முகத்தில் கவர்ச்சி அல்லது காமத்தின் அறிகுறி இல்லாத வரை அவர்கள் முகத்தை திறப்பதில் குற்றமில்லை. எவ்வாறாயினும் நாங்கள் இப்போது மேற்கத்திய கலாசார சூழலில் இருக்கிறோம்.  எனவே பெண்கள் முகத்தை மறைத்துக் கொள்வதே சரியானது” என்று முல்லா அப்துல் காஃபூர் சனானி கூறினார்.

இன ரீதியாகவும் கலாச்சார ரீதியாகவும் வேறுபட்ட தேசத்தின் மீது தெற்கு ஆப்கானிய கலாச்சாரத்தை திணிக்க ஷரியாவை ஒரு சாக்காக தாலிபான்கள் பயன்படுத்துகின்றனர் என்றொரு கருத்தும் சில ஆப்கானியர்களிடையே உள்ளது.

பெண்கள் வேலை செய்யக்கூடாது, அவர்கள் வீட்டிற்குரியவர்கள் என்ற பாரம்பரியம் தாலிபான்கள் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் கடைப்பிடிக்கப்பட்டது. இந்தக் கலசாரம் வடக்கு ஆப்கானிஸ்தான் வாழ்க்கை முறையின் ஒரு பகுதியாக இருந்ததில்லை. ஆனால் தென் மாகாணங்களில் பொதுவானது.  

பெண்களின் கல்வி உரிமையைத் தடுப்பதும் மட்டுப்படுத்துவதும் தாலிபான்கள் ஆட்சியில் இறுக்கமான நடைமுறைக்கு வந்தது. காபூல் நகர் தாலிபான்களின் ஆட்சி அதிகாரத்திற்கு வந்த பிறகு திறக்கப்பட்ட காபூல் பல்கலைக்கழகத்திலிருந்து பெண்கள் விலக்கப்பட்டனர். 

உயர்கல்வி அமைச்சர் மௌலவி ஹம்துல்லா நூமணி பத்திரிகையாளர்களிடம் கூறுகையில், வளங்கள் கிடைக்கும்போது பெண்கள் கல்வி தொடங்கும். ஆனால் பெண்கள் சில பாடங்களை மட்டுமே படிக்க அனுமதிக்கப்படுவார்கள் என்றார். 

காபூல் பல்கலைக்கழகம் |Picture: localguidesconnect

“முக்கிய பிரச்சினை வளங்களின் பற்றாக்குறை. பெண்களுக்கான தனி வசதிகள் தேவை. எங்களிடம் போதுமான பெண் ஆசிரியர்கள் இல்லை. ஆனால் எங்களுக்கு ஆதாரங்கள் கிடைத்தால் சில பாடங்களில் பெண்கள் பீடங்கள் திறக்க அனுமதிக்கப்படும். உதாரணமாக அவர்கள் பொறியியல் படிக்க அனுமதிக்கப்படாவிட்டாலும், மருத்துவம், வீட்டுப் பொருளாதாரம்,  கற்பித்தல் துறைகளில் படிக்க அனுமதிக்கப்படுவார்கள்” என்று கூறினார்.

1996 செப்டம்பரில் தாலிபான்கள் காபூலைக் கைப்பற்றிப் பல்கலைக்கழகத்தை மூடுவதற்கு முன்பு காபூல் பல்கலைக்கழகத்தில் 4,000 பெண் மாணவர்கள் இருந்தனர்.

தாலிபான்களின் பெண் பார்வையானது சிரியா, ஈரான் நாடுகளின் சில பகுதிகளை அகப்படுத்தி நடத்தப்படும்  ஐஎஸ்ஐஎஸ் மததீவிரவாத இயக்கத்தின் ஆட்சியில் பெண் இருப்பு பற்றி பார்வையுடன் ஒத்ததாயும் உள்ளது. 

ஐஎஸ்ஐஎஸ் இயக்கத்தின் பெண் போராளிகள் பிரிவான “அல்-கன்சா” படையணி  ஐஎஸ்ஐஎஸ் ஆட்சியில் பெண்கள் பற்றிப் பேசும் ஒரு விஞ்ஞான அறிக்கையைத் தயாரித்திருந்தது. ”அல்-கன்சா” தயாரித்த அந்த ஆவணத்தில் அறிவிக்கப்பட்ட விதிகளில், “அனைத்துப் பெண்களும் கறுப்பு நிறத்தில் மட்டுமே ஆடை அணிய வேண்டும், காலணிகள், கையுறைகள், முகமூடி உட்பட. உடலின் எந்தப் பாகமும் தெரியக் கூடாது – கால் விரல்களிலிருந்து கை விரல்கள்வரை” என்பதாக வரையறுக்கப்படுகிறது. இஸ்லாமிய ஆட்சியில் ஃபேஷன் ஆடைக் கடைகள் தடை செய்யப்பட்டதுடன் இவ்வாறான கடைகள் “பிசாசுகளின் செயல்” என்றும் அது வர்ணிக்கிறது.

Picture: npr.org

“ஆண்களும் பெண்களும் சமமானவர்கள் அல்ல. இஸ்லாமிய அரசின் கீழ் ஆண்களும் பெண்களும் முற்றிலும் மாறுபட்ட பாத்திரங்களைக் கொண்டவர்கள். ஒரு பெண் தாயாகவும் மனைவியாகவும் கணவனுக்கும் பிள்ளைகளுக்கும் சேவை செய்வதே அவளின் அடிப்படைச் செயற்பாடு. விதிவிலக்கான சந்தர்ப்பங்கள் தவிரப் பெண்கள் வீட்டை விட்டு வெளியேறுதல் தடை செய்யப்பட்டுள்ளது. அந்த விதிவிலக்கான சந்தர்ப்பங்கள், ஜிஹாத், மதக் கல்வி, மதப் பிரச்சாரம் ஆகிய மூன்றும். இது தவிர ஆசிரியர்களாகவும் மருத்துவர்களாகவும் இருக்கும் பெண்கள் ஐஎஸ் விதித்திருக்கும் ஆடை ஒழுங்குடன் நிபந்தனைகளை மீறாதபடியாக வீட்டை விட்டுக் கிளம்பலாம். அந்த நிபந்தனைகள் மேலும் விவரணப்படுத்தப்படுகின்றன. எப்படியென்றால், கட்டாயமான சூழலில் என்றாலும் ஒரு பெண் வாரத்தில் மூன்று நாட்களுக்கு மேல் வேலை செய்யக் கூடாது. நான்கு மணி நேரங்களுக்கு மேல் வேலை செய்யக்கூடாது. வாரத்தில் எல்லா நாளும் வேலை செய்வது, நீண்ட நேரம் வேலை செய்வது, இரவுப் பணி செய்வதெல்லாம் மேற்கத்திய கலாசாரத்தின் பொருள்முதல்வாதத்திற்குள் பெண்களை இட்டுச் செல்லக் கூடியது. தாயாகவும் மனைவியாகவும் மட்டுமே இருக்க வேண்டிய பெண் எனும் பாத்திரத்திலிருந்து இது பெண்களை விலகிச் செல்ல வைக்கும். பெண்களை வீட்டிலிருந்து விடுவிக்கக் கோரும் காபிர்களின் மேற்கத்திய “லிபரல்” கலாசாரத்தை மையமாகக் கொண்ட சிதைந்த கருத்துக்களும் மோசமான நம்பிக்கைகளும் பெண்ணின் மாதிரியைத் தோல்வியடைச் செய்துள்ளன.”

1996 செப்டம்பரில் தாலிபான்கள் காபூலைக் கைப்பற்றியபோது காபூல் பல்கலைக்கழகத்தில் 4,000 பெண்களே இருந்தனர், ஆனால்  2021 இல் தாலிபான்கள் காபூலை கைப்பற்றியபோது அங்கு பயின்ற 22 ஆயிரம் மாணவர்களில் 43 வீதமானவர்கள் பெண்கள். 1996இல் தாலிபான்கள் பிடியிலிருந்த ஆப்கானிஸ்தான் ஆட்சி 2001 இல் முடித்துவைக்கப்பட்டது.  அதிலிருந்து 2021 வரையான 20 வருட காலங்களில் ஆப்கானிஸ்தான் அரசின் கட்டுப்பாட்டில் உள்ள நகரங்களில் மில்லியன் கணக்கான ஆப்கானிஸ்தான் பெண்கள் பள்ளிக்குச் சென்றுள்ளனர். ஆப்கானிஸ்தான் பெண்கள் ஆப்கானிஸ்தான் வரலாற்றில் முன்னெப்போதையும் விட அதிக அளவில் அரசியல் பதவிகளை வகிப்பது உட்பட பொது வாழ்விலும் பல்வேறு அரசியல் தனியார் துறைகளிலும் கால்பதித்துள்ளனர்.  

அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் இந்த முன்னேற்றங்கள் குறிப்பிடத்தக்க அளவில் நிகழ்ந்தாலும் தாலிபான்கள் கட்டுப்பாட்டுப் பகுதிகளிலுள்ள பெண்கள் வழக்கமாக அவர்களது நடவடிக்கைகளால் கல்வி உரிமையை மறுக்கப்பட்டவர்களாக இருந்தனர். 2002 க்குப் பிறகு ஆரம்ப ஆண்டுகளில் மில்லியன் கணக்கானவர்கள் சேர்க்கப்பட்டனர் எனினும் 2014 ஆம் ஆண்டுக்குப் பிறகு நாடு முழுவதும் பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை குறையத் தொடங்கியது. பாதுகாப்பின்மை, பாகுபாடு, ஊழல், பாடசாலைகளுக்கு குறைக்கப்பட்ட நிதி உள்ளிட்டவை இந்தப் பின்னடைவுக்குக் காரணங்கள்.  

மனித உரிமைகள் கண்காணிப்பகமும் ஆப்கானிஸ்தான் ஆய்வாளர்களும் கடந்த காலங்களில் கல்விக்கான  கோரிக்கை அதிகரித்ததை நிரூபிக்கின்றன. இதில் நாட்டின் பல பகுதிகளில் பெண்கள் படிக்க வேண்டும் என்ற பெருகிய வரவேற்பு உள்ளது. குடும்ப எதிர்ப்பையும், சமூக எதிர்ப்பையும் மீறி தனியார் தொண்டு நிறுவனங்களின் அனுசரணையில் வீடுகளில் இரகசியமாக கல்வி கற்கும் நடவடிக்கைகள் இருந்தன. கிராமங்களில் பெண் கல்வி பள்ளிகள் இயங்கின. பாதுகாப்பை உறுதி செய்து, உள்ளுர் கல்விச் செயற்பாடுகளை கல்வி முறையுடன் இணைப்பதை அரசாங்கம் செய்திருக்கவேண்டும். அப்படி நிகழவில்லை.  

தலிபான்கள் அதிகாரப்பூர்வமாக இனி பெண்களின் கல்வியை எதிர்க்க மாட்டோம் என்று கூறினாலும்  மிகக் குறைவான தாலிபான் அதிகாரிகள் தான் பருவமடைந்த பிறகு பள்ளிக்குச் செல்ல அனுமதிக்கிறார்கள். பிரதேசத்திற்குப் பிரதேசம் நிர்வாகத்தில் இருக்கும் தாலிபான்களுக்கு இடையிலான இந்த முரண்பாடுகள் மக்களை எச்சரிக்கையாக வைத்திருக்கின்றன. “இன்று, தலிபான் அதிகாரியொருவர், ஆறாம் வகுப்பு வரை பெண்களை அனுமதிப்போம் என்று சொல்கிறார். ஆனால் நாளை, அவரது இடத்திற்கு வேறு ஒருவர் வந்தால் அவர் பெண் கல்வியை முழுமையாக மறுக்க இடமுள்ளது” என்ற அச்சம் பெண் பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்புவதற்கு மக்களைத் தடுக்கிறது. 

குண்டுஸ் மாவட்டங்களில் உள்ள தலிபான் அதிகாரிகள் பெண்கள் தொடக்கப் பள்ளிகளை செயல்பட அனுமதித்துள்ளனர்.   பெண்களும் இளம் பெண்களும் உயர்நிலைப் பள்ளிகளுக்கும் பல்கலைக்கழகங்களிலும் கலந்து கொள்ள அரசு கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளுக்குச் செல்வதற்கும் அனுமதித்தனர். மாறாக, ஹெல்மண்ட் மாகாணத்தில் தலிபான்களின் கட்டுப்பாட்டில் உள்ள மாவட்டங்களில்  பெண்களுக்கான ஆரம்பப் பள்ளிகள் கூட எதுவும் இயங்கவில்லை. இந்த கிராமப்புற மாவட்டங்களில் சில அரசாங்கக் கட்டுப்பாட்டில் இருந்தும் கூட பெண்கள் பள்ளிகள் செயல்படவில்லை. 

தாலிபான்களின் முன்னைய ஆட்சியில் ஆசிரியர்களின் சம்பளத்திற்கு வரி விதிக்கப்பட்டது. பள்ளி உறவினர்கள், கற்பிக்கும் ஆசிரியர்களை, குடியிருப்பாளர்களை அச்சுறுத்தலை எதிர்கொண்டனர்.

தாலிபான் அதிகாரிகள் மாவட்டங்களுக்கும் மாகாணங்களுக்கிடையேயான கல்வியை அணுகுவதில் உள்ள வேறுபாடுகள் பாதுகாப்பு பிரச்சினைகள் அத்துடன் சமூகங்களுக்குள் பெண்களின் கல்வியை ஏற்றுக்கொள்ளும் மாறுபட்ட நிலைகள் காரணமாக பெண்கள் ஆரம்பக் கல்வியைப் பெறும் வாய்ப்பு மிகவும் குறைவதற்கான சூழ்நிலைகளே அதிகம். ஆப்கானிஸ்தானில் பல கிராமப்புற சமூகங்களில் பெண் கல்விக்கு கடுமையான எதிர்ப்பு உள்ளது. 

பெண் கல்வியில் காணப்படும் சீரற்ற அணுகுமுறை தாலிபான் தளபதிகளின் மாறுபட்ட கருத்துக்கள் தலிபான் இராணுவ கட்டளை வரிசையில் அவர்கள் நிலைப்பாடு, உள்ளூர் சமூகங்களுடனான அவர்களின் உறவு நிலைகளும் செல்வாக்கு செலுத்துவதைப் பிரதிபலிக்கின்றன. 

தாலிபான்கள் கட்டுப்பாட்டில் ஆண் துணையின்றி பெண்கள் வீட்டை விட்டுப் புறப்பட முடியாது. பொது இடங்களில் பெண்களுக்கான கழிவறைகள் இல்லை. சீருடையில் இருந்த பள்ளி மாணவிகள் மீதே அசிட் தாக்குதல்கள் நடந்துள்ளன. பெண்கள் நகப்பூச்சு பயன்படுத்துவது, அலங்காரம் செய்வது கூடாது. சத்தமாகப் பேசுதல் சிரித்தல்கூட தண்டனைக்குரிய குற்றங்கள். பெண்களின் உரிமைகளுக்கு எதிரான வன்முறைகள், சுரண்டல்களுக்கு நீதியைப் பெறுவது  முடியாத காரியம். விவாகரத்துக் கோரி வழக்குப் பதிவு செய்த பெண்கள் பலர் சிறைச்சாலைகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். விவாகரத்துக் கிடைக்காது என்று அறிந்து கணவனைக் கொன்றுவிட்டுத் துணிகரமாக தாலிபான்களின் தூக்குத்தண்டனையை ஏற்றுக் கொண்ட பெண்களின் கதைகளும் உள்ளன. அசீட் தாக்குதல்கள், பொதுவில் நிறுத்தி கசை அடித்தல், தண்டித்தல் போன்றன மிகச் சாதாரணமான தண்டனை முறைகள். 

ஆப்கானிஸ்தானின் சமூக-சட்ட கட்டமைப்பானது சட்டப் பன்மைத்துவத்தால் வகைப்படுத்தப்படுகிறது. முறையான, முறைசாரா நிறுவனங்கள் எழுதப்பட்ட எழுதப்படாத பல சட்ட ஆதாரங்களைக் கொண்டு சமூகத்தை நிர்வகிக்கின்றன. ஆப்கானிஸ்தான் சட்ட விதிமுறைகள் நகர்ப்புற, கிராமப்புற, பழங்குடி பிரிவுகள் என்று மிகவும் மாறுபட்ட சமுதாயங்களை உள்ளடக்கியுள்ளது. ஒவ்வொரு விதிமுறைகளும் வழிமுறைகளும் தகராறுகளைத் தீர்ப்பதற்கு எனினும், இரண்டு மேலாதிக்க அமைப்புகளை நீதியைப் பெறுவதற்காக மக்கள் அணுகவேண்டியுள்ளது. ஒன்று அரச முறைசார் நீதித்துறை, மற்றையது முறைசாரா நீதித்துறை. 

ஆப்கானிஸ்தான் சட்டக் கல்வித் திட்டத்தால் 2012 இல் வெளியிடப்பட்ட ஆப்கானிஸ்தானில் குற்றவியல் சட்டம் குறித்த புத்தகத்தின் படி, 1976ஆம் ஆண்டு தண்டனைச் சட்டத்தின் பிரிவு 1 இஸ்லாமிய சட்டத்தின் ஹனபி மத்ஹபுடன் வரையறுக்கப்படுகின்றது. இந்தச் சட்டப் பிரிவு குற்றங்களை மூன்றாக வகைப்படுத்துகின்றது. ஹூதுத் (hudud), கிசாஸ் (qisas), தாசீரி(ta’azir). இந்த மூன்று வகைக் குற்றங்களும் இஸ்லாமிய சட்டத்தின் கீழாகத் தண்டிக்கப்படவேண்டும். அரசியலமைப்பு அல்லது தண்டனைச் சட்டத்தின் கீழ் வரையறுக்கப்படாத குற்றச் செயல்கள், பிரச்சினைகளுக்கு சுன்னி இஸ்லாமிய நீதித்துறையாகக் கருதப்படும் ஹனபி மத்ஹ்பின் விளக்கத்தையே நீதி மன்றங்கள் நம்பியுள்ளன. 

இந்த நடைமுறையானது தாலிபான்கள் ஆட்சிக் காலத்திற்குரியதோ அல்லது தாலிபான்கள் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் நடைமுறையிலிருப்பதோ அல்ல. இஸ்லாமிய ஷரீஆ சட்டத்தை பகுதியளவில் உள்வாங்கியதாகவே ஆப்கானிஸ்தான் நீதித்துறை காலங்காலமாக இருந்துவருகிறது. 

இஸ்லாமிய சட்டத்தின் கீழ் ஹுதுத் குற்றங்கள் மிகக் கடுமையான குற்றங்கள் மட்டுமல்ல அவை இறைவனுக்கு எதிரான மீறல்களாகக் கருதப்படுகின்றன. இந்தக் குற்றங்களுக்கான தண்டனைகள் குறிப்பாக குர்ஆனில் குறிப்பிடப்பட்டுள்ளன. குர்ஆனை ஆதாரமாகக் கொண்டு ஆப்கானிஸ்தானில் நடைமுறையில் இருக்கும் ஹுதுத் குற்றங்களும் தண்டனைகளும் பின்வருமாறு விவரிக்கின்றன:

  • திருட்டு; பணம் பொருள் சொத்து எதுவாகினும்  (கையை வெட்டுதல்);
  • விபச்சாரம்; ஜினா அல்லது சட்டவிரோத பாலியல் உறவுகள் (100 கசையடி, நாடுகடத்தல் அல்லது மரணம்);
  • அவதூறு, குறிப்பாக சட்டவிரோத பாலியல் உறவுகளின் தவறான குற்றச்சாட்டுகள் (80 கசையடிகள்);
  • மது அருந்துதல் அல்லது போதைப்பொருட்களை உட்கொள்வது (80 கசையடி)

இஸ்லாமிய ஷரிஆ சட்ட அமுலாக்கத்தின் அடிப்படையில் ஹூதுத் குற்றங்கள் ‘குறிப்பிடத்தக்க வகையில் வளைந்து கொடுக்க முடியாதவை’. எவ்வாறாயினும், பெரும்பாலான ஹுதுத் குற்றங்களுக்கான ஆதாரங்கள், குற்றத்தை நிரூபிப்பதற்கான சாட்சியங்கள் அவசியம்.  

ஆப்கானிஸ்தானில் அரச ஆதரவு மதத் தலைவர்களும்  நீதித்துறை அதிகாரிகளும் இந்த இஸ்லாமியக் கொள்கைகளின் கீழ் தீர்ப்புகளை விளக்குவதற்கும் நடைமுறைப்படுத்துவதற்கும் அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. 

தாலிபான்கள் ஷரீஆ சட்ட நடைமுறையை மிகவும் இறுக்கமாக நடைமுறையில் வைக்கின்றனர். இவர்களது முன்னோடி இஸ்லாமிய அறிஞர்கள் அளித்த சட்ட விளக்கங்களையே இவர்கள் பெரும்பாலும் பின்பற்றுகிறார்கள்.  தீவிர சிந்தனை கொண்ட இஸ்லாமிய அறிஞர்கள் பெண்களின் பொதுவாழ்வை மறுப்பவர்களாக இருக்கிறார்கள். பெண்களின் பணியை வீட்டுடன் மட்டுப்படுத்துகிறார்கள். அபு ஆலா மௌதூதி, சையத் குத்ப் போன்ற முன்னோடி அறிஞர்களின் பார்வைகள் பெரும்பாலும் இஸ்லாமிய மத தீவிரவாத இயக்கங்களின் போக்குகளுக்கு இசைவாகின்றன. 

அக்டோபர் 2012 இல் பெண்கள் கல்வி உரிமைக்காகப் பகிரங்கமாகப் பேசியதற்காக மலாலா யூசுப் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகினார். 2008 இல் பாக்கிஸ்தான் – ஆப்கானிஸ்தான் எல்லையில் உள்ள ஸ்வாட் பள்ளத்தாக்கை தாலிபான்கள் கைப்பற்றியபோது அவர்களது வழக்கமான சட்ட விதிகளை அங்கு நடைமுறைக்குக் கொண்டுவந்ததினால் மலாலா யூசுப் உட்பட பல சிறுமிகள் கல்வியைத் தொடர முடியாமல் போனது. கல்வி உரிமைக்காகத் தனது குரலை உயர்த்திய 15 வயது சிறுமி மலாலா உயிராபத்தை எதிர்கொண்டார்.  

சுக்ரியா பராக்ஸாய் | S.K. Vemmer/Department of State

பத்திரிகையாளர், பெண்ணியவாதி சுக்ரியா பராக்ஸாய் 2010 இல் நடைபெற்ற பொதுத் தேர்தலில் நாடாளுமன்ற உறுப்பினராகத் தெரிவானர். பெண்களின் உரிமைகள் குறித்து தொடர்ந்து பேசியும், உரையாடியும் செயற்பட்டு வந்த இவர் கடுமையான எச்சரிக்கைகளையும் அச்சுறுத்தல்களையும் ஆயுதக் குழுக்களிடமிருந்தும் தாலிபான்களிடமிருந்தும் எதிர்கொண்டார். நவம்பர் 2014 இல் இவர் மீது கொலை முயற்சி மேற்கொள்ளப்பட்டது. படுகாயங்களுடன் உயிர் தப்பினார். 

தாலிபான்களின் அசிட் தாக்குதல், கொலைகள், கொலை அச்சுறுத்தல்களின் பட்டியில் மிக நீண்டதாக இருந்தபோதும், கடந்த காலங்களில் நம்பமுடியாத துணிச்சலான பல பெண்கள் ஆப்கானிஸ்தான் சமூகங்களிலிருந்து உலகின் வெளிச்சத்திற்கு வந்தார்கள். சட்டத்தரணிகள், மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள், ஊடகவியலாளர்கள், புகைப்படக் கலைஞர்கள், ஆவணப்பட இயக்குநர்கள், கலைஞர்கள், விளையாட்டு வீரர்கள் என்று எல்லாத் துறைகள் வழியாகவும் ஆணாதிக்க கலாசாரங்கள், பிற ஆயுதக் குழுக்கங்களின் அச்சுறுத்தல்கள், தலிபான்களின் மத தீவிர இறுக்கங்கள், உயிராபத்துக்களால் வரையறுக்கப்பட்ட எல்லைக்களைக் கடந்து குரல்களை உயர்த்தினார்கள். கடுமையான அபாயங்களை எதிர்கொண்டபோதும் பெண்களின் உரிமைகளை மீறும் அனைத்தையும் தொடர்ந்து சவால் செய்தார்கள். ஒரு பெண் எடுக்கும் எந்தச் சிறிய எதிர்ப்பு நடவடிக்கையும் நாளை மற்றொரு பெண் நீண்ட தூரம் செல்லும் துணிகரத்தை தரும் என்று உயிரையும் வாழ்வையும் பொருட்படுத்தாமல் களத்தில் இறங்கினார்கள். 

2010 இல் ஆப்கானிஸ்தானில் தேர்தல் அறிவிப்பு வெளியானதிலிருந்து தாலிபான்கள் கடுமையான எச்சரிக்கைகளை விடுத்து வந்தனர். தேர்தலை மக்கள் பகிஷ்கரிக்க வேண்டும் என்றனர். தேர்தல் தினத்தன்று தாக்குதல் நடத்தப்போவதாக அறிவித்தனர். கொலை மிரட்டல்கள் இருந்தபோதிலும், நாட்டின் பாரம்பரிய போர்வீரர்களுக்கு எதிராக அசாதாரண வேட்பாளர்கள் நாடாளுமன்ற இருக்கைகளுக்கான போராட்டத்தில் இறங்கினார்கள். 249 நாடாளும்னற உறுப்பினர்களைத் தெரிவு செய்யும் போட்டியில் 2,500 க்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் போட்டியிட்டார்கள்.  4 தேர்தல் வேட்பாளர்கள் தேர்தலுக்கு முன்பே  கொல்லப்பட்டார்கள் நூற்றுக்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் தாலிபான்களின் தேர்தல் எதிர்ப்புத் தாக்குதல்களில் காயமடைந்தார்கள். இருந்தபோதிலும், இந்த தேர்தலில் போட்டியிட்ட பெண்களின் எண்ணிக்கை சாதனையாக இருந்தது.  246 இடங்களில் 68 பெண் வேட்பாளர்கள். 

ஃபவ்ஸியா கூஃபி, ஸரிஃபா கஃபாரி, சலீமா மஸாரி போன்ற பெண்கள் உரிமைகளுக்காகக் குரல் தரக்கூடிய மிகத் துணிச்சலான  ஆளுமைகளும் அரசியல்வாதிகளும்  அவ்வளவு எளிதாகத் தோன்றியவர்களில்லை.  

ஆப்கானிஸ்தானில் உள்ள மூன்று பெண் மாவட்ட கவர்னர்களில் ஒருவராக சலீமா மசாரி 2019 முதல் பணியில் இருக்கிறார். அரைவாசிக்கும் அதிகமான பகுதிகள் தாலிபான் கட்டுப்பாட்டில் இருந்தபோதும் சர்கின்ட் மாவட்டத்தை பாதுகாக்க உள்ளூர் மக்களுடன் துணிகரமாகச் செயற்படும் ஆளுமை.  

ஸரிஃபா கஃபாரி, நீண்ட காலமாக ஆப்கானிஸ்தானில் பெண்களின் உரிமைகளை ஆதரித்து பெண்களைப் பொருளாதார ரீதியாக மேம்படுத்துவதில் கவனம் செலுத்தும் அமைப்பைத் தொடங்கி அதற்கென வானொலி நிகழ்ச்சிகளை தயாரித்துத் தொகுத்து வழங்குகிறவர்.  

ஃபவ்ஸியா கூஃபி, நாடாளுமன்றத்தின் இரண்டாவது துணை சபாநாயகராக பணியாற்றிய முதல் பெண். 2005 – முதல் 2019 வரை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தவர். 

கல்வித் துறை, வங்கித் துறை, நிர்வாகம் போன்ற துறைகளிலும் பல பெண்கள் வேகமாக நுழைந்து விரைவாக வென்றார்கள். 

வங்கிகள், அலுவலகங்கள், பல்கலைக்கழங்களில் பணியில் இருந்த பெண்களை துப்பாக்கி முனையில் வீடுகளுக்கு அனுப்பிவைத்ததுதான், தாலிபான்கள் கைப்பற்றிய நகரங்களில் முதலில் நடந்த காரியங்கள். 

தாலிபான்கள் அரசாங்கத்தில் பெண்கள் இல்லை. அவர்களின் நிர்வாகத் துறை, பொதுத் துறை, நீதித்துறை எதனிலும் பெண்கள் இல்லை. 

கடந்த 20 ஆண்டுகளில் ஆப்கானிஸ்தானில் ஏற்பட்டு வந்த குறிப்பிடத்தக்க முன்னேற்றம் வெறும் சில வாரங்களில் யாரும் எண்ணிப் பார்க்க முடியாத வேகத்தில்  தலைகீழாக மாறியிருக்கிறது. 

(தொடரும்…) 

கட்டுரையாளர்

ஸர்மிளா ஸெய்யித்

விதிவிலக்கான  துணிச்சலான சமூக செயற்பாட்டாளர்.  சமூக அநீதிகள்குறித்து அச்சமற்று விமர்சிக்கக்கூடியவர், எழுத்தாளர், கவிஞர். 
சிறகு முளைத்த பெண் (கவிதை 2012), 
உம்மத் (2014 நாவல்), 
ஓவ்வா ( கவிதை 2015), 
பணிக்கர் பேத்தி (நாவல் 2019), 
உயிர்த்த ஞாயிறு (2021 அனுபவம்) 
ஆகியன இவரது நூல்கள்.