பெண்களிடம் கரண்டியைப் பறித்துவிட்டு, புத்தகத்தைக் கொடுக்கச் சொன்னார் ஈ.வெ.ரா. பெண் விடுதலைப் பெற வேண்டி அப்படிச் சொன்னார். அந்தக் கரண்டியை ஆண்களிடம் கொடுங்கள். இது பெண்கள் முன்னேற மட்டும் அல்ல; ஆண்கள் மேம்படவும் தான்.

சமையல் கலை என்பது ஒரு வாழ்க்கைத் திறன். Survival skill. பல ஆண்களுக்குச் சமைக்கத் தெரியாது. சுடு தண்ணீர்கூட வைக்கத் தெரியாது என்று சுய பகடி செய்துகொள்ள மாட்டார்கள். மாறாக அது ஓர் ஆண்மைத் தனம் போலப் பேசுவார்கள். முதல் தவறு உண்மையில் இவர்களைப் பெற்ற தந்தையிடம் தான் உள்ளது. அப்பா கரண்டியைத் தூக்கிப் பார்த்திருக்கவே மாட்டார்கள் பெரும்பாலான ஆண்கள்.

எனக்குத் தெரிந்த சில ஆண்கள், சாப்பிட்ட தட்டிலேயே கை கழுவிவிட்டு எழுவார்கள். அவ்வீட்டுப் பெண்கள் எச்சில் தண்ணீர் சிந்தாமல் தட்டைக் கொண்டு போய் சிங்க்கில் வைக்க வேண்டும். தோசை சுடச் சுட தட்டில் கொண்டு வந்து போடப்படும். அடுக்களைக்கு எழுந்து போய் வாங்கி வர மாட்டார்கள். கேட்டால் சாப்பிடும் போது நடக்கக் கூடாதாம். பெண்களே இதைச் சொல்கிறார்கள். நின்றுகொண்டே buffet சாப்பிடும் காலத்தில் இப்படியும் இருக்கிறார்கள். போதாதற்குகூட நின்று பரிமாறவும் வேண்டும். சாப்பாட்டைத் தட்டில் போட்டு வைத்து, ‘சாப்பிட வாங்க’ என்று மூன்று வேளையும் பெண்கள் அழைக்க வேண்டும். அப்போது தான் சாப்பிட வருவார்களாம்! கூப்பிடவில்லை என்றால் பசியைக்கூடத் தாங்கிக்கொண்டு, கூப்பிடும் வரை வராமல் அமர்ந்திருப்பார்கள் (என்ன ஒரு வீரம்!).

இவ்வளவும் சமைத்து வைத்த சோற்றை எடுத்துச் சாப்பிட ஆண்கள் செய்யும் அளும்புகள் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.

சமைக்க ஓர் ஆள் வேண்டும் என்று கல்யாணம் செய்த ஆண்கள் நம்மூரில் பெரும்பான்மையாக இருக்கிறார்கள். அனுதினமும் சமைத்துப் போட வேண்டும் என்பதற்காகவே பெண்டாட்டியைச் சுற்றிச் சுற்றி வரும் ஆண்களும், அதற்காகவே அவர்களை எங்கேயும் போக விடாமல் (வேலைக்குக்கூட) வீட்டிலேயே வைத்துக்கொள்ளும் ஆண்களும் உள்ளனர்.

சில வீட்டுச் சமையல் அறையில் ஒரு முக்காலி இருக்கும். அந்தக் காலத்தில் பெண்கள் ஆண்கள் வீட்டில் இருக்கும் போதோ, அல்லது யாரேனும் வீட்டுக்கு வந்திருக்கும்போதோ சமையற்கட்டில் தான் இருப்பார்கள். அதனால் அங்கு அமர்ந்துகொள்ள ஒரு முக்காலி வைத்துக்கொள்வார்கள். சமையல் அறைகளிலேயே பெண்களைப் பூட்டி வைத்திருப்பார்கள்!

ஆண்கள் ‘வீட்டில்’ சமைப்பது இல்லை. அவ்வளவுதான். ஏனெனில் வீட்டில் அது பொருள் ஈட்டும் வேலை இல்லை. ஹோட்டல்களில், திருமணம் மற்றும் பல நிகழ்ச்சிகளில் ஆண்கள் தாம் சமைக்கிறார்கள் . Food delivery boys உண்டு. ஆனால், இன்னும் சமைக்கத் தெரியாத பெரும்பான்மை ஆண்கள் இருக்கிறார்கள். புரொஃபஷனல் செஃப்களில் ஆண்கள் அதிகம் உண்டு. பெண்கள் இன்னும் யூ டியூப்களில் தாம் சமைத்துக்கொண்டு இருக்கிறார்கள். வீட்டில் சமையல் வேலைக்கு மாதாமாதம் பணம் தருவோம் என்று அரசாங்கம் சொன்னால், ஆண்கள் சமைக்க ஆரம்பித்து விடுவார்கள்.

ஆணுக்குச் சமைக்கத் தெரியாது, பெண் ஒருவர் வீட்டில் இருக்கும்போது. சில வீடுகளில் பெண்கள் இல்லாத நேரம் ஆண்கள் தங்களுக்கென்று மட்டும் சமைத்துக்கொள்வார்கள். சாப்பிட்ட தட்டு சிங்குக்குப் போகும். அதுவும் குழந்தைகள் இல்லாத நேரம் தான். இந்தப் பிரச்னைக்காகவே குழந்தைகளை எப்போதும் பெண்கள் போகும் இடமெல்லாம் கூடவே கூட்டிக்கொண்டு அலைய வேண்டும்.

ஆண்களுக்குச் சமைக்க வராது என்றெல்லாம் இல்லை. சில ஆண்கள் வீட்டில் மனைவி சின்னச் சின்ன வேலைகள் சொன்னால் தப்புத்தப்பாகச் செய்து வைப்பார்கள். அப்படிக் காட்டிக் கொண்டு தப்பும் தவறுமாகச் செய்தால் மறுபடி சமைக்க அல்லது வீட்டு வேலை செய்யச் சொல்ல மாட்டார்கள் என்ற நினைப்பில் அவ்வாறு நடிக்கிறார்கள்.

வீடுகளில் சமைக்கும் ஆண்கள் பாத்திரம் கழுவ மாட்டார்கள். சமைக்கவும் பாத்திரம் கழுவவும் வீடு கூட்டவும் கழிவறை சுத்தம் செய்யவும் காய்கறி வாங்கி வரவும் ஆண்கள் கற்றுக்கொள்ள வேண்டும். இதைச் செய்வதால் ஆண்கள் ஏதோ பெண்களின் வேலைகளைப் பகிர்ந்துகொள்வது போல் நினைத்துக்கொள்கிறார்கள். உண்மையில் அவர்கள் தங்கள் வீட்டு வேலைகளைச் செய்கிறார்கள். அவ்வளவே.

நான் சம்பாதிக்கிறேன் ஏன் சமைக்க வேண்டும் என்பது ஆண்களின் கேள்வி. பெண் வேலைக்குப் போகும் இந்தக் காலத்தில் ஆண் சமைத்து தான் ஆக வேண்டும். அதுமட்டுமல்ல, பெண்கள் வேலைக்குப் போகாத வீடுகளிலும் ஆண்கள் வீட்டு வேலைகளைப் பகிர்ந்து செய்ய வேண்டும்.

அதற்குப் பெற்றோர் செய்ய வேண்டியது:

1. ஆண்கள் வீட்டில் சமைக்க ஆரம்பியுங்கள். அதைப் பார்க்கும் ஆண் பிள்ளைகள் மனதில் மாற்றம் வரும்.
2. ஆண் பிள்ளைகளுக்குச் சிறு வயதிலேயே சமைக்கக் கற்றுக் கொடுங்கள்.
3. சமையல் பெண்ணின் வேலை என்பதாக முன்னெடுக்காமல் அது ஒரு survival skill என்பதை வலியுறுத்துங்கள்.
4. பெண் தான் சமைக்க வேண்டும் அல்லது சமையல் ஆண்களுக்கானது அல்ல என்பது போல வீட்டில் பேசாதீர்கள்.
5. குடும்பமாகச் சமைத்து ஒன்றாக அமர்ந்து உண்ணுங்கள்.
6. பள்ளி, கல்லூரிகளில் ஆண், பெண் இரு பாலருக்கும் சமையல் வகுப்புகள் எடுக்கப்பட வேண்டும்.
7. ஓர் ஆணுக்குச் சமைக்கத் தெரியாது என்பது அவனுடைய திறன் இன்மை என்பதாகச் சொல்லுங்கள்.
8. ஓர் ஆணுக்குச் சமைக்கத் தெரியாது என்பதற்கு அவன் அம்மா மட்டுமல்ல அப்பாவும் பொறுப்பு தான் என்பதைச் சொல்லிப் பரப்புங்கள்.

இறுதியாக, ஆண்களுக்குச் சமைக்க வரும். சமைக்க முடியாது அல்லது தெரியாது என்று மீசை முறுக்கும் ஆண்கள் பட்டினி கிடக்கட்டும்.(பேசுவோம்)

படைப்பாளர்

ராம் குமார்

மருத்துவர், ஒரு ஆண் பிள்ளையை வளர்க்க கற்றுக்கொண்டிருக்கும் ஓர் அப்பா.