பொருள் : அமைப்பு

வேட்கை என்பது ஆண்களுக்கான குணம் என்பது எப்போது, எங்கே வரையறை செய்யப்பட்டது என்று தெரியவில்லை. ஆனால், பல சமூகங்கள் அப்படித்தான் நம்பின. ஆண்கள் மட்டுமே தீவிரமாக இன்பத்தை நாடிச் செல்லவேண்டும் என்று அவர்கள் நம்பினர். உடலின்பம், பொருளின்பம் இரண்டையும் ஆண்கள் குற்றவுணர்வு இன்றி நாடிச் செல்லலாம்; ஆனால் பெண்கள் வெளிப்படையாக இன்பத்தை நாடிச் செல்லக் கூடாது என்று பல சமூகங்கள் நம்பியிருக்கின்றன. இந்த வரையறையை மீறும் பெண்கள் விரும்பத்தகாதவர்களாக, ஒழுக்கம் கெட்டவர்களாக, சமூகக் கிருமிகளாகப் பாவிக்கப்பட்டனர்.

ஒரு பெண் ஆணைத் திருமணம் செய்துகொள்வது அவனுடைய வம்சத்தை வளர்த்தெடுப்பதற்காக, அவனுடைய இன்பத்தைப் பெருக்குவதற்காக, அவனுடைய வாழ்வை வளப்படுத்துவதற்காக. இதற்கு மேல் திருமண உறவிலிருந்து அவள் எதையும் எதிர்பார்க்க வேண்டியதில்லை. தன்னுடைய வேட்கையை, கனவை ஒருபோதும் ஒரு பெண் தன் கணவனிடம் வெளிப்படுத்தக் கூடாது. இந்த இரண்டும் இல்லாமல் இருப்பது இன்னும் சிறந்தது. நாகரிகமான பெண்கள் தங்கள் உணர்வுகளை எப்போதும் அந்தரங்கமாகவே வைத்திருக்கவேண்டும். தன் உடலை மிகக் கவனமாகப் பாதுகாத்து வைத்துக்கொள்ளவேண்டும். அந்நியர்களின் கண்கள் மட்டுமல்ல, கணவனின் கண்களும்கூடத் தீண்டிவிடக் கூடாது. இல்லத்தில்தானே இருக்கிறோம் என்று உடுத்திக்கொள்வதில் கட்டுப்பாட்டைக் குறைத்துக்கொள்ளக்கூடாது. அது அவளுடைய கண்ணியத்தைக் குறைக்கும் செயலாகும்.

திருமணம் என்பது ஆண்களுக்கு ஒரு பொருளையும் பெண்களுக்கு வேறொரு பொருளையும் அளித்தது. ஆணும் பெண்ணும் ஒன்றல்ல என்பதை அழுத்தமாக உணர்த்தும் ஓர் அமைப்புமுறையாகவும் இருந்தது. குடும்பம் என்பது ஆண்களுக்கானது. ஏதென்ஸில் ஓர் ஆணால் மட்டுமே தன்னுடைய மூதாதையர்களைச் சொந்தம் கொண்டாடமுடியும். பெண்கள் தங்களுடைய தாய் வரிசையைச் சேர்ந்த பெண்களை நினைவில் வைத்திருக்கவேண்டிய அவசியமே இல்லை. மதச் சடங்குகள் நடக்கும்போது திருமணமனான ஆண், பெண் இருவரும் அதில் கலந்துகொள்வார்கள் என்றாலும் ஆண் மட்டுமே தன் மூதாதையர்களின் பெயர்களை நினைவுகூர்ந்து அவர்களுக்கு அஞ்சலிசெலுத்த அனுமதிக்கப்படுவர்.

மணமுடிந்து வீட்டுக்கு அழைத்துவரும் ஒரு பெண்ணை ஒரு விலங்கைப் போல் ஆண்கள் அடக்கி, ஒடுக்கிப் பழக்கப்படுத்தினர். அது ஒரு சாகசச் செயலாகப் பாவிக்கப்பட்டது. திமிறும் காட்டு விலங்கொன்றை வழிக்குக் கொண்டுவருவதைப் போல் பெண்ணையும் அவர்கள் வளைத்துப் பிடித்துக் கட்டுக்குள் கொண்டுவந்தனர். பாலியல் வன்முறை இயல்பானதொன்றாகக் கருதப்பட்டது. புதிய மனைவி துன்புறுத்தப்படும்போது அவள் குரல் கேட்டு ஒருவரும் அறைக்குள் நுழைந்துவிடாதவாறு தடுப்பதற்கென்றே சிலர் காவலுக்கு வெளியில் நிறுத்தப்படும் வழக்கம் இருந்திருக்கிறது. மெரிலின் ஃபிரெஞ்ச் ஓர் இலக்கியச் சான்றையும் சுட்டிக்காட்டுகிறார். திருமணமான இரு பெண்கள் ஓரிடத்தில் கவலையுடன் விவாதிக்கிறார்கள். ‘நம்மைச் சித்திரவதை செய்யும் நம் கணவன்களை என்ன செய்வது? அவர்களை எப்படித் தடுத்துநிறுத்துவது?’

தங்களுக்குள் புலம்பிக்கொண்டார்களே தவிர, இந்தக் கேள்விக்கு அவர்களால் விடை காண முடியவில்லை. எனவே அவர்கள் ஒரு புதிய விளக்கத்தைக் கண்டடைந்தார்கள். திருமணம் என்பது இப்படித்தான் இருக்கும் என்பதை ஏற்றுக்கொள்ளவேண்டியதுதான். ஆண்களால் உருவாக்கப்பட்ட அமைப்பு என்பதால் அது அவர்களுக்கு மட்டுமே லாபகரமானதாக இருக்கிறது. அவர்களுடைய மகிழ்ச்சியை மட்டுமே அது மையப்படுத்தி இயங்குகிறது. அந்த அமைப்பை மாற்றுவது அல்ல, கேள்விக்கு உட்படுத்துவதுகூட ஆபத்தானதுதான். அமைப்போடு ஒன்றிணைய மறுக்கும் பெண்களுக்கு மிகக் கூர்மையான இழிச் சொற்கள் உருவாக்கப்பட்டிருந்தன. மிகக் கேவலமான தாக்குதல்கள் அவர்கள்மீது தொடுக்கப்பட்டன. மீளமுடியாதபடிக்கு அவர்களுடைய தன்மானம் சிதைக்கப்பட்டது. இதற்கு அஞ்சி பெண்கள் திருமண அமைப்பைச் சகித்துக்கொள்ள ஆரம்பித்தனர்.

அமைப்புக்கு வெளியிலும் சில பெண்கள் இருந்தனர். அவர்களுக்கு இப்படிப்பட்ட கட்டுப்பாடுகள் கிடையாது. அவர்களுக்குத் திருமணங்கள் நடப்பதில்லை. அவர்கள் சுதந்தரமானவர்கள். தங்கள் வேட்கையை அச்சமின்றி, தயக்கமின்றி அவர்களால் வெளிப்படுத்தமுடியும். தங்கள் விருப்பத்துக்கு ஆடை அணிந்துகொள்ளமுடியும். மிகக் குறைவான உடைகளை உடுத்திக்கொண்டு அவர்கள் வெளியில் உலாவினால்கூட ஒருவரும் அவர்களைக் கடிந்துகொள்ள முடியாது. ஆண்களைப் போலவே அவர்களுக்குக் கட்டுப்பாடற்ற பாலியல் சுதந்தரம் வழங்கப்பட்டிருந்தது. அவர்களுடைய ஒழக்க விதிகள் தளர்த்தப்பட்டிருந்தன. அல்லது புதிய ஒழுக்க விதிகள் அவர்களுக்கென்றே உருவாக்கப்பட்டன.

ஆண்களால் நிர்வகிக்கப்படும் ஓர் உலகில் எதற்காகக் குறிப்பிட்ட சில பெண்களுக்கும் மட்டும் இந்தத் தனிச்சலுகை? காரணம் இருந்தது. குடும்பப் பெண்கள் போலன்றி இவர்கள் சுதந்தரமாக விடப்பட்டதன் நோக்கம் அவர்கள் ஆடவர்களுக்குத் தடையற்ற பாலியல் இன்பத்தை அளித்துக்கொண்டே இருக்கவேண்டும் என்பதுதான். ஏதென்ஸ் ஆண்களை மகிழ்விப்பதற்காக வளர்த்தெடுக்கப்பட்டவர்கள் அவர்கள் என்பதால் மணமான பெண்களுக்கு மறுக்கப்பட்ட சுதந்தரம் அவர்களுக்கு அளிக்கப்பட்டிருந்தது. இந்தப் பெண்கள் அலங்காரப் பொருள்களாகப் பாவிக்கப்பட்டனர். இரவு விருந்துக்கோ வேறு வகை கொண்டாட்டத்துக்கோ செல்லும்போது இந்தப் பெண்களில் ஒருவரைத் தேர்ந்தெடுத்து அழைத்துச்செல்வதில் ஒவ்வோர் ஏதென்ஸ் ஆணும் பெருமிதம் அடைந்தான். இத்தகைய நிகழ்ச்சிகளில் வீட்டுப் பெண்களை அழைத்துச் செல்வது சாத்தியமில்லை என்பதால் இந்த ஏற்பாடு உதவியது.

குடும்பம் என்னும் அமைப்புக்கு உள்ளே பல பெண்களையும் வெளியே பல பெண்களையும் நிறுத்தி எதிரெதிர் விதிகளை அவர்களுக்காக உருவாக்கியது ஏதென்ஸ். எதிரெதிராகத் தோன்றினாலும் இந்த விதிகள் ஒன்றிணையும் ஓரிடம் இந்த இரண்டுமே ஆண்களின் தேவைகளையொட்டி உருவாக்கப்பட்டவை என்பதுதான். ஒரு பெண்ணுக்கு ஒழுக்கத்தைப் போதித்த சமூகம் இன்னொரு பெண்ணுக்கு ஒழுக்கத்தை விலக்கி வைத்தது. ஒரு பெண்ணை வீட்டுக்குள் பூட்டி வைத்தவர்கள் இன்னொரு பெண்ணைப் பொதுவெளியில் அனுமதித்தனர். ஒரு பெண்ணுக்குக் கடும் ஆடை கட்டுப்பாட்டை விதித்தவர்கள் இன்னொருவருக்குக் குறைவான ஆடைகளை அணிவித்து மகிழ்ந்தனர். அந்நியர்களை ஏறெடுத்தும் பார்க்கக் கூடாது என்பது ஒருவருக்கான கட்டளை. அந்நியர்களை அரவணைத்து மகிழ்விக்கவேண்டும் என்று இன்னொருவருக்குக் கட்டளையிடப்பட்டது. அடிமைத்தனம், சுதந்தரம் இரண்டுக்கும் இங்கே ஒரு பொருள்தான். இரண்டுமே திறன்மிக்க ஒடுக்குமுறை கருவிகளாகத் திகழ்ந்தன.

குடும்பத்துப் பெண்கள், குடும்பத்துக்கு வெளியிலுள்ள பெண்கள் இருவருமே ஆடவரின் அலங்காரப் பொருள்கள். இருவர்மீதும் சமமாக வன்முறை பிரயோகிக்கப்பட்டது. பழங்கால கிரேக்கப் பெண்களின் ஓவியங்களைப் பார்க்கும்போது அவர்கள் எத்தகைய பாலியல் சித்திரவதைகளுக்கு உள்ளானார்கள் என்பதைப் புரிந்துகொள்ளமுடிகிறது. கணவனுக்கு உடன்படாத மனைவியும் ஓர் ஆணுக்கு இணங்க மறுக்கும் பாலியல் தொழிலாளியும் ஒரே தவறை இழைத்தவர்களாகக் கருதப்பட்டனர். குடும்பம் என்னும் அமைப்புக்குள் செல்லவிரும்பிய ஒரு பாலியல் தொழிலாளியும் குடும்பத்திலிருந்து விடுபட விரும்பிய மணமான ஒரு பெண்ணும் ஒரே குற்றத்தை இழைத்தவர்களாகிறார்கள்.

அதே போல், ஒரு குடும்பத்துப் பெண்ணிடம் தகாத உறவுகொள்ளும் ஆண் தவறிழைத்தவனாகக் கருதப்படுவான். அவன் தண்டனைக்கும் உள்ளாக்கப்படுவது வழக்கம். அவனுடைய தவறு, அதற்கெனவே இருக்கும் பெண்ணை நாடிச் செல்லாமல் ஒரு குடும்பத்துப் பெண்ணைத் துன்புறுத்தியதுதான். குடும்பம் என்னும் அமைப்பு களங்கமற்றும் களங்கத்துக்கென்றே இன்னொரு மாற்று அமைப்பும் உருவாக்கப்பட்டுவிட்ட பிறகு இந்த இரு அமைப்புகளையும் மதித்து நடக்கவேண்டும் என்று எதிர்பார்க்கப்பட்டது. மீறுபவர்களுக்குப் பின்வருமாறு தண்டனைகள் விதிக்கப்பட்டன. குடும்ப அமைப்பின் புனிதத்தைச் சிதைக்கும் வகையில் ஓர் ஆண் மணமான ஒரு பெண்ணைப் பாலியல் பலாத்காரம் செய்துவிட்டால் அவனுக்கு அபராதம் விதிக்கப்படும். பாதிக்கப்பட்ட பெண் அடிமையாக மாற்றப்படுவாள். ஆணின் தவறு சரிசெய்துவிடக்கூடியது; சமூக விதிகளை மீண்டும் கற்றுக்கொடுத்துவிட்டால் அவன் திருந்திவிடுவான். ஆனால், பலாத்காரத்துக்கு உள்ளானதன்மூலம் ஒரு பெண் தன் உடலின் புனிதத்தையும் குடும்பத்தின் புனிதத்தையும் சேர்த்து சீரழிக்கிறாள். எனவே அவளுக்கு அதிகபட்ச தண்டனை. அடிப்படைக் கோளாறுகளுடன்கூடிய ஓர் அமைப்பில் சட்டம் மட்டும் ஒழுங்காக இருந்துவிடமுடியுமா என்ன?

பொருள் : பிளேட்டோவின் கனவு

ஆக்ஸியோத்தியா பிளேட்டோவைப் பற்றி நன்கு அறிந்திருந்தார். தத்துவத்தில் அவருக்கிருந்த புலமை குறித்து பல முறை வியந்திருக்கிறார். பிளேட்டோவின் குடியரசு நூலை வாசித்ததிலிருந்து பிளேட்டோவைச் சந்தித்து உரையாடவேண்டும் என்னும் விருப்பம் அவருக்குள் அடர்த்தியாக வளரத் தொடங்கியது. உலகையும் உயிர்களையும் புரிந்துகொள்ளவேண்டும் என்னும் வேட்கை அவரை ஒவ்வொரு நாளும் உந்தித் தள்ளிக்கொண்டே இருந்தது. ஆக்ஸியோத்தியா இருந்தது ஃபிளியஸ் என்னும் பகுதியில். பிளேட்டோ இருந்தது ஏதென்ஸில். அதனால் என்ன, போய்ப் பார்த்துவிடுவோம் என்று முடிவெடுத்தார் ஆக்ஸியோத்தியா. அதற்கான ஏற்பாடுகளையும் செய்துவிட்டார்.

பிளேட்டோ தனது குடியரசு நூலில் பெண்களுக்கு உயர்ந்த இடத்தை அளித்திருந்தார் என்பது ஆக்ஸியோத்தியாவுக்குத் தெரியும். அவர் கனவு கண்ட கற்பனை உலகில் ஆண்கள் வகிக்கும் அத்தனை முக்கிய பதவிகளையும் பெண்களும் வகிப்பார்கள். ஆண்கள் செய்யும் அத்தனை வேலைகளையும் பெண்களும் செய்வார்கள். சமூகத்துக்கு இந்த இருவருடைய பங்களிப்பும் சமமாக இருக்கும். மனிதர்களுக்கு இடையில் எந்தவித அடிப்படை வேறுபாடுகளும் இல்லை என்பது பிளேட்டோவின் உறுதியான நம்பிக்கையாக இருந்தது. சமூகத்தில் அப்போது நிலவிய மதிப்பீடுகளை அவர் ஏற்கவில்லை. ஆம், பெண்கள் ஆண்களைக் காட்டிலும் உடலளவில் பலவீனமானவர்கள்தாம். ஆண்கள் இன்று இயல்பாகச் செய்யும் பல காரியங்களைப் பெண்களால் செய்ய இயலவில்லை என்பதும் உண்மைதான். ஆனால், அதற்கொரு காரணம் இருந்தது.

ஆண்கள் அத்தகைய வேலைகளைச் செய்யுமாறு பழக்கப்படுத்தப்பட்டிருந்தனர். ஆண்கள் சில காரியங்களில் திறமையாக இருப்பதற்குக் காரணம் அவர்கள் ஆண்கள் என்பதால் அல்ல, அவர்களுக்குத் தகுந்த பயிற்சிகள் அளிக்கப்பட்டது என்பதுதான். அதே சூழலைப் பெண்களுக்கு ஏற்படுத்தி, அதே பயிற்சிகளை அவர்களுக்கு வழங்கினால் பெண்களும் அதே வேலைகளை அதே திறமையுடன் மேற்கொள்வார்கள் என்று பிளேட்டோ நம்பினார். பெண்களிடயே காணப்படும் குறை என்பது அவர்களுக்குக் கல்வியும் வாய்ப்புகளும் வழங்கப்படவில்லை என்பது மட்டும்தான். பிளேட்டோ கனவு கண்ட உலகில் பெண்களுக்கும் ஆண்களைப் போலவே போர் பயிற்சி, விளையாட்டுப் பயற்சி ஆகியவை குறைவின்றி வழங்கப்படும். அவற்றில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு அங்கீகாரமும் உண்டு. ஒரு பெண்ணாக ஆக்ஸியோத்தியாவை இந்த வாசகங்கள் கவர்ந்திழுத்தன. பிளோட்டோவின் கனவு என்றாவது ஒருநாள் நிஜமாகும் என்று அவர் நம்ப விரும்பினார். இப்படியோர் அற்புதமான கனவை ஓர் ஆணாக இருந்துகொண்டு பிளேட்டோ கண்டிருக்கிறார் என்பது உண்மையிலேயே தனித்துவமானதுதான், இல்லையா?

உண்மையில் ஆக்ஸியோத்தியாவின் கனவு பிளேட்டோவைக் காண்பது அல்ல. அவர் நடத்தும் அகாடெமியில் சேர்த்து அவரிடம் பாடம் படிப்பதுதான். ஆனால், அதில் ஒரு சிக்கல் இருந்தது. தனியாக ஏதென்ஸ் செல்வது உண்மையில் சாத்தியமில்லை. ஒரு பெண்ணாக அகாதெமியில் சேர்வதும் சாத்தியமில்லை. கனவுலகில் வேண்டுமானால் ஆண்களும் பெண்களும் சமமானவர்களாக இருக்கலாம். ஆனால், நிஜ உலகில் பெண்கள் எளிதாகப் பயணம் மேற்கொள்ளவோ தத்துவக் கல்வி கற்கவோ முடியாது. இது ஆக்ஸியோத்தியாவுக்கும் தெரியும். எனவே ஓர் உபாயத்தை அவர் கையாண்டார். ஆண்கள் அணியும் ஆடைகளை அணிந்துகொண்டு தன்னை அவர் உருமாற்றிக்கொண்டார்.

இந்தத் தந்திரம் பலித்தது. அவரால் எந்தவிதச் சிக்கலும் இன்றி ஏதென்ஸ் செல்லமுடிந்தது. எந்தவித இடையூறும் இன்றி பிளேட்டோவைச் சந்திக்கமுடிந்தது. தடை ஏதுவுமின்றி அவருடைய அகாடெமியில் இணைந்துகொள்ளவும் முடிந்தது. ஆக்ஸியோத்தியா மிகுந்த வேட்கையுடன் பிளேட்டோவின் பாடங்களைக் கற்கத் தொடங்கினார். தன்னோடு இணைந்து படித்த ஆண்களுடன் ஓர் ஆணாக இயல்பாக அவரால் ஒன்றுகலக்கமுடிந்தது. பிளேட்டோ உள்பட ஒருவராலும் ஆக்ஸியோத்தியாவைக் கண்டுபிடிக்க முடியவில்லை. ஆக்ஸியோத்தியாவின் லட்சியம் முழுமையாக நிறைவேறியது.

கிடைத்திருக்கும் மிகச் சில குறிப்புகளின் அடிப்படையில் பார்க்கும்போது ஆக்ஸியோத்தியா அழகானவராகவும் நல்ல பண்புகளைப் பெற்றிருப்பவராகவும் புத்திசாலியாகவும் இருந்தது தெரிகிறது. இது பிளேட்டோவின் குடியரசு வாசகங்களை நினைவுபடுத்துகிறது. ஒருவேளை பிளேட்டோவிடம் கற்காமல் போயிருந்தால் ஆக்ஸியோத்தியா ஏனைய பெண்களைப்போல் குடும்ப அமைப்புக்குள் விழுந்து காலம் முழுக்க அங்கே சிறைப்பட்டிருப்பாள். குடும்பம் என்னும் அமைப்பு மட்டுமல்ல. பெண்ணாக இருப்பதே ஒரு சிறைதான் என்பதை ஆக்ஸியோத்தியாவால் உணரமுடிந்தது. இரண்டிலும் இருந்து ஒரே நேரத்தில் அவளால் வெளியேறவும் முடிந்தது. அதைச் சாத்தியமாக்கியது அவளுடைய அசாத்தியமான அறிவுத் தேடல்.

அந்த வகையில் பிளேட்டோவின் குடியரசுக் கனவு ஆக்ஸியோத்தியாவால் நிறைவேறியது என்று சொல்லமுடியும். கல்வியும் பயிற்சியும் இருந்தால் ஒரு பெண்ணாலும் ஆணுக்கு இணையான திறமைகளைப் பெறமுடியும் என்னும் பிளேட்டோவின் வாதத்தை அவருடைய மாணவி மெய்ப்பித்துக் காட்டினார். ஆனால், அது பிளேட்டோவுக்கு மட்டும் இறுதிவரை தெரியாமலேயே போய்விட்டது.

0

படைப்பாளர்:

மருதன்

எழுத்தாளர், வரலாற்றாளர். சே, ஹிட்லர், ஃபிடல் காஸ்ட்ரோ, திப்பு சுல்தான், மண்டேலா, மாவோ, ஸ்டாலின் ஆகிய உலகத் தலைவர்களின் வாழ்க்கை வரலாறுகளை எழுதியுள்ளார். இவரது ஹிட்லரின் வதைமுகாம்கள், முதல் உலகப் போர், இரண்டாம் உலகப்போர், ஷெர்லக் ஹோம்சால் தீர்க்க முடியாத புதிர், துப்பாக்கி மொழி, திபெத்- அசுரப் பிடியில் அழகுக்கொடி, ஒரு புத்திரனால் கொல்லப்படுவேன் ஆகிய நூல்கள் கவனம் ஈர்த்தவை. பிரபல தமிழ் இதழ்களில் தொடர்கள் எழுதிவருகிறார். இந்து தமிழ் திசை மாயா பஜார் குழந்தைகள் இணைப்பிதழுக்கும் கட்டுரைத் தொடர் எழுதி வருகிறார்.