சும்மா இல்லாததையும் பொல்லாததையும் சொல்லி ஆண் சமூகத்தைப் பழிப்பது எனக்குக் கிஞ்சித்தும் பிடிப்பதில்லை. இந்தப் பெண்ணியவாதிகளைப் பாருங்கள், ஆண்கள் தின்கிற சோறு முதல் ஏறுகிற பாடை வரை எல்லாவற்றிலும் பெண்களை அடிமைப்படுத்தும் போக்கு இருப்பதைச் சுட்டிக் காட்டிக்கொண்டே இருக்கிறார்கள்.

அதுவும் நம் தமிழ் சினிமாக்களில் ஆணாதிக்கம் நீக்கமற நிறைந்திருக்கிறதாம். பெண்களை எந்தத் திறமையும் இல்லாத பதுமைகளாகத் தான் காலங்காலமாக நம் தமிழ் சினிமாக்கள் காட்டி வந்துள்ளன என்பதை நான் முற்றாக மறுக்கிறேன்.


ஒற்றை ஆள் பறந்து பறந்து நூறு பேரை அடித்துத் தள்ளும் ஹீரோவின் சாகசங்களுக்கு நிகராகப் பெண்களையும் பெரும் சாகசக்காரிகளாகவே காட்டி வந்துள்ளது தமிழ் சினிமா.

உடைகள்

எம்ஜிஆர் சரோஜா தேவி நடித்த படமொன்று. சரோஜா தேவியின் உடை கிழிந்து விட எம்ஜிஆர் தன் பேன்ட் சட்டையை அவருக்குக் கொடுத்து விட்டுப் பதிலுக்கு சரோஜாவின் உடைகளை வாங்கிக் கொள்வார். எம்.ஜி.ஆர் சூப்பர் ஹீரோ அதனால் அவருக்கு எது வேண்டுமானாலும் பொருந்தும். ஆனால் 56 இன்ச் எம்.ஜி.ஆரின் சட்டையும் பேன்டும் சரோஜா தேவி அணிந்து வரும் போது அவருக்குச் சிக்கென்று பொருந்தி இருக்கும்.

சின்ன வயதில் இதைப் பார்த்த போது அண்ணன், அக்காவின் பழைய சட்டைகளைத் தொள தொளவென்று மாட்டிக்கொண்டு திரிந்தவளுக்கு மிகப்பெரிய மாயாஜாலமாகத் தோன்றியது.

எப்படி இது? கையோடு ஊசி நூல் கொண்டு பிடித்து விட்டிருப்பாரா என்று குழம்பி இருக்கிறேன்.

இது மட்டுமல்ல, எங்கே எந்த இக்கட்டான சூழலிலும் புதிதாகக் கடையிலிருந்து வாங்கிவந்த புடவையைக் கொடுத்தாலும் சரி, அதற்குப் பொருத்தமாகத் தைக்கப்பட்ட ரவிக்கையுடன், பூ, மேட்சிங் நகைகளுடன் இரண்டே நிமிடங்களில் நாயகன் முன் தோன்றிப் பரவசப்படுத்தி விடுவார்கள்.

சூர்யவம்சம் படத்தில் தேவயானி ஒரே புடவை அணிந்திருக்கிறாரே என்று எண்ணி இரண்டு புடவைகள் மட்டும் சரத்குமார் வாங்கி வருவது அதனால் தான். பெட்டிகோட், உள்ளாடைகள், ரவிக்கைகள் எல்லாம் தேவயானியால் தானே மந்திரசக்தி மூலம் வரவழைத்துக்கொள்ள முடியுமல்லவா?



அது மட்டுமா? கொடும் குளிர் தாக்கும் பனிச்சாரல்களில் ஆடிப்பாடும் போது கனவென்றாலும் நாயகருக்குக் கம்பளி கோட்டும் பூட்ஸும் தேவைப்படுகையில், சென்னை வெயிலில் அணிவது போல் கையில்லாத கவர்ச்சி ரவிக்கைகளும் கொலுசு மட்டும் அணிந்த பாதங்களுடனும் நம் நாயகியர் முகமலர்ச்சியுடன் ஆடிப்பாடுவதைக் கண்டதில்லையா?


மழையில் நனைந்தாலும், ஆற்றில் குளித்தாலும் லிப்ஸ்டிக், ஐஷேடோ, ரூஜ், காஜல் என்று ஓர் ஐட்டம்கூடச் சிறிதும் கலையாமல் இருப்பது. தூங்கி எழுந்து சிரித்தாலும் பற்கள் ஹேப்பிடென்ட் விளம்பரம் போல் பளீரிடுவது எல்லாம் Empowerment இல்லாமல் என்னவாம்?

சமையல்

சூர்யவம்சத்தில் ஒரே பாட்டில் கலெக்டராவது, பிள்ளை பெறுவது என்று பல வேலைகள் இருந்ததால் சமையல் எதார்த்ததுக்கு நெருக்கமாக இட்லி உப்புமாவாகிப் போனது. ஆனால், பொதுவாக நம் ஹீரோயின்கள் திருமணமான பத்தே நிமிடங்களில் மேஜை நிறைய ஊர்வன, பறப்பன, நடப்பன எல்லாவற்றையும் சமைத்து இலையையும் போட்டுவிட்டுக் காத்திருப்பார்கள். அதுகூடப் பெரிய சாதனையில்லை; ஆனால், பாருங்கள், சாப்பிடுவதற்குள் ஏதோ சஞ்சலம் நிகழ்ந்து பரிமாறிய சோற்றிலேயே நாயகன் கை கழுவும்போது, செவிளைக் காட்டி ஒன்று விடாமல் அமைதி காப்பதெல்லாம் நிஜவாழ்வில் எந்தப் பெண்ணாலும் இயலாத அசுரத்தனமான சாதனை.

முடி

திருமணமாகும் வரை நாயகியின் சிகையானது பலவித நிறங்களிலும் சுருள்சுருளாகவும் முன்நெற்றியில் புரண்டும் பல ரூபங்களில் விளையாடும். கழுத்தில் தாலி ஏறிய அடுத்த நிமிடம் நாயகியின் புட்டம் வரை கூந்தல் இறங்கிவிடும். அவர் உடலிலும் அடுத்து சேலையைத் தவிர வேறெந்த உடையும் ஏறாது.

இதெல்லாம் பிரமிக்கத்தக்க‌ திறமைகள் இல்லையா? இவற்றில் ஒன்றைக்கூட நீங்கள் நாயகனிடம் காண முடியாது.

Last but not the least

வில்லன் காமச் சிரிப்புடன் மெல்ல நெருங்கும் போது தப்பிக்க வழி இருந்தாலும் கூட சடாரென்று தரையில் விழுந்து அவனை நோக்கி, “விட்ரு விட்ரு” என்று கெஞ்சுவதன் மூலம் மானசீகமாக நாயகனைப் பறந்து வரச் சொல்லும் கற்பின் சக்தி நம் சினிமா நாயகிகளுக்கு மட்டுமே உண்டு.
இதை வேறு விதமாகவும் பார்க்கலாம். வில்லன் கட்டிப் போட்டுத் தீயில் நிற்க வைத்துத் துப்பாக்கியை நெற்றிப் பொட்டில் வைத்தாலும், விஷத்தண்ணீர் குடிக்கும்படி கொடுமை செய்தாலும். “என் பையன் நிச்சயம் வந்துருவான்!” என்று நம்பிக்கையுடன் உறுதியாக இருப்பார்கள். பாசிடிவ் திங்கிங்குக்கு ரூம் போட்டு வகுப்பெடுக்கும் தகுதி வாய்ந்தவர்கள் நம் தமிழ் சினிமா தாய்மார்கள்.

இப்போது சொல்லுங்கள் இவ்வளவு சக்தி வாய்ந்தவர்களாகப் பெண்களைச் சினிமாவில் காட்டுகிறார்கள். நாம் அதைப் பார்த்துக் கற்றுக் கொள்வதை விட்டுச் சும்மா புலம்பிப் பயனில்லை.

படைப்பாளர்

ஜெ.தீபலட்சுமி

பெண்ணிய செயற்பாட்டாளரும் எழுத்தாளருமான ஜெ.தீபலட்சுமி தொடர்ச்சியாக பெண்ணுரிமைக் குரலை எழுப்பி வருபவர். ‘இப்போதும் வசந்தி பேக்கரியில் பெண்கள் காணப்படுவதில்லை’ என்ற நூலை எழுதி இருக்கிறார். ஊடகங்களில் பெண்ணியக் கட்டுரைகள் எழுதிவருகிறார். ஆங்கிலம், தமிழ் என இரு மொழிகளிலும் சரளமாக எழுதியும், பேசியும் வருகிறார். எழுத்தாளர் ஜெயகாந்தனின் சிறுகதைகள் சிலவற்றைத் தொகுத்து ‘The Heroine and other stories’ என்ற நூலாக மொழிபெயர்த்திருக்கிறார்.