ஒசாமா பின்லேடன் ஆரம்பத்திலிருந்தே தலிபான்களுக்கும் அமெரிக்காவிற்குமிடையே பெரும் எரிச்சலூட்டுபவராக இருந்தார். அதைத் தொடர்ந்து, செப்டம்பர் 11 பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு ஒசாமாவுக்கான வேட்டை தீவிர நடைமுறைக்கு வந்தது. அவரை நாடு கடத்துவதற்கான பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்தபோது, அமெரிக்கா நேரடியாக ஆப்கானிஸ்தானில் தலையிட்டு ராணுவப் படைகளுடன் வேட்டையாடத் தொடங்கியது. ஒசாமா பின்லேடனுக்கான வேட்டை கிட்டத்தட்ட ஒரு தசாப்த காலம் தொடர்ந்தது (2001-2011).

இறுதியாக மே 2, 2011 அன்று பாகிஸ்தான் அபோட்டாபாத்தில் அவரது வளாகத்தில் அமெரிக்க கடற்படை சீல் குழு சோதனையின்போது அவரது மரணத்துடன் தேடுதல் வேட்டை முடிந்தது. இது அல்-காய்தாவுக்கு எதிரான தசாப்த காலப் போரில் அமெரிக்காவுக்குக் கிடைத்த பெரிய வெற்றி. அமெரிக்கா தனது தேடலை ஆப்கானிஸ்தானில் மட்டுப்படுத்தாமல் பாகிஸ்தானிலும் தேடியது. இறுதியில் அவர் பிடிபட்டார். சுமார் ஆறு ஆண்டுகளாக மூன்று மனைவிகள் ஒரு டஜன் குழந்தைகளுடன் அபோட்டாபாத்தில் உள்ள ஒரு வளாகத்தில் பதுங்கி வாழ்ந்தார். இந்த வளாகம் பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்திலிருந்து நாற்பது மைல் தொலைவில் இருந்தது.

பின்லேடன் Pic: history.com

பின்லேடனின் மரணத்தை அறிவித்த அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா, “அல்-காய்தாவின் பயங்கரவாதத்தால் அன்பானவர்களை இழந்த குடும்பங்களுக்கு நீதி வழங்கப்பட்டது” என்று கூறினார். மேலும், அமெரிக்க ராணுவப் படைகள் ஆப்கானிஸ்தானில் இருந்து 2014க்குள் விலகும் என்றும் குறிப்பிட்டார்.

பின்லேடனை வேட்டையாடும் இலக்கு வெற்றியில் முடிவடைந்த பிறகும் பெரிய அளவில் வளர்ந்துவிட்டிருந்த அல் காய்தா இயக்க வலையமைப்பின் எலும்புகளை உடைக்கும் இலக்குடன் அமெரிக்கா ஆப்கானிஸ்தானில் நிலை கொண்டது.

’ஆப்கானிஸ்தான் வெளியேறலும் பொறுப்புக்கூறலும் சட்டம்’ பிரதிநிதிகள் மெக்கவர்ன், ரெப். ஜோன்ஸ் ஆகியோர் எஃப். ஆர். 1735 என்ற பெயரில் ஒரு கால அட்டவணையை அறிமுகப்படுத்தினர். இது ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கத் துருப்புகளைத் திரும்பப் பெறுவதற்கான கால அட்டவணையை அமெரிக்க காங்கிரஸிற்கு அளிப்பதற்காக ஜனாதிபதி ஒபாமாவின் வேண்டுகோளுக்கு இணங்கத் தயாரிக்கப்பட்டது. இதில் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஒரு தெளிவான தேதியும் இருந்தது.

பராக் ஒபாமா Pic: wikipedia

பின்லேடன் கொல்லப்பட்ட பிறகு ஆப்கானிஸ்தானில் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான முதல் நடைமுறை நடவடிக்கை இதுவாகும். மே 2, 2011 அன்று ஒசாமா பின்லேடன் கொல்லப்பட்டார். இந்தச் சட்ட மசோதா மே 5, 2011 அன்று அறிமுகப்படுத்தப்பட்டது.

2010இல் நடைபெற்ற நேட்டோ நாடுகளின் லிஸ்பன் உச்சி மாநாட்டின் பிரகடனத்தில் ஆப்கானிஸ்தான் முழுவதும் உள்ள அமெரிக்கப் படைகள் பற்றிய முக்கியத் தீர்மானங்கள் இயற்றப்பட்டன. ஆனால், ஆப்கானிஸ்தான் மீதான படையெடுப்பின் பிரதான இலக்கான பின்லேடனை உயிருடனோ பிணமாகவோ பிடிக்காமல் போரை முடிப்பதற்கான எந்தக் காரணமும் இல்லை என்பதாலும் இந்தத் திரும்பப் பெறும் திட்டங்களுக்கு எந்த அடிப்படையும் உடனடியாக இல்லை. எனினும் 2014க்குள் ஆப்கானிஸ்தானில் மேற்கொள்ளப்படும் ராணுவ நடவடிக்கையை முடிவுக்குக் கொண்டு வரவேண்டும் என்று முடிவானது.

ஆனால், பின்லேடன் கொல்லப்பட்ட பின்பு, ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கப் படைகள், நேச நாட்டுப் படைகளின் வெளியேற்றத்தைத் தாமதப்படுத்துவதற்கான காரணத்தை வழங்க வேண்டியதிருந்தது.

2012இல் நேட்டோ உறுப்பினர்கள் மீண்டும் சிகாகோவில் சந்தித்தனர். இறையாண்மை, பாதுகாப்பான, ஜனநாயக ஆப்கானிஸ்தானுக்கான தங்கள் உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தினர். 2014ஆம் ஆண்டின் இறுதியில் சர்வதேசப் பாதுகாப்பு உதவி படைகளின் (International Security Assistance Force-ISAF) பணியை முடிக்க லிஸ்பன் உச்சிமாநாட்டில் எடுக்கப்பட்ட அணுகுமுறையையும் அவர்கள் மீண்டும் உறுதிப்படுத்தினர். இவை தவிர, ஆப்கானிஸ்தான் தனியாக விடப்படக்கூடாது என்றும் முடிவு செய்தனர்: ’எங்கள் கூட்டாண்மை குறிப்பிட்ட நிலைமாறு காலத்திற்கு அப்பாலும் தொடரும் என்பதை நாங்கள் மீண்டும் உறுதிப்படுத்துகிறோம்.’

பிராந்தியத்தை அச்சுறுத்தும் பயங்கரவாதிகளுக்குப் பாதுகாப்பான புகலிடமாக ஆப்கானிஸ்தான் மாறுவது தடுக்கப்படும் என்றும் மேலும், பாதுகாப்பு, பொருளாதாரம், சமூக மேம்பாடு, ஆளுகையிலும் தன்னிறைவுக்கான போராட்டத்திலும் ஆப்கானிஸ்தானுக்கு நேட்டோ உறுப்பினர்கள் தங்கள் ஆதரவையும் இந்த மாநாட்டில் உறுதி செய்தனர்.

நேட்டோ உறுப்பினர்கள் மீண்டும் செப்டம்பர் 5, 2014இல் வேல்ஸில் சந்தித்தனர். இந்த முறை ஆப்கானிஸ்தானில் போரை முடிவுக்குக் கொண்டுவரும் போது எதிர்காலத் திட்டத்தை விவாதிக்கவும் வரையவும் அதன்படி திட்டத்தைச் செயல்படுத்தவும் சந்தித்தனர். டிசம்பர் 2014இல் முடிவடையவிருந்த ISAFகளின் பணி, ஆப்கானிஸ்தானில் நேட்டோவின் ஈடுபாட்டின் தன்மையையும் நோக்கத்தையும் எவ்வாறு பாதிக்கும் என்பதும் விவாதிக்கப்பட்டது.

நேட்டோ கூட்டாளிகளும் பிற பங்குதாரர் நாடுகளும் ஆப்கானிஸ்தான் தேசியப் பாதுகாப்புப் படைகளுக்குப் போரிடாத தீர்மான ஆதரவு இயக்கத்தின் மூலம் சர்வதேச ஆதரவு உதவிப் படைகளைத் திரும்பப் பெற்ற பிறகு தொடர்ந்து பயிற்சி, ஆலோசனை, உதவிகளைச் செய்வதை உறுதி செய்தனர்.

இந்த அனைத்து உச்சிமாநாடுகளின் முடிவுகள் ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்காவின் விலகல் போரின் முடிவுடன் முடிவடைந்தது. ISAFஇன் பணி டிசம்பர் 31, 2014 அன்று முடிவடைந்தது. நேட்டோ முன்பே தீர்மானித்தபடி உறுதியான ஆதரவு பணி ஜனவரி 1, 2015 அன்று தொடங்கியது. சர்வதேச பாதுகாப்பு உதவிப் படையின் வாரிசாக நேட்டோ தலைமையிலான பன்னாட்டுப் பணி ’உறுதியான ஆதரவு பணி (Resolute Support Mission – RSM) என்ற பெயரில் அறிமுகமானது.

வெளிநாட்டுப் படைகளின் ராணுவ செயற்பாடு மட்டுப்படுத்தப்பட்டதன் பிறகு ஆப்கானிஸ்தான் சாதாரண மக்களின் துயரங்கள் அதிகரித்தது. 2015இல் வெளிநாட்டுப் படைகளின் பங்கு மாறியதால், பொதுமக்கள் உயிரிழப்பு திடீரென அதிகரிக்கத் தொடங்கியது. 2015இல் மட்டும், 3,545 இறப்புகளும் 7,475 காயமுற்றவர்கள் எண்ணிக்கையும் பதிவாகியது. இது அமெரிக்காவின் திரும்பப் பெறுதலின் வீழ்ச்சி என்பதாகவும் முந்தைய ஆண்டை விட உயிரிழப்பு விகிதம் நான்கு சதவிகிதம் அதிகரித்தது எனவும் கணிக்கப்படுகின்றது.

2016இல் அதே அளவு உயிரிழப்புகள் பதிவாகின. 3,498 பொதுமக்கள் உயிரிழந்தனர். 7,920 பேர் காயமடைந்தனர். ஆப்கானிஸ்தான் படைகளுக்கும் ஆயுதக் குழுக்களுக்கும் இடையே மீண்டும் கடுமையான சண்டைகள் எழுந்தன.

2017ஆம் ஆண்டில் நிலைமையை மேம்படுத்த முடியவில்லை. உயிரிழப்புகள் சாதனை உச்சத்தில் தொடர்ந்தன. 2017ஆம் ஆண்டில் 3,438 பொதுமக்கள் உயிரிழப்புகளும் 7,015 காயமுற்றோர் எண்ணிக்கையும் பதிவானது.

2018இல் போர் இன்னும் கொடிய முகம் எடுத்தது. ஆப்கானிஸ்தான் சமூகத்தில் மீண்டும் உள்நாட்டு மோதல் ஆழமான வேர்களை எடுக்கத் தொடங்கியது. முந்தைய ஆண்டுகளை விடவும் கூர்மையான அதிகரிப்பு எடுத்து, உயிரிழப்புகள் ஒரு புதிய உச்சத்தை அடைந்தன.

ஆப்கானிஸ்தானில் நெருக்கடி நிலை கடந்த காலத்தைவிடக் குறைவு என்று சொல்லக்கூடிய ஒரு காலம் இருந்ததில்லை. ஒவ்வொரு முறையும் அது உச்சத்தைத் தொடுகின்றது.

ஒவ்வொரு நாளும் பொதுமக்கள் உயிரிழப்புகள் அதிகரித்து வருவதையே அதன் இறப்பு வரைபடம் காண்பிக்கிறது. மோதலில் ஈடுபடும் இனக்குழுக்கள் போரின் அனைத்து நிலைகளையும் சந்தித்துவிட்ட பிறகும் போரை உக்கிரமாகத் தொடர்கின்றன. ஒவ்வொரு முறையும் முன்பை விடவும் தீவிரமான வன்முறைகள் நிரம்பிய போர்களில் நாடு வீழ்கின்றது. நாளுக்கு நாள் தீவிரமடைந்துவரும் தலிபான்களின் நடவடிக்கைகள் உறக்கமற்ற இரவுகளைத் தவிர வேறெதனையும் தருவதற்கில்லை. வெளிநாட்டுப் படைகளுக்கும் ஆப்கானிஸ்தான் படைகளுக்கும் அவர்கள் கடினமான நேரங்களைத் தொடர்ந்து கொடுக்கின்றனர்.

ஜனாதிபதி ஷிராஃப் கானி Pic: thesun.com

இப்போது மீண்டும் ஆப்கானிஸ்தான் தலிபான்களின் பிடியில் முழுவதும் அகப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தானில் தலிபான்களிடம் அதிகாரத்தை இழந்த ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி ஷிராஃப் கானி நாட்டைவிட்டுத் தப்பியோடினார். அவர் உண்மையில் அதிர்ஷ்டசாலி. அவ்வாறு தப்பிப் பிழைப்பதற்கான அவகாசம் அவருக்கு இருந்தது.

1996இல் முதன் முறையாகத் தலிபான்கள் காபூலைக் கைப்பற்றியபோது ஜனாதிபதியாக இருந்த முகம்மது நஜிபுல்லாவுக்கு நிகழ்ந்தது போன்ற கொடுமையான முடிவை சந்தித்துவிடக் கூடாது என்று ஷிராஃப் கானி எண்ணியிருப்பார்.

முகம்மது நஜிபுல்லா Pic: theatlanta.com

சோவியத் ரஷ்யாவின் கம்யூனிஸ்ட்டுகளால் ஈர்க்கப்பட்டு அரசியலில் சேர்ந்த மருத்துவர் முகம்மது நஜிபுல்லா 1987-1992 காலப்பகுதியில் ஆப்கானிஸ்தானின் ஜனாதிபதியாக இருந்தார். ரஷ்யாவின் ஆசீர்வாதத்துடன் நடைமுறையில் சோவியத் ஒன்றியத்தின் கம்யூனிஸ்ட் ஆட்சியால் கட்டுப்படுத்தப்பட்ட ஆப்கானிஸ்தான் தலைவர்கள் வரிசையில் டாக்டர் முகம்மது நஜிபுல்லா ஆட்சிக்கு வந்தவர் எனினும், முஜாஹிதீன்களின் அழுத்தங்களைக் குறைக்கும் நோக்கில் அரசின் ‘மதச்சார்பற்ற’ தன்மையைக் கைவிட்டு, கம்யூனிசத்திற்கு முந்தைய பெயரை – ஆப்கானிஸ்தான் குடியரசுக்கு மாற்றினார். பதவிக்காலம் முழுவதும் தேசிய நல்லிணக்கச் சீர்திருத்தங்கள் மூலம் ஆப்கான் தேசியத்திற்கு ஆதரவாக சோசலிசத்திலிருந்து விலகியும் ஒரே கட்சி அரசை ஒழித்து, கம்யூனிஸ்ட் அல்லாதவர்களையும் அரசாங்கத்தில் இணைத்துக் கொண்டு ஆதரவை உருவாக்க முயன்றார்.

ஆப்கானிஸ்தான் முன்பு போல் ஜனநாயக குடியரசு என்று அழைக்கப்பட்டது. எனினும், ஆப்கானிஸ்தான் மக்களின் மதம் இஸ்லாம் என்று அறிவித்தார். ஆனாலும் முஜாஹிதீன்கள் திருப்தியடையவில்லை. 1996 செப்டம்பரில் தலைநகர் காபூலைக் கைப்பற்றிய தலிபான்களின் கைகளில் சிக்காமல் தப்பிப்பதற்காக நஜிபுல்லா ஐக்கிய நாடுகள் சபையையும் இந்தியாவையும் நம்பினார். நஜிபுல்லாவின் குடும்பம் ஒரு மாதம் முன்பே இந்தியாவுக்குத் தப்பிச் சென்றிருந்த நிலையில் நஜிபுல்லாவுக்கு அரசியல் தஞ்சம் அளிப்பதற்கு இந்தியா முதலில் தயங்கியது. முஜாஹிதீன்களின் நிரந்தரப் பகையைச் சந்தித்துவிடக் கூடாது என்ற கரிசனத்துடன் அது ராஜதந்திரமாகச் செயற்பட்டது. காபூலில் இருந்த இந்தியத் தூதரகத்தில் தஞ்சம் கோருவதற்கும் மறுத்தது. இந்தியத் தூதரகத்தில் அவர் தஞ்சமடைந்திருப்பது தெரிந்தால் ஆப்கானிஸ்தானில் உள்ள இந்தியர்களின் வாழ்வுக்கு அச்சுறுத்தல் உருவாகும் என்று சொல்லப்பட்டது.

வடக்குக் கூட்டணியிடமிருந்து காபூலைத் தலிபான்கள் கைப்பற்றுவதற்கு முன்பே நஜிபுல்லாவுக்குத் தப்பிக்கும் திட்டத்தைப் பாதுகாப்பு அமைச்சர் அஹ்மத் ஷா மசூத் முன்வைத்தார். பஷ்டூன் இனத்தவரான தன்னை அதே இனத்தவர்களான தலிபான்கள் கொல்ல மாட்டார்கள் என்று அவர் நம்பினார். அவரது நம்பிக்கை பலிக்கவில்லை. விபரீதமான ஆபத்து நேரம் கழுத்துப் பிடரியைத் தொட்டுவிட்ட பிறகு அவர் தப்பிக்க நினைத்தார். பல ராஜதந்திரிகளின் வாதப் பிரதிவாதங்கள், இழுத்தடிப்புகளின் பின்பு இந்தியாவுக்குத் தப்பிப்பதற்காக விமானத்தில் ஏறும் வழியில் நிறுத்தப்பட்டார்.

அஹ்மத் ஷா மசூத் Pic: thoughtco.com

அஹ்மத் ஷா மசூத் தலைமையில் வடக்குக் கூட்டணியின் படைகள் அவரைப் பாதுகாப்பதில் தலிபான்களை எதிர்த்துப் போரிட்டன. ஆனால், இங்கேயும் அஹ்மத் ஷா மசூத்தின் சொந்த அரசியல் நோக்கத்தை அடைவதற்கு நஜிபுல்லா பயன்படுத்தப்பட்டார். உரிய நேரத்தில் திறக்கத் தவறிய நாடுகளின் வாசற் கதவுகளின் பின்னால் அவநம்பிக்கையும் அச்சமும் சூழ்ந்திருந்த தலைநகரில் சிக்கித் தவித்த நஜிபுல்லா ஆப்கானிஸ்தானில் இருந்த ஐக்கிய நாடுகளின் வளாகத்தில் தஞ்சமடைந்தார்.

செப்டம்பர் 27, 1996 அன்று தலிபான்கள் ஐ.நா. வளாகத்திற்குள் நுழைந்து நஜிபுல்லாவை உயிருடன் இழுத்துச் சென்றனர். அவரது சகோதரர் ஷாஹ்பூர் அஹ்மத்ஸாயையும் பிடித்துச் சென்றனர். சித்திரவதைக்குள்ளான இருவரினதும் ரத்தம் வழியும் உடல்களைக் காபூல் தெருக்களில் டிரக் வண்டியில் கட்டி இழுத்துப் போனார்கள். காபூலில் உள்ள ஜனாதிபதி மாளிகைக்கு முன்னால் மின் கம்பத்தில் தூக்கிலிட்டும், துப்பாக்கியால் சுட்டுச் சல்லடை செய்தும் நஜிபுல்லாவும் அவரது சகோதரரும் கொல்லப்பட்டார்கள்.

நாளை முதல் புதிய சகாப்தம் தொடங்குகிறது என்ற செய்தியை தலிபான்கள் பொது மக்களுக்கு அறிவித்தார்கள்.

(தொடரும்)

கட்டுரையாளர்

ஸர்மிளா ஸெய்யித்

விதிவிலக்கான  துணிச்சலான சமூக செயற்பாட்டாளர்.  சமூக அநீதிகள் குறித்து அச்சமற்று விமர்சிக்கக்கூடியவர், எழுத்தாளர், கவிஞர். 
சிறகு முளைத்த பெண் (கவிதை 2012), 
உம்மத் (2014 நாவல்), 
ஓவ்வா ( கவிதை 2015), 
பணிக்கர் பேத்தி (நாவல் 2019), 
உயிர்த்த ஞாயிறு (2021 அனுபவம்) 
ஆகியன இவரது நூல்கள்.