பொருள் 32 : பிளேட்டோனிக் உறவு

கிரேக்கத் தத்துவஞானியான பிளேட்டோவின் படைப்புகளில் காணப்படும் ஒரு பெயர், டயோடிமா. மாண்டிநியா என்னும் பகுதியைச் சேர்ந்த இந்த டயோடிமாவும் ஒரு தத்துவஞானிதான். இவருடைய தத்துவப் பார்வை தனித்துவமானது. உதாரணத்துக்கு அவர் முன்வைக்கும் இந்த வாதத்தைப் பாருங்கள். ‘ஒரு விஷயம் அதீத சுத்தமாகவோ அதீத அசுத்தமாகவோ மட்டுமே இருந்தாகவேண்டும் என்றில்லை. வெள்ளையாக இல்லாத ஒன்று கறுப்பாகத்தான் இருந்தாகவேண்டும் என்று சொல்ல முடியாது. இரு தீவிர நிலைப்பாடுகளுக்கு மத்தியில் அதிகம் ஆராயப்படாத ஓரிடம் இருக்கிறது. கடவுளுக்கும் மனிதர்களுக்கும் இடையிலும் ஆளுமைகள் ஜீவித்திருக்க முடியும். யதார்த்தம் என்பது பார்ப்போரின் கண்களில்தான் இருக்கிறது. எனக்குத் தோன்றுவதுதான் உங்களுக்கும் தோன்றும் என்று சொல்ல முடியாது.’

இன்னோரிடத்தில் காதல் என்றால் என்ன என்பதை விரிவாக ஆராய்கிறார் டயோடிமா. மனிதர்கள் சக மனிதர்கள்மீது கொள்ளும் காதலைவிட, உயர்வான சக்தியொன்றின்மீது கொள்ளும் காதல் அவரை ஈர்க்கிறது. இந்தக் காதல் உடலின்பத்தைக் கடந்தது. இத்தகைய உயர்வான காதலை சக மனிதர்களிடமும் வெளிப்படுத்துவது சாத்தியம் என்கிறார் டயோடிமா.

டயோடிமாவின் அழகு, அறிவு, ஆற்றல் ஆகியவை நம்பும்படியாக இல்லை என்கிறார்கள் சில பிற்கால ஆய்வாளர்கள். அநேகமாக இவர் ஒரு கற்பனை கதாபாத்திரமாகவே இருக்கமுடியும், நிஜத்தில் இப்படியொரு பெண் வாழ்ந்திருக்க வாய்ப்பில்லை என்பது அவர்கள் திடமான நம்பிக்கை. தனது தத்துவ உரையாடல்களில் ஒரு தரப்பைச் சொல்வதற்காக பிளேட்டோ டயோடிமாவைக் உருவாக்கியிருக்கவேண்டும் என்று இவர்கள் வாதிடுகிறார்கள். ஆனால், பிளேட்டோ மட்டுமல்ல அவருடைய ஆசான் சாக்ரடீஸும் டயோடிமாவைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளார். வெறுமனே பெண் தத்துவஞானி என்று மட்டுமல்ல, எனக்குப் பாடம் கற்பித்த ஆசான் என்றே டயோடிமாவை அவர் அழைக்கிறார். குறிப்பாக, காதல் பற்றிய தத்துவ விசாரணைகளை அவரிடமிருந்தே கற்றதாக சாக்ரடீஸ் குறிப்பிட்டுள்ளார். இந்தக் காதல் மனிதர்களுக்கு இடையில் மலரும் உடல் சார்ந்த காதல் அல்ல, உள்ளம் சார்ந்த மேலான காதல். அதாவது நட்பு.

பிளேட்டோனிக் உறவு அல்லது காதல் என்று இந்த நட்பு அழைக்கப்படுகிறது. இதன்படி ஓர் ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையில் அறிவார்ந்த, உணர்ச்சிபூர்வமான நேசம் சாத்தியம். இந்த நேசம் காதலல்ல. இங்கே ஓர் ஆணின் உடலும் பெண்ணின் உடலும் அவற்றுக்குண்டான முக்கியத்துவத்தை இழந்துவிடுகின்றன. இருவரும் அன்பால் ஒன்றிணைகிறார்கள். அன்புடன் ஒருவரையொருவர் நேசிக்கிறார்கள். ஓர் ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையில் நட்பு சாத்தியமேயில்லை என்று பலகாலமாக நிறுவப்பட்டு வரும் வாதத்தை பிளேட்டோனிக் உறவு தகர்க்கிறது.

ஏன் ஆண் பெண் நட்பு சாத்தியமில்லை என்று சொல்லப்பட்டது? மேரி உல்ஸ்டோன்கிராஃப்ட் 18ஆம் நூற்றாண்டின் இறுதியில் இதற்கு அளித்த பதில் எளிமையானது மட்டுமல்ல முக்கியமானதும்கூட. ஒரு பெண்ணைத் தனக்குச் சமமான ஓர் உயிராக ஆண் எப்போதுமே கருதியதில்லை. ஆணுக்குக் கட்டுப்படவேண்டியவராக, ஆணைவிடத் தகுதி குறைந்தவராகவே பெண் மதிப்பிடப்பட்டார். குடும்பத்தில் ஆணுக்கே தலைமை பொறுப்பு அளிக்கப்பட்டது. சமூகத்தை ஆண்களே நிர்வகித்தார்கள். ஆட்சியில் அவர்களே இருந்தார்கள். மதம், தத்துவம், கலை, இலக்கியம் யாவற்றிலும் ஆண்களே மேல்நிலையில் இருந்தார்கள். என்னைப் போல் மற்றோர் உயிர் என்று ஒரு பெண்ணை ஆண் எப்போது கருதுகிறானோ அப்போதுதான் நட்பு சாத்தியம். நீ எனக்குக் கீழே என்று நினைக்கத் தொடங்கும்போதே நட்பு முறியத் தொடங்கிவிடுகிறது. மேலாதிக்க உணர்வும் நட்பும் இணைந்திருப்பதில்லை என்பதால் ஆணும் பெண்ணும் நட்புடன் இணைந்திருக்க முடிவதில்லை.

உரையாடும் டயோடிமா

அதனால்தான் டயோடிமா மனிதக் காதலை அல்ல அதைவிடவும் மேலானதொரு காதலைப் பற்றி விவாதிக்கிறார். பிளேட்டோனிக் உறவு என்று இன்று அறியப்படும் ஆண் பெண் நட்பை சாக்ரடிஸ், பிளேட்டோ இருவருக்கும் ஒரு தத்துவ விசாரணையாக அறிமுகப்படுத்தியவர் டயோடிமா. காதல் அல்லது நேசத்தின் தத்துவத்தை என்னுடைய இளமை காலத்தில் டயோடிமாவிடமிருந்தே கற்றுத் தெரிந்துகொண்டேன் என்று குறிப்பிடுகிறார் சாக்ரடீஸ். பிளேட்டோவின் தத்துவத் தேடல்களில் டயோடிமா ஒரு முக்கியமான பாத்திரத்தை வகிக்கிறார். இப்படி இரு பெரும் தத்துவஞானிகளைப் பாதித்தவராக இருக்கிறார் டயோடிமா.

நட்பு மட்டுமல்ல காதலையும் தீவிரமான ஆய்வுக்கு உட்படுத்துகிறார் டயோடிமா. ஒரே நேரத்தில் காதல் வறுமையையும் அபரிமிதமான செல்வத்தையும் குறிக்கிறது என்கிறார் இவர். நாம் எல்லோருமே காதலைத் தேடிக்கொண்டிருக்கிறோம். நம்மிடம் இல்லாத ஒன்றைத்தானே நாம் தேடமுடியும்? அப்படியானால் அன்பையும் அழகையும் காதலையும் தேடுபவர்கள் அன்பற்றவர்கள், அழகற்றவர்கள், காதலற்றவர்கள் என்று சொல்லமுடியுமா? ஏதுமற்ற வறுமை நிலையில்தான் காதல் மலருமா? மற்றொரு பக்கம், காதல் இந்த இல்லாமையைப் பூர்த்தி செய்வதாகவும் இருக்கிறது. அது அன்பை அளிக்கிறது. அழகை அளிக்கிறது. நிறையை அளிக்கிறது. ஏதுமற்றவர்களையும் எல்லாவற்றையும் பெற வைக்கிறது. இன்பத்தையும் மகிழ்ச்சியையும் கொண்டுவந்து சேர்க்கிறது. அப்படியானால் காதல் என்பது நிச்சயம் செல்வம்தான்.

காதல் என்பது எப்போதும் வறுமையில் இருப்பது. அது தங்குவதற்கு இடமின்றி அலைந்துகொண்டிருக்கிறது. அதனால்தான் நமக்குப் பிடித்தமானவர்களிடமிருந்து காதலை நாம் இறைஞ்சி பெற்றுக்கொள்ளத் துடிக்கிறோம். அதனால்தான் தீவிரமாகவும் முரட்டுத்தனமாகவும் அதைத் துரத்திக்கொண்டு ஓடுகிறோம். அதே நேரம் காதல் இல்லாமையைப் போக்கி அழகையும் ஆனந்தத்தையும் கொண்டுவந்து சேர்க்கிறது. காதல் என்பது வறுமை, செல்வம் இரண்டுக்கும் பிறந்த குழந்தை என்கிறார் டயோடிமா. ஒன்றிலிருந்து இன்னொன்றுக்கு அது எப்போதும் பாய்ந்து ஓடிக்கொண்டிருக்கிறது என்கிறார் அவர். அன்பு, அழகு, மகிழ்ச்சி, காதல், நட்பு எதை நீங்கள் தேடிச்செல்வதாக இருந்தாலும் நீங்கள் வறுமைக்கும் செல்வத்துக்கும் இடையில் பறந்து செல்கிறீர்கள். உங்களிடம் இல்லாததைத் தேடுகிறீர்கள். அதேநேரம் உங்களிடமிருந்து ஒரு பகுதியை அளிக்கவும் செய்கிறீர்கள்.

SANYO DIGITAL CAMERA

காதலைப் பரிமாறிக்கொள்வதைப் போல் நட்பைப் பரிமாறிக்கொள்ளலாம். சிந்தனைகளைப் பரிமாறிக்கொள்ளலாம். தத்துவங்கள் பரிமாறிக்கொள்ளலாம். காதலைப் போல் பிளேட்டோனிக் உறவும் ஓர் ஆணையும் பெண்ணையும் மெய்யாக ஓர் உறவில் பிணைத்து வைக்கிறது. இந்த உறவு எதிர்நிலைகளில் இருப்பவர்களை ஒருங்கிணைக்கிறது. எதிர்மறைச் சிந்தனைகளை ஒருங்கிணைத்து ஓர் உரையாடலைத் தொடங்கிவைக்கிறது. இந்த உறவு இல்லாமையைப் பூர்த்திசெய்கிறது. அபரிமிதமாக இருப்பதை இன்னொருவரிடம் பகிர்ந்துகொள்கிறது. முரண்களைச் சமப்படுத்தி நல்லிணக்கத்தை மலரச் செய்கிறது.

டயோடிமா கனவு காணும் இத்தகைய ஓர் உறவு ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையில் ஏற்படவேண்டுமானால் மேரி உல்ஸ்டோன்கிராஃப்ட் குறிப்பிடும் சமத்துவம் முதலில் சாத்தியப்படவேண்டும். மேலிழுந்து கீழாக நடத்தப்படும் உரையாடல்களும் நிகழ்த்தப்படும் பரிமாற்றங்களும் ஒரு தரப்பின் தேவைகளை மட்டுமே பூர்த்தி செய்யும். ஆண், பெண் இருவரும் சரி சமானமாக நின்று உரையாடும்போதுதான் அந்த உரையாடல் ஆரோக்கியமானதாக இருக்கும். அப்படியோர் உரையாடல் தொடங்கினால்தான் அதற்குப் பிறகான பரிமாற்றங்கள் இருவருக்கும் பயனுள்ளதாக, இருவருக்கும் மகிழ்ச்சியளிப்பதாக அமையும். காதலுக்கும் நட்புக்கும் மட்டுமல்ல, ஓர் ஆணுக்கும் பெண்ணுக்குமான எல்லா உறவுகளுக்கும் சமத்துவம் அடிப்படையாக இருக்கவேண்டியது அவசியம்.

பொருள் 33: ஜிலிமி

ஆண்களின் உலகில் எப்படிப் பாதுகாப்பாக வாழ்வது? வீட்டுக்கு வெளியில் மட்டுமல்ல, உள்ளேயும்கூட அச்சமின்றி இருக்க முடியவில்லையே! இந்த உலகம் ஆரம்பத்தில் இருந்தே இப்படித்தான் இருந்து வருகிறதா? என் அம்மாவும் அவர் பாட்டியும் அவருடைய பாட்டியும் இப்படித்தான் தலைமுறை தலைமுறையாக அஞ்சியும் பதுங்கியும் வாழ்ந்து முடித்தார்களா? எனக்கு அடுத்து வரும் பெண்களும் இப்படியேதான் வாழ்ந்து முடித்தாகவேண்டுமா? ஆஸ்திரேலியாவில் பல நூற்றாண்டுகளாக வசித்துவரும் வார்ல்பிரி பழங்குடிப் பெண்கள் இந்தக் கேள்விகளுக்கு விடை கண்டுபிடிக்கமுடியாமல் நீண்ட காலம் திண்டாடிவந்தனர்.

ஆண்களைக் கண்டு அவர்கள் அஞ்சியதற்கு வலுவான காரணங்கள் இருந்தன. நினைவுதெரிந்த காலம் தொடங்கி ஆண்களை அவர்கள் வன்முறையுடனே அதிகம் தொடர்புபடுத்தி புரிந்துவைத்திருந்தனர். வழிவழியாக அவர்களுக்குச் சொல்லப்பட்டு வந்த கதைகளும் கண்முன் உதாரணங்களும் இந்தப் புரிதலை அதிகப்படுத்தவே உதவின. ஆண்களே அதிகார மையமாக இருந்ததால் சட்டம், நீதி, குடும்ப ஒழுங்கு ஆகிய துறைகள் இயல்பாகவே அவர்கள் கட்டுப்பாட்டின்கீழ் அமைந்திருந்தன. தவறுகளைச் சரிசெய்யும் பணியும் தவறிழைத்தவர்களைத் தண்டிக்கும் பொறுப்பும் அவர்களிடமே இருந்தன.

ஆஸ்திரேலிய பழங்குடிகள்

தவறிழைக்கும் பெண்களைத் தண்டிக்க பழங்குடி ஆண்கள் சில தெளிவான வழிமுறைகளை வகுத்து வைத்திருந்தனர். பெண்களுக்கு எதையும் சொல்லி புரியவைக்க முடியாது என்பதால் வன்முறையைப் பிரயோகித்தே அவர்களை வழிக்குக் கொண்டுவரவேண்டும் என்னும் புரிதலுடன் உருவாக்கப்பட்ட வழிமுறைகள் இவை. இழைத்த தவறுக்கேற்ப கத்தியைக் கொண்டு உடல் கீறப்படும். ரத்தமும் வலியும் போதாது என்றால் இன்னும் அழுத்தமாகக் கத்தி உடலில் பாய்ச்சப்படும். கத்திக்குப் பதிலாக ஈட்டியையும் பயன்படுத்தலாம். ஆழமான காயத்துக்கு இது உதவிக்கு வரும். கைகளின் மேல் பகுதிகளில் ஈட்டியைப் பாய்ச்சுவது பிரபலமான ஒரு வழக்கமாக இருந்திருக்கிறது. அதேபோல் சிறிதளவு சதைப் பகுதியை உடலில் இருந்து வெட்டியெடுப்பதும் இயல்பானதுதான்.

இப்படி விதவிதமாகத் தண்டனைக்கு உள்ளாகும் பெண்கள் இழைத்த குற்றங்கள் என்னென்ன என்பது தெரியவில்லை. எப்போது கீறவேண்டும், எப்போது வெட்டவேண்டும், குறிப்பாக எப்போது ஈட்டியைப் பாய்ச்சுவது அனுமதிக்கப்படும் என்பது எப்படி முடிவெடுக்கப்படும் என்பதும் தெரியவில்லை. தண்டனைக்குள்ளாகும் பெண்களைப் பார்த்து மற்ற பெண்கள் அதே தவறுகளை இழைக்காமல் பார்த்துக்கொள்வார்கள் என்று அந்தப் பழங்குடி ஆண்கள் நம்பியிருக்கிறார்கள். காயப்படுத்தினால் போதாது, கொல்வதே சிறந்தது என்று கருதியவர்களும் இருந்திருக்கிறார்கள். கொடூரமாக மண்டையை உடைத்து மரண தண்டனை நிறைவேற்றப்பட்டிருக்கிறது.

கண்முன்னால் நடைபெறும் இந்தச் சித்திரவதைகளைக் கண்டு பழங்குடிப் பெண்கள் கலங்கினார்கள். எப்போது வேண்டுமானாலும் யார் வேண்டுமானாலும் இந்தத் தண்டனைகளை அனுபவிக்க நேரிடும் என்பதால் அவர்கள் ஆண்களைக் கண்டு அஞ்சினர். தவறுகளே இழைக்காமல் வாழ்ந்துவிடுவது சாத்தியமில்லை. காரணம் எது தவறு என்பதற்கு திட்டவட்டமான இலக்கணம் எதுவுமில்லை. அநிச்சையான, இயல்பான ஒரு விஷயம்கூட ஆண்களுக்குப் பெரும் தவறாகத் தெரிந்துவிடுகிறது. எனவே தவறுகளில் இருந்து தப்பிக்க முடியாது. தண்டனையில் இருந்து தப்பிக்கவேண்டுமானால் ஆண்களிடமிருந்தே தப்பித்தாகவேண்டும். என்ன செய்யலாம்?

ஒரு நாள் மகத்தான உண்மையொன்றை அவர்கள் தற்செயலாகக் கண்டுபிடித்தார்கள். ஒரு பெண்ணால் ஆண்களிடமிருந்து தப்பிக்க முடியாது. ஆனால், பெண்களால் தப்பிக்கமுடியும். தனித்தனி உயிர்களாக இல்லாமல், ஒன்றாக நாம் இணைந்திருந்தால் நம் பலம் பெருகும் என்பதை அறிந்துகொண்டார்கள். ஒரு பெண்ணை ஆணால் சுலபமாகத் தெருவுக்கு இழுத்து வரமுடியும், வாளால் கீறமுடியும். ஆனால், பெண்களை அவ்வாறு செய்ய இயலாது. குழுவாகத் திரளும்போது ஆண் மட்டுமல்ல ஆண்களுமேகூட தயங்கவே செய்வர். இதை அவர்கள் அனுபவபூர்வமாகப் பரிட்சீத்துப் பார்த்தபோது வெற்றி கிடைத்தது. இந்த வெற்றி தந்த உற்சாகத்தில் தங்களுடைய உத்தியை ஒரு திடமான வடிவத்துக்கு அவர்கள் கொண்டுவந்தார்கள்.

தனிப் பெண்களின் கூடாரத்தை அவர்கள் உருவாக்கினார்கள். ஆண்களைக் கண்டு அஞ்சும் பெண்கள் இங்கே வரவேற்கப்படுவார்கள். தவறு இழைத்துவிட்டோமோ என்று அஞ்சும் பெண்களுக்கு இந்தக் கூடாரம் பாதுகாப்பு அளிக்கும். தவறு இழைத்தவர்களுக்கும்கூடத்தான். வெகு விரைவில் இந்தக் கூடாரத்தை ஓர் அமைப்பாக அந்தப் பழங்குடிப் பெண்கள் கட்டமைத்தார்கள். தண்டனைகளுக்குப் பயந்து தப்பித்து ஓடிவருபவர்களை அந்தக் கூடாரம் அரவணைத்துக்கொண்டது. ஆணுலகில் வாழ விரும்பாத உயிர்கள் கூடாரத்தில் குழுமி வாழத் தொடங்கின.

ஜிலிமி என்னும் பெயரால் இந்தக் கட்டுமானம் அழைக்கப்பட்டது. இந்தக் கட்டுமானத்துக்குள் மட்டுமல்ல அதற்கு அருகிலும்கூட ஆண்களுக்கு அனுமதியில்லை. ஜிலிமியைக் கடந்துதான் ஓரிடத்துக்குச் சென்றாகவேண்டும் என்றால் அந்தப் பாதையைத் தவிர்த்துவிட்டு வேறொரு சுற்றுப் பாதையைத்தான் ஆண்கள் எடுத்துக்கொள்ளவேண்டும். பெண்களை ஆண்கள் தங்கள் விருப்பப்படி தண்டிக்கலாம் என்பது ஆண் உலகின் சட்டம் என்றால் ஜிலிமியை ஆண்கள் அண்டக் கூடாது என்பது பெண் உலகின் சட்டம். ஆண் சட்டத்தைப் பெண்கள் மதிக்கவேண்டும் என்பதுபோல் பெண் சட்டத்தை ஆண்கள் மதிக்கவேண்டும் என்றானது. ஆண்கள் அதை மதிக்கவும் செய்தனர்.

ஜிலிமி வளரத் தொடங்கியது. கணவனை இழந்த பெண்களும் கைவிடப்பட்டவர்களும் ஏற்கெனவே வன்முறைக்குப் பலியானவர்களும் இந்தக் கூடாரத்தை ஆக்கிரமித்தனர். திருமணமான பெண்களும் சில நேரம் இங்கு வந்து மனம் விட்டுப் பேசி, சுதந்தரமாக வாழ்ந்துவிட்டு பிறகு வீடு போய்ச் சேர்ந்தார்கள். நோய்வாய்ப்பட்ட பெண்களும் அந்நிய நிலப்பிரதேசங்களில் இருந்து வந்த பெண்களும் ஜிலிமியில்தான் அடைக்கலம் புகுந்தனர். வேறு வார்த்தைகளில் சொல்வதனால் ஆண்களின் உலகை ஏற்காதவர்களும் ஆண்களின் உலகால் தள்ளிவைக்கப்பட்டவர்களும் ஜலிமியில் ஒன்றிணைந்தனர். தனி நபர்கள் குழுவாகத் திரளும்போது பலவீனம் பலமாக மாறுவதைப் பெண்கள் கண்கூடாகக் கண்டனர். இழந்த நம்பிக்கை சற்றே மீண்டு வந்தது. ஆண்களுக்கு ஓர் உலகம் இருந்தால் பெண்களுக்கும் ஓர் உலகம் இருந்தாகவேண்டும் என்பதை அவர்கள் உணர்ந்துகொண்ட அந்தத் தருணம் முக்கியமானது.

0

படைப்பாளர்:

மருதன்

எழுத்தாளர், வரலாற்றாளர். சே, ஹிட்லர், ஃபிடல் காஸ்ட்ரோ, திப்பு சுல்தான், மண்டேலா, மாவோ, ஸ்டாலின் ஆகிய உலகத் தலைவர்களின் வாழ்க்கை வரலாறுகளை எழுதியுள்ளார். இவரது ஹிட்லரின் வதைமுகாம்கள், முதல் உலகப் போர், இரண்டாம் உலகப்போர், ஷெர்லக் ஹோம்சால் தீர்க்க முடியாத புதிர், துப்பாக்கி மொழி, திபெத்- அசுரப் பிடியில் அழகுக்கொடி, ஒரு புத்திரனால் கொல்லப்படுவேன் ஆகிய நூல்கள் கவனம் ஈர்த்தவை. பிரபல தமிழ் இதழ்களில் தொடர்கள் எழுதிவருகிறார். இந்து தமிழ் திசை மாயா பஜார் குழந்தைகள் இணைப்பிதழுக்கும் கட்டுரைத் தொடர் எழுதி வருகிறார்.