பாலியல் கல்வி

பெற்றோருக்கும் குழந்தைகளுக்குமான உறவில், பெற்றோர் சொல்வதை அப்படியே பிள்ளைகள் கேட்டு நடக்கிறார்களோ இல்லையோ, ஆனால் பெற்றோரைக் கவனிக்கிறார்கள்.

பெரியவர்கள், குழந்தைகளிடம் முன் பின் முரணாக நடந்துகொள்வது,

குழந்தைகளிடம் உண்மையே பேசுகிறேன் பேர்வழி என்று அவர்கள் வயதிற்குத் தேவையில்லாத விஷயங்களை அப்பட்டமாகச் சொல்வது… அதைப் பெரியவர்களாளேயே ஹேண்டில் பண்ண முடியாது; பிள்ளைகள் எப்படி ஹேண்டில் செய்வார்கள்?

உறவினர்கள் பற்றி தமது அறிதல் குறைவை அப்படியே குழந்தைகளிடம் பதிப்பது. எனது நண்பரை அவரது இளவயதிலிருந்தே, ‘கவிதை, இலக்கியம் என்றே சுற்றிக்கொண்டிருக்கிறான். முட்டாள், இவனெல்லாம் எங்கே சம்பாதிக்கப் போகிறான்; உருப்பட மாட்டான்’ என்பதான பார்வைதான் அவர் வீட்டில் இருந்தது. வாழ்க்கை பற்றிய அவரது தேர்வோ வேறுவிதமாக இருந்தது. இன்றுவரை அவர் செல்வந்தர் ஆகவில்லைதான். ஆனால், மிகப் பெரிய அறிவாளி. வானின் கீழ் பூமிக்கு மேலுள்ள அனைத்து விஷயங்களைப் பற்றியும் மிக எளிதாக விளக்குவார். அவரது அறிவிற்கு ஐஏஎஸ் கோச்சிங் சென்டர் வைத்திருந்தால், அவர் இன்று எத்தனையோ ஐஏஎஸ் ஆஃபிஸரை உருவாக்கி இருக்கக் கூடியவர்தான். ஆனால், அவரது தேவைகளும் தேர்வுகளும் வேறு. அவரது அக்காள் மகள் ப்ளஸ் டூ முடித்து, தேர்வுகள் எழுத, மேற்படிப்பு படிக்க என்று சென்னை வர, இவரது வழிகாட்டல்கள் எதையும் அந்தப் பெண் பொருட்படுத்தவே இல்லை.

அவரது அக்காள் மகள் குழந்தையாக இருந்ததிலிருந்து, அவரது முன்பும் அந்த வீடு இவரைப் பற்றியக் கண்ணோட்டங்களைப் பகிர்ந்ததன் விளைவு இது.

இன்னொரு தோழி தனது திருமண வாழ்வில் கணவரைப் பிரிந்திருந்த காலம். வீட்டிற்கு வந்த பதினேழே வயதான அவரது சொந்தக்காரப் பையன், ‘கணவரோடு வாழ வக்கற்றவள்’ என்று ஏச, இங்கும் அந்தப் பையனின் முன் அவரது வீட்டார் பேசிய பேச்சுகள்தான் முக்கிய காரணம்.

அப்புறம், முதலாளி என்றால் தவறானவர் என்கிற அர்த்தம் வர, வீட்டில் புலம்புவது, அப்புறம் ஏன் அந்த வேலையிலேயே அவரிடமே வேலை செய்கிறோம் என்கிற கேள்வியை நாம் கேட்டுக் கொண்டோமானால், உண்மை நிலவரம் மற்றும் நடைமுறைச் சிரமம் நமக்கே புரியவரும்; கொஞ்சம் புலம்பாமல் வேலை பார்ப்போம்.

பொதுவாக குறைந்தபட்ச அறிவியல் அறிவுடன், அடிப்படை மருத்துவ அறிவுடன் பெற்றோர் இருக்க வேண்டியது அவசியம். என் தோழியின் மகன் சின்ன வயதில், மூக்கில் மருந்து பாட்டில் பேப்பரை விட்டுவிட, சிக்கிக்கொண்டு விட்டது; டாக்டராலும் எடுக்க முடியவில்லை. ஆபரேஷன்தானோ என எல்லாரும் கவலையில் மூழ்க, தோழி சமயோசிதமாக இன்னொரு மூக்குத் துளையில், துண்டின் நூல் நுனியை விட்டுத் தும்மல் வரும்படிச் செய்து எடுத்தார்.

குழந்தைகள் தொண்டையிலோ மூக்கிலோ கடலை, கல், பருப்பு, பட்டன் சிறிய விளையாட்டுச் சாமான்களைப் போட்டு விடுவது – உடனடியாகக் குழந்தைகளைத் தலைகீழாகப் பிடித்து லேசாகத் தலையில் தட்ட வேண்டும்; மிக உடனடியாக மருத்துவரிடம் அழைத்துச் செல்ல வேண்டும்.

என் இள வயதில் கேட்டு வளர்ந்த கதைகள் – குழம்பு அண்டாவில் குழந்தை விழுந்தது, மாடியிலிருந்து விழுந்து கேட்டின் கூர் முனையில் செருகி இறந்தது, தெருவில் சாலைகளில் வண்டி வரும் பக்கம் குழந்தைகளை நடத்திக் கூட்டிப்போகும்போது வண்டி மோதி ஏற்படும் இறப்பு,

குழந்தைகள் தாமாகப் பண்ணும் ஆராய்ச்சிகள் – தீப்பெட்டி வைத்துக் கொளுத்திப் பார்ப்பது, மின்சாரம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் ஆராய்வது, கத்தி வைத்து ஆபரேஷன் செய்து பார்ப்பது, காரை ஓட்டிப் பார்ப்பது, தம் ஆராய்ச்சிப் பொருளாக இன்னோர் உயிரைப் பயன்படுத்திப் பார்ப்பது – இன்னொருவரைக் கத்தியால் குத்திப் பார்ப்பது, குச்சியால் கண்களில் அடித்து விடுவது, நெருப்பில் தள்ளிவிட்டு விடுவது, குளத்தில் ஏரியில் கிணற்றில் தள்ளி விடுவது… இவை எல்லாம் தவிர, அடிக்கடி நாம் செய்தித்தாள்களில் படித்து மனம் பதைபதைக்கிற ‘குழந்தைகளை பாலியல் வண்புணர்வு கொலைச் செய்திகள்’ பால் புதுமையினர், பாலினச் சமத்துவத்திற்காக வெகு காலமாக உழைத்து வரும், தோழர் சாந்தியன் ‘ஆண்களைப் போன்ற கொடூர மிருகம் உலகத்திலேயே கிடையாது’ என்பார்.

உண்மையில் ஆண் அந்தளவு கொடூர மிருகம் எனில், உலகில் மற்ற உயிர்கள் இத்தனை நாள் நீடித்து வாழமுடியாது. ஆனால், அந்தக் கொடூர சிந்தனை உள்ள மனிதரிடம், அல்லது நல்ல மனிதராகவே இருந்து திடீரென காலச் சூழலில் இவ்வாறு செயல்படுகிற மனிதரிடம் இருந்து, ஆண் பெண் குழந்தைகள் மற்றும் பெண்கள் சிக்காமல் இருப்பது என்பது ஒவ்வொரு நாளும் இயல்பான ஓட்டத்தில் செய்யப்பட வேண்டியது.

அப்படிப்பட்ட நபர்கள் பொதுவாக, எளிதில் இரையாகக் கூடியவர்களைத்தான் வேட்டையாடுகிறார்கள் – இதுதான் தம்ப் ரூல்.

எளிதில் இரையாகாதவர்களாக, (இப்படி விஷயங்களில்) அணுகச் சுலபமற்றவர்களாக, எப்போதும் தன்னம்பிக்கை உடையவர்களாகக் குழந்தைகளை வளர்க்க வேண்டும். இது எளிதில்லை. ஒவ்வொரு கணமும் பிரித்துப் பிரித்துத் தந்து, ஒவ்வோர் உரையாடலிலும் அவர்கள் தாம் பயமோ தயக்கமோ குழப்பமோ இன்றி உரையாடச் செய்ய வேண்டும். எனில், மிரட்டல் தொனி இல்லாத, இயல்பான சமமான உரையாடல்களே அதைச் சாத்தியப்படுத்தும்.

சேஃப் டச், அன் சேஃப் டச் கற்றுத் தருவது எவ்வளவு முக்கியமோ அதேயளவு குழந்தைகளிடம் அன்றாட நிகழ்வுகளை உரையாடும் சூழல்களைத் தினமும் தருவது அதி முக்கியம். இதை இதற்காக என்றில்லாமல், இயல்பாகக் குழந்தைகளை நேசிக்கும் மனதோடு செய்ய வேண்டும். பிள்ளைகள் ஒளிவுமறைவின்றிப் பேசும் படியான நம்பிக்கையைத் தர வேண்டும்; அவர்கள் தனது ரகசியம் என்று நினைப்பவற்றை, நாமும் காக்க வேண்டும். யாரெதிரிலும் அவர்களை அவமானப்படுத்தக் கூடாது; அவர்களின் குறைகளை அவர்களிடமே பேச வேண்டுமே தவிர, யாரிடமும் பகிரக் கூடாது. அவர்களை ஒருபோதும் குறைவாக உணர வைக்கக் கூடாது; அப்போதுதான், அவர்கள் தனது தன்னம்பிக்கைக் குறையாமல் மகிழ்வான மனதோடு இருக்கையில் வெளியிலும் கம்பீரமாகத் தெரிவார்கள்.

இது மிக முக்கியமானது. ஒருவர் தவறிழைக்கிறார் என்றால், அவரைக் குற்றப்படுத்தாமல், அந்தக் குற்றத்தின் பாதிப்பை மட்டும் அறிய வைப்பது. இதைச் சிறிய நிகழ்வுகளிலும், குட்டிக் குட்டி விஷயங்களிலும் பயிற்சி செய்ய செய்ய வசப்படும்.

உதாரணமாக, எனது மகளை இரண்டரை வயதில் ஒரு டேகேரில் சேர்த்திருந்தேன். அங்கு வேலை செய்யும் ஆயா, ஏதோ கோபத்தில் இவளது கையை அழுத்திப் பிடித்துவிட, அழுந்திய தடத்துடன் வந்தாள்.

நான் சென்று புகாரளிப்பது சரிதான். எல்லார் எதிரிலும் மன்னிப்புக் கேட்டு, அதனால் அவர் ஈகோ அடிபடும். அதுவல்ல என் நோக்கம். ஆனால், புகாரளித்தால், மறுபடியும் இன்னும் அதிகப் பகையுடன் அந்த ஆயா இதைச் செய்ய மாட்டார் என்பது என்ன நிச்சயம். மேலும், யாருக்கும் தெரியாமல், இன்னும் துன்பம் இழைத்தால்?

தெரியாமலோ தெரிந்தோ அவர் அறிந்தோ அறியாமலோ செய்த குற்றத்திற்கு ஒரு வாய்ப்பளித்து பின், புகாரளிக்கலாமே என்பது என் எண்ணம். மகளிடம், ‘ஆண்ட்டி, நீங்க இறுக்கிப் பிடிக்கும்போது என் கை வலிக்குது’ என்பதைச் சொல்லச் சொன்னேன். அவளும் சொல்ல, ‘அச்சோ தங்கமே ஸாரிடா’ என்று அணைத்துக் கொண்டு, அதன் பிறகு ஒருபோதும் அவர் அப்படி நடந்துகொள்ளவில்லை.

குழந்தைகளோடு எப்போதும் எல்லா நேரமும் நாம் உடனிருந்து கொண்டிருக்க முடியாது. அவர்கள் மேல் நிகழும் எல்லாவற்றையும் அவர்களே நீக்குவதற்கான, நடக்காமல் தடுப்பதற்கான சாத்தியக் கூறுகளை உருவாக்கித் தரலாம்.

குழந்தைகளுக்கு இப்படி விஷயங்களில் எதைக் கற்றுத் தருவது, எந்தளவு கற்றுத் தருவது என்கிற குழப்பம் பெரியவர்களுக்கு வரும்.

சாலையில் ஓரமாகச் செல்ல வேண்டும்; ஜீப்ரா லைனில் குறுக்கே கடக்க வேண்டும் என்று விதிமுறைகள் சொல்லித் தருவது போலத்தான் ‘சேஃப் டச், அன் சேஃப் டச்’ சொல்லித் தருவது;

யாரும் ‘இப்படி ஆக்ஸிடெண்டாகி, இப்படிச் சிதறி உருக்குலைந்து செத்துப் போவாய்’ அதனால் ஓரமாகப் போ’ எனச் சொல்ல மாட்டோம். போலவே, தீய மனிதர்கள் ‘இப்படியெல்லாம்’ நடப்பார்கள் எனச் சொல்லித் தரப் போவதில்லை. இதில் தெளிவிருந்தால் போதும். எதற்கும் சொல்லும் முறை என்ற ஒன்று இருக்கிறது.

மின்சாரம், நெருப்பு ஆகியவற்றை குழந்தைகளுக்கு எப்படிச் சொல்லித் தருகிறோம்? அன்றாடம் அவை இல்லாமல் வாழ்வே இல்லை எனும்போது, அதை அவர்கள் உபயோகிக்கக் கற்கவும் வேண்டும்; அதே நேரம் விபத்தாகிவிடவும் கூடாது; ‘அடிமைப் பெண்’ எம்ஜிஆர் போல கூண்டுக்குள்ளா பிள்ளைகளை கடைசி வரை வளர்க்கப் போகிறோம்? எல்லாருக்கும் வாழக் கிடைத்திருப்பது இந்த ஒரே ஒரு வாழ்வுதான். எனவே, சாலையில் பிள்ளைகள் தாமே செல்லப் பழகவும் வேண்டும்; அதே நேரம் எதிலும் மோதிக்கொண்டுவிடக் கூடாது. இவற்றில் எவ்வாறாக அவர்களை வழிநடத்துகிறோமோ, அப்படித்தான் பாலியல் கல்வியிலும்.

மிக எளிதான வழி, அவர்களின் கேள்விகளுக்கு, அந்தந்தப் பருவத்திற்கேற்ற வகையில் எளிமையாகப் பதிலளிப்பதுதான். பிள்ளைகளின் கேள்விகளுக்கான எளிய பதில்கள் முக்கியம், நமது வயதின் கூடுதல் அறிதல்கள் காரணமாகப் பிள்ளைகளை நாம் வதைப்பது போல் ஆகிவிடக் கூடாது.

ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் சொன்னது போலத்தான், 6 வயது குழந்தைக்குப் புரிவது போல ஒரு விஷயத்தை நமக்குச் சொல்லத் தெரியவில்லை எனில், நாமே அதில் புரிதலற்று இருக்கிறோம் என்று பொருள்.

ஒரு படம் நமக்கு வேண்டுமென்றால், வேண்டாதவற்றை எல்லாம் கவனமாக வெட்டியும் எடுக்கலாம்; வேண்டியதைக் கவனமாக வெட்டியும் எடுக்கலாம். போலவே, பாலியல் தொடர்பான விஷயங்களில் நமது பிள்ளைகளைக் கவனமாக வளர்க்க, மற்றெல்லாவற்றிலும் நிதானத்தையும் அன்பையும் மற்ற உயிர்களைத் தன்னுயிராக மதிக்கும் தன்மையையும்,

கோபம், வெறுப்பு, குழப்பம், பதட்டம் போன்ற எதிர்மறை உணர்வுகளை வெளிப்படுத்தும் விதங்களை நெறிப்படுத்துவதும் நல்ல பலன்களைத் தரும்.

எதையும் கேள்வி கேள்!

படைப்பாளர்

பிருந்தா சேது

சே.பிருந்தா (பிருந்தா சேது), கவிஞர். எழுத்தாளர். திரைக்கதை ஆசிரியர்.