அலங்காரப் பொருள்கள்

ஆடை என வந்துவிட்டால் கூடவே வருவது அலங்காரப் பொருள்கள். முகத்திற்கான அலங்காரப் பொருள் என எடுத்துக் கொண்டால், பௌடரும் பொட்டும் தான் சராசரியாக அனைவரும் பயன்படுத்திய பொருட்கள். வெகு சிலர் மட்டும் கண்மை பயன்படுத்துவார்கள்.

வகுப்பில் பெரும்பாலானோர் கம்மல் மட்டுமாவது தங்கத்தில் போட்டிருப்பார்கள். மிகச் சிலர் மட்டும் தங்கச் சங்கிலி போட்டிருப்பார்கள். மற்றபடி பெரும்பாலும் பாசி தான். ஆடையின் நிறத்திற்கு இணையான நிறத்தில் பாசி போட்டுக்கொள்வார்கள். பெரும்பாலானோர் வெள்ளிக் கொலுசு போட்டிருப்பார்கள்.

பள்ளிச் சீருடை என்றாலே இரட்டைச் சடை ரிப்பன் வைத்து மடித்து கட்ட வேண்டும். அதனால், பள்ளிப் படிப்பு வரை பெரும்பாலும் இரட்டைச் சடை தான். அதன் பிறகு பெரும்பாலும் ஒற்றைச் சடை தான். பின்னி சடை மாட்டி ஏதாவது முடியின் கீழ்ப்பகுதியில் இருந்து மேலாக வைப்பார்கள். கிளிப்புகளைவிட இரண்டு குண்டு பாசி வைத்த எலாஸ்டிக் தான் விலை குறைவு. அதனால் அதுவே பிரபலம். பொதுவாக ஆடையின் நிறத்திற்கு இணையான நிறத்தில் வைப்பார்கள்.


நடிகை அம்பிகா மாதிரி, முன் நெற்றியில் உச்சியின் (வகிடு) இருபுறமும் முடியை சிறிது கீழ்நோக்கி இழுத்து சிலர் ஹேர்பின் வைப்பார்கள். சுருள் முடி இருந்தவர்கள் முடி பறக்காமல் இருக்க ஹேர்பினை ஆங்காங்கே குத்திக்கொள்வார்கள். மற்றபடி ஹேர்பின் என்பதே பூ வைப்பதற்கு மட்டுமே என இருந்தது.

இந்தக் காலக்கட்டத்தில் தான் நதியா என ஒருவர் வந்தார். முடியை வாரிச் சுருட்டி அள்ளி சற்று மேல் நோக்கியவாறு போடும் கொண்டைக்கு ‘நதியா கொண்டை’ என அப்போது பெயர். உச்சி (வகிடு) எடுக்காமல் போடும் குதிரை வால் ஜடைக்கு ‘நதியா ஹேர் ஸ்டைல்’ எனப் பெயர்.

நதியா வளையல், ரிப்பன், பொட்டு, சேலை, நதியா ஹேர்கிளிப், நதியா சைக்கிள், நதியா வளையல் என்று பலப் பொருள்கள் நதியா பெயரில் வெளிவந்தன.


நகரத்துப் பெண்கள் பாவாடை தாவணியில் இருந்து சுடிதாருக்கு மாறிக்கொண்டிருந்த அந்தக் காலக்கட்டத்தில், அவரது ‘பூவே பூச்சூடவா’ மஞ்சள் நிற சுடிதார் மிகவும் பிரபலம்.

அதுவரை கிராமத்தில் பெண்களுக்கான சைக்கிளை வயதான ஆண்கள், காலைத் தூக்கி போட்டு ஏறுவதற்கு எளிதாக இருக்கும் என வாங்கினார்கள். வீட்டில் சைக்கிள் ஓட்டும் பெண்கள்கூட ஆண் குடும்ப உறுப்பினர்கள் பயன்படுத்திய ஆண்களுக்கான சைக்கிளைத்தான் பயன்படுத்தினார்கள். நதியா சைக்கிள் பிரபலமான பின் தான் லேடிஸ் சைக்கிள் பிரபலமானது. ஊரில் ஏற்பட்ட பொருளாதார வளர்ச்சியும் ஒரு காரணமாக இருக்கலாம்.

ஆனாலும், புகழின் உச்சத்தில் இருக்கும் போதே 1988ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டு திரையுலகைவிட்டு வெளியேறினார் என்றாலும் அவர் ஏற்படுத்திய தாக்கம் பல காலம் இருந்தது என்பதே உண்மை.

தங்க நகைகள்

‘தங்க நகை செய்பவர் என அடகு நகை படத்தைப் போட்டு வச்சு இருக்கீங்க’ என்ற விமர்சனத்துடன் இப்படி ஒரு படத்தை ஒரு பதிவில் பார்த்தேன். அதனால் நகை செய்பவர் குறித்தும் சிறிது சொல்ல நினைக்கிறேன்.

தூய்மையான / கலப்படமில்லாத தங்கம் 24 கேரட் எனப்படுகிறது. அது மிகவும் மிருதுவாக எளிதில் வளையும் தன்மை கொண்டு இருப்பதால் அதில் ஆபரணங்கள் செய்ய முடியாது. அதனால் அதனுடன் செம்பு, வெள்ளி, தாமிரம், நிக்கல், துத்தநாகம் என ஏதாவது ஓர் உலோகம் கலந்து ஆபரணங்கள் செய்வார்கள். கலவையின் அளவுகூடக் கூட கேரட்டின் அளவு குறையும்.

பழங்காலத்தில் பத்துப் பங்கு தங்கத்துக்கு அரை பங்கு என்ற விகிதத்தில் மற்ற உலோகங்கள் (செப்பு, வெள்ளி போன்றவை) கலந்து மாற்றப்பட்டத் தங்கம் பத்தரைமாற்றுத் தங்கம் என அழைக்கப்பட்டது. இந்த விகிதத்தில் தயாரிக்கப்பட்ட தங்கம் தற்காலத்திய 22 கேரட் தங்கத்திற்கு சற்றேறக்குறைய நிகரானது.

1962 இல் இந்திய நிதியமைச்சராக இருந்த மொரார்ஜி தேசாய் தங்கக் கட்டுப்பாட்டுச் சட்டம் கொண்டுவந்தார். 1963இல் 14 காரட்டுக்கு மேல் உள்ள தங்க நகைகள் உற்பத்தி தடை செய்யப்பட்டது. அது மொரார்ஜி தங்கம் என்றே வழங்கப்பட்டது. மொரார்ஜி தேசாய், ‘நிஷான்-இ-பாகிஸ்தான்’ என்னும் பாகிஸ்தானின் உயரிய விருதைப் (the Nishan-e-Pakistan on 19 May 1990) பெற்ற ஒரே இந்தியர் என்பது கூடுதல் தகவல்.

24 கேரட் தங்கக் கட்டியை நெல்லின் உமி/தேங்காய் சிரட்டை போட்டு எரிக்கும் உலையில் உருக்கி, அதை மெல்லிய கம்பியாகவோ தகடாகவோ செய்து, அவற்றைச் சிறுசிறு துண்டுகளாக வெட்டி ஆபரணங்கள் செய்வார்கள். அவ்வாறு வேலை செய்யும் தொழிலகத்தைப் பட்டறை என்பார்கள். இப்போது எல்லாம் இயந்திர மயமாகிவிட்டன. ஆனாலும் ஆங்காங்கே பட்டறைகள் இருந்துகொண்டுதான் இருக்கின்றன. முன்பெல்லாம் முழுத் தேங்காய் வாங்கும் வழக்கம் பெருமளவில் இல்லை. கடைகளில் தேங்காய் உடைத்து, கீறித் துண்டு துண்டாக (தேங்காய் பத்தை) விற்பார்கள். அதனால் கடைகளில் சிரட்டை நிறைய இருக்கும். அவற்றைத் தங்க வேலை செய்பவர்கள் வாங்கிச் செல்வார்கள். எனக்குத் தெரிந்து ஒரு சிரட்டை 5 காசு வரை இருந்தது.

தங்கத் துண்டுகளை இணைக்கும் போது, பற்ற வைப்புப் பொருள் தேவை. அதனால் பெரியவர்கள் முடிந்த வரை குறைவாகப் பற்ற வைக்க வேண்டிய மாதிரியான நகைகளைச் செய்வார்கள்.

தங்கம் உருகுநிலையில் இருந்து நகைகளாக மாறும் போது சிறிது இழப்பு ஏற்படும். அதுவே சேதாரம்.

தங்கத்தை முதலீடாக வாங்க வேண்டுமா, ஆபரணமாக வாங்க வேண்டுமா என்பது அவரவர் பொருளாதாரச் சூழ்நிலை சார்ந்தது. ஆபரணத்தை வாங்கச் சென்றால் செய்கூலி, சேதாரம், கல் என கணிசமான தொகை வாங்குவார்கள். அதே ஆபரணத்தை விற்கச் சென்றால் அதையே மதிப்பிழக்கக்கூடிய காரணி எனச் சொல்லி கணிசமான தொகையைக் குறைப்பார்கள். ஆனால், கையில் தங்க நகை இருந்தால், உடனடி தேவைக்கு அடகு வைத்துக்கொள்ளலாம். அதனால் வாங்குவது என்பது அவரவர் பொருளாதாரச் சூழ்நிலை சார்ந்தது.

இனி தங்க நகைகளுக்கு வருவோம். அந்தக் காலத்தில் எல்லாம் தங்கம் விலை குறைவு, அப்போதே என் அப்பா/ தாத்தா தங்கம் வாங்கி வைத்திருக்கலாம் எனச் சிலர் சொல்வார்கள். விலை குறைவு என்பது எந்த அளவு உண்மையோ அதே அளவிற்கு வாங்கும் திறமையும் குறைவு. ஒரு நெக்லஸ், டாலர் செயின், கைக்கு ஒன்று அல்லது இரண்டு காப்பு, ஒன்று அல்லது இரண்டு ஜோடி கம்மல் இது தான் நடுத்தர வீடுகளில் பெண்ணுக்குப் போடும் நகை. வசதியான வீடுகளில்கூட ஒரு செயின் போடுவார்கள். அது இரண்டு கொத்தாகவோ மூன்று கொத்தாகவோ மிகச்சில வீடுகளில் ஐந்து கொத்தாகவோ இருக்கும். இப்போதெல்லாம் பார்த்தால் நமக்கே பிரமிப்பாகத் தான் இருக்கிறது. ஒரு கிலோ தங்கம் என்பதெல்லாம் பெரிதாக இல்லை என்னும் அளவிற்குத் தங்கம் போடுகிறார்கள். திருட்டுப் பயத்தினால் போட்டு நடமாடவும் முடிவதில்லை. வீட்டில் வைத்துக்கொள்ளவும் முடிவதில்லை. பல வீடுகளின் நகைகள் வங்கியில் தூங்குகின்றன.

சங்கம் மற்றும் சங்கம் மருவிய காலத்தில் எழுதப்பட்ட நமது ஐம்பெரும் காப்பியங்களின் பெயர்கள் எல்லாம் ஆபரணங்களின் பெயர்களாகவே உள்ளன.

சிலப்பதிகாரம் – கண்ணகியின் கால் சிலம்பு கதை.
மணிமேகலை – இடுப்பில் அணியும் ஒட்டியாணம் அணிந்த பெண்ணின் வரலாறு.
குண்டலகேசி – குண்டலம் என்பது காதணி. குண்டலகேசி என்ற பெண்ணின் கதை.
வளையாபதி – வளையல் அணிந்த பெண்ணான வளையாபதியின்கதை.
சீவகசிந்தாமணி – சிந்தாமணி என்பது அரசன் முடியில் பதிக்கப்படும் கல். சீவகனை மணிமுடியாக்கி எழுதப்பட்ட வரலாறு. ஐம்பெருங்காப்பியங்களில் இது தவிர அனைத்துமே பெண்களை வைத்து எழுதப்பட்ட காப்பியங்கள்.

தங்க ஆபரணங்களை நகை நட்டு என இயல்பாகச் சொல்வார்கள். நகையில் உள்ள திருகு அமைப்பு நட்டு எனப்படுகிறது.

தலைக்கான நகைகள் தங்கத்தில் செய்யப்பட்டனவா அல்லது நடனக் கலைஞர்கள் மட்டுமே பயன்படுத்தினரா என எனக்குத் தெரியவில்லை. என் அம்மா பரயத்து எனச் சொல்லப்பட்ட முன்னந் தலையில், இருபுறமும் வைக்கக்கூடிய தங்க அணிகலன் வைத்திருந்தார்கள். பார்ப்பதற்கு இப்போதைய brooch மாதிரி பின் பக்கம் ஹூக் வைத்து அது இருந்ததாக நினைவு.

(தொடரும்)

படைப்பாளர்:

பாரதி திலகர்

தீவிர வாசிப்பாளர், பயணக் காதலர்; தொன்மை மேல் பெரும் ஆர்வம் கொண்டவர். அயல்நாட்டில் வசித்து வந்தாலும் மண்ணின் வாசம் மறவாமல் கட்டுரைகள் எழுதிவருகிறார்.