இன்று பலரையும் வாட்டி வதைத்துக்கொண்டிருக்கும் மிகப் பெரிய பிரச்னை உடல் பருமன். வாழ்க்கை முறை மாற்றங்கள், ஜங்க ஃபுட், ஃபாஸ்ட் ஃபுட், உடல்வாகு, வியாதிகள், சோம்பேறித்தனம் என்று விதவிதமான காரணங்களால் உடல் பருமன் ஏற்படுகிறது. உடலுழைப்பு என்பது வெகுவாகக் குறைந்துவிட்ட இந்தக் காலத்தில் உடல் பெருத்துக்கொண்டே போவது பலருக்கும் பெரிய தலைவலியாக மாறிவிட்டிருக்கிறது. இந்தப் பருமன் பிரச்னை இன்று நேற்றல்ல உலகம் தோன்றியது முதலே இருந்து வருகிறது. கி.மு. 800 காலத்தில், பண்டைய இந்தியாவின் அறுவை சிகிச்சை மருத்துவத்தின் தந்தை எனப் போற்றப்படும் சுஸ்ருதர், மதுமேகம் என்று அழைக்கப்படும் நீரிழிவு நோய் உடல் பருமனுடன் தொடர்புடையது என்று குறிப்பிடுகிறார். மனித உடலின் நான்கு அடிப்படை திரவங்கள் (ரத்தம், மஞ்சள் பித்த நீர், கறுப்புப் பித்த நீர், சளி) குறித்து விளக்கும் நவீன மருத்துவத்தின் தந்தையான ஹிப்போகிரேட்டஸ், தேவைக்கு அதிகமாக எடுத்துக்கொள்ளும் எந்தவிதமான உணவும் இந்த உயிர்த் திரவங்களை அதிகமாக்கிவிடுகிறது. இவற்றைச் சமன் செய்வதற்கு உடற்பயிற்சி ஏதும் செய்யவில்லையெனில், நோய்கள் ஏற்படும் என்கிறார்.

        

ஐரோப்பிய நாடுகளில் 17ஆம் நூற்றாண்டுகளில் தூய்மையான காற்று, உடற்பயிற்சிகள்,  காய்கறிகள் சாப்பிடுதல் போன்றவற்றால் உடல் பருமனைத் தவிர்க்க முடியும் என்று மக்கள் பின்பற்றத் தொடங்கினார்கள். 18ஆம் நூற்றாண்டில் ராணுவத்தில் பணிபுரிந்த மருத்துவர்கள் ஜான் ரோலோ, வில்லியம் பாண்டிங் ஆகியோரால் குறைவான கார்போஹைடிரேட், அதிக புரதம், குறைந்த கொழுப்பு உணவு வகைகள் உடல்பருமனைக் குறைக்கும் எனக் கண்டறியப்பட்டது. இவர்களின் இந்தக் கண்டுபிடிப்பின் சாராம்சம்தான் தற்போது நாம் பயன்படுத்திவரும் ராபர்ட் சாலமன் அட்கின் 1960இல் கண்டுபிடித்த அட்கின் உணவுமுறை. இந்த உணவுமுறையில் புரதம் அதிகமாக இருந்ததால், யூரிக் அமிலம் அதிகரித்து  மூட்டுவீக்கம், சிறுநீரகக் கற்கள் போன்றவை ஏற்படுகிறது என்ற புகார்கள் எழுந்ததால், அட்கின் உணவுமுறை மெல்ல மெல்ல மறைய ஆரம்பித்தது. ஆனால், தற்போது அதற்கு இணையான உணவுமுறைதான் பரவலாகி, வணிகமாகி வரும் பேலியோ உணவுமுறை. இந்தப் பேலியோ டயட் சரியில்லை என்று மருத்துவர்களும் சரியானதுதான் என்று டயட் ஆதரவாளர்களும் வாதிட்டுக்கொண்டு தான் இருக்கிறார்கள்.

இந்தியாவில் உடல் பருமன் பிரச்னை 2010லிருந்து 2040 வரை மூன்று மடங்கு அதிகரிக்கும் என்று ஒரு கணக்கெடுப்பில் மதிப்பிடப்பட்டுள்ளது. குறிப்பாக இந்தக் காலகட்டத்தில், அதிக எடை கொண்ட 20 முதல் 69 வயதுடைய மக்களில் இந்தப் பிரச்னை இரட்டிப்பாகும். 

சமீபத்தில் இருபத்தி இரண்டு வயதேயான சேத்தனா ராஜ் என்ற கன்னட நடிகை, உடல் எடைக்குறைப்பு அறுவை சிகிச்சை செய்யச் சென்றவர்,  நுரையீரலில் நீர் கோத்து திடீர்  மாரடைப்பு ஏற்பட்டு அறுவை சிகிச்சை டேபிளிலேயே மரணமடைந்தார்.

உண்மையிலேயே அவர் பருமன் அல்ல. அவருடைய நண்பர்கள் வட்டாரம் இன்னும் கொஞ்சம் இளைத்தால் நன்றாக இருக்கும் என்று உசுப்பேற்றியதன் விளைவு உடற்பயிற்சி, உணவுக் கட்டுப்பாடு என்று முயற்சி செய்யாமல் உடனே கட்டழகு பெற ஆசைப்பட்டு, ஆபரேஷனுக்கு உடன்பட்டு இன்று இன்னுயிரை இழக்கும் நிலைக்கு ஆளாக்கிவிட்டது. சேத்தனாவின் இறப்புக்கு ஒருவிதத்தில் இந்தச் சமுதாயமும் காரணம். உடலை ஒல்லியாக வைத்துக்கொள்ள மன ரீதியாக ஏற்பட்ட நிர்ப்பந்தத்தால் தான் அந்தப் பெண்ணுக்கு இத்தகைய முடிவு ஏற்பட்டது. உலக சுகாதார நிறுவனம் வெளியிட்ட அறிக்கையின்படி, உலகளவில் 100 கோடிக்கும் அதிகமான மக்கள் உடல் பருமனால் அவதிக்குள்ளாகின்றனர். உடல் பருமன் அதிகரிக்கும் பட்சத்தில் அது உயிரிழ்பபுக்குக்கூட வழிவகுக்கும். இதனால் அதிகமான எடையைக் குறைக்க ஏற்படுத்தப்பட்ட சிகிச்சை முறைகளே ‘பேரியாட்ரிக் சர்ஜரி’, ‘லைப்போசக் ஷன்’ என்ற கொழுப்பைக் குறைக்கும் அறுவை சிகிச்சைகள். ஆனால், இந்த அறுவை சிகிச்சைகள் எல்லோருக்கும் ஒத்துக்கொள்ளுமா என்பது சந்தேகம் தான். இவற்றில் ஆபத்தும் ஏற்படலாம் என்பது தெரிகிறது.

பேரியாட்ரிக் சிகிச்சையில் இரைப்பை சுருக்கப்பட்டு, சிறு குடலின் அளவும் குறைக்கப்பட்டு 150 செ.மீ தள்ளி இரைப்பையுடன் இணைக்கப்படுகிறது.  இதனால் இரைப்பையின் கொள்ளளவு குறைக்கப்பட்டு உணவு குறைவாக உட்கொள்ளப்படுகிறது. பசியைத் தூண்டும் க்ரெலின் ஹார்மோன் சுரப்புப் பகுதி நீக்கப்படுகிறது. இதனால் பசி உணர்வு கட்டுப்படுத்தப்படுகிறது. உணவின் அளவு குறைவதால், உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துகளும் குறையும். இதைத் தவிர்க்க மருத்துவர்கள் கொழுப்புச்சத்து இல்லாமல் ஊட்டச்சத்து நிறைந்த உணவு வகைகளைப் பரிந்துரைப்பார்கள். அதைத் தவறாமல் பின்பற்ற வேண்டும். இல்லாவிடில் உடல்நிலை மிக மோசமாக மாறிவிடும். பேரியாட்ரிக் அறுவை சிகிச்சை செய்துகொள்பவர்களின் குறைந்தபட்ச பி.எம்.ஐ. அளவு 40-க்கு மேலும், சர்க்கரை நோய் போன்ற மருத்துவப் பிரச்னை உள்ளவர்களுக்கு பி.எம்.ஐ. அளவு 35-க்கு மேலும் இருந்தால் இந்த அறுவை சிகிச்சை செய்துகொள்ளலாம்.

உடலில் குறிப்பிட்ட பகுதியில் மட்டும் தேங்கியிருக்கும் கொழுப்பை நீக்க லைப்போசக்‌ஷன் அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது. இந்தச் சிகிச்சை முறையில் இடுப்பு, வயிறு, தொடை, பின்பக்கம் போன்ற பகுதிகளில் உள்ள கொழுப்பு அல்ட்ரா சவுண்ட் மூலமாகவும் சாதாரண ஊசி மூலமாகவும் உறிஞ்சப்படும். ஆனால், அதிக எடை குறையாது. இதிலும் நிறைய அபாயங்கள் உள்ளன. கொழுப்பை உறிஞ்சுவதன் மூலமாகச் சருமத்தில் சுருக்கம், கரும்புள்ளிகள் ஏற்பட வாய்ப்புண்டு. கொழுப்புத் துகள்கள் நுரையீரலில் தேங்கலாம்.

இந்த அறுவை சிகிச்சைகள் மூலம் உடனடிப் பாதிப்பு ஏற்படாவிட்டாலும் சிலகாலம் கழித்துப் பக்கவிளைவுகளைச் சந்தித்தே தீர வேண்டும். எடை குறைப்பு முக்கியம் தான். ஆனால், ஆரோக்கியமான முறையில் எடையைக் குறைக்க முயற்சி செய்ய வேண்டும். உடல் ஆரோக்கியமாக இருப்பது தான் முக்கியம்.

                  

சர்வதேச அளவில் உயரத்துக்கேற்ற எடையைக் கணக்கிடும் முறை தான் பி.எம்.ஐ கால்குலேட்டர் என்று அழைக்கிறார்கள். ஒருவரின் உடல் எடையையும் உயரத்தையும் கணக்கிடும் முறைதான் பி.எம்.ஐ என்றழைக்கப்படுகிறது. பி.எம்.ஐ. குறித்த அட்டவணையின்படி 18. 5 க்குக் கீழ் பி.எம் ஐ. அளவு குறைவாக இருந்தால் அவர்களின் எடை குறைவானது. அவர்கள் உடல் எடையை ஆரோக்கியமாக அதிகரிக்கச் செய்ய வேண்டும்.

18.5 லிருந்து 24.9 க்குள் பி.எம்.ஐ அளவு இருந்தால் அது இயல்பான ஆரோக்கியமான எடை. தினமும் 30 நிமிடங்களாவது மிதமான பயிற்சி செய்வதன் மூலம் உடல் எடையை இதே போன்று கட்டுக்குள் வைத்திருக்கவும் முடியும்.

30 முதல் 34-9 வரை இருப்பது உடல் எடை அதிகரித்திருப்பதைக் காண்பிக்கிறது. இந்த நிலையில் விழித்துகொண்டால் வேகமாக உடற்பயிற்சி, உணவு இரண்டையும் பின்பற்றி உடல் எடையைக் கட்டுக்குள் கொண்டு வரலாம். எனினும் இது உடல் பருமனைக் காண்பிக்கிறது.

35 முதல் 39.9 வரை பி.எம்.ஐ. இருந்தால் அது உடல் பருமனை நிச்சயம் செய்கிறது. இந்த நிலையில் நிச்சயமாக உணவுக் கட்டுப்பாடு, உடற்பயிற்சி போன்றவை மிகவும் அவசியம். எடையைக் கட்டுக்குள் வைத்திருக்க இவர்கள் அதிக முயற்சிகள் எடுக்க வேண்டும்.

40க்கு மேல் பி.எம்.ஐ. இருந்தால் நிச்சயம் அது அதிகப்படியான மிக அதிகப்படியான உடல் எடை தான். இந்த நிலையில் நீரிழிவு உயர் ரத்த அழுத்தம், இதய நோய்கள் என்று பல நோய்கள் ஏற்படும் வாய்ப்புகள் மிக மிக அதிகம். இவர்கள் கடுமையான டயட், உடற்பயிற்சிகளை மருத்துவர் ஆலோசனைப்படி மேற்கொள்ள வேண்டும்.

 நார்ச்சத்து தான் பசியைக் கட்டுப்படுத்தும் தன்மை கொண்ட ஊட்டச்சத்து. இது செரிமானத்தைச் சரிசெய்யும் பண்பும் கொண்டுள்ளது. மேலும், உடலில் உள்ள நச்சுகளைப் போக்க இது வெகுவாக உதவுகிறது. எனவே, உடல் எடை குறைக்க, இயற்கையாக வயிற்றின் அளவைச் சிறிதாக்க இது பயனளிக்கும். தண்ணீர் உடலின் நச்சுகளையும் கழிவுகளையும் வெளியேற்ற உதவும் அற்புத பானம். இதைப் போதுமான அளவு தவிர்க்காமல் அருந்த வேண்டும்.

               

எடையைக் குறைக்கிறேன், வயிற்றைக் குறைக்கிறேன் என்று காலை உணவைத் தவிர்க்கவே கூடாது. காலை உணவைச் சத்து மிகுந்த உணவாக எடுத்துக்கொள்ளுதல் நலம். பால், முட்டை, காய்கறிகள், பழங்கள் எனப் புரதம், வைட்டமின் சத்துகள் நிறைந்த உணவுகள் எடுத்துக்கொள்வது சிறந்தது.

இப்போதுள்ள மக்கள் உடலை இயக்கவே மிகவும் சோம்பேறித்தனப்படுகிறார்கள். உடலை வருத்திக்கொள்ளாமல் எடை குறைந்தால் போதும் என்று நினைக்கிறார்கள். இதைப் பயன்படுத்திக் கொண்டு போலிகள் எடைக்குறைப்பு மருந்துகள் என்று கண்டதையும் விளம்பரம் செய்து கொள்ளையடிக்கிறார்கள். இதனால் பணத்தோடு உடலநலனையும் மக்கள் இழந்துவிடுகிறார்கள். அவசரமாக உடலைக் குறைக்க முனையக் கூடாது.              

உடலை எப்போதும் இயக்கத்திலேயே வைத்திருப்பது, புகை மது போன்ற லாகிரி வஸ்துகளைத் தவிர்ப்பது, நிம்மதியான தூக்கம், சரியான சத்துள்ள உணவு, போதுமான அளவு உடற்பயிற்சி, தேவையான அளவு ஓய்வு ஆகியவையே உடல்நலனைக் காக்கும் ஆரோக்கியமான வழிமுறைகள்.

(தொடரும்)

படைப்பாளர்:

கனலி என்ற சுப்பு

‘தேஜஸ்’ என்ற பெயரில் பிரதிலிபி தளத்தில் கதைகள் எழுதி வருகிறார். சர்ச்சைக்குரிய கருத்துகளை எழுதவே கனலி என்ற புனைபெயரில் எழுதத் தொடங்கியிருக்கிறார்.