‘சாமி, பொண்ணு பெரிய மனுசி ஆயிட்டா தீட்டுக் கழிக்கணும். நல்ல நாள் பார்த்துச் சொல்லுங்க’ என்று ஜோதிடரையோ அல்லது ஜோதிடம் படித்த பார்ப்பனரையோ அணுகும் நபர்களை இன்னமும் கிராமங்களில் மட்டுமல்லாது நகர்ப்புறங்களிலும் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறோம். ஏன் பெண் பூப்படைவதைத் தீட்டு என்கிறார்கள்? பெண் பூப்படையாது இருந்திருந்தால் இவ்வுலகில் மனிதர்கள் பிறந்திருப்போமா? இது எப்படி தீட்டானது? அந்தத் தீட்டைக் கழிக்கும் சடங்கே பூப்புனித நீராட்டுவிழாவானது. தீட்டுப்பட்ட பெண்ணைப் புனித நீரால் சுத்தம் செய்கிறார்களா?

இந்தத் தீட்டு என்பதையும் புனிதம் என்பதையும் சற்றே ஆழமாகப் பார்க்க வேண்டிய நிர்ப்பந்தம் இருக்கிறது. இந்த உலகத்தில் மனிதர்கள் ஆண், பெண் சேர்க்கையால் இயல்பாக உருவானவர்கள். ஆனால், நாம் புனிதமாகக் கட்டமைத்திருக்கும் புராணக் கதாபாத்திரங்கள் பலவும் ஆண்-பெண் சேர்க்கையால் உருவானவர்கள் அல்லர்.

நம் புராண நாயகியான சீதை ஆண்-பெண் சேர்க்கையால் உருவானவர் அல்ல. ஜனக மகாராஜா நிலத்தைத் தோண்டிக் கொண்டிருக்கும்போது சீதாதேவியைக் கண்டறிந்ததாகவும் அதன்பின் அவரைத் தன் மகளாகத் தத்தெடுத்துக் கொண்டதாகவும் புராணங்கள் கூறுகின்றன. சீதை என்னும் கதாபாத்திரத்தின் புனிதத் தன்மை கெட்டுவிடாமல் இருக்க, அவர் ஆண்- பெண் சேர்க்கையில் பிறந்தவர் அல்ல என்னும் விஷயத்தைத் திணித்திருக்கிறார்களோ?

அடுத்த கதாபாத்திரம் மகாபாரதத்தில் வரும் பாஞ்சாலி. துரோணாச்சாரியாரைப் பழிதீர்க்க தனக்கு ஆசி கிடைக்க வேண்டி துருபத மன்னன் யாகம் ஒன்றை நடத்தினான் என்றும் அந்த யாகத்திலிருந்து பிறந்தவள்தான் பாஞ்சாலி என்றும், அவள் கருமை நிறத்திலான இளம்பெண்ணாக யாகத்திலிருந்து உருவெடுத்தாள் என்றும் கூறுகிறது புராணம். ஆக பாஞ்சாலியும் ஆண், பெண் சேர்க்கையால் பிறந்தவள் அல்ல.

அடுத்த கதாபாத்திரம் கிறிஸ்தவ கடவுளான இயேசு. மெக்தேலீனாள்

இயேசு கிறிஸ்துவின் வாழ்வின் மிக முக்கியமான பெண். அவர்கள் இருவரும் கணவன் மனைவியாக வாழ்ந்ததாகவும் பலர் முன்னிலையிலும் இயேசு அவரை அணைத்து முத்தமிட்டார் என்றும் இயேசுவின் வாழ்க்கையில் பல முக்கியமான தருணங்களில் மெக்தேலீனாள் அவருடன் இருந்ததாகவும் பல்வேறு கருத்துகள் உலவுகின்றன. ஆனால், விவிலியத்தில் மெக்தேலீனா மிக மோசமான ஒரு பெண்ணாக மட்டுமே சித்தரிக்கப்பட்டிருக்கிறார். ரோமானிய துரையிடம் இயேசுவின் உயிரைக் காக்கும்படி அவர் மன்றாடினார் என்றும் இயேசு புதைக்கப்பட்ட குகைக்கு சென்று அவர் உடலுக்கு எண்ணெய் தடவினார் என்றும் பல்வேறு செய்திகள் உள்ளன. ஆனால், இறைத்தூதருக்கு ஒரு பெண்ணின் துணைத் தேவையில்லை என்று கருதியோ என்னவோ விவிலியத்தில் மெக்தேலீனாளைப் பற்றிச் சிறப்பாக எதுவும் கூறப்படவில்லை. அதைப் பற்றி மாற்றுப் பார்வையைக் கூறுவதுதான் டான் பிரவுன் எழுதிய டாவின்சி கோட் என்பது நாம் அறிந்ததே.

புராணக்கதைகளில் எவ்வளவு உண்மைத் தன்மை இருக்கிறது என்பது குறித்த அளவீடு பொதுவாக எவருக்கும் தெரியாது. ஆனால், அத்தகைய புனைகதைகளில்கூடப் புனிதம் என்னும் கற்பிதங்கள் பெண்ணின் நடத்தையைச் சுற்றியே பின்னி இருப்பதை நம்மால் கண்கூடாக பார்க்கமுடிகிறது.

சதி அல்லது உடன்கட்டை ஏறுதல் என்பது ஓர் ஆணின் இறப்புக்குப்பின் பெண் செய்வதற்கு எதுவுமே இல்லை. அவள் அவனோடு உயிரை விடுவதே உத்தமம் என்னும் மனோநிலையிலிருந்துதானே தொடங்கியிருக்கிறது. மொட்டைப் பாப்பாத்தி முறைகளும் கணவன் இறந்தபின்பு மனைவி எந்த ஆசாபாசங்களும் இல்லாமல் ஓர் உணர்ச்சியற்ற ஜடமாக வேண்டுமானாலும் இருக்கலாம் என்பதை முன்னிறுத்தியே செய்யப்பட்டது.

பெண்களின் உணர்ச்சிகள் மீது அல்லது உடல் மீது ஆணின் கட்டுப்பாட்டை உறுதி செய்வதற்கான செயலைத்தான் புனிதம் என்ற வார்த்தையில் வடிவமைத்திருக்கிறார்கள் என்றே எனக்குத் தோன்றும். ஆனால், பெண்ணின் தொடை இடுக்குகளிலேயே புனிதத்தை ஒளித்து வைத்திருக்கும் ஆண்களின் மனோநிலையே அபத்தத்தின் உச்சமாக இருக்கிறது.

பெண் என்பவள் குழந்தை பெற்றுக்கொள்ளும் இயந்திரம் அல்ல. கர்ப்பப்பையை இயற்கையாகப் பெண்கள் சுமக்கட்டும். கற்பை இனியாவது ஆண்கள் சுமந்துகொள்ளுங்கள். அந்த ஒன்றின் அடிப்படையில் தானே எப்போதும் பெண்களை இழிவுபடுத்துகிறார்கள். குழந்தை பெற்றுக்கொள்வது பெண்ணின் விருப்பம். அவள் உடல் சார்ந்த முடிவுகள் பெண்ணின் விருப்பம். அதனால்தான் கர்ப்பப்பை வேண்டாமென்றால் அதை வெட்டி வீசிவிடுங்கள் பெண்களே என்றார் பெரியார். நீங்கள் குழந்தை பெற்றுக்கொண்டுதான் இங்கு இனப்பெருக்கத்தை வளர்க்கத் தேவையில்லை. உங்கள் உரிமையோடும் தன்மானத்துடன் வாழுங்கள் என்றார். மலடி என்ற சொல்லுக்கான ஆண்பதம் என்னவென்று இதுவரை எனக்குத் தெரியவில்லை. குழந்தை பெற்றுக்கொண்டால் மட்டுமே பெண் முழுமை அடைகிறாள் என்பது எவ்வளவு அபத்தமான ஒன்று. இக்கருத்தை காலங்காலமாகக் கவிதைகளும் திரைப் பாடல்களும் தொடர்ந்து வலியுறுத்திக்கொண்டே இருக்கிறது.

பெண் படுக்கையறைக்கும் தொட்டிலுக்குமே சொந்தமானவள் என்பதைக் கூறும் கணக்கில்லாத திரைப்பாடல்கள் நம்மிடம் இருக்கின்றன. குழந்தை பெற்றுக்கொள்வது என் உரிமை என்பதைக் கூறும் ‘சாரா’ஸ்’ போன்ற திரைப்படங்கள் பல பேரின் எதிர்ப்புகளையும் சம்பாதித்துள்ளதுதானே! பெண், குழந்தைப் பெற்றுக்கொள்ள வேண்டும். அதிலும் பல வீடுகளில் ஆண் குழந்தைதான் பெற்றுக்கொள்ள வேண்டுமாம். அப்போதுதான் சில வீடுகளில் சில மாமியார்களுக்குப் பிடித்த மருமகளாக அவள் வாழ இயலும். கள்ளிப்பால் கொடுத்து வதை செய்த எத்தனையோ பெண் பிள்ளைகளில் நாம் இதுவரை காணாத அந்தப் பிஞ்சு முகங்கள் நம் கண்முன் நிழலாடுவதைப் போலவே இருக்கிறது.

திருநெல்வேலியின் சில பகுதிகளுக்குச் சென்றிருந்தேன். பூப்புனித நீராட்டு விழா என்று பெரிய பெரிய பதாகைகளைப் பல இடங்களில் பார்த்தேன். ஓர் இளம் பெண்ணை அலங்காரம் செய்து, படம் எடுத்து, அவள் உறவுக்கார விடலைப் பையன்களின் படங்கள் சூழ அந்தப் பெரிய பதாகைகள் அமைக்கப்பட்டிருந்தன. ஒரு பதினைந்து வருடங்களுக்கு முன்பாக இதைப் பற்றிய விழிப்புணர்வை இயக்குநர் பார்த்திபன் ’இவன்’ என்ற திரைப்படத்தில் பேசியிருப்பார். இவ்வளவு வருடங்கள் கழிந்த பின்பும்கூட எவ்வித மாற்றமும் இல்லாமல் பெண்களின் உடலில் இயல்பாக நடக்கும் மாற்றங்களுக்காக ஊரைக்கூட்டி, ’என் பொண்ணு பெரிய மனுசி ஆயிட்டா’ என்று அறிவிக்கும் வழக்கம் இன்னும் ஒழிந்துவிடவில்லை. ஆண்கள் பெரிய மனுசன் ஆவதை ஏன் இந்தச் சமூகம் அறிவிப்பதில்லை என்று கேள்வி பலரையும் போலவே எனக்குள்ளும் இருக்கிறது.

இவையெல்லாம் காலங்காலமாகப் பேசிவரும் விஷயம்தான். ஆனால், இன்னும் முழுமையான மாற்றத்தைக் கொண்டுவர முடியவில்லை என்பதால்தான் தொடர்ந்து இதைப் பேச வேண்டியதாக இருக்கிறது. இப்போதுள்ள அரசியல் சூழ்நிலையில் ஒரு பெண் தலைவரை விமர்சிக்க இந்த ஆண் சமூகம் முதலில் எடுக்கும் ஆயுதம் அவள் ஒழுக்கம், கற்பு, புனிதம் பற்றியதாகவே இருப்பதை நாம் கண்கூடாகப் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறோம்.

கடவுளிடம் மாம்பழத்தைக் கொடுத்ததால் கணவன் தன்னை ஏற்காமல் போய்விட்டான் என்பதற்காகவே தன் உடலை உருக்கி எலும்புக்கூடாக மாறிய காரைக்காலம்மையாரை எல்லாம் உதாரணமாக எடுத்துக்கொள்ள வேண்டிய நிலையில் பெண்கள் இப்போது இல்லை. ‘உன்னதங்களும் உடைசல்களும்’ என்ற தலைப்பில் உள்ள எழுத்தாளர் கோபிகிருஷ்ணனின் கதை நினைவுக்கு வருகிறது. உன்னதங்கள் என்ற பெயரிலிருக்கும் இச்சமூகத்தின் உடைசல்களை மெல்லச் சாடியிருப்பார் அவர். அப்படிப் புனிதங்கள் என்ற பெயரில் இருக்கும் அத்தனை அடிப்படை வாதத்தையும் கேள்வி கேட்க நாம் தவறக் கூடாது.

ஒரு கிறிஸ்தவரும் இஸ்லாமியரும் நுழைந்தால் இந்துக் கோயிலின் புனிதம் கெட்டுவிடுகிறதாம். மனிதர்களை மதங்களைக் கடந்து மனிதர்களாக மட்டும் நாம் எப்போது பார்க்கப் போகிறோம்? வைணவத்தையே மனதளவில் தழுவி நடனமாடும் நடனக் கலைஞர் ஜாகிர் உசேன் இந்துக் கோயிலுக்குச் செல்ல அனுமதி இல்லை. கம்பங்குடி சுந்தரம் எழுதிய ஐயப்பனின் முக்கியமான பாடலான ஹரிவராசனம் பாடலைப் பாடியவர் பாடகர் கே.ஜே. யேசுதாஸ். இப்போதும் ஐயப்பனை உறங்க வைப்பதற்காகக் கோயிலில் பாடப்படும் பிரத்தியேகமான பாடலாக அப்பாடல் இருக்கிறது. ஆனால், அவரைக்கூடச் சில இந்துக் கோயில்களில் ஆரம்ப காலகட்டங்களில் அனுமதிக்கவில்லை என்ற செய்தியையும் நாம் மறப்பதற்கில்லை.

பல இந்துக் கோயில்களின் கருவறைகளுக்குள் செல்ல தோளைச் சுற்றி கயிறு ஒன்று தேவைப்படுகிறது. அதுவும் அக்கயிறை அணிந்த நபர் ஆணாக இருக்க வேண்டு்ம்.

வேறு மதத்தவர் அடுத்த மதத்தின் கோயிலுக்குச் செல்லத் தடை. மீறி சென்றுவிட்டால் அக்கோயிலின் புனிதத் தன்மை கெட்டுவிடுமாம். இறந்துபோன ஓர் எளிய மனிதனின் பிணத்தைக்கூட வேறொரு சாதிக்காரன் இருக்கும் தெருவில் எடுத்துச் செல்ல முடியாது. அத்தெருவில் வசிக்கும் மேல்சாதி என்று சொல்லிக்கொள்பவர்களின் புனிதம் கெட்டுவிடுமாம். ‘குருக்கள் வரார் வழிவிடுங்கோ வழிவிடுங்கோ’ என்று கோயில் பிரகாரத்தைச் சுற்றி வரும் உயர்வகுப்பு ஆசாமியைத் தெரியாமல்கூடத் தொட்டுவிடக் கூடாது. தொட்டுவிட்டால் அவர் புனிதத் தன்மை கெட்டுவிடுமாம். ஐயப்பனுக்கு மாலை போட்டவர்கள் அவர் மனைவிக்கோ மகளுக்கோ மாதாந்திர உதிரப்போக்குக் காலமாக இருந்தால் அவர்களைத் தவறுதலாகப் பார்த்துவிடக் கூடாது. அப்படிப் பார்த்துவிட்டால் அவர்களின் புனிதத் தன்மை கெட்டுவிடுமாம். ஆஹா, இவர்களின் இச்சமூகத்தில் புனிதங்களும் புண்ணாக்குகளும் எவ்வளவு சிறப்பாக வகுக்கப்பட்டிருக்கின்றன!

சில வருடங்களுக்கு முன்பு நாகர்கோவிலில் என் உறவுக்காரர் வீட்டிற்குச் சென்றிருந்தேன். வீட்டின் சுவற்றில் இரண்டு இறந்துபோனவர்களின் படங்கள் மாட்டப்பட்டிருந்தன. அதில் ஆணின் படத்திற்கு மட்டும் மாலை அணிவிக்கப்பட்டிருந்தது. அதனருகில் இருந்த பெண்ணின் படத்திற்கு மாலை அணிவிக்கப்படவில்லை. நான் அவரிடம் இயல்பாக ஏன் ஒரு படத்திற்கு மட்டும் மாலை போட்டிருக்கிறீர்கள் என்று கேட்டேன். அதற்கு அவர் சொன்ன பதில்தான் என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. படத்தில் இருக்கும் இருவரும் கணவன் மனைவி. அவர்கள் இருவரும் இறந்து விட்டார்கள். ஏனென்றால் அந்தப் பெண்மணி சுமங்கலியாக இறக்கவில்லையாம். அதாவது அவர் கணவன் இறந்த பின் அந்தப் பெண்மணி இறந்திருக்கிறார். ஆகையால் வாழும் காலத்தில் பூவையும் பொட்டையும் அந்த பெண்மணி இழந்து விட்டதால் இறந்த பிறகும் அவர் படத்திற்கு மாலை அணிவிக்கவில்லையாம். பூ, பொட்டு என்பதில் ஏற்றி வைக்கப்பட்டிருக்கும் புனிதத் தன்மையைக் கண்டு வெதும்புவதா? இல்லை, ஒரு பெண் இறந்த பின்பும் அவளை இச்சமூகம் அதிலும் பெண்களை

பெண்களே பார்க்கும் கண்ணோட்டத்தைக் கண்டு வெதும்புவதா என்று தெரியவில்லை. ஆனால், பூவிலும் பொட்டிலும் எந்தப் புனிதத் தன்மையும் இல்லை. தேவையானால் வைத்துக்கொள்ளலாம். தேவையில்லையென்றால் தூக்கிப்போடலாம் என்பதைத் தவிர இதில் வேறு ஒரு செய்தியும் இல்லை.

இன்றும் நரிக்குறவர் இனத்தைப் பேருந்தில் ஏற்றினால் அப்பேருந்தில் புனிதத் தன்மை கெட்டுவிடும் என்றுதானே தொடர்ந்து எளிய மனிதர்களைப் பேருந்திலிருந்து இறக்கிவிட்டுக் கொண்டிருக்கிறார்கள் மாமனிதர்கள்.

மிக முக்கியமான அரசியலைப் பேசும் ’ஜெய் பீம்’ திரைப்படத்தில் பேச வேண்டிய விஷயங்களையெல்லாம் விட்டுவிட்டு, தங்கள் சாதிய அடையாளத்தை, புனிதத்தை நீங்கள் பாழ்படுத்திவிட்டீர்கள் என்று பொங்கும் அடிப்படைவாத அரைகுறைகளை என்ன செய்வது? ‘மனிதன் மகத்தான சல்லிப்பயல்’ என்று சொன்ன எழுத்தாளர் ஜி நாகராஜனின் வார்த்தைகள் மனதில் வந்து மோதுகின்றன. அச்சல்லிப்பயல்கள் தங்களின் வசதிக்கேற்ப புனிதங்களைத் தொடர்ந்து கட்டமைத்துக் கொண்டிருக்கிறார்கள். புனிதம் என்ற பெயரில் கடைபிடிக்கப்படும் அத்தனை புண்ணாக்குகளையும் கேள்விக்குட்படுத்துவோம். தொடர்ந்து குரல்கொடுப்போம்.

கதைப்போமா?

படைப்பாளர்

ஹேமலதா

சென்னையில் பிறந்தவர்; தற்போது கொச்சியில் வசித்துவருகிறார். கார்ப்பரேட் செக்ரட்டரிஷிப் பட்டதாரியானவர், யோகக் கலையில் எம்.ஃபில் பட்டம் பெற்றுள்ளார். சில நிறுவனங்களிலும், பள்ளிகளில் யோக ஆசிரியராகவும் பணியாற்றியிருக்கிறார். ‘முழுவல்’ என்ற கவிதை நூல் வெளியிட்டிருக்கிறார். பெண்ணியம் தொடர்பான நிகழ்வுகளில் தொடர்ந்து பங்கெடுத்துக் கொண்டிருக்கிறார்.