இயேசு கிறிஸ்துவின் பிறப்பு நாள், கிறிஸ்துமஸ் என டிசம்பர் 25 அன்று கொண்டாடப்படுகிறது. அகஸ்டஸ் சீசர் ரோமப் பேரரசராக இருந்தபோது, தம் பேரரசு முழுவதும் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தினார். அதனால் தாவீதின் வழிமரபினரான யோசேப்பு தன் மனைவியான மரியாவுடன் தங்கள் பெயரைப் பதிவுசெய்ய கலிலேயாவிலுள்ள நாசரேத்திலிருந்து தன் சொந்த ஊரான யூதேயாவிலுள்ள பெத்லகேம் சென்றார்.

அவர்கள் இரவில் தங்குவதற்கு ஒரு விடுதிக்குச் சென்றனர். விடுதியில் அவர்களுக்கு இடம் கிடைக்கவில்லை. அப்போது மரியா நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார். குழந்தை பிறப்பிற்கான காலம் வந்ததால் மரியா, அங்கு கால்நடைகள் கட்டும் தொழுவத்தில், இயேசுவைப் பெற்றெடுத்தார்.

இயேசு பிறந்த மாதம் மற்றும் நாள் தெரியவில்லை என்றாலும், நான்காம் நூற்றாண்டின் தொடக்கத்தில், டிசம்பர் 25 நாள், இயேசு பிறந்த நாள் என நிர்ணயிக்கப்பட்டது. இன்றும் அந்த முறையே கடைபிடிக்கப்படுகிறது.

இன்றும் கிறிஸ்த வழிபாட்டு நாட்காட்டி, நவம்பர் இறுதி ஞாயிறு அன்று தொடங்குகிறது. கிறிஸ்துமஸுக்கு ஆயத்தமாகும் ‘திருவருகை காலத்தின்’ தொடக்க நாளாக இது அமைகிறது. இது ஏறக்குறைய தவக்காலம் தான். ஆனால், இன்று பெரிய அளவில் கடைபிடிக்கப்படுவதில்லை. என் அப்பம்மா நவம்பர் இறுதி ஞாயிறை ஊமை பெருநாள், அதன் பிறகு இறைச்சி சாப்பிடக் கூடாது என்பார்கள்.

எங்கள் சிறு வயதில் வீடுகளில் பெரிய அளவில் அலங்காரங்கள் எல்லாம் கிடையாது. வீட்டில் வாலிபர்கள் இருந்தால், மூங்கில் களையை வகிர்ந்து, நூலால் கட்டி வால்நட்சத்திரம் செய்து, நடுவில் சிறு குண்டு பல்பு பொருத்தி, வண்ணக் காகிதம் சுற்றிலும் ஒட்டித் தொங்கவிடுவார்கள். பிறகு கடைகளில் வால்நட்சத்திரம் வாங்கி போடத் தொடங்கினோம். இயேசு பிறந்தபோது வானத்தில் புதிதாக ஒரு விண்மீன் தோன்றியது எனக் கருதப்படுவதால், வால்நட்சத்திரம் தொங்கவிடப்படுகிறது.

பெரும்பாலும் வீட்டில் குடில் வைப்போம். ஊரில் மலையில் சுக்குநாறி புல் 3-4 அடி உயரம் வளர்ந்து நிற்கும். அதன் வாசனை சுக்குபோல இருப்பதால், இந்தப் பெயர். அதை ஒடித்து வந்து ஸ்டூலைத் தலைகீழாக வைத்து, நான்கு கால்களிலும் சுக்குநாறி புல் கட்டினால் அதுதான் குடில். சில வீடுகளில் மட்டுமே குடில் வைப்பதற்கான சொரூபங்கள் இருக்கும். மற்றவர்கள் பழைய வாழ்த்து அட்டைகளில் இருக்கும் கிறிஸ்துமஸ் படங்களை வைத்து குடில் வைப்பார்கள். நாளாவட்டத்தில், நல்ல முறையில் அலங்காரம் செய்வது என்ற நிலை வந்தது.

கிறிஸ்தவ வீடுகளில் பண்டம் சுடுவது என்பது கிறிஸ்துமஸிற்கு தான். எங்கள் பாட்டி காலத்தில் ஓலைக் கொழுக்கட்டையும் பணியாரமும் மட்டும் தான் செய்வார்கள். எங்கள் அம்மா காலத்தில் வீடுகளில் அச்சு முறுக்கும் செய்யத் தொடங்கினார்கள். கொஞ்சம் வசதி வர வர, முந்திரிக் கொத்து, அதிரசம், முறுக்கு, போன்ற சில பண்டங்களும் இணைந்துகொண்டன. கருப்பட்டி பணியாரம் சீனி சேர்த்த வெள்ளைப் பணியாரமாக மாறியது. எங்கள் பகுதியில் பாட்டிகள் திராட்சைப் பழத்தை முந்திரி பழம் திராட்சை என்பார்கள். இப்போதும் கிஸ்மிஸ் பழத்தை முந்திரிப் பழம் எனச் சொல்வது உண்டு. முந்திரிக் கொத்து மொத்தமாக சேர்த்துப் பார்த்தால், கொத்து கொத்தாக திராட்சைக் கொத்து போல இருப்பதால் இந்தப் பெயர்.

அச்சு முறுக்கு, கிறிஸ்துமஸின் போது தென் தமிழகமான கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்தூக்குடி மாவட்டங்களில் மற்றும் கேரளாவில் சுடக்கூடிய பண்டம். கேரளாவில் அச்சப்பம் என்று இது அழைக்கப்படுகிறது. அச்சு முறுக்கு திருவிதாங்கூர் அரசின் அங்கமாக இருந்த தமிழ் ஊர்களிலும், அவற்றின் அருகாமை ஊர்களிலும் கொக்கீஸ் அல்லது கொக்குசம் என்றும் அழைக்கப்படுகிறது. அச்சு முறுக்கு என அழகு தமிழ்ப் பெயர் இருக்கும் போது, அது என்ன ‘கொக்குசம்’ என நாங்கள் கேலி செய்வதுண்டு. சமீபத்தில் தான் தெரிந்தது; இது குக்கீஸ் (Cookies) என்ற பெயரில் இருந்து வந்தது என்று. குக்கீஸ், கொக்குசம், கொக்கீஸாக மாறியிருக்கிறது. இன்றும் கோவா மக்கள் அச்சு முறுக்கை ரோஸ் குக்கி என்றே அழைக்கிறார்கள்.

அச்சுமுறுக்கு வெவ்வேறு வடிவங்களில், நார்வே, மெக்சிகோ, ஸ்பெயின் போன்று உலகின் பல நாடுகளிலும் செய்யப்படுகிறது. ஸ்காண்டிநேவியன் நாடுகளில் இது முதன்முதலில் செய்யப்பட்டதாகக் கருதப்படுகிறது. பியூனலொஸ் Buñuelos என்பது நமது அச்சுமுறுக்கு போல மெக்சிகோ நாட்டவர்கள் செய்வது. அவர்கள் பச்சரிசி மாவு, தேங்காய்ப் பால் சேர்ப்பதற்குப் பதில் ஆல் பர்ப்பஸ் / மைதா மாவு, பால் சேர்க்கிறார்கள். சீனியைக் கலந்து சுடாமல் பியூனலொஸ் இளம் சூட்டில் இருக்கும் போது சீனியில் பிரட்டி எடுக்கிறார்கள்.

கிறிஸ்துமஸ் அன்று கும்மி அடிப்பதற்கென வீடுகளில் முளை வைப்பார்கள். இப்போது அந்த வழக்கம் எல்லாம் இல்லை. ஆனாலும் அலேசியார் கும்மி, இன்றும் சௌந்தர பாண்டியபுரத்தில் கிறிஸ்துமஸ் நாளுக்கு முந்தைய இரவில் நடத்தப்படுகிறது. இரவு திருப்பலிக்கு முன் விளையாடுவோம். பட்டாசு வெடிப்போம்.

சாலை ஓர ஆலமரங்களுக்கு அடியில், குருத்து மணல் என்று சொல்லப்படும், மிருதுவான மணல் இருக்கும். கிறிஸ்துமஸ் அன்று மதிய உணவு கொண்டு சென்று உண்டு, விளையாடிவிட்டு வருவோம். ஆல விழுதுகளை இணைத்து தற்காலிக வடம் (ஊஞ்சல்) கட்டி விளையாடுவோம். கால ஓட்டத்தில் சினிமா, தொலைக்காட்சி இந்த இடத்தை எடுத்துக்கொண்டது.

அமெரிக்க கிறிஸ்துமஸ் அனுபவங்கள்

அமெரிக்க வாழ்க்கை முறை என எடுத்துக்கொண்டால், நமது ஊர் போன்று பெரிய அளவில் விழாக்கள், தேர் பவனி, கொண்டாட்டங்கள் எல்லாம் இங்கு கிடையாது. சமய விழாக்கள் குறிப்பிட்ட சமயத்தின் வளாகத்திற்குள் முடிந்துவிடும். பொது இடங்களில் கொண்டாட மாட்டார்கள். புனித வெள்ளிக்குக்கூட அரசு விடுமுறை கிடையாது. தேவை என்றால் நாம் விடுமுறை எடுத்துக்கொள்ளலாம். அதனால் தேவாலயங்களின் உள், திருப்பலி, carol போன்றவை நடைபெறும். குடில் வைப்பார்கள். பொது வெளியில் இவை எதுவுமே இருக்காது.

கிறிஸ்துமஸ் விழாவுடன் தொடர்புகொண்ட விழாக்கள் ஒவ்வொரு கலாச்சாரத்திலும் ஒவ்வொரு மாதிரி உள்ளன. எங்கள் அருகில் பிலிப்பைன்ஸ் மற்றும் மெக்ஸிகோ மக்கள் அதிகம் இருப்பதால் அவர்கள் குறித்து சிறிது தெரியும்.

பிலிப்பைன்ஸ் நாட்டு மக்கள் சிம்பங் கபி (Simbang Gabi) என்ற கிறிஸ்துமஸ் நாளுக்கு முந்தைய நாள் முடியுமாறு ஒன்பதுநாள் விழாவைக் கொண்டாடுகிறார்கள். இங்கு ஒவ்வொரு நாளும் ஒவ்வோர் ஆலயத்தில் கொண்டாடுவார்கள். திருப்பலி தொடங்குவதற்கு முன், ஒன்பது அலங்கரிக்கப்பட்ட விண்மீன்களுடன், அந்தந்த ஆலயம் தொடர்பான ஆட்கள் கொண்டு செல்வதைப் பார்க்க அவ்வளவு அழகாக இருக்கும். அந்த நட்சத்திரங்கள், நம் ஊரில் மூங்கில் கொண்டு நட்சத்திரங்கள் செய்வது போலவே செய்யப்பட்டிருக்கும்.

மெக்ஸிகோ மக்கள் ஜனவரி 6 ஆம் நாளை மூன்று அறிஞர்கள் நாளாக விமரிசையாகk கொண்டாடுகிறார்கள்.

இயேசு பிறந்த போது, வானத்தில் புதிதாக ஒரு விண்மீன் தோன்றியது. (பொதுவாகவே வானத்தில் தோன்றும் சில மாற்றங்கள் மன்னர்களின் பிறப்பைக் குறிப்பதாகவும் சில மாற்றங்கள் மன்னர்களின் இறப்பைக் குறிப்பதாகவும் கணக்கிடப்பட்டன. இந்த விண்மீன் பிறப்பைக் குறிப்பது.) அந்த விண்மீனைக் கண்ட அறிஞர்கள் வந்து, இயேசுவுக்குப் பரிசுப் பொருட்கள் கொடுத்தனர். அதன் அடையாளமாக மூன்று அறிஞர்கள் நாள் கொண்டாடப்படுகிறது.

DÍA DE LOS REYES அல்லது THREE KINGS DAY அங்கு விடுமுறை. அது மெக்சிகோ மக்கள் பரிசுகளைப் பரிமாறிக்கொள்ளும் நாளாகும். குழந்தைகள் தங்களின் பூட்ஸ்களை வீட்டு வாசலில் வைக்கிறார்கள். மூன்று அறிஞர்கள் வந்து, அதனுள் பரிசுப் பொருட்கள் வைத்துச் செல்வார்கள் என்பது ஐதீகம்.

அன்று மெக்சிகன் ரோஸ்கா டி ரெய்ஸ் அல்லது கிங்ஸ் கேக்கைப் (Rosca de Reyes, or King’s Cake) பரிமாறுகிறார்கள். ரோஸ்கா என்றால் மாலை, ரேய்ஸ் என்றால் மன்னர்கள். ரோஸ்கா டி ரெய்ஸ் ஒரு கிரீடத்தின் அடையாளமாக ஓவல் வடிவத்தைக்கொண்டுள்ளது. உள்ளே ஒரு சிறிய பொம்மை இருக்கும். இது ஏரோது மன்னனின் படைகளிடம் இருந்து குழந்தை இயேசு காப்பாற்றப்பட்டதைக் குறிக்கிறது.

இயேசு பிறந்தபோது பெரிய ஏரோது, ரோமப் பேரரசின் ஆட்சிக்கு உட்பட்ட யூதேயா நாட்டின் மன்னராக இருந்துவந்தார். வானத்தில் விண்மீனைக் கண்டு அதைப் பின்தொடர்ந்து வந்த அறிஞர்கள், ஏரோது மன்னனிடம் யூதர்களின் மன்னர் எங்கே பிறந்துள்ளார் எனக் கேட்டனர். ஏரோது மன்னருக்கு அது குறித்து எதுவும் தெரியாது. ஏற்கெனவே பெத்லகேமில் தான் இஸ்ராயலேயரை ஆள்பவர் பிறப்பார் என அந்நாட்டில் கருத்து நிலவியது. ஏனென்றால் பெத்லகேம்தான் மன்னர் தாவீதின் ஊர். (யோசேப்பு தாவீதின் வழிவந்த, அரியணைக்குரியவர் எனக் கருதப்படுகிறார்.) இதனால் ஏரோது, பெத்லகேம் மற்றும் அதன் சுற்று வட்டாரத்தில் இருந்த இரண்டு வயதிற்கு உட்பட்ட அனைத்துக் குழந்தைகளையும் கொன்றார். ஆனால், யோசேப்பு குழந்தையையும் மனைவியையும் கூட்டிக்கொண்டு எகிப்து நாட்டிற்குத் தப்பிச் சென்றுவிட்டார்.

இதைக் குறிப்பிடும் விதமாக ரோஸ்காவினுள் சிறிய பொம்மை வைக்கிறார்கள்.

பாரம்பரியமாக ரோஸ்காக்கள் உலர்ந்த பழங்களால் அலங்கரிக்கப்படுகின்றன. இது ஒரு கிரீடத்தில் இருக்கும் பல நகைகளைக் குறிக்கிறது. பொம்மையுடன் கேக் துண்டைப் பெறுபவர் பிப்ரவரியில் டியா டி லா கேண்டலேரியாவில் விருந்து நடத்த வேண்டும்.

.

கிங்ஸ் கேக் என இது சொல்லப்பட்டாலும், சுவையில் மிகவும் உயர்ந்த தரமான bun போலிருக்கும். அதனுடன் Hot Chocolate பானம் பரிமாறுவார்கள். இரண்டும் சேர்த்து சாப்பிடும்போது, சுவை அபாரமாக இருக்கும். என் தோழி ஆண்டுதோறும் தருவாள்.

பொதுவாக உலகமெங்கும் பிப்ரவரி இரண்டாம் நாள் இயேசு பிறந்த நாற்பதாவது நாள்; இயேசு ஆலயத்தில் காணிக்கையாகக் கொடுக்கப் பட்ட நாள் என மெழுகுவர்த்தி ஏந்தி ஆலயங்களில் வழிபாடு நடத்துவார்கள். மெக்சிகோ மக்களுக்கு அது இன்னும் சிறப்பான ஆள். அன்று தான் அவர்களின் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் நிறைவு பெறுகிறது. DIA DE LA CANDELARIA OR CANDLEMAS என அதை அழைக்கிறார்கள். அந்த விருந்திற்குப் பிறகு தான் கிறிஸ்துமஸ், அலங்காரங்களை அகற்றுகிறார்கள்.

கிறிஸ்தவர் அல்லாதாரும் கிறிஸ்துமஸ் வெகு விமரிசையாகக் கொண்டாடுவார்கள். ஆனால், அதில் சமய அடையாளம் இருக்காது. கிறிஸ்துமஸ்ஸிற்கு நாம் அரசு அலுவலகங்கள், பணியிடங்களில் Happy Holidays என்றுதான் சொல்ல வேண்டும். Happy Xmas எனச் சொல்லக்கூடாது. வாழ்த்து அட்டைகூட இயேசு, மாதா, சூசையப்பர் படம் போட்டு ஒருவருக்கொருவர் பகிரக் கூடாது என்பதில் அனைவரும் தெளிவாக இருப்பார்கள். Happy Holidays அட்டைதான் கொடுப்பார்கள். அரசு நிறுவனங்களில் கிறிஸ்துமஸ் மரம் வைக்கலாம். குடில் வைக்க முடியாது. பள்ளிகளில் பணியிடங்களில் கொண்டாட்டங்கள், ஆடல் பாடல்கள் என நடக்கும் .

செயிண்ட் நிக்கோலஸ் (Saint Nicholas), அன்றைய ரோமானியப் பேரரசின் லிசியா பகுதியில் உள்ள மைராவின் (இப்போது டெம்ரே / துருக்கி) (Myra (now Demre) in the region of Lycia) 4 ஆம் நூற்றாண்டின் கிரேக்க கிறிஸ்தவ ஆயர். அவர் அனைவருக்கும் குறிப்பாக ஏழைகளுக்கு உதவுபவராக இருந்தார். அதனால் அவர் கிறிஸ்துமஸ் பரிசு கொண்டுவருவார் என்ற நம்பிக்கை மக்களிடம் குறிப்பாக குழந்தைகளிடம் உள்ளது. அவர் சாண்டா கிளாஸ் (Santa Claus) என அழைக்கப்படுகிறார். டச்சு மொழியில் நிக்கோலஸ் என்ற பெயரின் பின்பகுதி கிளாஸ் (Klaas). சாண்டா என்பது செயின்ட் என்பதன் வடிவம்.

இவ்வாறாகக் கதை ஒன்று இருந்தாலும் சாண்டா கிளாஸ் அமெரிக்காவில் சமய சார்பில்லாமல் அனைவரும் ஏற்றுக்கொள்ளக்கூடியவராக இருக்கிறார். சாண்டா கிளாஸுக்குக் கடிதம் எழுதுவது குழந்தைகளின் கிறிஸ்துமஸ் பாரம்பரியமாக இருந்துவருகிறது. இந்தக் கடிதங்கள் பொதுவாக அவர்களின் விருப்பப் பட்டியலைக்கொண்டிருக்கும். பல அஞ்சல் சேவைகள் இந்தக் கடிதங்களுக்குத் தங்கள் ஊழியர்கள் அல்லது தன்னார்வலர்கள் மூலம் பதிலளிக்கின்றன. இதுவே பெரும்பாலும் குழந்தையின் முதல் கடிதப் பரிமாற்றமாக இருக்கும். பெற்றோர் உதவியுடன் எழுதப்பட்டு அனுப்பப்படும் இவை, குழந்தைகளுக்குக் கடிதத்தின் அமைப்பை சொல்லிக் கொடுக்கின்றன.

கனடாவில் உள்ள அஞ்சல் குறியீடு H0H 0H0 உடன் வட துருவத்தில் உள்ள சாண்டா கிளாஸுக்குக் கடிதம் அனுப்பலாம். டிசம்பர் 10 சாண்டாவிற்குக் கடிதங்களை அனுப்ப கடைசி நாள். டிசம்பர் 10க்குப் பிறகு அனுப்பப்படும் கடிதங்களுக்கு கிறிஸ்துமஸுக்கு முன் பதில் கிடைக்காமல் போகலாம்.

சாண்டா கிளாஸ் வடதுருவத்தில் வசிப்பதாகவும், அங்கிருந்து, கிறிஸ்துமஸுக்கு முந்தய நாள் இரவு, குழந்தைகளுக்குப் பரிசுகளை வழங்க தனது கலைமான் (reindeer sleigh) பூட்டிய வாகனத்தில் வருவார் என குழந்தைகள் நம்புகிறார்கள். பரிசுப் பொருட்களைத் தங்கள் வீட்டில் உள்ள Heater புகைபோக்கி வழியாக வந்து வீட்டிற்குள் வைப்பார் என அவர்கள் நம்புகிறார்கள்.

குறிப்பிட்ட வயதிற்கு மேல் அவர்கள் சாண்டா என்பவர் கிடையாது எனப் புரிந்துகொண்டாலும், அதை நம்புவதாகக் காட்டிக்கொண்டு இவற்றைச் செய்கிறார்கள்.

கிறிஸ்துமஸுக்கு முந்தைய வாரங்களில் மால்களில் சாண்டா வீடு என ஒன்றை அமைத்து, அதில் ஒருவரை சாண்டா என அமரவைத்து இருப்பார்கள். குழந்தைகள் புகைப்படம் எடுப்பார்கள். இதற்கு எனக் கட்டணம் வசூலிக்கிறார்கள்.

தொண்டு நிறுவனங்கள் ஏழைக் குழந்தைகள் எழுதும் கடிதங்களைச் சேகரித்தது ஆலயங்கள், அலுவலகங்கள் போன்றவற்றில் கொடுப்பார்கள். விருப்பப்படுகிறவர்கள், அந்தப் பரிசுப் பொருட்களை வாங்கி, சாண்டா கொடுத்ததாகக் கொடுப்பார்கள்.

கிறிஸ்துமஸ் விழாவுடன் தொடர்புகொண்ட இன்னுமொரு பொருள் கிறிஸ்துமஸ் மரம். இது பைன் வகை மரம். சிலர் இயற்கையான மரம் வைப்பார்கள். சிலர் செயற்கை மரம் வைப்பார்கள். ஜெர்மனியில் தான் முதன்முதலில் கிறிஸ்துமஸ் மரம் வைக்கப்பட்டதாக கருதப்படுகிறது. இயற்கையான மரம் நல்ல வாசனையாக இருக்கும். இதற்கென்றே தனியான கிறிஸ்துமஸ் மரத் தோட்டங்கள், விற்பனை நிலையங்கள் உண்டு. சாலை ஓரங்களில் இதற்கென தனிக் கடைகள் எல்லாம் முளைக்கும்.

கிறிஸ்துமஸ் விழா, வருவதற்கு ஒரு மாதத்திற்கு முன்பே கடைகளை அலங்கரிக்கத் தொடங்கி விடுவார்கள். விற்பனை களைகட்டும்.

Poinsettias செடிகள் விற்பனைக்கு வைக்கப் படும்.

வீடுகள் பிரமாண்டமாக அலங்கரிக்கப் படும்.

கீழே படத்தில் உள்ள இந்த வீட்டின் அனைத்து விளக்குகளும் சூரிய மின்சார விளக்குகள். லட்சக்கணக்கான விளக்குகள் உள்ளன. எண்ணிக்கையை இந்த வீட்டின் உரிமையாளர் வாசலில் எழுதி வைத்திருப்பார். இப்போது நினைவில்லை. கடுங்குளிர் காலத்தில் குறிப்பாக கிறிஸ்துமஸ் நாளன்று சூரியன் சில மணி நேரம் மட்டுமே வரும். அந்தக் காலகட்டத்திலும் லட்சக்கணக்கான விளக்குகள் சூரியனின் உதவியால் எரிகின்றன என்றால், நாம் எவ்வளவு அதிகமாக பயன்படுத்தலாம் என யோசிக்க வேண்டி உள்ளது.

அனைவருக்கும் கிறிஸ்துமஸ், புத்தாண்டு வாழ்த்துக்கள்!

படைப்பாளர்:

பாரதி திலகர்

தீவிர வாசிப்பாளர், பயணக் காதலர்; தொன்மை மேல் பெரும் ஆர்வம் கொண்டவர். அயல்நாட்டில் வசித்து வந்தாலும் மண்ணின் வாசம் மறவாமல் கட்டுரைகள் எழுதிவருகிறார்.