வாழ்வின் ரசனை மிகுந்த செயல்களில் ஒன்று முத்தம். முத்தம் பற்றி வெளிப்படையாகக் கதைக்கத் தயங்கும் அன்பர்கள், ‘ப்ளீஸ்.. டேக் டைவர்ஷன்..’ இது ஒன்றும் அருவருப்பானதும் அல்ல, ஆபாசமானதும் அல்ல. காடுகளில் சுற்றித்திரிந்த மனிதன் மொழி தோன்றுவதற்கு முன் தன்னுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்த கண்டறிந்ததே முத்தம். ஆயிரம் வார்த்தைகள் வெளிப்படுத்தாத உணர்ச்சியை ஒரு சிங்கிள் முத்தம் ‘பச்சக்’ என்று புரிய வைத்துவிடும்.

காமசூத்ரா, கொக்கோகம் போன்ற காமசாஸ்திர வல்லுநர்கள் நம் இந்தியர்களே. வேதக் காலத்திலேயே முத்தம் இருந்திருக்கிறது என்பது காஜூரஹோ சிற்பங்கள் ஒன்றையொன்று முத்தமிடுவதிலேயே புரிகிற மாதிரி செதுக்கி வைத்துள்ளனர் நம் முன்னோர். முத்தத்தில் முப்பது வகை இருக்கிறதென்பதைக் கண்டறிந்து உலகிற்கே அன்பை ஏற்றுமதி செய்தவர்கள் நாமே. அத்தகைய பெருமை வாய்ந்த நாம்தான் பொது இடத்தில் முத்தம் கொடுப்பது கலாச்சார சீர்கேடு என்று கற்பிக்கப்பட்டிருக்கிறோம். ஓர் இந்தியக் கணவன் பொது இடத்தில் பலர் முன்னிலையில் தன் மனைவியைக் கெட்ட வார்த்தையில் திட்டுவதற்கும், அடிப்பதற்கும் அசிங்கப்படுவதில்லை. ஆனால், அன்பை, நேசத்தை வெளிப்படுத்த இதமான ஓர் அரவணைப்போ ஒரு முத்தமோ கொடுத்து விட்டால் போச்சு. இந்தக் கலாச்சாரக் காவலர்கள் எங்கிருந்துதான் முளைப்பார்களோ? அவர்களுக்கு எந்நேரமும் அடுத்தவர்களின் உதடுகளை நோக்கிக்கொண்டிருப்பதுதான் வேலை போலும்.

முத்தம் தருவதைப் பார்ப்பவர்கள் பாலியல் தூண்டலுக்கு உள்ளாவார்கள் என்ற கூற்று நகைப்புக்குரியது. ஒரு சண்டையைப் பார்ப்பவர்கள் குற்றவாளிகள் ஆவார்கள் என்று சொல்ல முடியுமா? இந்த உலகத்தில் பிறந்தவுடன் முதல் முத்தத்தை அம்மாதான் கொடுக்கிறார். அப்போது அறிமுகமான இந்த முத்தம் பாடையில் போகும்போது வாரிசுகளின் முத்தத்தோடு நிறைவுறுகிறது. முத்தத்தைப் பற்றிய திரைப்பாடல்களும் அதிகம்.

முத்தம் என்பதை வெறும் பாலியல் நோக்கிலேயே பார்க்கத்தான் இந்த சமுதாயம் கற்றுக் கொடுத்திருக்கிறது. ஆனால், ஒரு முத்தம் செய்யும் மாயாஜாலம் என்னவென்று யாரும் முழுதாய்ப் புரிந்துகொள்ளவில்லை என்பதுதான் உண்மை. துயருற்ற ஒரு நேரத்தில் ஒரு நெற்றி முத்தம் தரும் ஆறுதல் சொல்லில் அடக்க முடியாதது. ‘உனக்கு நான் இருக்கிறேன்..’ என்று வார்த்தைகள் தராத மாபெரும் ஆறுதலை அந்த முத்தம் நிகழ்த்தும்.

காதலிப்பவர்கள் அதன் அடுத்த கட்டத்துக்குச் செல்லும் பாதையும் முத்தம்தான். ஒருமுறை பேருந்தில் பயணித்துக்கொண்டிருந்தபோது பின்னிருக்கையில் அமர்ந்திருந்த இரண்டு பெண்கள் பேசிக்கொண்டதைக் கேட்க நேர்ந்தது. ஒரு பெண் தனது தாம்பத்ய வாழ்க்கையில் முத்தம் கொடுத்துக்கொண்டதே இல்லை என்று சொன்னதைக் கேட்டதும் அதிர்ச்சியாக இருந்தது. இந்திய சமுதாயத்தில் நிறையப் பேர் முத்தம் என்பதை அறியாதவர்கள் தாம் என்பது கசப்பான நிஜம். விருப்பம் இல்லாமல் கலவிகூடச் சாத்தியம் தான். ஆனால், ஒருவர் விரும்பாமல் அவரை முத்தமிடுவது இயலாத ஒன்று. ஓர் உள்ளார்ந்த முத்தத்தை உணராதவர்கள்கூட உண்டு என்பதை அதிர்ச்சியான ஒன்றுதானே!

ஒரு நிமிடத்திற்கு இருபது முறை‌ சுவாசிப்பது சாதாரணமென்றால் முத்தமிடும் வேளையில் அது கிட்டத்தட்ட அறுபதாக உயர்ந்து நுரையீரலை நன்கு வைத்திருப்பதாக ஆராய்ந்து கண்டறிந்துள்ளனர். முத்தமிடுதல் உடலில் பௌதீக, ரசாயன, வேதியியல் மாற்றங்களையும் நிகழ்த்துகிறது. இந்த முத்தம் குறித்த படிப்பை பத்தொன்பதாம் நூற்றாண்டிலேயே பிலிமெட்டாலஜி (philematology) என்று ஆரம்பித்திருக்கிறார்கள். சிலருக்கு முத்தம் என்றாலே அலர்ஜி ஏற்படும். அதற்கு ‘பிலிமாபோபியா’ என்று பெயர். 

முத்தம் ஒரு சிறந்த கலோரி கொல்லி. முத்தமிடும் போது நொடிக்கு மூன்று அல்லது நான்கு கலோரிகள் எரிக்கப்படுகின்றன. ஒரு நிமிடத்தில் 26 கலோரிகள் எரிக்கப்படுகின்றன. அப்போது உடல் முழுவதும் உள்ள 146 தசைகள் ஒன்றிணைக்கப்படுகின்றன. முகத்தில் உள்ள 34 அகத் தசைகளும் 112 புறத்தசைகள் அடங்குகிறதாம். இதனால் முகத்தின் இளமை நீட்டிக்கப்படுகிறது. என்ன ஒன்று முத்தமிடுவது உங்கள் துணையாக இருந்தால் உங்கள் உடல்நலன் காக்கப்படும்.

முத்தமிடும் வேளையில் கிட்டத்தட்ட பத்து லட்சம் பாக்டீரியாக்கள் இடம் மாறுகின்றன என்பதையும் நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும். இது  கெட்ட பாக்டீரியாவைக் கொல்லும் ஆன்டிபாடிகளை வெளியிடுவதன் மூலம் நமது நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துகிறது. உமிழ்நீரை அதிகம் சுரக்கசெய்து, நம் பற்கள் பாதிக்காத  வண்ணம், கேவிட்டி ஏற்படாதவாறு பாதுகாக்கிறது. 10 விநாடிகளுக்கு மேல் நீங்கள் முத்தமிடும் போது 80 மில்லியன் பாக்டீரியாக்கள் வரை மாற்றப்படுகின்றனவாம். இந்த பாக்டீரியாக்கள் நமது நோயெதிர்ப்பு சக்தியை அதிகரித்து தீங்கு விளைவிக்கும் கிருமிகளிடமிருந்து நம்மை காக்கிறது.

முத்தமிடுகையில் உடலில் அட்ரீனலின், நோரடனினலின், டோபமைன் உள்ளிட்ட சிலபல சுரப்பிகள் தாறுமாறாகச் சுரந்து தள்ளுகின்றன. அடுத்தடுத்த நமது மூவ்களுக்கு இந்தச் சுரப்புகள் உதவுகின்றன. முத்தம் கார்டிசோல் என்ற மன அழுத்தத்தை உண்டாக்கும் ஹார்மோனை அடித்துத் துரத்துகிறது. மகிழ்ச்சியை உண்டாக்கும் ஆக்ஸிடோஸின், எண்டார்பின் ஆகியவை எக்கச்சக்கமாகச் சுரக்கும்.

முத்தம் என்பது இல்லாத குருட்டுக் காமத்தைவிட, காமமே இல்லாத ஆழ்ந்த முத்தத்திலேயே ஆர்கஸம் என்பது கைவரக்கூடியது தான். வெறும் உடல்களின் சங்கமமாக இல்லாமல் உணர்வுகளின் கூடல்களே உயிர்ப்பைத் தருகிறது.

உளவியல் ரீதியாகவும் முத்தம் என்பது நெகிழ்ச்சியைத் தரும் ஒன்று. நெற்றியில் இடும் முத்தம் ஆறுதலை அளிக்கிறது. கண்களில் இடுவது பிரியத்தைத் தெளிக்கிறது. கையில் தரப்படும் முத்தம் மரியாதையைக் குறிக்கிறது. உதட்டில் தருவது அளவற்ற காதலைக் குறிக்கிறது. பட்டாம்பூச்சி முத்தம், எஸ்கிமோ முத்தம், ஃப்ரீஸ் முத்தம், ஃப்ரூட் முத்தம் என்று எக்கச்சக்க முத்தங்கள் உலகெங்கும் உலாவுகின்றன.

எனக்குத் தெரிந்த ஒரு பாட்டிம்மாவிடம் ஒருமுறை, “ஏன் பாட்டி, தாத்தா உங்களுக்கு முத்தம் குடுத்துருக்காரா?” என்று தயங்கியவாறே கேட்டேன். அதிர்ச்சியின் உச்சத்துக்கே சென்ற பாட்டி, “அடிப்போடி… பகல் முழுக்க வீட்டுவேலை, சமையல் வேலை, காட்டு வேலைனு செஞ்சுட்டு இருப்போம். புருஷன் மூஞ்சியவே மூணு புள்ளைங்க பொறக்கற வரைக்கும் பாத்ததில்லை. இதுல முத்தங் குடுத்தானான்னு கேள்வி வேற” என்று பாய்ந்தபோது வாயடைத்துத் தான் போனேன். முத்தம் என்ற ஒன்றை அறியாத இந்தியப் பெண்கள்தாம் எத்தனை எத்தனை பேர்? காதல் கலையை உலகிற்கே எடுத்துரைத்த நாட்டில் முத்தம் தராத, பெறாத மக்களும் அதிகம் என்பது தான் உண்மையான கலாச்சார அதிர்ச்சி. காமம், கலவி இதையெல்லாம் வெறும் கடமையாகச் செய்யும் தம்பதியினர் நிறைய இருக்கிறார்கள். ஆத்ம திருப்தி என்பதை உணராதவர்கள் நிறையவே உள்ளனர்.

பல வருடங்களுக்கு முன்பு வெளிவந்த ‘கல்கி’ திரைப்படத்தில் கையில் துப்பாக்கியுடன் ரகளை செய்யும் ஒரு ரவுடியைக் கதாநாயகி கன்னத்தில் முத்தமிட்டதும் அவன் குழந்தை போலத் தேம்பி அழுதவாறே அவள் கையில் துப்பாக்கியை ஒப்படைத்துவிட்டு அழத் தொடங்குவான். இந்தக் காட்சி அப்போது பெரிய அளவில் விமர்சிக்கப்பட்டது. உளவியல்படி அது சாத்தியமான ஒன்றுதான். முத்தத்தின் வலிமை அது. இரும்பு மனம் கொண்டவர்களையும் ஒரு குழந்தையின் சிறு முத்தம் நெகிழ்த்திவிடும்.

முத்தத்தைப் பாலியல் நோக்கோடு மட்டுமே அணுகாமல் அன்பின் வெளிப்பாடாகப் பார்க்கத் தொடங்குவோம். நமக்கு உரிமையானவர்களிடம் மட்டுமே அதை வெளிப்படுத்துவோம். முத்தம் செய்யும் ரசவாத வித்தைகளை அனுபவிப்போம். இன்னும் தாமதம் ஆகவில்லை. இதுவரை முத்தம் தராத, பெறாதவர்கள் தமக்கானவர்களிடம் முயற்சிக்கலாம். அதற்காகப் பார்ப்போருக்கெல்லாம் அன்பை அள்ளித் தெளிக்க நினைத்தால் ஆகும் சேதாரத்திற்கு கம்பெனி பொறுப்பேற்காது.

இதோ தென்றல் காற்று வருடும் இந்தப் பொன்மாலைப் பொழுதில் எங்கிருந்தோ, “முத்தம் போதாதே.. சத்தம் போடாதே.. ரத்தம் சூடானதே.. நாணமே நாணுதே…” என்று இளையராஜா கிறங்கடிக்கிறார். மரக்கிளைகளில் இரண்டு குருவிகள் அலகுரசிக்கொள்கின்றன. உலகம் ரம்மியமாக இருக்கிறது.

படைப்பாளர்:

கனலி என்ற சுப்பு

‘தேஜஸ்’ என்ற பெயரில் பிரதிலிபி தளத்தில் கதைகள் எழுதி வருகிறார். சர்ச்சைக்குரிய கருத்துகளை எழுதவே கனலி என்ற புனைபெயரில் எழுதத் தொடங்கியிருக்கிறார்.