சமீபத்தில் பரபரப்பாகப் பேசப்பட்டது நூடுல்ஸ் விவாகரத்து வழக்கு. மனைவி மூன்று வேளையும் நூடுல்ஸ் மட்டுமே சமைத்ததைக் காரணம் காட்டி கணவர் விவாகரத்து கேட்டார் என்றும், அதனைத் தொடர்ந்து இருதரப்பின் ஒப்புதலின் அடிப்படையில் விவாகரத்து பெற்றுக்கொண்டனர் என்றும் கர்நாடக மாநிலத்தில், மாவட்ட முதன்மை நீதிபதியாகவுள்ள ரகுநாத், மைசூரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசும்போது குறிப்பிட்டுள்ளார். தான் பெல்லாரி மாவட்டத்தில் நீதிபதியாக இருந்தபோது இந்த வழக்கைக் கையாண்டதாகக் கூறியுள்ளார்.
சோசியல் மீடியாவில் இந்த விஷயம் கேலியும் கிண்டலுமாக விவாதிக்கப்பட்டது. `என்னோட பொண்டாட்டி சமைக்கறதே இல்லை. அப்ப நானெல்லாம் எவ்வளவு தடவை டிவோர்ஸ் கேட்டிருக்கணும்’, `தப்பிச்சாண்டா அந்தப் புருசன்’ என்றெல்லாம் விதவிதமாக மீம்ஸைப் பகிர்ந்தனர். `இப்படி ஒரு வழியிருக்கா, எனக்குத் தெரியாம போச்சே… தெரிஞ்சிருந்தா மூணு வேளையும் நூடுல்ஸ் போட்டே காலி பண்ணியிருப்பேனே’ என்று பெண்களின் பகடியும் ஆங்காங்கே மெலிதாக ஒலித்தது.
நகைச்சுவை ஒருபக்கம் இருக்கட்டும். கல்யாணமான பெண்ணுக்கு அவசியம் சமைக்கத் தெரிந்திருக்க வேண்டுமா என்ற கேள்வியை எழுப்புவோம். `என்னங்க எங்க வயத்துல தீயை வக்கிறீங்க? கல்யாணம் பண்ணிக்கிறதே வாய்க்கு ருசியா சாப்பிடத்தானே?’ என்று தோழர்கள் பலரின் மைண்ட் வாய்ஸ் கேட்கிறது. இது சரியா என்ற விவாதத்திற்குள் இப்போது போகாமல், இவர்கள் யதார்த்தத்தைத்தானே பிரதிபலிக்கிறார்கள் என்று மட்டுமே புரிந்துகொள்வோம். `பையன் வெளியூர்ல வேலை பாக்குறான். சாப்பாட்டுக்குக் கஷ்டப்படறான். சீக்கிரம் கல்யாணம் பண்ணணும். நல்ல பொண்ணா இருந்தா சொல்லுங்க’ என்று பையனைப் பெற்றவர்களும், `அம்மாவுக்கு வயசாயிருச்சு. சமைக்க முடியல. உடனே கல்யாணம் பண்ணிக்கலாம்னு இருக்கேன்’ என்று பையனும் சொல்லும் டயலாக்குகளை இன்னமும் கேட்டுக்கொண்டுதானே இருக்கிறோம். வாழ்க்கைத் துணைக்காகக் கல்யாணம் என்பது, அதன் அடிப்படை நோக்கம். இது பொதுப்புத்தியின் நினைவில் இருப்பதாகவே தெரியவில்லை. சமைக்கவும் வீட்டுவேலை செய்யவும் குடும்பத்தைக் கவனித்துக்கொள்ளவும் பெண் வேண்டும் என்பதற்காகத்தான் பல ஆண்கள் இன்றும் கல்யாணம் செய்துகொள்கிறார்கள் என்பது கசப்பான உண்மை. பெண்கள் வேலைக்குப் போகாதவரை, பொருளாதாரத் தற்சார்பு பெற்றிருக்காதவரை இதில் பெரிய பிரச்னையில்லை. எதிர்ப்பு எதுவுமில்லாமல் அல்லது வேறுவழியில்லாமல் பெண்கள் இதனை ஏற்றுக்கொண்டு வாழ்ந்தனர். இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.
ஆனால், பணிபுரியும் பெண்களின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்து வரும் தற்போதைய நிலையில், வெளியே போய் வேலையையும் பார்த்துக்கொண்டு, வீட்டு வேலையையும் சமையல் வேலையையும் செய்வது பெண்களால் இயலாத காரியம். இதனை ஆணாதிக்க சமுதாயம் ஒப்புக்கொள்ளத் தயாராக இல்லை. வீட்டுவேலைக்காவது உதவியாளரை வைத்துக்கொள்ளலாம். ஆனால், சமையல் வேலையை வீட்டு மருமகள்தான் செய்ய வேண்டும்; மனைவிதான் செய்ய வேண்டும் என்று நேரடியாகவும் மறைமுகமாகவும் நிர்பந்திக்கிறது. இதனைக் குடும்பம் நேரடியாகச் செய்கிறதென்றால், `வேலைக்குப் போகும் பெண்களுக்கான சமையல் குறிப்புகள்’, `வேலையையும் வீட்டையும் திறமையாக பேலன்ஸ் செய்வது எப்படி?’ போன்ற கட்டுரைகளைத் தொடர்ந்து பிரசுரித்து, ஊடகங்கள் வாயிலாக சமூகமும் மறைமுகமாகச் சொல்கிறது.
சுருக்கமாகச் சொன்னால் சமையலின் முழுப்பொறுப்பும் பெண்ணிடம்தான் தரப்பட்டுள்ளது. அதில் அவளுக்கு விருப்பம் இருக்கிறதா, இல்லையா என்று யாரும் கேட்பதில்லை. குறிப்பாக, கல்யாணமான பெண் என்றால் சமைத்துதான் ஆக வேண்டும். முடியாது என்று மறுக்க இயலாது. சமையல் பெண்ணின் பொறுப்பு என்பதைத் தாண்டி, முக்கியக் கடமையாக இங்கு பார்க்கப்படுகிறது. அவள் சம்பளத்துக்காக வெளியே போய் பணிபுரியும் வேலை என்பது இரண்டாம்பட்சம்தான். ஆனால், அவள் ஈட்டும் ஊதியம் இரண்டாம்பட்சமாகக் கருதப்படுவதில்லை. அவளின் சம்பளப்பணம் குடும்பத்திற்கு வேண்டும், அதேநேரம் சமையலைச் செவ்வனே முடித்துவிட்டுதான், அவள் அலுவலகம் செல்ல வேண்டும் என்று பொதுப்புத்தி எதிர்பார்க்கிறது. அப்படிச் செய்யாத பெண்களைப் பகடி செய்து இழிவுபடுத்தவும் தயங்குவதில்லை.
அதன் வெளிப்பாடுதான் `என் மனைவி மூன்று நேரமும் நூடுல்ஸே சமைக்கிறார். எனக்கு விவாகரத்து வேண்டும்’ என்ற கணவரின் கோரிக்கை. நீதிபதி தெரிவித்த விவரங்களை வைத்துப் பார்க்கும்போது அந்த மனைவி வேலை பார்ப்பவராகத் தெரிகிறது. வேலை பார்க்கும் பெண்ணால், கல்யாணத்திற்குப் பிறகு சமைக்க முடியவில்லை, 10 நிமிடத்தில் எளிதாகச் சமைத்துவிடக்கூடிய உணவுவகையையே நாடுகிறார் என்றால் அவருக்குச் சிரமம் இருந்திருக்கிறது. மனைவி தன்னுடைய சிக்கல்களைச் சொல்லியும் கணவர் காதில் போட்டுக் கொள்ளாதவராக இருந்திருக்கலாம். மூன்று வேளையும் நூடுல்ஸ் செய்தாலாவது அவர் உணர்கிறாரா பார்ப்போம் என்று மனைவி தன்னுடைய பாணியில் அதைக் கையாண்டிருக்கிறார். அப்போதாவது `உனக்கு என்னம்மா பிரச்னை? சமையலுக்கு உதவியாளரை வைத்துக்கொள்ளலாமா? எப்படிச் சமாளிக்கலாம்?’ என்று கணவர் கேட்பது தானே சரியான அணுமுறையாக இருக்கும். அதைவிடுத்து `விதவிதமாகச் சமைப்பது உன் கடமை. அப்படிச் செய்யவில்லை என்றால் விவாகரத்து கேட்பேன்’ என்பது ஆணாதிக்க மனப்பான்மையின் உச்சம்.
இதே நிலை நீடித்தால், சமைக்க முடியாது என்று பெண்களே முன்வந்து விவாகரத்து கேட்பார்கள் தோழர்களே. அடுத்த தலைமுறைப் பெண்கள் மிக புத்திசாலிகள். நல்ல படிப்பும் தொழில்நுட்ப அறிவும் கொண்டவர்கள். வேலைக்குப் போய் கை நிறைய சம்பாதிப்பவர்கள். சமையல், வேலை என்று இரட்டை குதிரையில் சவாரி செய்ய விரும்பமாட்டார்கள்.
முதலில் குடும்பத்தை ஜனநாயகப்படுத்த வேண்டும். சமையல் பொறுப்பை கணவனும் சரிசமமாகப் பகிர்ந்துகொள்ள வேண்டும். நான் இங்கே குறிப்பிடுவது சமையல் வேலைகளை அல்ல, பொறுப்பை, தோழர்களே. அதாவது என்ன சமைக்க வேண்டும் என்ற திட்டமிடலில் தொடங்கி, மாவரைப்பது, பொருள்களை வாங்குவது, சமைத்துப் பரிமாறுவது வரையிலான வேலைகளை ஆண் பொறுப்பேற்க வேண்டும். ஒரு வாரம் மனைவி சமைத்தால், அடுத்த வாரம் கணவன் சமைக்கட்டும். குழந்தைகளுக்கும் சமைக்கப் பழக்க வேண்டும், குறிப்பாக ஆண் குழந்தைகளுக்கு. தனக்கான உணவைச் சமைப்பது தன் கடமை என்று அவர்களுக்கு உணர்த்த வேண்டும். வெளிநாடுகளுக்குப் படிக்கவும் வேலை பார்க்கவும் செல்லும் இளைஞர்கள் தன் உணவைத் தானே செய்யப் பழகுகிறார்கள். சமைக்கிறார்கள். உணவகங்களிலும் நட்சத்திர விடுதிகளிலும் சம்பளத்திற்காக ஆண்கள் சமைக்கத்தானே செய்கின்றனர். வீட்டில் சமையல் பொறுப்பேற்க என்ன தயக்கம் தோழர்களே? தேவை என்று வந்தால் மட்டுமே கற்றுக்கொள்ளும் நிலை மாறி, சிறு வயதிலிருந்தே பெற்றோர் சொல்லித் தரவேண்டும். தன் உணவைத் தான் சமைப்பது வயதுவந்த ஆண், பெண் இருபாலரின் கடமை என்பதைப் புரியவைக்க வேண்டும் தோழிகளே.
சமையல் என்பது அருமையான கலை. அதைப் பெண் மட்டுமே செய்ய வேண்டும் என்று நிர்பந்திப்பது அப்பட்டமான உரிமை மீறல். ஆண், பெண் இருபாலரும் சமையல் பொறுப்பை ஏற்பதுதான் சமத்துவமான உலகிற்கு இட்டுச் செல்லும்.
(பேசுவோம்)
படைப்பாளர்:
கீதா இளங்கோவன்
‘மாதவிடாய்’, ‘ஜாதிகள் இருக்கேடி பாப்பா’ போன்ற பெண்களின் களத்தில் ஆழ அகலத்தை வெளிக்கொணரும் ஆவணப் படங்களை இயக்கியிருக்கிறார். சமூக செயற்பாட்டாளர்; சிறந்த பெண்ணிய சிந்தனையாளர். அரசுப் பணியிலிருந்த தோழர் கீதா, சமூக வலைதளங்களிலும் தன் காத்திரமான ஆக்கப்பூர்வமான எழுத்தால் சீர்திருத்த சிந்தனைகளை தொடர்ந்து விதைத்து வருகிறார்.
ஹெர் ஸ்டோரீஸ் இணையதளத்தில் ‘கீதா பக்கங்கள்’ பகுதியில் இவர் எழுதிய காத்திரமான கட்டுரைகள், ‘துப்பட்டா போடுங்க தோழி’ என்ற பெயரில் ஹெர் ஸ்டோரீஸ் வெளியீட்டில் புத்தகமாக வந்து, மிக முக்கியமான பெண்ணிய நூல் என்கிற அங்கீகாரத்தைப் பெற்றிருக்கிறது!
அருமை தோழர் 💝💝💝
நிறைய அன்பும் நன்றியும் தோழர் ❤️❤️