அந்தக் காலத்தில்… – 1

டிஸ்கோ சேலையும் சீட்டிப் பாவாடையும் உ ங்களுக்கு நினைவிருக்கிறதா? அந்தக் காலத்து ஆடை அலங்காரம் என்றதும் நம் அனைவரின் கண் முன்னேயும் விரிவது துணிக்கடைதான். துணிக்கடையின் உள்ளே நான்கு புறமும் துணியை இப்போது போல அடுக்கி வைத்திருப்பார்கள். நடுவில் பாய் விரித்து வைத்திருப்பார்கள். நாம் உட்கார்ந்து வாங்கலாம்.

கடைக்காரர் வருபவர்களை உட்காரச் சொல்லி எடுத்துக் கொடுப்பார். அங்கேயே பில்லும் வந்து விடும். பணம் கொடுத்தால், மீதி சில்லறைப் பணமும் கைக்கு வந்து விடும் இப்போது போல பில் வாங்க ஒரு இடம், பணம் கட்ட ஒரு இடம், துணி வாங்க ஒரு இடம் என அலைய வேண்டியிருக்காது. கூட்டமும் இவ்வளவு எல்லாம் இருக்காது. பொதுவாக மிக நீளமான துணியை ஒரு கனமான அட்டையில் சுற்றி வைத்திருப்பார்கள். அந்த அட்டையை எங்களுக்குப் பரீட்சை அட்டைக்கென தருவார்கள். அது தான் எங்கள்  clipboard! இவ்வாறாக துணி வாங்கப் போவதே அவ்வளவு இனிமையான நிகழ்வாக இருந்தது. 

ஒவ்வொரு துணிக்கடையின் வாசலிலும் ஒரு தையல்காரர் இருப்பார். பெண்கள் தங்கள் தெருவிலேயே தங்களுக்கென பெண் தையல் கலைஞர்கள் வைத்திருப்பார்கள். அதனால் அவர்கள் ஆண்களிடம் தைக்கமாட்டார்கள். ஆனால் குழந்தைகளுக்கு துணிக்கடை வாசலில் இருக்கும் தையல்காரரிடம் அளவு கொடுத்து தைக்கச் சொல்வார்கள். “என்று கிடைக்கும்?”, எனக் கேட்டால், “காலேஜ் பிரின்சிபால் 5 சட்டை தந்திருக்கிறார்; தாசில்தார் 10 சட்டை தந்திருக்கிறார்”, என அவர்களின் அலப்பறை சொல்லி மாளாது!

சிலரிடம் கொடுத்தால், அது நமது அக்காவிற்கு தைத்தது போல இருக்கும். கேட்டால், ‘வளரும் பிள்ளை என்பதால் பெரிதாகத் தைத்தேன்’, என்பார்கள். இதையும் மீறி புத்தாடை என்பது அவ்வளவு மகிழ்ச்சிகரமானதாக இருந்தது. 

சேலை 

‘சித்திரப் பூ சேலை சிவந்த முகம் சிரிப்பரும்பு’, ‘சின்னப்பொண்ணு சேலை செண்பகப்பூ போல’, ‘பட்டு வண்ண சேலைக்காரி’, ‘சேலை கட்டும் பெண்ணுக்கொரு வாசமுண்டு’, ‘நீ கட்டும் சேலை மடிப்புல நான் கசங்கி போனேன்டி’, ‘பஞ்சு மிட்டாய் சேலை கட்டி பட்டுவண்ண ரவிக்கை போட்டு’, ‘சேலையிலே வீடு கட்டவா’, என சேலை குறித்துப் பல பாடல்கள் திரைப்படங்களில் வந்துள்ளன.

சேலை, தைக்காமல் அப்படியே சுற்றிக் கட்டும் உடை என்பதால், மிகவும் பழமையானதாக, தைக்கும் முறை அறிமுகமாவதற்கு முன்பே புழக்கத்தில் வந்திருக்க வேண்டும். சேலையின் அளவில் உடுத்தும் முறையில் வேறுபாடு இருந்திருக்கலாம்.

சின்னாளபட்டி சேலை

சின்னாளபட்டியில் நெய்யப்படும் சுங்குடி சேலைகள் புகழ் மிக்கவை. சுங்கு என்ற தெலுங்கு சொல்லுக்குப் ‘புடவையின் மடிப்பு’ எனப் பொருள். சின்னாளப்பட்டியில் இந்த சேலைகள் நெய்யப்படுவதால், எங்கள் பாட்டிகள் இதை ‘சின்னாளம்பட்டு’ என்றே அழைப்பார்கள். என் அப்பம்மாவிற்கு மிகவும் பிடித்த சேலை ரகம் இது. அவர்கள் காலத்தில் திருமணம் போன்ற நிகழ்வுகளுக்கு கூட சின்னாளம்பட்டுதான் வாங்குவார்களாம். 

சின்னாளம்பட்டு

கண்டாங்கி

‘கண்டாங்கி…கண்டாங்கி…கட்டி வந்த பொண்ணு’, ‘கண்டாங்கி சேலை கட்டி’, ‘கண்டாங்கி சேலை தங்கமே தங்கம்’, ‘கண்டாங்கி சேலை கட்டி கனகாம்பரம் பூவை வெச்சி’, ‘மாட்டிகிட்டாரடி மயிலக்காளை கட்டிபோட்டதடி கண்டாங்கி சேலை’, ‘என்னடி ராக்கம்மா…’, ‘சின்னாளப்பட்டியிலே கண்டாங்கி எடுத்து என் கையாலே கட்டி விடவா’, ‘என்னடி முனியம்மா உன் கண்ணுல மையி…’, ‘கண்டாங்கி சேலை கட்டி கைநிறைய கொசுவம் வச்சு இடுப்புல சொருவுறியே கண்ணாம்மா அது கொசுவமல்ல என் மனசு பொன்னம்மா’, என கண்டாங்கி சேலை குறித்துப் பல பாடல்கள் திரைப்படங்களில் வந்துள்ளன. என் அப்பம்மா போன்ற அந்தகாலப் பாட்டிமார் பெரும்பாலும் ‘கண்டாங்கிக் கட்டில்’ சேலை கட்டுவார்கள். பெரும்பாலும் செட்டிநாட்டில் நெசவு செய்யப்படும் பருத்தியிலான பல வண்ண கட்டம் போட்ட சேலைகளை பின் கொசுவம் வைத்து, முழங்கால் தெரிய இந்தக் ‘கண்டாங்கிக் கட்டு’ கட்டுவதுண்டு.

கொசுவம் வைத்து சேலை கட்டும் முறைதான் பெரும்பாலும் நடைமுறையில் இருந்திருக்கிறது. அதை அவர்கள் தோள் சேலை என்பார்கள். என் அப்பம்மா, கொசுவம் வைத்து சேலை கட்டியவர்களைத் ‘தோள் சேலைக்காரி’ என்றும் இப்போது போல  சேலை உடுத்தியவர்களைத்  ‘தாவணிக்காரி’ என்றும் தாவணி போட்டவர்களை ‘ஒத்தை தாவணிக்காரி’ என்றும் குறிப்பிடுவார்கள். அந்த முறை எப்போது மாறியது எனத் தெரியவில்லை.

அந்த காலகட்டத்தில், பெட்டிக்குள் நான்கு சேலை இருந்தாலே அவர் பணக்காரராம். ஊரில் திருவிழாவிற்கு மட்டுமே சேலை வாங்கும் நடைமுறை இருந்தது.

பலரும் பெட்டியில் ஒரு நல்ல சேலைதான் வைத்திருப்பார்களாம். அதைத்தான் ஞாயிறு பூசை என்றாலும் சரி, திருமண வீடாக இருந்தாலும் கட்ட வேண்டுமாம்.  திருவிழா நெருங்கும்போது வழக்கமாகக் கட்டுவதற்கு வைத்திருக்கும் இரு சேலை ஒன்றாகி விடுவதும், குளிக்கும்போது துவைத்துக் கட்டுவதுமாக ஆகிவிடுமாம். அதனால் சேலை என்பது மிகவும் மதிப்புடைய பரிசாக இருந்திருக்கிறது. இப்போதோ நம்மில் பலரிடம் நூற்றுக்கணக்கான சேலைகள் உள்ளன.

கொடிகராச்சி

என் அம்மா காலத்தில் ‘கொடிகராச்சி’ என ஒரு வகை சேலை திருமணங்களுக்கு உடுத்துமளவுக்கு உயர்ந்த ரகமாக இருந்தது. அது கராச்சியில் (பாகிஸ்தான்) இருந்து வந்த சேலை வகை. நாட்டு விடுதலை கிடைத்து 15 -20 ஆண்டுகள் வரை இந்த சேலைகள் பிரபலமாக இருந்திருக்கின்றன. சேலை முழுவதும், சிறு இலைகள் கொண்ட கொடியும் கொஞ்சம் பெரிதான (ஒரு ரூபாய் நாணயம் அளவு) பூவுமாக இருக்கும். 

ஏறக்குறைய இந்த சேலையில் பூவுடன் கொடி இருந்தால் எப்படி இருக்குமோ, அப்படி இருக்கும். சேலை முழுவதும் வெள்ளி சரிகை சேலையின் நிறத்தை சிறிது குறைத்து காட்டும். அதே நேரம் சரிகை நிறமும் சேலையின் நிறமும் இணைந்து பார்ப்பதற்கு அவ்வளவு அழகாக இருக்கும்.

பிற்காலத்தில் அந்த சேலையை பழைய பொருட்கள் வாங்குபவர்கள் மிகவும் விருப்பப்பட்டு வாங்குவார்கள். 80களில் யார் வந்தாலும், ‘கொடிகராச்சி சேலை இருக்கிறதா?’, எனக் கேட்பார்கள். பெரும்பாலும் அவை திருமண சேலைகளாக இருந்ததால், பெண்கள் திட்டுவார்கள். ஏனென்றால் பெரும்பாலும் கணவனை இழந்த பெண்கள் தான் அதை விற்பார்கள். மற்ற பெண்கள் பெரும்பாலும் உள்ளூர் திருவிழாவின் பத்தாம் திருவிழா அன்று அதைத்தான் கட்டுவார்கள். 60களில் நூறு ரூபாய்க்கு வாங்கிய சேலைகளுக்கு 80களில் ஐநூறு ரூபாய் வரை கிடைத்ததாக நினைவு.

பட்டுச் சேலை

70களுக்குப் பின் கொடிகராச்சி சேலைகள் இருந்த இடத்திற்குப் பட்டுச் சேலைகள் வந்தன. ‘பட்டுச் சேலை காத்தாட’ எனப் பட்டுசேலை குறித்துப் பல பாடல்கள் திரைப்படங்களில் வந்துள்ளன. ‘சின்னச் சின்ன இழை பின்னி வருகுது… சித்திரைக் கைத்தறி மின்னி வருகுது…’, என்ற பாடலை எழுதுவதற்காக, பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரனார் காஞ்சிபுரத்தில் தங்கியிருந்திருக்கிறார். சீரான தறிகளின் ஓசைதான் அவரது பாடலுக்கான தாளத்தைக் கொடுத்துள்ளது.

பட்டின் தாயகமாகச் சீனா கருதப்பட்டாலும், நம்மிடம் பட்டு சேலை உடுத்துவது ஒரு பெருமைக்குரியதாகவே கருதப் படுகிறது. எங்கள் ஊரில் நிச்சயதார்த்தத்தைக் கூட ‘பட்டு கட்டுதல்’ என்று தான் சொல்வார்கள். 

தமிழகத்தில் பல்வேறு இடங்களில் பட்டு சேலை நெய்யப் பட்டாலும், காஞ்சிபுரம் பட்டுதான் அவற்றின் சிகரமாக உள்ளது. ‘காஞ்சிப் பட்டுடுத்தி கஸ்தூரி பொட்டு வைத்து’ போன்று காஞ்சிப் பட்டு சேலை குறித்தப் பல பாடல்கள் திரைப்படங்களில் வந்துள்ளன. 

காஞ்சிப்பட்டில் முந்தானை தனியாக நெய்து இணைக்கப்படும். அதனால், அதைப் பார்த்துதான் வாங்குவார்கள். 70களில் திருமண சேலைகளாக பெரும்பாலும் மாம்பழ நிறத்தில் பச்சை பார்டர் போட்ட சேலைகளே இருந்திருக்கின்றன. திருவிழாவின் பத்தாம் திருவிழா அன்று பலர் கட்டிப் பார்த்திருக்கிறேன். 

மாம்பழ வண்ணத்தில் பச்சை பார்டர் போட்ட பட்டுச்சேலை

தர்மாவரம் சேலை

காஞ்சிப்பட்டுகளுக்கு இணையாக ‘தர்மாவரம்’ சேலைகள் வாங்கும் வழக்கமும் இருந்தது. தர்மாபுரத்தைத் தான் தர்மாவரம் என்கிறார்கள் என நினைத்தேன். ஆனால் ஊர் பெயரே தர்மாவரம் தான். ஆந்திராவில் உள்ள ஊர். தர்மாவரம் சேலை, காஞ்சிபுரம் சேலையை விட சிறிது விலை குறைவு. ஆனால் பார்க்க மிகவும் வசீகரமாக இருக்கும். அதனால்கூட பலரின் தேர்வாக  இருந்தது. அது மிகவும் ‘பளிச்’ என பகட்டாக இருக்கும். அந்த வகை துணிதான் இப்போதும் பெரும்பாலும் அம்மனுக்கு சாத்துவார்கள் என நினைக்கிறேன். 

உடுமாற்று சேலை

‘உடுமாத்து சேலை’ எனப்படும் தினசரி உடுத்துவதற்கான சேலைகள் பல விதத்தில் இந்த காலகட்டத்தில் வந்து விட்டன. வாயில், ஃபுல் வாயில், உல்லி, ஜார்ஜெட், ஷிபான், பூனம் என பல வகை சேலைகள் புழக்கத்திற்கு வந்தன. பெரிய பெரிய பூ போட்ட சேலைகள் பிரபலமாக இருந்தன. வாயில், ஃபுல் வாயில் இரண்டும் பருத்தி சேலைகள். ஃபுல் வாயில் கொஞ்சம் விலை அதிகம். ஆனால் நீள அகலம் நிறைய இருக்கும். அதனால் கொஞ்சம் வளர்ந்தவர்கள் வாங்குவார்கள்.  

ஃபுல் வாயில் சேலை

உல்லி, ஜார்ஜெட், ஷிபான், நைலக்ஸ் சேலை போன்றவை செயற்கை இழைகளும் சேர்த்து செய்யப்பட்ட ஆடை ரகங்கள். ஆனால் கஞ்சி போட வேண்டியதில்லை. அதனால் அவரவர் வசதிக்கேற்ப தேவைக்கேற்ப இவற்றைப் பெண்கள் வாங்கினார்கள்.

80கள் காலகட்டத்தில், திருமண சேலைகளாக பெரும்பாலும் மாம்பழ நிறத்தில் பச்சை பார்டர் போட்ட சேலை என்ற நிலை மாறி, மெரூன் நிறம் என ஆனது. மைசூர் சில்க், பின்னி சில்க், பனாரஸ் பட்டு போன்ற சேலைகள் பிரபலமாக இருந்தன. கட்டினால் வெடவெடவென நிற்கக்கூடிய கோட்டா காட்டன் சேலைகள் இளம் பெண்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தன.

பனாரஸ் பட்டு
கோட்டா காட்டன் சேலை

60கள் வரை கொழும்பு சேலைகளும், 70களில் மலேயா/ பாம்பே  சேலைகளும் பெரிதாக பேசப் பட்டன. 80கள் காலகட்டத்தில் பலர் வளைகுடா நாடுகளுக்கு வேலைக்குச் சென்றனர். அவர்கள் அங்கிருந்து கொண்டு வந்த சேலைகளுக்கு இருந்த மதிப்பு சொல்லி மாளாது. அவர்கள் கொண்டு வந்த ஜார்ஜெட் சேலைகளுக்கு ‘அமெரிக்கன் ஜார்ஜெட்’ என பெயர். அமெரிக்காவுக்கும் சேலைக்கும் எந்த தொடர்புமில்லை என யாருக்கும் தெரியாது! ஏதோ அமெரிக்காவில் இருந்து வந்தது போன்ற உணர்வுதான் இருந்தது. அங்கிருந்து வரும், பார்க்க கொஞ்சம் பளிச் என அழகாகவே இருக்கும் என்பதும் உண்மைதான். 

80களின் நடுவில் ‘சைனா சில்க்’ என ஒரு வகை சேலை வளைகுடா நாடுகளில் இருந்து வந்தது. பளபளப்பு என்றால் அவ்வளவு பளபளப்பாக இருக்கும்.

சைனா சில்க்

அதே காலகட்டத்தில் டிஸ்கோ சேலை என ஒரு வகை சேலை வந்தது. ஒரே நிற மெல்லிய சேலையின் அடிப்பக்கம் மட்டும் கொஞ்சம் பெரிதான இரண்டு மூன்று ரிப்பன்கள் வரும். ரிப்பன்களுக்கு இடையில், மெல்லிய வெள்ளி நிற இழைகள் வரும்.

டிஸ்கோ சேலை

கொஞ்ச நாள் கழித்து அதே டிஸ்கோ சேலை பூ போட்டும் வரத் தொடங்கியது.

பூப்போட்ட டிஸ்கோ சேலை

80களின் இறுதியில், தொலைக்காட்சியில் மகாபாரதம் ஒளிபரப்பப் பட்டது. அதனால் இந்த நிற சேலை ‘திரௌபதி சேலை’ என மிகவும் புகழ் பெற்று இருந்தது. 

திரௌபதி சேலை

சர்வோதயப் பட்டு

எங்கள் ஊர் சர்வோதயத்தில் மிக நேர்த்தியான பட்டு விற்பார்கள். அங்கு சாயம் போடுதல், பாவு சரிசெய்தல், இழைச் சிக்கெடுத்தல், நெய்தல் என ஓராயிரம் வேலை செய்வார்கள். சாலை அருகில் எல்லாம் பாவு வைத்து இழைச் சிக்கெடுப்பார்கள். பட்டு வேறு ஊரில் நெய்துதான் வரும் என நினைக்கிறேன். விலை சிறிது உயர்வு போலத் தெரியும். ஆனால், தரத்தில் அதை அடிக்க முடியாது. தொட்டுப் பார்த்தால் ‘பட்டுப் போல்’ என சொல்லுவதற்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டாக, மிக மிக மிருதுவாக இருக்கும். கட்டினால், உடலோடு இணைந்து அவ்வளவு பாந்தமாக இருக்கும். என்னிடம் இருக்கும் சேலைகளிலேயே எனக்குப் பிடித்த ரகம் சர்வோதயப் பட்டு ரகம் தான்.  

சர்வோதயப் பட்டு

90களில் பிறகு சல்வார் சேலையின் இடத்தை ஆக்கிரமித்துக் கொண்டது. ‘செந்தமிழ் நாட்டு தமிழச்சியே சேலை உடுத்த தயங்கிறியே’ என புலம்பிய கவிஞர்களும்  சட்டென்று சுரிதாருக்கு மாறி, ‘சுடிதார் அணிந்து வந்த சொர்க்கமே’ என மாறிவிட்டார்கள். மாற்றம் ஒன்றே மாறாதது. இருந்தாலும் இன்னமும் விழாக்கால உடையாக சேலையே உள்ளது. இப்போது ஆங்காங்கே திருமண உடையாக வெள்ளை கவுன் வந்து விட்டாலும், வரவேற்பு என்றாவது சேலை கட்டத்தான் செய்கிறார்கள். சேலை வாங்குவதற்கான ஆர்வம் மட்டும் அப்படியேதான் இருக்கிறது. குறையவே இல்லை. 

பாவாடை தாவணி

‘பாவாடை தாவணியில் பார்த்த உருவமா’, என நாயகன் வியந்து பார்க்கும் நாயகி, ‘பூப்போட்ட தாவணி போதையில் ஆடுதே’, என தாவணி இல்லாமல் வேறு ஆடையில் ஆடும் நாயகி, ‘தாவணி போட்ட தீபாவளி வந்தது என் வீட்டுக்கு’, ‘ஆடி போனா ஆவணி அவ ஆளை மயக்கும் தாவணி’, பாடும் நாயகன், ‘பட்டுப் பாவாடை எங்கே கட்டி வைத்த கூந்தல் எங்கே பொட்டெங்கே பூவும் எங்கே சொல்லம்மா சொல்லம்மா’, என புலம்பும் நாயகன் என பாவாடை தாவணி, திரையலக கவிஞர்களின் மனதில் நீக்கமற நிறைந்து இருக்கிறது.

தாவணி சுமார் இரண்டு /இரண்டரை மீட்டர் நீளம் கொண்ட மேலாடை. சிறு அளவிலான சேலை என எடுத்துக் கொள்ளலாம். 80களின் இறுதி வரை பாவாடை தாவணி திருமணமாகா இளம் பெண்களின் ஒரே ஆடை வகையாக இருந்தது. 

பெண்கள் வயதுக்கு வருவதற்கு முன்பே தாவணிபோடும் வழக்கம் இருந்தது. இல்லையென்றால், ‘தோளில் சேலை போடாமலேயே வயதுக்கு வந்து விட்டாள்’, எனப் பேசுவார்கள். அப்போது பெண்கள் வயதுக்கு வரும் வயது சராசரியாக பதினான்காக இருந்தது. பெண்ணின் உடல் வளர்ச்சியைக் கணக்கிட்டு, தீபாவளி, பொங்கல், ரம்சான், கிறிஸ்துமஸ் போல ஏதோ ஒரு நல்ல நாளில் தாவணி வாங்கிக் கொடுத்து, போடச்சொல்லுவார்கள். முதல் நாள் பார்ப்பவர்கள் எல்லாம், ‘தாவணி போட்ட மாமி, உன் தலையைக் கொஞ்சம் காமி’ என கேலி பேசுவார்கள். அதன் பிறகு தாவணி இல்லாமல் வெளியே செல்வதில்லை. 

70களின் பாவாடை தாவணி என்றதும் எனக்கு சட்டென்று நினைவுக்கு வருவது 16 வயதினிலே திரைப்பட ‘செந்தூரப்பூவே பாடல்’ தான். 80களின் இறுதியில் வந்த செந்தூரப்பூவே திரைப்பட ‘செந்தூரப்பூவே’ பாடலும் பாவாடை தாவணிக்கு சிறந்த எடுத்துக்காட்டான பாடல்தான். முதல் பாடலில் பாவாடை சட்டை தாவணி என முழுக்க முழுக்க வெண்ணிற ஆடை. இரண்டாவது பாடலில் பாவாடை சட்டை ஒரு நிறமாகவும் தாவணி வேறு நிறமாகவும் இருக்கும். ‘தங்கச்சங்கிலி மின்னும் பைங்கிளி’ (தூறல் நின்னு போச்சி) பாடலில் நாயகியின் சட்டை தாவணி ஒரு நிறமாகவும் பாவாடை வேறு நிறமாகவும் இருக்கும். ‘பூவரசம்பூ பூத்தாச்சு’, ‘கோவில் மணி ஓசை’ (கிழக்கே போகும் ரயில்) பாடல்களில் மூன்றும் மூன்று நிறமாகவும் இருக்கும். ஒவ்வொன்றும் ஒவ்வொரு அழகு தான். நாங்கள் எல்லா வகையாகவும் அணிந்திருக்கிறோம் என்றாலும் பூக்களிட்ட பாவாடைகள், பூக்களின் நிறத்தில் தாவணி சட்டை என்பதுதான் பரவலாக இருந்தது. 

70கள் வரை கூட, பழைய சேலைகள் தாவணியாக மாறியதே அதிகம். கிழிந்த சேலையின் கிழியாத பகுதி தாவணியாக மாறிவிடும். சில வீடுகளில் ஒரு சேலையைப் பாவாடையாகவும் தாவணியாகவும் மாற்றி விடுவார்கள். புதிதாக தாவணி வாங்கினாலும், பூ போட்ட தாவணிதான் வாங்குவார்கள்.

80களின் தொடக்கத்தில் இருந்தே தாவணி என்றால் கடையில் துணி வாங்குவது என்பது நடைமுறைக்கு வந்துவிட்டது. ‘பூப்போட்ட தாவணி’, என்ற பாடல் நான் கல்லூரியில் படிக்கும் போதுதான் வந்தது. ஆனால் அந்த காலகட்டத்தில் பூப்போட்ட தாவணி ஏறக்குறைய நாங்கள் அணிந்ததில்லை என்றே சொல்லலாம். 

புகைப்படங்கள் காட்டும் தாவணி ஸ்டைல்!

பள்ளிப் புகைப்படங்கள் அதன் வரலாற்றை சொல்லும். என்னை விட 6 வயது மூத்தவர்கள் (முதல் படம்) புகைப்படத்தைப் பார்த்தால், அனைவரும் பூப்போட்ட தாவணி அணிந்திருக்கின்றனர். 4 ஆண்டு மூத்தவர்களில் (இரண்டாவது படம்) சிலர் மற்றும் பூப்போட்ட தாவணி அணிந்திருக்கின்றனர். எங்கள் வகுப்பில் யாருமே பூப்போட்ட தாவணி அணியவில்லை. ஃபேஷன் எவ்வளவு விரைவில் மாறியிருக்கிறது என்பதையும் இந்த புகைப்படங்கள் சொல்கின்றன. முதல் இரண்டு புகைப்படங்களில் யாரும் தாவணியை பின் பண்ணவில்லை. ஆனால் மூன்றாவது புகைப்படத்தில் அனைவரும் தாவணியை பின் பண்ணியிருக்கிறார்கள்.

1978 (SSLC யின் கடைசி வகுப்பு. இதன் பின் +2 வந்து விட்டது. பிற்காலத்தில் கலர் ஆக மாற்றப் பட்ட கருப்பு வெள்ளை புகைப்படம்)
1981
1985 (பிற்காலத்தில் கலர் ஆக மாற்றப்பட்ட கருப்பு வெள்ளை புகைப்படம்)

என் வகுப்பில் யாரும் பட்டுப் பாவாடை கட்டி நான் பார்த்ததுகூடக் கிடையாது.

பட்டு என்பது மிக விலை உயர்ந்தது என்பதால், குறைந்தது 25 ஆண்டுகளாவது பயன்படுத்தும் விதமாகவும் இருக்க வேண்டும் என்பதற்காக சேலையாகத்தான் வாங்குவார்கள். அதனால் பட்டு பாவாடை வாங்கும் வழக்கமே கிடையாது! 

சீட்டிப் பாவாடைகள்

பெரிய பெரிய பூக்களிட்ட சீட்டிப் பாவாடைகள், பூக்களின் நிறத்தில் தாவணி சட்டை என்பதுதான் பலரின் உடையாக இருந்தது. சீட்டி என்பது கெட்டித்துணி வகை. ஏறக்குறைய இன்றைய தலையணை உரை துணி போல இருக்கும். தாவணி, சட்டை தைக்கும் அளவிற்கானதாக, ரொம்ப மெல்லியதாக இல்லாமல் இருக்கும். காட்டன் பாப்ளின், லினென், கிரேப், 2 பை 2, புல் வாயில் போன்ற துணிகளில் அது இருக்கும்.

அப்போதே சென்னை போன்ற நகரத்தில் இருந்தவர்கள், மெல்லிய ஜார்ஜெட் தாவணியும் அதே நிறத்தில், சிறிது கனமான துணியில் சட்டையும் தைத்துப் போட்டார்கள். அவர்களின் தாவணி 2 ½ மீட்டரும் எங்கள் தாவணி 2 மீட்டரும் இருந்தது. நாங்கள் கனமான துணியில் தாவணி அணிவதால், ‘கோணியை சுற்றி இருக்கிறீர்கள்’, என கேலி செய்வார்கள். இதுவும் ஒருவிதமான discrimination தான்!

சீட்டி துணியிலேயே பாவாடை ஒரு தைப்பதற்கான தனி பாவாடை துணியும் உண்டு. அது சிறிது விலை கூடுதலாக இருக்கும். அது பெரும்பாலும் கீழே பெரிய பூக்களும் மேலே செல்ல செல்ல சிறிய பூக்களுமாக இருக்கும். உயரம் ஒரே அளவாகத் தான் இருக்கும். அதனால் குட்டையாக இருப்பவர்களுக்குத் துணி நிறைய விரயமாகும் என வாங்க மாட்டார்கள். 

80 களில் வளைகுடா நாடுகளில் இருப்பவர்கள் தங்கள் மகள்களுக்குப் பளபளப்பான பாலிஸ்டர் பாவாடைத் துணி கொண்டு வருவார்கள். இந்த துணி, ஏறக்குறைய இன்றைய curtain துணி போல இருக்கும். அதன் உயரம் மிக அதிகமாக இருக்கும் அதனால் அதில் சட்டை தைத்துக் கொள்வார்கள். அதனால் அவர்கள் பெரும்பாலும் சட்டையும் பாவாடையும் ஒரே துணியில், தாவணி பாவாடையின் பூ நிறத்தில் என போடுவார்கள்.

கறுப்பு நிறப் பின்னணியில் வெளிர் மஞ்சள் பூவுடன் பாவாடை மஞ்சள் நிற தாவணி/ சட்டை மற்றும் வெள்ளை நிறப் பின்னணியில் மெரூன் பூவுடன் பாவாடை வெள்ளை நிற தாவணி/ சட்டை, காம்பினேஷன் மிக அழகாக இருக்கும். சில நாள்கள் அனைவரும் சொல்லி வைத்து ஒரே நிற ஆடை, அதே நிறத்தில் பூ என போவோம். பையன்கள் எங்களைப் பார்த்து ‘இன்று பிள்ளைகள் குரூப் டான்ஸ் ஆடப்போகிறார்கள்’ எனச் சொல்லுவான்கள். நாங்களும் சிரித்தவாறே கடந்து விடுவோம். இப்பொழுது சிறு குழந்தைகளுக்கு பாவாடைத் தாவணி அணிவிப்பது போன்ற வழக்கம் எல்லாம் அப்போது கிடையாது.

தொடரும்…

படைப்பாளர்:

பாரதி திலகர்

தீவிர வாசிப்பாளர், பயணக் காதலர்; தொன்மை மேல் பெரும் ஆர்வம் கொண்டவர். அயல்நாட்டில் வசித்து வந்தாலும் மண்ணின் வாசம் மறவாமல் கட்டுரைகள் எழுதிவருகிறார்.