ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளைத் தொலைக்காட்சியில் தந்தையும் மகளுமாகப் பார்த்துக்கொண்டிருந்தனர். விளையாட்டுப் போட்டிகளைத் தவிர்க்காமல் பார்க்கும் மகளுடன், வாய்ப்பிருக்கும்போது காண்பது வழக்கம்.

“130 கோடி பேர் இருக்கற நம்ம நாட்டுல ஒரு தங்கம் வாங்கறதுக்கே எவ்ளோ போராட வேண்டியிருக்கு? அமெரிக்கா, சீனால்லாம் பாரு கலக்கறான்” என்றார் அப்பா.

“ எங்கப்பா, இங்க இயல்பா விளையாட விடறாங்க? அங்க போயி மெடல் வாங்கல, வாங்கலன்னா எப்படி?” என்று உள்ளக் குமுறலோடு கேட்டாள் வீரம்மாள்.

” நீ சொல்றதும் யோசிக்க வேண்டியதான் பாப்பா.”

யோசிக்கலானாள் வீரம்மாள். தன் அத்தையோடு நடந்த உரையாடல் அவள் நினைவுக்கு வந்தது. “எனக்கு விளையாடறதுன்னா ரொம்பப் பிடிக்குது. ஆனா, பொது இடங்களில் பெண்கள் விளையாடவே மாட்டிங்கிறாங்க. என்னையும் அனுமதிக்க மாட்டிங்கிறாங்க, ஏன் அத்தை?” என்று கேட்டாள் வீரம்மாள்.

”அதாவது பாப்பா பொதுவாகவே நம்ம சமூகத்துல விளையாட்டுக்கு முக்கியத்துவம் குறைவா இருக்கு.

கல்வி கற்பதை வாழ்க்கைக்கான பொருளாதாரத்தை ஈட்டுவதற்கான முதலீடாத்தான் பொதுவா பார்க்கப்படுது. எதாவதொரு பதவி மூலம் அதிகாரத்தைப் பெறுதலும்கூட அதுல உள்ளடக்கியிருக்கு. அதுவுமில்லாம நம் கல்விமுறை எழுத்துத் தேர்வை மையப்படுத்தி இருக்கு. அதுல விளையாட்டுங்கிறது ஒப்புக்குச் சப்பானான பாடமாகத்தான் மதிப்பீட்டைப் பொறுத்தவரை இருக்கு. உடற்கல்விக்குனு தனி ஆசிரியர் , உயர்நிலைப் பள்ளிகளில் தான் இருக்கார் ” என்று கல்வி நிலையை விவரித்துக் கொண்டிருந்தார் அத்தை.

“எனக்குக் கால்பந்து விளையாடணும்னு ஆசை. ஆனா, எங்க போயி விளையாடறதுன்னு தெரியல. சரி ஏதாவது விளையாட்டு விளையாடலாம்னா ஆம்பளப் பசங்கதான் நம்ம ஊர்ல விளையாடறாங்க. அவங்க விளையாடறதைப் பார்க்கும்போது நானும் விளையாடமாட்டேனானு ஏக்கமா இருக்கு அத்தை.”

“ஒரு ஆண் நினைச்சா வெளில போயி விளையாடலாம். ஆனா, அவங்க விளையாட்டுப் போட்டிகள்ல பங்கேற்கற விகிதம் என்னவோ குறைவாத்தான் இருக்கு. இன்னொன்னு நம்ம நாட்ல கிரிக்கெட் பக்கமே நாட்டோட பெரும்பான்மை கவனம் இருக்குது. இப்போ மத்த விளையாட்டுகளும் கொஞ்சம் அதிகம் விளையாட , முக்கியத்துவம் கொடுக்கத் தொடங்கி அதுல பதக்கங்கள் பெற்று வராங்க. இன்னொன்னு நம் நாட்ல முக்கியமாக கருதற கிரிக்கெட் ஒலிம்பிக் போட்டில இல்லை. கிரிக்கெட்ல பெண் கிரிக்கெட்டும் இருக்கு. ஆனா, ஆண்கள் போல முக்கியத்துவம் தர்றதில்லை. ஆங்கிலேயர் நம்ம நாட்டை விட்டுப் போனாலும் போகாத விளையாட்டு கிரிக்கெட்ன்னு சொல்லலாம்” என்றார் அத்தை.

”அதென்னவோ நீங்க சொல்றது சரிதான் அத்தை. எங்க பார்த்தாலும் கிரிக்கெட்தான் விளையாடறாங்க. அப்போ பொண்ணுங்கள ஏன் அனுமதிக்கறதில்லை? மற்ற நாடுகள்ல பெண்கள் எவ்ளோ அருமையா விளையாடறத டிவில பார்க்கறேன். நம்ம நாட்டுக்கும்கூட பெண்கள்தான் இந்த முறை ஒலிம்பிக்ல அதிக பதக்கம் வாங்கிக் கொடுத்திருக்காங்க. “

”போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெறுவது ஒருபுறம் இருந்தாலும் நம்ம சமூகத்துல பெண் நினைச்சவுடனே பொதுவெளில விளையாடறதுக்கு அனுமதி இல்லை. ஆனா, ஆண் நினைச்சா உடல் புத்துணர்ச்சி, மனமகிழ்ச்சிக்கென விளையாட முடியும். பொதுவாகவே பொருளாதாரம் ஈட்ட வேலை வேலைன்னு போக வேண்டிய தேவை இருக்கறதால பெரிதானதும் அதுவும் அவங்களுக்குக் குறைஞ்சிடுது.”

“ஓடறது, குதிக்கறது, தாண்டறது போன்ற விளையாட்டை ஆண்கள் விளையாட்டுன்னும் அஞ்சுக் கல், சொப்பு சாமான், தாயம் மாதிரி உட்கார்ந்து ஆடறத பெண்கள் விளையாட்டுன்னும் பாகுபாடு இருக்கு. அதாவது பெண்கள் வீட்டுக்குள்ளயே இருக்கணும். அவங்க பலவீனமானவங்க, உடல் இயக்கம் அதிகம் செலுத்தற விளையாட்டை விளையாட முடியாதுன்னு சின்ன வயசுலயே நம்ம அறியாம நமக்குள்ளயே திணிச்சிடறாங்க” என்று பெருமூச்சுவிட்டார் அத்தை.

“ஆண்கள்ளகூட சின்ன வயசுல விளையாடினா விளையாட்டு பசங்கன்னு விட்ருவாங்க. அவங்களே குடும்பப் பொறுப்புக்கு வந்துட்டு விளையாடினா அவனுக்குப் பொறுப்பு இருக்கா பாரு விளையாடிக்கிட்டு இருக்கான்னு சொல்வாங்க. ஆனா, முறையா விளையாட்டுப் போட்டிக்குத் தயார் ஆகறவங்க தயார் ஆகிட்டுதான் இருக்காங்க. போட்டிகள்ல பங்கேற்க பொருளாதார வசதி, சரியான வாய்ப்பு, சத்தான உணவு இதெல்லாம் இன்றியமையாத தேவை. ஆனா, இதெல்லாம் ஒரு புறம் தடையா இருந்தாலும் அதைத் தாண்டி பொதுவெளில விளையாடாம இருக்கறதுக்கான காரணமா பதின்ம வயதுல இருக்கற பெண்களுக்குப் பாதுகாப்பு இருக்காது, வீட்டுக்குள்ளேயே இருக்கணும், விளையாடும்போது உடை விலகி உடல்பாகங்கள் வெளில தெரிஞ்சிடுமோன்னு… இப்படிச் சொல்லலாம். போட்டிகளைப் பொறுத்தவரை அதுக்கான குறைந்த உடை போடணும், வீட்டை விட்டு வெளில போயி விளையாடினா பொது சமூகத்துல அவ நடத்தையச் சந்தேகித்தல், பாதுகாப்பு பிரச்னை இருக்குமோன்னு அச்சம் போன்றவை எல்லாம் அவளைக் கீழ்நோக்கியே தள்ளுது” என்று அடுக்கிக் கொண்டே வந்தார் அத்தை.

“ என்னவோ போங்க அத்தை. இதையெல்லாம் ஒத்துக்கிட்டு சில பெண்களால வாழ முடியுது. ஆனா என்னாலதான் முடியமாட்டிங்குது. நான் எப்படியாவது போட்டிகள்ல பங்கேற்று பரிசு வாங்குவேன். நீங்க வேணா பார்த்துக்கிட்டே இருங்க” என்றாள் கம்பீரம் கலந்த குரலில்.

“ உடல் உறுதி , மனம் நலமா இருக்க விளையாட்டு இன்றியமையாத தேவை. அதுபோல போட்டிகள்ல கலந்துகிட்டு, தன் திறமையை வெளிப்படுத்த வாய்ப்பும் பயிற்சியும் தேவை. ஆனா, பெண்கள் நீளமான முடி வைச்சிருக்கணும், ஆபரணம் போட்டு அலங்காரம் பண்ணிக்கணும், வீட்டைப் பராமரிக்கும் பணி செய்யணும் போன்றவற்றால் அவங்க சிந்தனையை மடைமாற்றம் பண்ணி, அவர்கள் நேரத்தை அதிலேயே கழிக்குமாறு பண்ணிட்டதாலாயே இது மாதிரி வெளியுலக, இல்லைன்னா தன்னை வெளிப்படுத்தும் சிந்தனை இல்லாம அறியாமைல இருக்காங்க” என்றார் அத்தை.

”இதுக்கெல்லாம் என்னதான் தீர்வு அத்தை, நான் எப்படியாவது விளையாடணும், பதக்கம் வாங்கணும். அதுக்கு யோசனை சொல்லுங்களேன்.”

”நம்ம கல்வி முறைல விளையாட்டையும் இணைச்சு மாற்றம் வரணும். பணக்கார வீட்டுப் பெண்கள் விளையாடணும்ன்னா அதுக்குன்னு இருக்கற கிளப்புகளில் சென்று விளையாடறாங்க. நம்மள மாதிரி மக்களுக்குச் சமூகத்துல மாற்றம் வரணும். நூறுநாள் வேலை நடைபெறும் இடங்களில்கூடச் சில பெண்கள் விளையாடுவேன்னு சொல்வதெல்லாம் ஒருபுறம் மகிழ்ச்சிதான். அதுவும் சில இடங்களில்தான் யாருக்கும் தெரியாமத்தான் விளையாடறாங்க.”

” அரசாங்கம் விளையாட்டுக்கு கிராம அளவுல முக்கியத்துவம் குடுத்து, விளையாட்டு மைதானமெல்லாம் அமைக்குது. ஆனாலும் விளையாட்டுல ஆர்வம் இருந்து நல்லா விளையாடறவங்கள அரசாங்கமே பொறுப்பெடுத்து செலவு பண்ணிப் பயிற்சி கொடுத்து, போட்டிகள்ல பங்கேற்க வைக்கணும். சீனத் திருவிழாவுல விளையாட்டை சகஜமா அனைவராலும் விளையாடற மாதிரி இங்க சமூகப் பண்பாடா மாறணும். அனைவருக்கும் விளையாடப் பிடிச்சிருந்தா இயல்பா விளையாடறச் சூழல் இருக்கணும். நீ என்ன விளையாட்டு பிடிக்குதோ விளையாடு செல்லம். எப்படியாவது அரசாங்கத்துக்கிட்டயோ, உதவி செய்யவர்கள்கிட்டயோ கேட்டு பயிற்சி கொடுக்கறது, போட்டிகள்ல பங்கெடுக்கறதுன்னு தொடங்கிடுவோம். ஆனா, யார் என்ன சொன்னாலும் உன் தொடர் விடாமுயற்சியை மட்டும் கைவிட்றாதடா செல்லம்.

வாழ்க்கைல மென்மேலும் உயர வாழ்த்துகள். நான் வந்து உங்க வீட்ல பேசி பக்குவமா புரியவைக்கறேன். நீ கவலைப்படாம வீட்டுக்குப் போ“ என்றார் அத்தை.

எப்படியோ அத்தை, தன் வாழ்வில் விளக்கை ஏற்றி பிரகாசமடையச் செய்வார் என்ற நம்பிக்கையில் தூங்கப் போனாள் வீரம்மாள்.

படைப்பாளர்:

சாந்த சீலா

சாந்த சீலா கடந்த 17 ஆண்டுகளாக ஆசிரியராகப் பணிபுரிகிறார். கும்முடிப்பூண்டியை அடுத்த பூவலை கிராமத்தின் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ஆசிரியர். பேருந்து வசதி கூட சரியாக இல்லாத இந்த ஊரிலேயே தங்கி, பெரும்பாலும் ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த குழந்தைகளுக்கு கல்வியறிவு தருகிறார். இவரால் இந்தப் பள்ளியில் இடைநிற்றல் குறைந்திருக்கிறது. பள்ளி மேலாண்மைக் குழுவின் ஆசிரிய உறுப்பினராகவும் இருக்கிறார். கல்வியின் நோக்கமான படைப்பாற்றல் வெளிப்பட குழந்தை மையக் கல்வி அமைய வேண்டும் என்றும் விளிம்புநிலை குழந்தைகளும் மையநீரோட்டத்தில் இணைய வேண்டும் செயல்படும் அரசு பள்ளி ஆசிரியர். குழந்தைகளைக் கொண்டாடுவோம் கல்வி இயக்கம், குழந்தைநேயப் பள்ளிகள் கூட்டமைப்பு போன்ற அமைப்புகளில் செயலாற்றிக் கொண்டுவருகிறார்.