பெண்கள் பல துறைகளிலும் இன்று சாதித்துக்கொண்டிருந்தாலும் வணிகத் துறையில் சாதிப்பது என்பது வரலாறு காலம் தொட்டுப் பெரும் சவாலாகவே உள்ளது. கி.மு.1870களில் வடக்கு இராக்கில் உள்ள அஸ்ஸுர் நகரத்தைச் சேர்ந்த அஹாஹா என்ற பெண் அந்த நகரத்தில் இருந்து தொலைதூரத்தில் உள்ள கானேஷ் என்ற நகருடன் வணிகத்தில் ஈடுபட்டதற்கான சான்றுகள் கிடைத்துள்ளன. அஹாஹா மட்டும் இல்லாமல் அங்கு வாழ்ந்த பல பெண்கள் முதலீட்டாளர்களாக, வங்கியாளர்களாக ,தொழிலதிபர்களாக இருந்ததற்கான சான்று அங்கிருந்து எடுக்கபட்ட கடிதங்கள், ஒப்பந்தங்கள் மூலம் கிடைத்துள்ளன. இவை அனைத்தும் களிமன் பலகைகளில் எழுதப்பட்டிருக்கின்றன. பிரான்ஸ் நாட்டில் ஆராய்ச்சியாளராக இருக்கும் சிசிலி மிச்செல்(CECILE MICHEL) அஸ்ஸுர் நகரப் பெண்கள், வணிகத்தில் ஆண்களுக்கு நிகராக எந்த அளவுக்குப் போராடி வெற்றி கண்டிருக்கிறார்கள் என்பதை (women of Assur and Kanesh ) என்ற புத்தகத்தில் எழுதியுள்ளார். அஸ்ஸுர் நகரப் பெண்கள் வணிகத்திலும் குடும்ப நிர்வாகத்திலும் சிறந்து விளங்கியுள்ளனர். மேலும் சந்தை நிலவரங்கள் குறித்தும், தங்களின் தேவைகள் குறித்தும், வியாபாரத்தில் ஈட்டிய பணத்தை முதலீடு செய்வது குறித்தும் நன்கு அறிந்திருந்தனர்.

கடந்த காலங்களில் பெண்கள் தொழில் தொடங்குவதற்கான சட்டங்கள் மிகக் கடுமையாகவே இருந்துள்ளன. குறிப்பாக அமெரிக்கா போன்ற நாடுகளில்கூடப் பெண்கள் தொழில் தொடங்க அவர்களது கணவர்களின் கையொப்பம் கட்டாயமாக்கப்பட்டது. பிறகு 1988இல் புதிய சட்டம் இயற்றப்பட்டு பெண்கள் சுதந்திரமாகத் தொழில் தொடங்கவும் மேலும் அரசாங்க ஒப்பந்தங்களில் விண்ணப்பிக்கவும் புதிய சட்டத் திருத்தத்தில் வழிவகை செய்யப்பட்டது.

1900களின் தொடக்கத்திலேயே அமெரிக்காவின் சி.ஜெ.வாக்கர், கோகோ சானல், ஆலிவ் ஆன் போன்றவர்கள் தங்களுக்கான பிஸினஸையும் பிரான்டையும் உருவாக்கி, தங்களுக்கான பாதையை உருவாக்கிக்கொண்டார்கள். இரண்டாம் உலகப்போரில் பங்கேற்கப் பெரும்பாலான ஆண்கள் ராணுவத்தில் சேர்க்கப்பட்டனர். விவாகரத்துகளும் பொருளாதார நெருக்கடியும் பெண்களுக்குச் சவாலாக இருந்தது. இது போன்ற நிலையில் பெண்கள் வேலைக்குச் செல்ல வேண்டிய சூழலில், சில பெண்கள் சுயமாகத் தொழில் தொடங்க ஆரம்பித்தனர். முதலில் சிறுசிறு தொழிலாகச் செய்த பல பெண்கள் இன்று சாம்ராஜ்ஜியங்களையே உருவாக்கிவிட்டனர். சீனா போன்ற நாடுகள் பல நூற்றாண்டுகளாக ஆணாதிக்க சமுதாயமாக இருந்து, கிங் வம்சத்தின் சீர்திருத்தங்கள், குடியரசுக் கட்சியின் எழுச்சி போன்றவற்றால் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் பொது செயலாளர் ஜியாங் ஜெமினால் பாலின சமத்துவத்தை அடைந்த நாடாக மாறி, இன்று உலகிலேயே தற்சார்பு கொண்ட பெண் பில்லியனர்களின் பட்டியலில் சீனப் பெண்கள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர்.

அமெரிக்காவின் வர்த்தகப் பத்திரிகையான போர்ப்ஸ் (Forbes) 2022 உலகப் பணக்காரர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. இது வருடா வருடம் வெளியிடப்படும் பட்டியல் தான் என்றாலும் இதில் இடம்பெற்றுள்ள பெண் பில்லியனர்களின் எண்ணிக்கை வழக்கம்போல் மிகவும் குறைவாகவே உள்ளது. சுமார் 2668 பேர் இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். இதில் பெண்களின் எண்ணிக்கை வெறும் 327 தான். அதிலும் 101 பெண்கள் மட்டுமே சுயசார்புள்ள பெண் பணக்காரர்கள்.

சுயசார்புள்ள பணக்காரப் பெண்கள் பட்டியலில் மொத்தமுள்ள 124 இடங்களில், 78 இடங்களைச் சீனப் பெண்கள் பிடித்துள்ளனர். அமெரிக்கா, லண்டன் போன்ற நாடுகள் அடுத்த அடுத்த இடங்களைப் பிடித்துள்ளன. இந்தியாவில் நூற்றுக்கு ஏழு பெண்கள் மட்டுமே தொழில் துறையில் வெற்றி கண்டுள்ளனர். இந்தியா போன்ற வளரும் நாடுகளில் பெண்களுக்கான வாய்ப்புகள் அதிகளவில் திறக்கப்பட்டிருந்தாலும், பெண்களின் பங்கு மிகக் குறைவாகவே உள்ளது. இதற்கான காரணங்கள் என்ன, எது அவர்களுக்குத் தடையாக உள்ளது, என்ன மாதிரியான சவால்களை அவர்கள் எதிர்கொள்ள வேண்டியுள்ளது என்று பார்த்தால், முதலில் வருவது அவர்களது குடும்பப் பொறுப்புகள் தாம். இன்று பல குடும்பங்கள் பெண்களுக்கு உறுதுணையாக இருந்தாலும் இங்கு அதிகளவில் முக்கியத்துவம் கொடுத்து கொண்டாடப்படும் அன்னையர் தினம், மகளிர் தினம் போன்றவை பெண்களுக்குத் தங்களது கடமைகளை மறைமுகமாக ஞாபகபடுத்தும் ஒரு யுக்திதான். இன்று பல பெண்கள் இது போன்ற ஓர் உளவியல் சிக்கலைத் தாங்களாகவே உருவாக்கிக்கொண்டு, தங்களது எண்ணங்களையும் முயற்சிகளையும் முடக்கிக்கொள்கின்றனர். படிப்பிற்கும் திருமணத்திற்கும் இடையில் இருக்கும் கால அவகாசம் ஆண்களைப் போல பெண்களுக்குக் கிடைப்பதில்லை. படிப்பை முடித்த கையோடு பெரும்பாலான பெண்கள் ஏதாவது ஒரு நிறுவனத்தில் பணிபுரிய ஆரம்பித்துவிடுகின்றனர். மாறாக ஒரு நிறுவனத்தை நிறுவ வேண்டும் என்று தோன்றுவதில்லை. வேலைக்குச் சேர்ந்த ஓரிரு ஆண்டுகளில் திருமணம், அதன் பிறகு குழந்தை என்று அடுத்தடுத்து பொறுப்புகளில் சோர்வாகி, தான் எதை நோக்கிச் சாதிக்க நினைத்தோம் என்பதையே பல பெண்கள் மறந்து விடுகின்றனர்.

இந்தியாவைப் போல பிற நாடுகளில் திருமணமும் குழந்தைப்பேறும் பெண்களுக்கு ஒரு சமூக நெருக்கடியாக இருப்பதில்லை. மேலும் நம் பெண்கள் பெரிய அளவிளான முதலீடுகளில் ஈடுபடுவதும் சற்றுச் சவாலான விஷயமாகவே உள்ளது. இது போன்ற பெரிய முதலீடுட்டு வணிகத்தில் பொருளாதாரத்தில் ஏற்படும் நிச்சயமற்ற தன்மைகளை எதிர்கொள்ள விரும்புவதில்லை. இதனாலயே குறைந்த முதலீட்டில் நடக்கும் தொழில்களோடு பல பெண்கள் திருப்தி அடைந்துவிடுகின்றனர். மேலும் இங்கு பெரும்பான்மை பெண்களுக்கு அவர்களின் பெயரில் சொத்துகள் வாங்கப்படுவதில்லை. இதனால் தொழில் தொடங்க வங்கியில் கடன் பெறுவதற்கான உத்திரவாதமாக (collateral) வைக்க இவர்கள் திணற வேண்டியுள்ளது. நியுயார்க்கின் புளும்பர்க் (Bloomberg) நிறுவனத்தின் ஆய்வில் பெண்கள் நடத்தும் நிறுவனங்களுக்குக் கிடைக்கும் நிதியுதவியைவிட ஆண்கள் தலைமை ஏற்று நடத்தும் நிறுவனங்களுக்கு அதிகளவில் கிடைப்பதாகத் தெரிவித்துள்ளது. ஆனால், இந்த நெருக்கடிகளை எல்லாம் தாண்டித்தான் நைகா (Nyka)வின் நிறுவனர் ஃபல்குனி நாயர், சோகோ(Zoho)வின் ராதா வேம்பு, பயோகானின் கிரன் மசும்தார் போன்றவர்கள் சாதனை பெண்களாகத் தடம் பதித்துள்ளனர்.

படைப்பாளர்

ரம்யா சுரேஷ்

Mphil ஆங்கில இலக்கியம் பயின்றவர்.