பொருள் 16 : அதிகாரம்

தொன்மக் கதைகளை ஊன்றி கவனமாக வாசிக்க வேண்டும் என்கிறார் போலந்து நாட்டைச் சேர்ந்த மானுடவியலாளர் புரோனிஸ்லா மாலினோஸ்கி. அசாதாரணமான, நம்ப முடியாத நிகழ்வுகளையும் கற்பனைகளையும் கொண்டிருந்தாலும் அவற்றை அக்கறையுடன் ஆராய வேண்டும்; ஒரு விஷயம் எப்படிச் சொல்லப்பட்டிருக்கிறது என்பதைவிட ஏன் சொல்லப்பட்டிருக்கிறது என்பதைக் கண்டுபிடிக்க வேண்டும் என்கிறார் அவர்.

கிரேக்க இதிகாசங்களை அவர் உதாரணத்துக்கு எடுத்துக்கொள்கிறார். இந்தக் கதைகளில் பெரும்பாலானாவை வெங்கல யுகத்தின் தொடக்கம் முதல் பொயுமு 500 வரையிலான காலகட்டத்தைச் சேர்ந்தவையாக இருக்கின்றன. இந்தக் காலகட்டத்தில் வெவ்வேறு அரசர்களால் கிரீஸ் ஆளப்பட்டு வந்தது. அதாவது, ஆண்கள் அதிகாரத்தில் இருந்த காலகட்டம் என்று இதனை அழைக்க முடியும். இந்தக் கதைகளை உள்வாங்கிக்கொண்டவர்கள் யார்? மேல்தட்டுப் பிரிவினர். அதாவது, பணம் படைத்த, சுதந்தரமான, கிரேக்க ஆண்கள். எனவே இயல்பாகவே இந்தக் கதைகள் அனைத்தும் ஆண் அதிகாரத்தை நிலைநாட்டும் வகையிலேயே அமைந்திருந்தன என்கிறார் மாலினோஸ்கி.

இதையே இன்னமும் நீட்டித்துச் சொல்ல வேண்டுமானால், ஆண்கள் தங்கள் செயல்களை நியாயப்படுத்திக்கொள்வதற்காகவே தொன்மக்கதைகளை உருவாக்கினார்கள் என்றும் சொல்ல முடியும். பெண்ணிய ஆய்வாளர் மெரிலின் பிரெஞ்சின் பார்வை இதுதான். ஏன் அதிகாரம் ஆண்களிடம் குவிந்துகிடக்கிறது என்னும் கேள்விக்கு ஆண்கள் விரும்பும் காரணங்களைத் தொன்மங்கள் அளிக்கின்றன. அந்தக் காரணங்கள் இரண்டு என்கிறார் மெரிலின் பிரெஞ்ச். முதலாவது காரணம், பாவம். ஆதியிலேயே பெண்களிடம் அதிகாரம் இருந்தது உண்மைதான். ஆனால், அது அவர்கள் கைவிட்டுப் போனதற்குக் காரணம் அவர்கள் இழைத்த பெரும் பாவங்கள் அல்லது குற்றங்கள். இரண்டாவது காரணம், பலவீனம். பெண்கள் இயல்பாகவே பலவீனமானவர்களாக இருப்பதால் அதிகாரத்தை இழுத்துப் பிடித்து வசப்படுத்தி வைத்திருக்கும் ஆற்றல் அவர்களிடம் இல்லை. எனவே, அவர்கள் தங்களிடமிருந்த அதிகாரத்தை நழுவ விட்டுவிட்டனர். வலிமைமிக்க ஆண்களிடம் அது வந்து சேர்ந்தது.

தொன்மக்கதைகளில் பல இந்தக் காரணங்களையே நேரடியாகவும் மறைமுகமாகவும் முன்னிறுத்துகின்றன. ஆணே அதிகாரத்துக்கு ஏற்ற உயிர் என்பதை அடிநாதமாகக் கொண்டு பின்னப்படும் தொன்மக்கதைகளை ‘சோஷியல் சார்ட்டர்’ தொன்மங்கள் என்று சமூகவியலாளர்கள் அழைக்கிறார்கள். இந்த வகை தொன்மங்களில் ஆண்கள் புகழ்ச்சிக்கு உரியவர்களாகவும் வீரம் மிக்கவர்களாகவும் பெண்களை ஆபத்திலிருந்து மீட்பவர்களாகவும் இருப்பார்கள். இந்த நாயகர்களின் அதிகாரம் ஒருபோதும் கேள்விக்கு உட்படுத்தப்படாது. அந்த அதிகாரத்தை மற்றவர்கள் இயல்பானதொன்றாகக் கருதி வணங்கி ஏற்றுக்கொள்வார்கள்.

ஒவ்வொரு சமூகமும் பல தொன்மக்கதைகளை உருவாக்கி காலம்காலமாக செழிப்புடன் வளர்த்து வைத்திருக்கிறது. எண்ணற்ற தலைமுறைகளைக் கடந்து உயிர்ப்புடன் இருக்கும் இவற்றை எளிய மக்கள் நிஜத்தில் நிகழ்ந்தவை என்றே கருதி ஏற்று வந்தனர். காலம் கடந்து நிற்பதாலேயே இந்தத் தொன்மங்கள் மதிக்கத்தக்கவையாகவும் புனிதமானவையாகவும் மாறிப் போயின. மிக நீண்ட காலத்துக்குப் பிறகே இவை விவாதத்துக்கும் ஆய்வுக்கும் உட்படுத்தப்பட்டன.

உதாரணத்துக்கு, பொயுமு 478ல் மறைந்த செனோஃபேன்ஸ் என்னும் கிரேக்கத் தத்துவஞானி, ‘நமக்குத் தெரிந்த கடவுள்கள் ஏன் அறம் சார்ந்த விழுமியங்களைக் கடைபிடிக்காமல் பிழையான போக்குகளைக் கையாள்கிறார்கள்?’ என்று கேள்வி எழுப்பினார். ‘கடவுள்கள் இப்படி இருப்பதால்தான் நம் சமூகமும் அறமிழந்து காணப்படுகிறதா?’ என்னும் துணைக் கேள்வியையும் அவர் எழுப்புகிறார். கடவுள்கள் நேர்மையானவர்களாக, எல்லா விதங்களிலும் முழுமையானவர்களாகவும் இருக்க வேண்டும் என்று சார்கரடீஸும் பிளேட்டோவும் விரும்பினர்.

மேலும் பலர் தொன்மங்களைக் கூர்மையாகக் கவனித்து அதிலுள்ள முரண்பாடுகளைச் சுட்டிக்காட்டி ஒரு புதிய உரையாடலைத் தொடங்கிவைத்தனர். இந்தக் கதைகளை அப்படியே ஏற்கக் கூடாது, அவற்றை விவாதத்துக்கு உட்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தவும் தொடங்கினர். ஆனால், இந்த விமரிசனங்களையெல்லாம் மீறி வலுவான ஒரு கலாசார சக்தியாகத் தொன்மங்கள் மக்கள் மத்தியில் நீடிக்கவே செய்தன. பொயு 4ம் நூற்றாண்டில் கிறிஸ்தவ மதம் நிறுவனமயப்படுத்தப்பட்டபோது தொன்மக் கதைகளை மேற்கத்திய உலகம் ஒதுக்கிவைத்ததோடு மட்டுமின்றி அவற்றைத் தடையும் செய்தன. ஐரோப்பாவில் மறுமலர்ச்சி காலகட்டம் தொடங்கியபோது மீண்டும் தொன்மங்கள்மீது வெளிச்சம் விழுந்தது. இலக்கியம், சிற்பம், ஓவியம் என்று வண்ணமயமான வடிவங்களில் பண்டைய தொன்மக்கதைகள் மீண்டும் பிறப்பெடுத்தன. மீண்டும் புதிய ஆய்வுகள் தொடங்கின.

‘சோஷியல் சார்ட்டர்’ முறையில் தொன்மக்கதைகளை ஆராயும் போக்கு முளைவிட்டது. நடைமுறையில் நிலவும் நம்பிக்கைகள், மதச் சம்பிரதாயங்கள், சடங்குகள் ஆகியவற்றைக் கொண்டு தொன்மங்களை ஆராயும் உத்தி இது. ஆண்களின் கையில் அதிகாரம் குவிந்தது எப்படி என்பதை புரோனிஸ்லா மாலினோஸ்கி இந்த முறையைக் கொண்டுதான் ஆராய்ந்துள்ளார்.

தொன்மக்கதைகள் உண்மைகளைச் சொல்வதில்லை; குறியீடுகளையே அளிக்கின்றன என்கிறார் மெரிலின் பிரெஞ்ச். அதிகாரம் ஏன் ஆண்களிடம் குவிந்திருக்கிறது என்று மட்டுமல்ல; ஆண்களிடம் வந்துசேர்வதற்கு முன்னால் பெண்களிடமே அதிகாரம் இருந்தது என்பதையும் தொன்மக்கதைகள் தெளிவாக உணர்த்துகின்றன என்கிறார் மெரிலின் பிரெஞ்ச். காலம் காலமாக அதிகாரம் எங்களிடம்தான் இருந்தது என்று அவர்களால் சொல்ல முடியவில்லை. காரணம் அது உண்மையல்ல. எனவே, பெண்களின் பலவீனங்களையும் பாவங்களையும் அவர்கள் சுட்டிக்காட்ட வேண்டியிருந்தது. பெண்களிடமிருந்து அதிகாரத்தைக் கைப்பற்றிக்கொண்டதற்கு நியாயம் கற்பிக்க வேண்டிய அவசியமும் அவர்களுக்கு ஏற்பட்டது. அந்த அவசியத்தில் இருந்தே தொன்மக்கதைகள் பிறப்பெடுக்கின்றன.

இந்தத் தொன்மக்கதைகள் முன்வைக்கும் ‘நீதி’தான், ஆண்கள் பலமானவர்கள், பெண்கள் பலவீனமானவர்கள் என்பது. சிங்கத் தலையும் மனித உடலும் கொண்ட ஓர் உருவம் தொன்மக்கதையொன்றில் தோன்றினால் அதை எந்த அளவுக்கு நம்புவோமோ அந்த அளவுக்குத்தான் இந்த ‘நீதியையும்’ நாம் நம்ப வேண்டும்.

பொருள் 17 : இயற்கை மீறல்

ஆலா ஓர் ஆப்பிரிக்கக் கடவுள். இறந்துபோன மூதாதையர்களை ஆலா தன் வயிற்றுக்குள் பத்திரப்படுத்திக்கொள்வார். புதிய உயிர்களையும் அவ்வப்போது அளிப்பார். ஆலா என்னும் பெயருக்கு இன்னோர் அர்த்தம், நிலம். பெண்ணை நிலத்துடன் ஒப்பிடும் வழக்கம் நீண்டகாலமாகவே இருந்துவருகிறது. நிலத்தைப் போலவே பெண்ணும் புதியனவற்றைப் படைப்பவள் என்று சமூகம் நம்பியது. ஒரு பெண்ணின் வயிறு திடீரென்று பெரிதாவதையும் அதிலிருந்து ஒரு குழந்தை உதயமாவதையும் அவர்கள் அதிசயம் என்றே நம்பினர். ஆண் குலத்தால் எவ்வளவு முயன்றும் ஓர் உயிரை இந்தப் பூமியில் கொண்டுவரவே முடியாது என்பதையும் அவர்கள் அனுபவபூர்வமாக உணர்ந்திருந்தனர்.

பெண் என்பவள் பலவிதமான மந்திரச் சக்திகளைக் கொண்ட அதிசய உயிரினம்; அவளால்தான் மனித குலம் தழைத்துக்கொண்டிருக்கிறது என்று ஆண்கள் திடமாக நம்பினர். அப்போது உருவாக்கப்பட்ட பல கல் சிலைகளில் பெருத்த வயிருடன்கூடிய பெண்கள் அதிகம் காணப்பட்டனர். இந்தச் சிலைகள் வழிபாட்டுக்குரியனவாகவும் இருந்தன என்று யூகிக்கலாம்.

ஒரு பெண்ணால் மட்டுமே புதிய உயிரை இந்த உலகில் கொண்டுவர முடியும் என்று சமூகம் நம்பியிருந்தவரை பெண் உயர்வான இடத்தைத்தான் வகித்துவந்தாள். எப்போது இந்த நம்பிக்கை அறுபட்டதோ அப்போதே பெண் வகித்துவந்த இடமும் தலைகீழாகிப் போனது என்கிறார் ரோசாலிண்ட் மைல்ஸ். ஒரு குழந்தை உருவாவதற்கு பெண் மட்டுமே காரணமல்ல, நானும் அவசியம் என்பதை ஓர் ஆண் உணர்ந்துகொண்டபோது எல்லாமே மாறிப்போனது. பெண் இனியும் அதிசயப் பொருளாகப் பார்க்கப்படவில்லை. அவளை வழிபட்டால் உலகம் செழிக்கும் என்னும் நம்பிக்கை தொலைய ஆரம்பித்தது. மேலானதோர் இடத்திலிருந்து மிகவும் கீழான ஒரு நிலைக்கு அவள் தள்ளப்பட்டாள். அவள் அதுகாறும் வகித்து வந்த இடத்தை ஆண் கைப்பற்றிக்கொண்டான்.

அட்லாண்டா

யூத மதம், கிறிஸ்தவம், இஸ்லாம், பௌத்தம் என்று அனைத்து பெரிய மதங்களிலும் ஆணே முதன்மையானவனாக இருப்பதை ரோசாலிண்ட் மைல்ஸ் சுட்டிக்காட்டுகிறார். கடவுள் முதலில் ஆணைப் படைக்கிறான். அவனே முக்கியம் என்று கருதுவதாலேயே கடவுள் அவனை முதலில் படைக்கிறார். பெண்ணை ஆணிடமிருந்து கடவுள் உருவாக்குகிறார். புதிதாகப் பிறந்த ஒரு குழந்தையைத் தாயிடமிருந்து பிரித்தெடுப்பதைப் போல் ஆணிடமிருந்து பெண்ணைப் பிரித்தெடுக்கிறார் கடவுள். இவ்வாறு செய்வதன்மூலம் பெண் என்பவள் ஓர் ஆணிடமிருந்தே உருவாகிறாள் என்பதைக் கடவுள் வலியுறுத்துகிறார். ஏவாள் இப்படித்தான் ஆதாமிடமிருந்து உருவாக்கப்பட்டாள். ஆனால், இது இயற்கைக்கு விரோதமானது என்கிறார் மைல்ஸ். ஆணும் பெண்ணும் இணைந்தால்தான் வாழ்க்கை என்னும் இயற்கை விதியைத் தலைகீழாக மாற்றியமைக்கின்றன மதங்கள். இது அதிகாரத்தை ஆணுக்கு மாற்றியமைக்கும் செயல்பாடு. கடவுள் அதற்குத் துணைக்கு அழைக்கப்படுகிறார்.

இதில் இன்னோர் இயற்கைமீறலும் ஒளிந்திருக்கிறது. தான் உருவாக்கிய ஆணுக்குக் கடவுளே உயிரை ஊட்டுகிறார். ஆணுக்கு மட்டுமல்ல, அனைத்து உயிர்களும் கடவுளால் படைக்கப்பட்டவை. தான் உருவாக்கிய அனைத்து உயிர்களுக்கும் மூச்சுக்காற்றை வழங்கியவர் கடவுள்தான் என்கின்றன மத நூல்கள். இந்தக் கடவுள் ஓர் ஆணாகவே எங்கும் காட்சியளிக்கிறார். இதுவும் இயற்கைக்கு விரோதமானதுதான் என்கிறார் மைல்ஸ். ஓர் ஆணால் பெண்ணின் துணையின்றி உயிரை உருவாக்க முடியாது; அந்த ஆண் ஒரு கடவுளாகவே இருந்தாலும். ஒரே ஓர் ஆண் கடவுள் என்பதற்குப் பதிலாக ஏன் ஓர் ஆண் கடவுளும் பெண் கடவுளும் இருந்திருக்கக் கூடாது? இந்த இரு கடவுள்களும் சமமான சக்தியைப் பெற்றவர்களாக ஏன் திகழக் கூடாது?

ஏனென்றால் தொன்மக்கதைகளைப் போலவே மதங்களையும் ஆண்களே உருவாக்கியிருக்கிறார்கள். அதனால் ஆண்களே கடவுளாக இருக்கிறார்கள். ஆண்களாக இல்லாதவர்கள் கடவுளாக இல்லாதவர்கள். அல்லது, கடவுளின் அருள் கிட்டாதவர்கள் என்றாகிவிடுகிறது.

ஆனால், பண்டைய சமூகத்தில் பெண்கள் கடவுளாக இருந்ததோடு கடவுளுக்கு ஊழியம் செய்பவர்களாகவும் இருந்திருக்கிறார்கள். எரித்தா புகழ்பெற்ற ஒரு கிரேக்க பெண் பூசாரி. போட்னியா என்னும் பெண் கடவுளின் பிரதான பூசாரிகளில் ஒருவராக இருந்தவர் இந்த எரித்தா. பொயுமு 13ம் நூற்றாண்டைச் சேர்ந்த எரித்தாவுக்கு அவர் வாழ்ந்த சமூகம் சிறந்த மரியாதையை வழங்கியதோடு அவரைக் கடவுளுக்கு இணையாக வைத்து ஆராதிக்கவும் செய்தது. எரித்தாவிடம் நிலமும் செல்வமும் குவிந்திருந்ததோடு, போட்னியாவின் வழிபாட்டு இடத்தையும் அவரே நிர்வாகம் செய்துவந்தார்.

அவர்மீது பொறாமை கொண்ட அரசு அதிகாரிகள் ஒருமுறை எரித்தாவை அணுகி மேற்கொள்ள ஆரம்பித்தனர். உன்னிடமுள்ள நிலத்துக்கும் நீ நிர்வகிக்கும் கோயிலுக்கும் வரி செலுத்த வேண்டும் என்று அவர்கள் கேட்டுக்கொண்டார்கள். உடனே, எரித்தாவுக்குக் கோபம் பொத்துக்கொண்டு வந்துவிட்டது. கடவுளின் தலைமை பூசாரியான என்னிடமே வரி கேட்கிறாயா என்று பொங்கி எழுந்தார் எரித்தா. தனிப்பட்ட நிலங்களுக்கும் செல்வத்துக்கும்தான் வரி விதிக்க வேண்டும், கோயில்களுக்கு வரி விதிக்கக்கூடாது என்று கட்டளையிட்டார் எரித்தா. ஒரு பெண்ணாக அல்ல, நான் வழிபடும் போட்னியா கடவுளின் சார்பாக நான் இந்தக் கட்டளையைப் பிறப்பிக்கிறேன் என்றார் எரித்தா. அரசு அதிகாரிகள் அஞ்சி பின்வாங்கினர். அத்துடன் எரித்தா கேட்டுக்கொண்டதற்கிணங்க ஓர் அரசாணையும் உடனடியாக வெளியிடப்பட்டது.

பிளான்சியா மாக்னா

புகழ்பெற்ற பண்டைய கிரேக்க கடவுளான டையோனிசிஸை வழிபட தொடக்கத்தில் பல பெண் பூசாரிகள் நியமிக்கப்பட்டிருந்தனர். ஆண் பூசாரிகளும் இருந்தனர் என்றாலும் தலைமையிடத்தில் பெண்களே இருந்தனர். அவர்களுடைய வழிகாட்டுதலின்படிதான் மற்ற பூசாரிகளும் மக்களும் நடந்துகொள்ள வேண்டும். பெண் பூசாரிகளே வழிபாட்டுக்கான அத்தனை சடங்குகளையும் மேற்கொள்வது வழக்கம். லல்லா என்னும் பண்டைய ரோமானிய பெண் பூசாரி ராஜ மரியாதையுடன் கோயில் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்திருக்கிறார். தன் கணவனுடன் இணைந்து ஒரு பெரிய மக்கள் அரங்கத்தைக் கட்டிமுடித்து பேரும் புகழும் பெற்றார்.

முதல் மற்றும் இரண்டாம் நூற்றாண்டின் மத்தியில் வாழ்ந்த பிளான்சியா மாக்னா என்னும் மற்றொரு ரோமானியப் பெண் பூசாரி ஊர் மக்களின் நன்மதிப்பைப் பெற்றிருந்தார். அவருடைய தாயாரும் பூசாரியாக இருந்தவர்தான். அழகும் செல்வமும் கொண்டிருந்த மாக்னா, தன்னுடைய சேகரிப்பு அனைத்தையும் மக்களுக்காக வழங்கினார். தன்னுடைய ஊரை அழகுபடுத்துவதிலும் மக்களுக்குத் தேவையான கட்டுமானஙங்களை உருவாக்குவதிலும் அக்கறை செலுத்தினார். அரசுக் குடும்பத்தினரின் உருவச்சிலைகளை நகரத்தில் ஆங்காங்கே நியமித்ததோடு ஊர் எல்லையில் ஒரு பெரிய தடுப்புக் கதவையும் அமைத்து மக்களைப் பாதுகாத்தார். மாக்னா மரணமடைந்தபோது அவருடல் மரியாதையுடன் கொண்டுசெல்லப்பட்டு அவருக்கான நினைவிடத்தில் புதைக்கப்பட்டது.

கடவுளைப் பறித்துக்கொண்டதைப் போலவே பின்னர் பூசாரிகளையும் ஆண்கள் பெண்களிடமிருந்து தட்டிப் பறித்துக்கொண்டனர். சாமானிய மக்களைக் கடவுளிடம் கொண்டுசெல்லும் வாகனமாகக் கருதப்பட்ட பூசாரிகளுக்குச் சமூகத்தில் நல்ல மதிப்பும் உயர்வான சமூக அங்கீகாரமும் இருந்ததால் நிகழ்ந்த மாற்றம் இது. இதுவும் ஒருவித இயற்கை மீறல்தான்.

இந்த இயற்கை மீறலைத் தொன்மக்கதைகளே நமக்கு உணர்த்துகின்றன. ஒரு மனிதனின் ஆன்மாவை அறிந்துகொள்ள தொன்மக்கதைகள் உதவுகின்றன என்கிறார் உளவியல் ஆய்வாளர் கார்ல் யுங். இந்தக் கதைகளை மனிதர்கள் விரும்புவதற்குக் காரணம் அதிலுள்ள சுவாரஸ்யம் மட்டுல்ல, அவற்றில் ஒளிந்துகிடக்கும் உண்மைகளும்தான் என்கிறார் இவர். இந்த உண்மைகள் வழிவழியாக மீண்டும் மீண்டும் அறிவுறுத்தப்பட்டு நமக்குள் இறக்கிவிடப்படுகின்றன.

நம்மால் நேரடியாக விவரிக்க முடியாததைத்தான் தொன்மங்கள் மூலம் விளக்கிக்கொண்டிருக்கிறோம் என்கிறார் கார்ல் யுங். எல்லைகள் கடந்து, தேசம் கடந்து, மொழி, கலாசாரம் கடந்து நம்மை வந்தடைந்துள்ள இந்தத் தொன்மக்கதைகளில் பெரும்பாலானவை ஒன்றுபோல் இருப்பதற்குக் காரணம் ஆதி மனிதர்கள் கண்டடைந்த உண்மைகள் ஒன்றே என்பதுதான். அவை ஆண்களால் கண்டறியப்பட்டவை என்பதால் ஆண்களை உயர்த்திப் பிடித்துக்கொண்டு நிற்கின்றன.

இயற்கையை மீறும் இந்தக் கதைகளை நாம் சரியாக உள்வாங்கிக்கொள்ள வேண்டுமானால் அவற்றை நாம் தலைகீழாகத் திருப்பிப்போட வேண்டும். ஆனால், அது அத்தனை சுலபமல்ல. யாரிடம் அதிகாரம் குவிந்திருக்கிறதோ அவர்களே அனைத்தையும் உருவாக்குகிறார்கள் என்பதால் ஆண்களிடமிருந்து இந்த அதிகாரத்தைப் பெண்கள் கைப்பற்ற வேண்டியது அவசியமாகிறது. அது நிகழும்போது இயல்பாகவே கதைகளும் அவற்றின் நீதியும் தலைகீழாகத் திரும்பிவிடும். ஆணல்ல, பெண்ணே உன்னதமான உயிர் என்றல்ல; இரண்டுமே சமமான உயிர் என்று. இதுவே இயற்கையின் விதியும்கூட.

(தொடரும்)

படைப்பாளர்:

மருதன்

எழுத்தாளர், வரலாற்றாளர். சே, ஹிட்லர், ஃபிடல் காஸ்ட்ரோ, திப்பு சுல்தான், மண்டேலா, மாவோ, ஸ்டாலின் ஆகிய உலகத் தலைவர்களின் வாழ்க்கை வரலாறுகளை எழுதியுள்ளார். இவரது ஹிட்லரின் வதைமுகாம்கள், முதல் உலகப் போர், இரண்டாம் உலகப்போர், ஷெர்லக் ஹோம்சால் தீர்க்க முடியாத புதிர், துப்பாக்கி மொழி, திபெத்- அசுரப் பிடியில் அழகுக்கொடி, ஒரு புத்திரனால் கொல்லப்படுவேன் ஆகிய நூல்கள் கவனம் ஈர்த்தவை. பிரபல தமிழ் இதழ்களில் தொடர்கள் எழுதிவருகிறார். இந்து தமிழ் திசை மாயா பஜார் குழந்தைகள் இணைப்பிதழுக்கும் கட்டுரைத் தொடர் எழுதி வருகிறார்.