அண்மையில் ஒரு காலைப் பொழுது. வீட்டுவேலை செய்யும் அக்கா ஒருவரின் பெண்ணைத் தற்செயலாகப் பார்த்தேன். அரசு உதவி பெறும் பள்ளியில் ஒன்பதாவது படிக்கிறாள். படிப்பைப் பற்றி விசாரித்துவிட்டு, “சாப்பிட்டியா?” என்று கேட்டேன். “இல்லை” என்றாள். “ஏன்டா, அம்மா காலைல சமைக்கலையா?” “இட்லி சுட்டு, சட்னி வச்சிருந்தாங்க ஆன்ட்டி” என்றாள். ”அப்புறம் ஏன் சாப்பிடல?” என்றேன். பதில் சொல்லாமல், தர்மசங்கடமாகச் சிரித்தாள்.

அதற்குள் அவள் அம்மா வந்து, “நல்லா கேளுப்பா. படிக்கற புள்ள, சத்தா சாப்பிடணுமேன்னு சீக்கிரமா எந்திரிச்சு, நான் வேலைக்குப் போறதுக்கு முன்னாடி, காலை டிபன், மதியத்துக்குச் சோறு எல்லாம் செஞ்சு வச்சுட்டுப் போறேன். இவ என்னடான்னா, காலைல சாப்பிட மாட்டேங்கிறா. டீ மட்டும் குடிச்சுட்டு, மதியத்துக்குச் சின்ன டிபன்பாக்ஸ்ல ரெண்டு கரண்டி சாதம்தான் ஸ்கூலுக்கு எடுத்துட்டுப் போறா. கேட்டா, உடம்பைக் குறைக்கணும்னு சொல்றா” என்று படபடவெனப் பொரிந்தார்.

சற்றே பருமனான அந்த குட்டிப் பெண்ணின் கண்களில் நீர் கோத்துக்கொண்டது. “எல்லாரும் கிண்டல் பண்றாங்க ஆன்ட்டி. குட்டி யானை வருது பாரு, உங்க வீட்ல எந்தக் கடையில அரிசி வாங்குறீங்கன்னு எல்லாம் அவங்க நக்கல் பண்றப்ப ரொம்பக் கஷ்டமா இருக்கு. நான் என்ன பண்றது? கொஞ்சமாதான் சாப்பிடறேன். ஆனாலும் உடம்பு குறைய மாட்டேங்குது” என்று குரல் கம்மச் சொன்னாள்.

“ரெண்டு வாரத்துக்கு முன்னாடி, ஸ்கூல்ல தல சுத்தி மயக்கமா விழுந்துட்டாம்மா. பயந்தே போயிட்டேன். டாக்டர்கிட்ட கூட்டிட்டுப் போயி காமிச்சா, நல்லா சாப்பிடணும், உடம்புல சத்தே இல்லன்னு சொல்றாரு. அப்படியும் இவ கேக்க மாட்டேங்கறா” என்று அவள் அம்மா புலம்பினார்.

காலை உணவின் அவசியத்தைப் பற்றியும், சரிவிகித உணவு சாப்பிட்டால்தான் நன்றாகப் படிக்க முடியும் என்றும் அந்தக் குழந்தையிடம் விரிவாக எடுத்துச் சொன்னேன். “உடம்பு குண்டானா பரவால்லடா, மத்தவங்க பேசறதைப் பத்தியும் கவலைப்படாதே. இப்போதைக்கு நல்லாப் படிச்சு, உன் கால்ல நிக்கிறதுக்கு நல்ல வேலைக்குப் போகணும். மத்ததெல்லாம் அப்புறம் பார்த்துக்கலாம்” என்று சமாதானப்படுத்தினேன்.

பெண் குழந்தைகளும் பெண்களும் பருமனாக இருப்பதில் இந்தச் சமுதாயத்திற்கு என்ன பிரச்னை? ’அடுத்த தலைமுறையை உருவாக்கும் அவர்கள் ஆரோக்கியமாக இருக்க வேண்டும், அதனால்தான் சொல்கிறோம்’ என்று சப்பைக்கட்டு கட்ட வேண்டாம். சில குழந்தைகளுக்கு இயல்பான உடல்வாகே பருமன் தான். அவர்கள் குறைவாகச் சாப்பிட்டாலும், எவ்வளவு உடற்பயிற்சி செய்தாலும் அந்த உடல்பருமனைக் குறைக்க முடிவதில்லை. இது வளர்ந்த பெண்களுக்கும் பொருந்தும். குடும்ப மரபணுவாலும் பல்வேறு உடல் சார்ந்த பிரச்னைகளால் பாதிக்கப்படும்போதும் உட்கொள்ளும் மருந்துகளாலும் உடல் பெருத்துவிடுகிறது.

“ஒல்லியாக இருக்கும் பெண்தான் ஆரோக்கியமானவர். பருமனாக இருப்பவர் ஆரோக்கியம் இல்லாதவர்” என்ற வாதம் சரியல்ல. ஒல்லியாக இருக்கும் பெண்ணுக்கு கொலஸ்ட்ரால் அளவு கூடுதலாக இருக்கலாம், குண்டான பெண்ணுக்கு கொலஸ்ட்ரால் குறைவாகவும் இருக்கலாம். கொழுப்பு நிறைந்த உணவுகளைச் சாப்பிடுவதாலும், உண்ணும் உணவுக்கு ஏற்ற உடற்பயிற்சி செய்யாததாலும் வரும் உடல் பருமனைக் குறைக்க வேண்டும்தான். இதில் மாற்றுக் கருத்து இல்லை. அதே நேரத்தில், ஹார்மோன் கோளாறுகளாலும் உடல்சார்ந்த பல்வேறு பிரச்னைகளாலும் குறைபாடுகளாலும் சாப்பிடும் மருந்துகளின் பக்க விளைவாலும் பல பெண்களுக்கு உடல் பருத்துவிடுகிறது. இதனைக் குறைப்பது எளிதல்ல. அப்படிப்பட்ட பெண்களை முன்முடிவோடு கிண்டலடிப்பதும் கேலி செய்வதும் அநாகரிகமானது, உரிமை மீறலும் கூட.

தொப்பையும் தொந்தியுமாக இருக்கும் ஆண்களைப் பற்றி, அவர்களின் ஆரோக்கியத்தைப் பற்றிப் பெரிதாகக் கவலைப்படாத, கமெண்ட் செய்யாத ஆணாதிக்கச் சமுதாயம் பெண்களின் உடல் பருமனைப் பற்றியும் குறிப்பாகப் பெரிய வயிற்றையும் அளவுக்கதிகமாகப் பகடி செய்கிறது. ’அவர்களின் உடல்நலத்தில் அக்கறை’ என்ற போர்வையில் உள்ளுக்குள் மறைந்திருப்பது, பெண்கள் பார்ப்பதற்கு அழகாக, ரம்மியமாக காட்சி அளிக்க வேண்டும் என்ற பொதுப்புத்தியின் அவா தான்.

’பெண் அழகாக இருந்தால் போதும். பெரிதாக வேறு எதுவும் செய்யத் தேவையில்லை’ என்ற ஆணாதிக்கச் சமுதாயத்தின் எதிர்பார்ப்புதான் அவர்கள் கச்சிதமான உடல் அமைப்போடு இருக்க வேண்டும் என்பதையும் நிர்ப்பந்திக்கிறது. நுகர்வுக் கலாச்சாரமும் ஊடகங்களும் திரைப்படங்களும் பெண் ஒட்டிய வயிறுடன் அளவான எடையில், கச்சிதமான உடல் அமைப்போடு இருக்கவேண்டும் என்பதைத் திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருக்கின்றன. அப்படி இருக்கும் ஒரு சில பெண்களைப் போற்றிக் கொண்டாடுகிறது. யதார்த்தத்தில், இது 99 சதவீதப் பெண்களுக்குச் சாத்தியமில்லை. சத்தான உணவை அளவாகச் சாப்பிட்டு, தினமும் உடற்பயிற்சி செய்யும் பெண்களுக்குக்கூட, ஒட்டிய வயிற்றுடன் காட்சியளிப்பது என்பது இயலாத காரியம். உண்மை இப்படி இருக்க, திரைப்பட நடிகையர், விளம்பரங்களில் வரும் மாடல்கள், உலக அழகிகளின் பேட்டிகள் என்று அனைத்தையும் பார்த்துக்கொண்டிருக்கும் பெரும்பான்மை பெண்களுக்கு தான் அப்படி இல்லையே என்ற மன உளைச்சல் அதிகமாக இருக்கிறது.

இது பெண் குழந்தைகளையும் கூடுதலாகப் பாதிக்கிறது. பெண் குழந்தைகளுக்காக விற்கப்படும் பொம்மைகளுக்கும் இதில் பெரிய பங்கு இருக்கிறது. குறிப்பாகச் சொல்ல வேண்டுமென்றால், பார்பி பொம்மை. இந்தப் பொம்மையின் உடலமைப்புடன் ஒரு பெண் இயல்பில் இருக்க முடியுமா? அழகிப் போட்டிக்குத் தயாராகும் மாடல் பெண்களுக்கு வேண்டுமானாலும் இது சாத்தியப்படலாம். மற்றவர்களுக்கு இது சாத்தியமில்லை. அரைகுறையாகச் சாப்பிட்டு, கடினமாக உடற்பயிற்சி செய்து, அழகிப் போட்டிகளை மட்டுமே குறிவைத்திருக்கும் பெண்கள் ஆரோக்கியமாக இருக்கிறார்களா என்பதே கேள்விக்குறிதான். விரும்பிய உணவைச் சாப்பிட முடியாமல், ஜூஸை அருந்தி, சத்துமாத்திரைகளை எடுத்துக்கொண்டு, ஒட்டிப்போன வயிற்றுடன் காட்சியளிக்க வேண்டுமேயென்று தண்ணீர் அருந்தும் அளவையும் குறைத்து, பலவாறு உடலை வருத்திக்கொள்கிறார்கள். பத்திரிகைகளில் வரும் திரைப்பட நடிகையர், மாடல் பெண்களின் படங்கள் போட்டோஷாப் செய்யப்பட்டு, கச்சிதமான, மாசு மருவற்ற செயற்கையான உடலமைப்புடன் காட்டப்படுகின்றன.

இது செயற்கையென்று அப்பாவி பெண் குழந்தைகளுக்குத் தெரிவதில்லை. தானும் அவர்களைப் போல காட்சியளிக்க வேண்டும் என்று குறைவாகச் சாப்பிடுவதும் சத்தான உணவை ஒதுக்குவதுமாக இருக்கிறார்கள். வளரிளம் பருவத்தில் ஆரம்பிக்கும் இந்தப் போராட்டம், திருமணத்திற்குப் பிறகும் தொடர்கிறது. திருமணம், கர்ப்பம், பிரசவம், சிசேரியன், பாலூட்டுவது, குடும்பக்கட்டுப்பாட்டுக்கான மாத்திரைகள், லேப்ராஸ்கோபி, அவ்வப்போது தலைகாட்டும் மாதவிடாய் கோளாறுகள், ஹார்மோன் பிரச்னைகள், 40களுக்குப் பிறகு மெனோபாஸ், கர்ப்பப்பை பிரச்னைகள் என்று பெண்ணுடல் ஏகப்பட்ட சவால்களை எதிர்கொள்கிறது. இதில் வயிறு பெரிதாக இருப்பது மட்டும்தான் சமுதாயத்திற்குத் தெரிகிறதே ஒழிய, அந்தப் பெண் தனது உடல்நலத்திற்காக எடுத்துக்கொள்ளும் சிகிச்சைகளோ, அறுவை சிகிச்சைகளோ கண்ணில் படுவதில்லை. `வயிறு இவ்வளவு பெரிசா இருக்கே, எக்சர்சைஸ் பண்ணி கொறச்சா என்ன?’ என்ற ஒற்றைக் கேள்வியில் அவளை முடக்கிவிடுகிறார்கள். உடற்பயிற்சி பண்ணினாலும் குறைவதில்லை என்ற உண்மை ஆணாதிக்கப் பொதுபுத்திக்கு உறைப்பதில்லை.

Beautiful trendy sexy young girl with her brown hair in a ponytail holding a mobile phone in her hand looking at the camera with her hand on her hip vector illustration on white

வயிறு ஒட்டிக் காட்சி அளிக்க வேண்டும் என்பதற்காகப் பெண்கள் படும்பாடு சொல்லி மாளாது. இதற்காகப் பிரத்யேகமான எலாஸ்டிக் பொருத்திய உள்ளாடைகளை வாங்கி இடுப்பில் அணிந்துகொள்கிறார்கள். இதனால் இயல்பாக சாப்பிடுவதற்கும் சில நேரங்களில் மூச்சு விடவும்கூட கஷ்டப்படுகிறார்கள். புடவை அணிபவராக இருந்தால் உள்பாவாடையை இறுக்கிக் கட்டுவது, ஜீன்ஸ் போடும் போது வயிறு தெரியாமலிருக்க பெல்ட்டை இறுக்கமாக அணிவது என்று பலவாறு உடலைக் கஷ்டப்படுத்திக்கொள்கிறார்கள்.

இது அவசியமே இல்லை தோழிகளே… உங்கள் உடலை உள்ளவாறு ஏற்றுக்கொள்ளுங்கள், ஆரோக்கியமாக இருப்பதற்கு முதலில் முன்னுரிமை கொடுங்கள். சரிவிகித உணவைச் சாப்பிட்டு, அன்றாடம் உடற்பயிற்சி செய்து, உடலை வலுவாக்கிக்கொள்வதுதான் முக்கியம். ஒட்டிய வயிற்றுடன் இருக்கும் உடல்தான் வலிமையானது என்ற கருத்து தவறானது. உங்கள் உடலில் அளவான கொழுப்புச்சத்து இருந்தும், தினமும் உடற்பயிற்சிகள் செய்தும் வயிறு குறையவில்லை என்றாலோ, பெரியதாக இருந்தாலோ அதைப் பற்றிக் கவலைப்பட வேண்டாம். இது உங்கள் உடல். இந்த அளவில் தான் இருக்கவேண்டும் என்று செயற்கையாக வார்க்கப்படும் பொம்மை அல்ல. உங்கள் ஆளுமையை வெளிப்படுத்தும் உயிரோட்டமான உடல். அதை அப்படியே ஏற்றுக்கொள்ளுங்கள். அதை உள்ளவாறே நேசியுங்கள். விருப்பமான உடையை தயக்கமின்றி அணியுங்கள். உங்கள் உடலுக்கு மரியாதை கொடுங்கள். கம்பீரமாக நடைபயிலுங்கள்.

தோழர்களே, பெண்கள் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்ற அக்கறையில் `உடற்பயிற்சி செய்யுங்கள்’ என்று ஓரிருமுறை சொல்வதோடு நிறுத்திக்கொள்ளுங்கள், அவர்கள் உடலை அவர்கள் பார்த்துக்கொள்வார்கள். அவர்கள் உடல்பருமனைப் பற்றி இழிவாகப் பேசாதீர்கள். கமெண்ட் அடிக்காதீர்கள். அப்படிப் பேசுவது அநாகரீகம் மட்டுமல்ல அவர்களின் வாழ்வுரிமையில் தலையிடுவதும் கூட. பெண்களின் அறிவை, ஆளுமையை மதித்து, அவர்களிடம் மரியாதையுடன் உரையாடி, மாண்புடன் நடத்துங்கள்.

படைப்பாளர்:

கீதா இளங்கோவன்

‘மாதவிடாய்’, ‘ஜாதிகள் இருக்கேடி பாப்பா’ போன்ற பெண்களின் களத்தில் ஆழ அகலத்தை வெளிக்கொணரும் ஆவணப் படங்களை இயக்கியிருக்கிறார். சமூக செயற்பாட்டாளர்; சிறந்த பெண்ணிய சிந்தனையாளர். அரசுப் பணியிலிருக்கும் தோழர் கீதா, சமூக வலைதளங்களிலும் தன் காத்திரமான ஆக்கப்பூர்வமான எழுத்தால் சீர்திருத்த சிந்தனைகளை தொடர்ந்து விதைத்து வருகிறார்.