தினசரி பத்திரிகைகளின் தலைப்புச் செய்திகளில் 3,71,503 என்று பெரிய அளவில் அச்சிடப்பட்டிருந்தால், நம் எல்லோர் மனநிலையும் அரசியல் தலைவரோ,தொழிலதிபரோ செய்த ஊழல் பணத்தின் மதிப்பு என்று புரிந்துகொள்ளும். ஏனெனில் அத்தகைய செய்திகளை மட்டுமே அப்படியான தடித்த எழுத்துகளில் பார்த்து, அது மட்டுமே சமூகத்தில் நடைபெறும் மாபெரும் தவறு என்று சிந்திக்க நாம் பழக்கப்பட்டுவிட்டோம். தினமும் பத்திரிகைகளும் 24 மணி நேரக் காட்சி ஊடகங்களும் எந்தந்த செய்திக்கு முக்கியத்துவம் அளிக்கின்றன என்பதைப் பகுப்பாய்ந்து, பத்திரிகையாளராக என்னையும் ஆய்வுக்குட்படுத்திக் கொண்டே இந்தக் கட்டுரையை எழுதுகிறேன்.

மேலே குறிப்பிட்ட 3,71,503 என்ற எண்ணிக்கையானது, 2020 ஆம் ஆண்டு இந்தியக் குற்றவியல் ஆவணக் காப்பக ஆய்வறிக்கையின்படி இந்தியாவில் பெண்களுக்கு எதிராக நடந்த குற்றங்களின் எண்ணிக்கை! கொடுக்கப்பட்ட புகார்களின் எண்ணிக்கையே இவ்வளவு என்றால், புகார் அளிக்காமல் விடுபட்டவை இதைவிட அதிகமாகத்தான் இருக்கும்.

இந்த மூன்றே முக்கால் லட்சம் வழக்குகளில் 30 சதவீதம் கணவர் மற்றும் அவருடைய உறவினரால் பெண்களுக்கு ஏற்பட்ட வன்முறைகள்;16.8 சதவீத வழக்குகள் பெண் கடத்தல் தொடர்பானவை. நவீன ஆடை அலங்காரம் மற்றும் நவீன வாழ்வியல் முறையைத் தேர்ந்தெடுத்த பெண்களைக் குறிவைத்து தாக்கியதாக 23 சதவீத வழக்குகள் பதிவாகியுள்ளன. 7.5 சதவீத பாலியல் பலாத்கார குற்றங்கள் பதிவாகியுள்ளன. பாலியல் வன்முறை, அதிகார வன்முறை, பாலினஅடிப்படையில் சீண்டல், பெண்கள் மற்றும் குழந்தைகளைக் கடத்துதல் மட்டுமல்ல பெண்களுக்கு எதிரான குற்றங்கள்.

பெண்கள் நவநாகரிகமாக இருத்தலையும் குற்றமாகப் பார்க்கிறது இந்தச் சமூகம். பெண்கள் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று இந்தச் சமூகம் வரையறுத்துள்ள கோடுகளை உடைத்தெறியும் பெண்கள் மீது இந்தச் சமூகத்திற்கு வெறுப்பு ஏற்படுகிறது. அவர்கள் மீது வன்முறை ஏவத் தூண்டுகிறது என்பதை வெளிச்சமிட்டுக் காண்பித்திருக்கிறது இந்த ஆவணங்களின் புள்ளிப்பட்டியல்.

இந்தியா போல உலகமயமாக்கலின் நீட்சியாகப் பொருளாதார ரீதியாகவும் கலாச்சார ரீதியாகவும் கல்வி வளர்ச்சி மூலம் ஒரு சமூக மாற்றத்தை நோக்கி நாடு நகரும்போது, அதன் நீட்சியாகப் பெண்களும் பழைய கட்டுப்பாடுகளை உடைத்து வெளியே வருகிறார்கள். ஆனால், அதனை ஏற்காமல் பழையனவிற்கும் புதியனவிற்கும் இடைப்பட்டுச் சிக்குவதில், பெண்கள்தான் அதிக பாதிப்புக்குள்ளாகிறார்கள்.

நவீன வாழ்வியல் முறையைத் தேர்ந்தெடுக்கும் பெண்ணுக்கு இந்தச் சமூகம் என்ன மாதிரி எதிர்வினையாற்றுகிறது என்பதும் வன்முறையில் அடக்கம்.

பெண்கள் வெள்ளை நிறத்தில் இல்லை என்றால் குற்றமாகவும் அந்தப் பெண் தன்னைத் தாழ்வு மனப்பான்மையுடன் கருதும் நிலைக்குத் தள்ளியது இந்த விளம்பர உலகம். விளம்பரங்களில், திரைப்படங்களில் பெண்கள் வெள்ளை நிறத்தில் இருப்பதே அழகு என மீண்டும் மீண்டும் பொது மனநிலையில் பதிய வைக்கப்படுகிறது. அதனால் இன்றும் ‘7 நாள்களில் சிகப்பாகலாம், வெள்ளையாகலாம்’, போன்ற விளம்பரங்கள் வருகின்றன.

முன்னணி விளம்பர நிறுவனங்கள் பெண்களின் நிறத்தை வைத்து விளம்பரப்படுத்த மாட்டோம் எனத் தங்களது நிறுவன பொருட்களின் பெயர்களைக்கூட சில ஆண்டுகளுக்கு முன்பு மாற்றின. ஆனால், அதுவும் விளம்பரமாக இருந்ததே தவிர, எதுவும் மாறவில்லை. இப்போது விற்பனைக்கு உள்ள பல காஸ்மடிக் பொருள்களில் ‘வெண்மை நிறம் தரும்’ என்பதைக் குறிக்கும் வண்ணம் ஏராளமான பொருள்கள் விற்பனை ஆகின்றன. இவையும் ஒரு வகையில் பெண்களை நிறம் சார்ந்து ஒடுக்குவதுதான்.

15 வயதையொத்த வளரிளம் பெண் ஒருத்தி, வெகுநாட்களாகத் தான் பயன்படுத்தும் ஃபேஸ்வாஷ் பெண்களை நிற ரீதியாகப் பாகுபாடு காண்பிக்கிறது என்பதை உணர்ந்து, skin whitening என்ற அச்சிடப்பட்டிருந்த இடத்தில் ‘glowing’ – முகப்பொலிவைத் தருகிறது என்று ஸ்டிக்கர் ஒட்டி மாற்றுகிறாள் (கீழே கொடுக்கப்பட்டுள்ள ஃபேஸ்வாஷில் skin whitening என்பது பதிலாக முகப்பொலிவைத் தரும் என்று மாற்றப்பட்டுள்ளது). 15 வயது வளரிளம் பருவச் சிறுமிக்குத் தெரிந்த இந்த நிறப்பாகுபாடு கருத்து, விளம்பர சந்தைகளுக்கும் சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்குத் தெரியாமலா போனது என்ற கேள்வி எழாமலில்லை.

விளம்பர நிறுவனங்கள், இந்திய காஸ்மடிக் சந்தை 90களுக்குப் பிறகு வெண்மை நிறம், சிகப்பழகு என்ற விளம்பர யுக்தியைக் கையாண்டன. இந்தியாவின் தட்பவெட்ப நிலைக்கு ஏற்ப மாநிறம், dusky skin நிறத்தை உடையவர்கள் வாழும் நாட்டில், ‘வெண்மைதான் அழகு’ என்ற சொல் மூலம் விளம்பர தந்திரம் கட்டமைக்கப்பட்டது. அதன் அடித்தளத்தைத் தகர்த்து, 15 வயது வளரிளம் பெண் ஒருத்தி, இங்கே மாறவேண்டியது பெண்களின் நிறம் அல்ல என்று ஸ்டிக்கர் ஒட்டி இன்றைய பெண்களின் எண்ணங்களை உணர்த்துகிறாள். பெண்கள் இப்படித்தான் வாழவேண்டும், இப்படி இருந்தால்தான் அழகு என்று ஏதாவது ஒரு சட்டத்திற்குள் அடைக்க நினைப்பவர்களை இன்றைய பெண்களின் மனநிலை சற்று எரிச்சலடையத்தான் வைக்கிறது. அந்த எரிச்சல்தான் நவநாகரிகப் பெண்கள் மீது அவதூறு பரப்பத் தூண்டுகிறது.

பெண்களை நிற ரீதியாகப் பார்த்தல் வன்முறை என்பது தெரிந்துதான் பட்டவர்த்தனமாக விளம்பரச் சந்தை செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இது ஒரு புறம், இந்த விளம்பரங்களின் நீட்சியாகப் பல்வேறு துறைகளில் பணிபுரியும் பெண்கள் நவநாகரிகமாக உடை அணிவதும், மாடர்னாகத் தன்னை மாற்றிக்கொள்வதையும், சில ஆண்களால் ஏற்றுக்கொள்ள முடிவதில்லை. அதன் விளைவாகத்தான் பெண்களின் மீது தாக்குதல் நடத்தப்படுகிறது. அப்படியான குற்றங்கள் 23 % என்கிறது மேலே குறிப்பிட்டுள்ள ஆய்வு.

காலத்திற்கேற்ப பெண்களைப் பாதுகாக்கும் சட்டங்களை வடிவமைக்க வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம் என்பது இன்றைய முக்கியத் தேவையாக உள்ளது. சமீபத்தில் அமெரிக்காவில் பைடன் அரசு பெண்களுக்கு எதிரான வன்முறையைத் தடுக்கும் சட்டங்களில் பல திருத்தங்களைச் செய்துள்ளது. காலத்திற்கேற்ப அந்தத் திருத்தங்கள் அமைந்துள்ளன. பெண்களுக்கு இழைக்கப்படும் குடும்ப வன்முறை, பெண்களை உடல்ரீதியான தாக்குதல்,பெண்களைப் பொருளாதார ரீதியாகச் சுரண்டுதல் , தொழில்நுட்ப ரீதியாகப் பாதிப்புக்குள்ளாக்குதல் எனப் பெண்கள் மீதான வன்முறைகளை வகைப்படுத்தியதோடு, பாதிக்கப்படும் பெண்களை அதிலிருந்து மீட்க மனவள, உடல்நல சிகிச்சைகள் அடங்கிய மறுவாழ்வை சட்டமே உறுதிப்படுத்தும் வண்ணம் வழிவகை செய்யப்பட்டுள்ளது. இங்கும் சட்டத்தில் மறுவாழ்வு குறித்து சொல்லப்பட்டிருக்கிறது.

நடைமுறையில் பாலியல் வல்லுறவுக்கு உள்ளான எத்தனைப் பெண்கள் அந்த உளவியல் தாக்குதலில் இருந்து மீண்டார்கள் என்பதில்தான் இருக்கிறது அந்தச் சட்டத்தின் பயன்.

சமீபத்தில் வெளிவந்துள்ள தேசிய குடும்பநல ஆய்வு, பாலியல் வன்முறையில் பாதிக்கப்பட்ட 98 % பெண்களுக்குச் சிகிச்சை எதுவும் வழங்கப்படுவதில்லை என்று கூறுகிறது. காவல்துறை பாலியல் வன்முறை வழக்கைப் பதிவு செய்தவுடன், பாதிக்கப்பட்ட பெண் கர்ப்பமடைவதைத் தடுப்பது, எயிட்ஸ் அல்லது பாலியல் நோய் தொற்று ஏற்பட்டிருக்கிறதா என்று சோதனை செய்வது, உடலில் ஏற்பட்ட காயங்களுக்குச் சிகிச்சை அளிப்பது போன்றவற்றை உறுதிப்படுத்தவேண்டும். கூடவே உளவியல் பாதிப்பிற்குத் தகுந்த உளவியல் சிகிச்சையும் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு அளிக்க வேண்டும். ஆனால், இது எதுவுமே நடைபெறுவதில்லை என்பதைத்தான் இந்த ஆய்வின் முடிவுகள் உணர்த்துகின்றன.

பாதிக்கப்பட்ட பெண்கள் அவர்களின் குடும்பங்கள் இத்தகைய உதவிகளைக் கேட்காமலே, காவல்துறை வழக்கு பதிவு செய்தவுடன் அந்தந்த துறைரீதியான நடவடிக்கையாக இவை அனைத்தையும் மேற்கொள்ள வேண்டும். பெண்களுக்கு ஏற்படும் பாலியல் சார்ந்த குற்றங்களை மறைக்கவே பாதிக்கப்பட்ட பெண்ணும் அவருடைய குடும்பமும் நினைக்கின்றனர். அந்த மனத்தடையை உடைத்து பாதிப்பை ஏற்படுத்தியவர்கள் தாம் குற்றவாளிகள் பாதிக்கப்பட்ட பெண்ணோ அல்லது அவரின் குடும்பமோ குற்றவாளி இல்லை என்பதை மீண்டும் மீண்டும் சொல்ல வேண்டிய கட்டாயம் உள்ளது.

பாலியல் வல்லுறவுக்கு ஆளான பெண்ணையும் குடும்பத்தையும் குற்றவாளிகளாக நிறுத்தும் மனநிலையைச் சமூகம் மாற்ற வேண்டியது அவசியம்.

இன்றும் பெரும்பாலான பெண்கள் கணவன் அடிப்பதை ஏற்றுக்கொள்ளவும் நியாயப்படுத்தவும் செய்யும் மனநிலைதான் உள்ளது. சமூகம், பண்பாடு, கலாச்சாரம், மதம் அனைத்துமே ஆண்களே பெண்களைவிட உயர்ந்தவர்கள் என்பதைத்தான் மீண்டும் மீண்டும் கட்டமைக்கிறது. அதனால்தான் இயல்பாகவே ஆண்கள் செய்யும் வன்முறை குற்றங்களுக்குப் பெண்கள் அடங்கிப் போகும் நிலை உள்ளது. குடும்பங்களில் ஆண் குழந்தைகளுக்குப் பெண் குழந்தைகளைவிட அதிக முக்கியத்துவம் கொடுப்பதும் அவர்களே உயர்ந்தவர்கள் என்று சொல்லி வளர்க்கும் பாங்கின் வெளிப்பாடே ‘பெண் தன்னைவிடத் தாழ்ந்தவள், அவளைத் தான் என்ன வேண்டுமானாலும் செய்யலாம்’ என்ற மனநிலையை ஆண்களுக்கு உண்டாக்குகிறது.

ஆண் என்பதே பெண்களிடம் அத்துமீறுவதற்கான ஒரு தகுதி என்ற மனநிலை உருவாகிறது. ஆகையால் ஆண்களுக்குச் சிறு வயதிலிருந்தே கட்டுப்பாடுகளைச் சொல்லி வளர்ப்பது பெண்கள் மீதான வன்முறை குறைவதற்கான ஆரம்பப் புள்ளியாக இருக்க முடியும்.

சமீபத்தில் ட்விட்டரில் #NotAllMen என்ற ஹேஷ்டேக் ட்ரெண்டானது. எல்லா ஆண்களும் தவறானவர்கள் அல்ல. பெண்களுக்கு குற்றமிழைப்பவர்கள் அல்ல என்பதை உணர்த்தும் வண்ணம் இந்த ஹேஷ்டேக்கை ட்ரெண்ட் செய்தார்கள். மேலோட்டமாகப் பார்த்தால் உண்மைதானே என்று தோன்றும். குற்றம் விளைவித்தவர்களை மட்டுமே இங்கு குற்றவாளிகள் என்கிறோம். எல்லா ஆண்களையும் குற்றவாளிகள் என எங்கும் பெண்களும் கூறுவது கிடையாது. ஆனால், இப்படி ஒரு ஹேஷ்டேக்கை ட்ரெண்ட் செய்வதன் மூலம் பெண்கள், ஆண்களைத் தவறாகச் சித்தரிப்பதாகவும், ஆண்கள் மீது பெண்கள் வேண்டும் என்றே பொய்ப் புகார்கள் கொடுப்பது போன்றும் ஒரு பிம்பத்தை உருவாக்குகிறார்கள் என்பதையும் மறுப்பதற்கில்லை.

பொருளாதாரச் சுரண்டலும் தொழில்நுட்ப ரீதியாக இன்று சமூக வலைத்தளங்களில் பெண்கள் தாக்கப்படுவதும் அதிகளவில் இருக்கின்றன. சமூக வலைத்தளங்களில் பெண்கள் தாக்கப்படுவதும் அவதூறு செய்தலும் அவர்களுடைய படங்களை ஆபாசமாகச் சித்தரித்து மிரட்டுவதும் அதிகளவில் இன்றைக்கு நடைபெறுகிறது . இத்தகைய சம்பவங்களில் காவல்துறை துரித வேகத்தில் செயல்படுவதெல்லாம் இல்லை. ‘சமூக வலைத்தளங்களில் பெண்கள் புகைப்படங்களைப் பதிவிடக் கூடாது’ என்று புகார் அளிக்கும் பெண்களை நோக்கி பாடம் எடுக்கும் சூழல்தான் உள்ளது.

சட்டங்களும் பொதுவான சட்டமாக உள்ளது. குழந்தைகளைப் பாலியல் ரீதியாகச் சித்தரித்து தகவல்களைப் பரப்புவது, பதிவிடுவது உள்ளிட்டவற்றிற்குத் தகவல் தொழில்நுட்ப பிரிவு 2000, 67பி-யின் கீழ் குற்ற வழக்குகள் பதிவுசெய்து நடவடிக்கை; பெண்களை இழிவுபடுத்தும் வார்த்தைகள் மற்றும் சைகைகளைப் பயன்படுத்துவது இந்தியத் தண்டனைச் சட்டம் 509இன் கீழ் வழக்கு பதிவுசெய்வது; குழந்தைகளை ஆபாச நோக்கில் பயன்படுத்துவது மற்றும் அநாகரிகமாகச் சித்தரிப்பது போக்சோ சட்டப் பிரிவு 13 மற்றும் 14 கீழ் வழக்கு பதிவு செய்தல் உள்ளிட்டவை நடைமுறையில் உள்ளன.

ஆனால், காலத்திற்கேற்ப தொழில்நுட்ப ரீதியாகப் பெண்கள் மீதான வன்முறைக்குப் பிரத்யேகமாக இதுவரை வந்துள்ள புகார்கள் அதன் தன்மைகளுக்கேற்ப சட்டத்தை உருவாக்கி, அதனைச் சரியாகக் கடைப்பிடிப்பது அவசியமாகும்.

முகநூலில் ஒரு பெண்ணின் புகைப்படத்தை வெளியிட்டு அவதூறு பரப்பினால் பாதிக்கப்பட்ட பெண் புகார் அளிக்கிறார். முகநூலிலும் community guidelines இல் report செய்கிறார். தொடர்ந்து முகநூலில் அளித்த report அடிப்படையில் அந்தப் பெண்ணைத் தவறாகச் சித்தரித்த முகநூல் பக்கம் முடக்கப்படுகிறது. ஆனால், காவல்துறையில் அளித்த புகார் மாதங்கள் ஆகியும் புகாராகவே நிலுவையில் இருக்கின்றது. குறிப்பிட்ட நபரைத் தேடிப்பிடித்து சட்டத்தின் முன் நிறுத்துவதற்கு காவல்துறைக்கு நேரமில்லை. இப்படிப் புகார்களைக் கையாள இன்னும் கூடுதல் கவனம் தேவை. அரசும் சட்ட ஒழுங்கை கையில் வைத்திருக்கும் அமைச்சர் மற்றும் காவல்துறை உயரதிகாரிகள், நீதிமன்றங்கள் அனைவரும் இதில் முனைப்பு காட்ட வேண்டும்.

பெண்களுக்கு எதிரான குற்றங்களைக் குறைக்க, பெண் குழந்தைகளுக்கு நம்பிக்கை மனப்பாங்கை அதிகரித்தல், பால்நிலை சமத்துவம் குறித்த விழிப்புணர்வை ஆண்கள், பெண்கள் இருவருக்கும் ஏற்படுத்துதல், பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான பாலியல் மற்றும் பால்நிலை வன்முறைகளை (SGBV) மேலும் புரிந்துகொள்ளவும் அடையாளப்படுத்தவும் தெரிதல்வேண்டும். இவ்வாறான சம்பவங்களுக்குச் சட்டரீதியாகவும் சூழல்ரீதியாகவும் எதிர்வினையாற்ற வேண்டிய கட்டாயம் இன்றைய முதன்மை தேவையாக உள்ளது.

வளர்ந்த நாடுகளோடு போட்டி போடுகிறது இந்தியா. ஆனால், பெண்கள் மீது நடைபெறும் பாலின ரீதியான ஒடுக்குமுறைகள், அத்துமீறல்கள், வன்முறைகள் என்பது இந்தியாவின் இருண்ட பக்கங்களின் கசக்கும் உண்மையாக இருக்கிறது என்பதே நிதர்சனம்.

பெண்கள் மீதான குற்றங்களுக்கு எதிரான இந்தியத் தண்டனை சட்டங்கள்:

இந்தியத் தண்டனைச் சட்டம் – குற்றத்தின் தன்மை

304 B வரதட்சணை கொலை /கொலை

354 பெண்களின் நவீன வாழ்வியலுக்கு எதிரான குற்றங்கள்

366 கடத்தல், கட்டாயத் திருமணம் செய்தல்

366 A 18 வயதுக்குட்பட்ட சிறுமியைப் பாலியல் வல்லுறவுக்காக கடத்துதல்

366 B பெண்களை நாடு கடத்துதல்

376 பாலியல் வன்புணர்வு

376 A சட்டரீதியாக கணவன், மனைவி பிரிந்திருக்கும் போது மனைவியோடு கட்டாய உடலுறவு கொள்ளுதல்

376 B பெண் அரசு ஊழியரை அவருக்கு மேலே உள்ள அதிகாரி பாலியல் வல்லுறவு செய்தல்

376 C சிறையில் இருக்கும் பெண் கைதியைச் சிறை உயரதிகாரி பாலியல் வல்லுறவு செய்தல்

376 D மருத்துவமனைகளில் பணிபுரியும் பெண்களை அங்குள்ள உயரதிகாரி பாலியல் வல்லுறவு செய்தல்

498 A கணவன் மற்றும் கணவன் குடும்பத்தினர் மனைவிக்கு குற்றமிழைத்தல்

509 – நவநாகரிக பெண்களின் நாகரிகத்தைக் கேலிக்குள்ளாக்குதல், பேசுதல் , தாக்குதல் நடத்துவது.

படைப்பாளர்

சுகிதா சாரங்கராஜ்

15 ஆண்டுகளுக்கு மேலாக ஊடகவியலாளராகப் பணியாற்றி வருகிறார். தற்போது நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சியின் துணை ஆசிரியராகவும் அதன் டிஜிட்டல் பிரிவின் தலைமை அதிகாரியாகவும் பணியாற்றி வருகிறார். அரசியல், சமூகம் சார்ந்த விவாத நிகழ்ச்சியை நெறியாள்கை செய்து வருகிறார். இவர் எழுதிய பாலின சமத்துவம் தொடர்பான பல்வேறு கட்டுரைகளுக்கு 4 முறை laadli விருதினை தேசிய அளவில் பெற்றுள்ளார். இவர் பங்கேற்று ஒளிபரப்பான 33 % என்ற பெண்களின் அரசியல் அதிகாரப் பகிர்வு நிகழ்ச்சிக்காகவும் laadli விருதினைப் பெற்றுள்ளார். குழந்தைகள் உரிமை தொடர்பாக இவர் எழுதிய கட்டுரைகளுக்காக Unicef fellowshipக்குத் தேர்வு செய்யப்பட்டார். இவரின் பாலின சமத்துவம் தொடர்பான கட்டுரைகளுக்காக 2022 ஆம் ஆண்டுக்கான laadli media fellowship க்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.