முன்னர் குறிப்பிட்டபடி, தலிபான்களின் வியத்தகு நுழைவு ஆப்கானிய உள்நாட்டுப் போரின் திசையை மாற்றியது. புதிய வீச்சுடன் தற்போதுள்ள பெரும்பாலான ஆப்கானிஸ்தான் போராளிகள்/முஜாஹதீன்களை நசுக்கும் திறனுடன் வலுவான சக்தியாக உருவெடுத்த இரண்டு வருடங்களில் ஆப்கானிஸ்தானின் தலைநகரைக் கைப்பற்றி இறுதியில் அரசாங்கத்தை உருவாக்க முடிந்தது. செப்டம்பர் 1996இல் மசூத் ஆதரவு பெற்ற ரப்பானி அரசாங்கத்தைத் தலிபான்கள் அகற்றியதுடன் ஆப்கானிஸ்தான் வரலாற்றில் உள்நாட்டுப் போரின் புதிய கட்டம் தொடங்கியது. தலிபான்கள் அந்நாட்டுக்கு ஆப்கானிஸ்தானின் இஸ்லாமிய எமிரேட் என்று பெயரிட்டனர். ஆனாலும் போர் முடிவுக்கு வரவில்லை. காபூலை இழந்ததால் மசூத் ஈரான், ரஷ்யா ஆகிய நாடுகளிடமிருந்து ராணுவ உதவியைப் பெறத் தொடங்கினார். வடக்கு கூட்டணியும் ஏனைய எதிர்ப்புக் கட்சிகளும் ஒன்றிணைந்து தலிபான்களை எதிர்த்துப் போராடத் தொடங்கினர்.

மசூத் Pic: thoughtco

1997, 1998 முழுவதும் தலிபான்கள் தங்கள் அதிகரித்த லட்சியங்களுடன் நாட்டின் மற்ற பகுதிகளுக்கு, குறிப்பாக ஆப்கானிஸ்தானின் வடக்கு பகுதிக்குத் தங்கள் கட்டுப்பாட்டை விரிவாக்க பலமுறை முயற்சி செய்தனர்.

தோஸ்தம் Pic: wikipedia

தோஸ்தம் ஐந்து மாகாணங்களை உள்ளடக்கிய ஒரு சிறு மாநிலத்தைச் செதுக்கியிருந்தார். ஷிபர்கான் நகரின் மேற்குப் பகுதி மசார்–ஐ ஷெரீப் மிக முக்கியமானதாக இருந்ததுடன் தோஸ்தமின் தலைமையமும் அங்கு இருந்தது. ஐந்து மாகாணங்களின் பகுதிகளை உள்ளடக்கிய சிறு மாநிலத்தை தோஸ்தம் தனது தலைமையத்திலிருந்து நிர்வகித்தார். மே 19, 1997 அன்று 5,000 படைவீரர்களின் தளபதி தோஸ்தம் தலிபான்களால் கைது செய்யப்பட்டார். அவரது துணை ஜெனரல் அப்துல் மாலிக் பஹ்லவன் துரோகத்தனமாகத் தலிபான்களுடன் ஒப்பந்தம் செய்ததை அடுத்து இப்படியொரு வலையில் தோஸ்தம் வீழ்ந்தார். ஆனால், ஜெனரல் அப்துல் மாலிக் – தாலிபான் ஒப்பந்தம் நீடிக்கவில்லை. கூட்டணி விரைவில் சிதைந்தது. தலிபான்கள் மசார்-ஐ ஷெரீப்பில் நகரில் நுழைந்தபோது, ​​உள்ளூர் ஹசாராக்களை நிராயுதபாணியாக்க முயன்றனர். இது நகர வீதிகளில் நூற்றுக்கணக்கான தலிபான் வீரர்களின் மரணத்திற்கு வழிவகுத்தது. ஜெனரல் மாலிக்கும் ஹிஸ்ப்-ஐ வஹ்தத்தும் பழிதீர்க்கும் படலத்தில் 3,000 தாலிபான்களைக் கொன்றனர்.

அப்துல் மாலிக் பஹ்லவன் Pic: historica.fandom.com

இருந்தும் ஆகஸ்ட் 1998இல் தலிபான்கள் மசார்-ஐ ஷெரீப்பை முழுவதும் கட்டுப்படுத்தினர். இதன்போது ஹசாரா இனப் பொதுமக்களில் குறைந்தது 2,000 பேரை படுகொலை செய்தனர். இந்த ரத்தக்களரிகளால் தோஸ்தம், ஜெனரல் மாலிக் இருவரும் முறையே துருக்கி நாட்டுக்கும் ஈரானுக்கும் தப்பியோடினர்.

இந்த அத்தியாயங்களுக்குப் பிறகு, ஆப்கானிஸ்தான் ரட்சிப்புக்கான ஐக்கிய இஸ்லாமிய முன்னணி (United Islamic Front for the Salvation of Afghanistan) உருவாக்கப்பட்டது. ஆனால், தலிபான்களுக்கு எதிரான போராட்டம் தொடர்ந்தது. ஆப்கானிஸ்தான் மக்களின் துன்பங்களும் தொடர்ந்தன. தலிபான்கள் தொடர்ந்து தங்கள் பிராந்தியக் கட்டுப்பாட்டை நீட்டிக்கப் போராடினர். மிகவும் வலுவான அஹ்மத் ஷா மசூத்தின் படைகளுடன் மட்டுமல்லாது விளிம்பு நிலைப் போராளிகளுக்கு எதிராகவும் போராடினார்கள்.

டிசம்பர் 2000இல் ஹிஸ்ப்-ஐ வஹ்தாத், ஹர்கத்-ஐ இஸ்லாமி ஆகிய குழுக்கள் யாகோலாங் நகரத்தைக் கைப்பற்றினர். ஆனால், அவர்கள் அதை ஜனவரி 8, 2001 அன்று தலிபான்களிடம் இழந்தனர். நகரத்தைத் திரும்பப் பெற்ற பிறகு தலிபான்கள் குறைந்தது 178 பொதுமக்களைப் பழிவாங்கினார்கள். ஜனவரி முதல் ஜூன் வரை நகரின் ஆளுகை பல முறை கை மாறியது. கடைசியாகத் தாலிபான்கள் கைக்கே கிடைத்து. அவர்கள் பல கிராமங்களையும் எரித்தார்கள்.

ஆப்கானிஸ்தான் உள்நாட்டுப் போரின் இந்தக் கட்டத்தில், சர்வதேச சமூகம் பல்வேறு காரணங்களுக்காகப் பல முறை ஈடுபட்டது. அமெரிக்கா பின்லேடனை ஒப்படைக்கக் கோரியது. ஐக்கிய நாடுகள் சபையும் பெரும்பாலான ஏனைய நாடுகள் பாமியன் புத்தர்களை அழித்ததைக் கண்டித்தன. நைரோபியிலும் டார் எஸ்-சலாமிலும் அமெரிக்கத் தூதரகங்கள் மீது குண்டுவெடிப்பில் ஈடுபட்டதாகக் கூறி பின்லேடன் அமெரிக்காவால் தேடப்பட்டார். இந்தக் கோரிக்கையைத் தலிபான் அரசு நிராகரித்தது. பாகிஸ்தான் எல்லைக்கு அருகில் உள்ள பின்லேடனின் பயிற்சி முகாம்கள் மீது அமெரிக்கா வான்வழித் தாக்குதல் நடத்தியது. அக்டோபர் 1999இல், பின்லேடனைத் திருப்பிவிடாததற்காகத் தலிபான்கள் மீது ஐக்கிய நாடுகள் சபை தடை விதித்தது. மேலும் டிசம்பர் 9, 2000 அன்று தலிபான் அதிகாரிகள் மீதான பயணத்தடை, வெளிநாடுகளில் உள்ள தாலிபான் அலுவலகங்களை மூடுதல், ஆயுதத் தடைகள் போன்றவற்றையும் ஐக்கிய நாடுகள் சபை விதித்தது.

பின்லேடன் Pic: history.com

உலக வர்த்தக மையம், பென்டகன் மீதான 9/11 பயங்கரவாதத் தாக்குதல்களுக்குப் பிறகு ஆப்கானிஸ்தானினுள் அமெரிக்க ராணுவம் நேரடியாகத் தலையிட்டதுடன் இந்தக் கட்டப் போர் முடிந்தது. அகமது ஷா மசூத் செப்டம்பர் 9, 2001 அன்று தற்கொலைக் குண்டுதாரிகளால் படுகொலை செய்யப்பட்டார். ஆப்கானிஸ்தான் வரலாற்றில் ஒரு புதிய கட்டப் போர் தொடங்கியது.

அமெரிக்க அரசியல் 9/11 பயங்கரவாத தாக்குதல்களுடன் நவீன நோக்குநிலை கடுமையாக மாறியது. ஆப்கானிஸ்தான் பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடுவதற்கும் குற்றவாளிகளை நீதியின் முன் நிறுத்துவதற்கும் அமெரிக்காவும் அதன் கூட்டாளிகளும் ‘பயங்கரவாதத்திற்கு எதிரான போர்’ பிரச்சாரத்தை முதன்மை இலக்காக மாற்றினர். துக்கத்தின் போது உலகம் முழுவதும் அமெரிக்காவுடன் நின்றது. தாக்குதலுக்கு அடுத்த நாள் ஜனாதிபதி ஜார்ஜ் டபிள்யூ புஷ் தேசிய பாதுகாப்பு கவுன்சிலுடன் ஒரு சந்திப்பை நடத்தினார். அங்கு ’அமெரிக்கா ஒரு புதிய வித்தியாசமான எதிரி அல்லாதவருடன் போரில் ஈடுபட்டுள்ளது’ என்று வலியுறுத்தினார்.

ஜார்ஜ் டபிள்யூ புஷ் Pic: wikipedia

பயங்கரவாதத் தாக்குதல்களின் பொறுப்புதாரி அல் – காய்தா இயக்கத்தின் தலைவர் ஒசாமா பின்லாடனின் பாதுகாப்பான புகலிடமாக ஆப்கானிஸ்தான் அடையாளம் காணப்பட்டது. இவரைப் பிடித்துத் தர வேண்டும் என்று அமெரிக்க அதிகாரிகள் தலிபான்களிடம் கோரிக்கை விடுத்தனர். அமெரிக்காவின் கோரிக்கையைத் தாலிபான் அரசாங்கம் பொருப்படுத்தவில்லை, நிராகரித்தது. புஷ் நிர்வாகத்தின் பேச்சுவார்த்தைக் கோரிக்கைகளுக்கும் தலிபான்கள் இணங்கவில்லை. பயங்கரவாதச் செயல்களை ஆதரிக்கும் தாலிபான்களையும் ஆப்கானிஸ்தானில் உள்ள பயங்கரவாதக் குற்றவாளிகளின் பாதுகாப்பான புகலிடங்களையும் ஒழிப்பதற்கான அமெரிக்காவின் ராணுவத் தலையீட்டோடு ஆப்கானிஸ்தானின் நவீன ரத்தக்களரி துவங்கியது.

அக்டோபர் 2, 2001 அன்று, வட அட்லாண்டிக் ஒப்பந்த அமைப்பு (நேட்டோ) உறுப்பினர்கள், ’எந்த நேட்டோ கூட்டாளியின் மீதான தாக்குதலும் அனைவரின் மீதான தாக்குதலாகக் கருதப்படும்’ என்று கூறும் நேட்டோ சாசனத்தின் பிரிவு 5ஐ முறையாகப் பயன்படுத்தி போர்க்கால ராணுவக் கூட்டணியின் காலடியைப் பின்பற்றினர். ஆனால், நேட்டோ சாசனத்தில் இது தொடர்பான பிரிவு அறிமுகப்படுத்தப்படுவது இதுவே முதல் முறையாக இருந்தது.

தலிபான் அரசாங்கத்துடன் சர்வதேசமயமாக்கப்பட்ட மோதலின் புதிய சகாப்தம் ஆரம்பமானது.

(தொடரும்)

கட்டுரையாளர்

ஸர்மிளா ஸெய்யித்

விதிவிலக்கான  துணிச்சலான சமூக செயற்பாட்டாளர்.  சமூக அநீதிகள் குறித்து அச்சமற்று விமர்சிக்கக்கூடியவர், எழுத்தாளர், கவிஞர். 
சிறகு முளைத்த பெண் (கவிதை 2012), 
உம்மத் (2014 நாவல்), 
ஓவ்வா ( கவிதை 2015), 
பணிக்கர் பேத்தி (நாவல் 2019), 
உயிர்த்த ஞாயிறு (2021 அனுபவம்) 
ஆகியன இவரது நூல்கள்.