இன்று நாம் பார்க்கப் போகும் விஷயம் பெண்கள் டாட்டூ குத்துவது குறித்த சமுதாயத்தின் பொதுப்புத்தி. இன்று இருக்கும் பிரச்னைகளில் இதெல்லாம் ஒரு பிரச்னையா என்று கொந்தளிக்காதீர்கள். பெண்கள் சுய விருப்பத்தின் பேரில் செய்துகொள்ள முடியாத எல்லாமே விவாதத்திற்கு உரியதுதான்.

 தன் உடல் தன் உரிமை என்று இன்று எத்தனை பேர் சத்தமாகச் சொல்ல முடிகிறது? அதனால் பெண்ணுக்கு உரிமையில்லாததாகச் சொல்லப்படும் எல்லாமே பேசுப் பொருள்கள் தாம். இது டாட்டூ போடுவதை ஆதரிக்கும் கட்டுரை இல்லை. டாட்டூ போட்ட பெண்களைக் குறித்தான எதிர்மறைக் கண்ணோட்டத்தைச் சுட்டிக் காட்டவே.  

சமீபத்தில் ஒருவருடன் பேச நேர்ந்தது. விவாகரத்து செய்துகொண்டு இன்னொரு திருமணத்திற்குப் பெண் தேடிவருகிறார். வாழ்க்கைத் துணையாக அல்ல. அவருடைய குழந்தையை வளர்ப்பதற்கும் வீட்டு வேலைகளைச் செய்வதற்கும் தான்.  அவர் சாதிய மேட்ரிமோனியலில் பதிந்து வைத்திருக்கிறார். அதிலிருந்து சில பெண்கள் (விவாகரத்து ஆனவர்கள், துணையை இழந்தவர்கள்) அவருடன் பேசியிருக்கிறார்கள் என்று சிலரின் படங்களையும் காட்டினார். 

 ஒரு பெண் கையில் சிறிய அளவிலான டாட்டூ குத்தியிருந்தார். இவர் அதைக் காரணம் சொல்லி அவரை நிராகரித்தாராம். இன்னொரு பெண் புஜத்தில் அழகான மயில் ஒன்றைக் குத்தியிருந்தார். அதைக் காட்டியவர், “இப்படிப் பச்சை குத்தியிருந்தா, இந்தப் பொண்ணுக்கெல்லாம் எப்படி டைவர்ஸ் ஆகாம இருக்கும்?” என்றார். அவர் விவாகரத்து செய்த முன்னாள் மனைவி டாட்டூ எதுவும் குத்தியிருக்கவில்லை. டாட்டூ போட்ட பெண்களைப் பற்றிய அவரது கருத்து அதிர்ச்சியடைய வைத்தது. அவர் கருத்து தவறு என்று வாதாடினேன். ஆனால், அவரோ கண்ணைக் கட்டிய குதிரையாக ஒரே திசையில் பார்த்துக்கொண்டிருந்தார். தனது கருத்தில் அசைக்க முடியாத நம்பிக்கை வேறு வைத்திருந்தார்.

 பச்சை குத்திய பெண்களின் மீதான அவருடைய கோணல் பார்வை இந்தச் சமுதாயம் அவர்களைப் பார்க்கும் பார்வைதான். டாட்டூ போடுவது கலாச்சாரம், பண்பாட்டிற்கு எதிரானது என்று பொங்கும் கலாச்சார காவலர்கள் இன்று அதிகம் இருக்கிறார்கள்.               

திரைப்படங்களில்கூட கதாநாயகி குனிந்த தலை  நிமிராமல் குடும்பப்பாங்காக இருப்பாள். வில்லி முதுகில், மார்பில், தொடையில், கையில் டாட்டூ போட்டு வருவாள். இதன்மூலம் டாட்டூ குத்திய பெண்கள் நல்லவர்கள் அல்ல என்ற ஒரு பிம்பத்தைத் திரைப்படத்துறை கட்டமைத்திருக்கிறது. பழைய படங்களில் அலங்காரம் செய்துகொள்ளும் பெண்ணைத் திமிர் பிடித்தவளாகக் காட்டுவார்கள். அதுபோலவே இப்போது டாட்டூ போட்ட பெண்ணை மோசமானவளாகச் சித்தரிக்கிறார்கள்.            

டாட்டூ ஒன்றும் தமிழ் கூறும் நல்லுலகத்திற்குப் புதிதில்லை. ஐம்பது வருடங்களுக்கு முன்புகூட நம் அம்மாச்சிகளும் அப்பத்தாக்களும் உடலில் குத்தியிருந்தது தான். மான், மயில், கிளி, தேர், தேள், மரம், சூரியன், சந்திரன், நட்சத்திரம், மீன், விலங்குகள், தெய்வங்கள் போன்ற உருவங்களை அவர்கள் தங்கள் உடலில் குத்தியிருந்தார்கள். அவற்றின் நவீன வடிவமே டாட்டூ. டாட்டூ எனப்படும் வார்த்தை பாலிநேசிய வார்த்தையான tatauவில் இருந்து வந்தது.

 இப்படி டாட்டூ போடுவது இன்று நேற்றல்ல, பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பிருந்தே உடலில் ஓவியம் வரையும் வழக்கம் இருந்து வந்திருக்கிறது. இந்தியா, சீனா, எகிப்து, ரோமானியர், கிரேக்கர் என்று பல நாடுகளிலும் பலவிதமான நாகரீகங்களிலும் அந்தந்த மக்களின் பண்பாட்டையும், சமுதாய அந்தஸ்தையும் குறிக்கும் வகையில் பச்சை குத்துதல் ஒரு சடங்காகவே இருந்தது.                

நம் நாட்டில் போர்களிலும்  போட்டிகளிலும் வெற்றியடைந்ததைக் குறிப்பிடும் வகையில் ஆண்கள் மார்பிலும் தோள்பட்டையிலும் பச்சைக் குத்திக்கொண்டனர். பெண்கள் பச்சை குத்துவதற்கு வேறு காரணங்கள் இருந்தன. மூக்குத்தி, வளையல் ஆகிய பொன் நகைகளுக்குப் பதிலாக, அவற்றைப் போலவே பச்சைக் குத்திக் கொள்வதும் திருமணமானதைக் குறிக்கவும் கிராமப்புறங்களில் கணவனின் பெயரைச் சொல்லாத வழக்கமிருந்த காலத்தில் கைகளில் கணவன் பெயரைப் பச்சை குத்திக்கொள்வது எனக் காலங்காலமாக நாடெங்கும் பச்சை குத்துதல் பயன்பாட்டில் இருந்திருக்கிறது.                  

ஆண்களிடையே வீரம், வெற்றி மட்டுமன்றி, சமூக ரீதியாகத் தங்கள் குலம், குழு, இனம், கடவுள் குறித்த அடையாளங்களாகப் பச்சை குத்தும் பழக்கம் இருந்திருக்கிறது. பல்வேறு நாடுகளில் சிறை தண்டனை பெற்றவர்களுக்கும் மருத்துவச் சிகிச்சைப் பெற்றவர்கள் அது குறித்த தகவல் அழிக்க முடியாதபடி இருக்க வேண்டும் என்பதற்காகவும் பச்சை குத்தப்பட்டதாகக் குறிப்புகள் சொல்கின்றன. எகிப்து நாட்டில் பச்சை குத்துதல் என்பது வைத்திய முறையாகப் பயன்படுகிறது. இத்தாலியின் ஆல்ப்ஸ் மலைத்தொடரில் கண்டுபிடிக்கப்பட்ட 5000 ஆண்டு பழமையான பனிமனிதனின் உடல் முழுவதும் டாட்டூகள் இருந்தன.                  

நம் உடலின் தோல் பல அடுக்குகளால் ஆனது. இதில் வெளியே தெரியும் பகுதியை எபிடெர்மிஸ் என்கிறோம். அதற்குக் கீழே உள்ள டெர்மிஸ் என்ற உள்பகுதியில் தான் வியர்வை நாளங்கள், எண்ணெய்ச் சுரப்பிகள், முடியின் வேர்க்கால்கள், தொடு உணர்வுக்கான நரம்புகள், ரத்த நாளங்கள், செல்கள் என அனைத்தும் காணப்படுகின்றன. எபிடெர்மிஸ் என்ற வெளிப்புறத் தோலின் செல்கள் இறந்து, உரிந்து, தம்மைத்தாமே புதுப்பித்துக்கொள்ளும்.  எனவே இந்த டாட்டூகள் நிரந்தரமாக இருப்பதற்காக, எபிடெர்மிஸ் பகுதிக்குக் கீழே, கொஞ்சம் ஆழமாக இருக்கும் டெர்மிஸ் பகுதிக்குள் சிறு ஊசிகளின் மூலமாக வண்ண நிற மையைச் செலுத்தும் முறையைத்தான் பச்சை குத்துதல் என்கிறோம்.                

மனித எலும்புகள், பறவையின் எலும்புகளால் செய்யப்பட்ட ஊசிகள் ஆகியவற்றைக் கொண்டு அந்தக் காலத்தில் டாட்டூகள் வரையப்பட்டன. கடந்த 2016ஆம் ஆண்டில் சாலமன் தீவுகளில் நடைபெற்ற ஆராய்ச்சியின்போது 3000 ஆண்டு பழைமையான டாட்டூ ஊசி ஒன்று கிடைத்துள்ளது. அது எரிமலைக் குழம்புகளால் ஆன பாறைகளிலிருந்து தயாரிக்கப்பட்டது. அமெரிக்காவின் டென்னீசே மாகணத்திலும் மனித எலும்பால் ஆன டாட்டூ ஊசி ஒன்று சென்ற ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது.              

பச்சை குத்துதலை ஓர் அக்குபஞ்சர் சிகிச்சை முறையாக நம் முன்னோர் செய்துவந்துள்ளனர். பச்சை குத்தியவர்களுக்கு நோய் ஏற்படாது என்பது நம்பிக்கை. கால் பாதத்தில் நீர் கோத்தால் நீர்ப்பச்சை குத்துவது இன்றளவும் நடைமுறையில் உள்ளது.                

இத்தகைய பழமையான ஒரு கலையைத் தன்னுடலில் வரைந்துகொள்ளும் ஓர் ஆண் கம்பீரமானவனாகப் பார்க்கப்படுகிறான். ஆனால், ஒரு பெண் இதைச் செய்தால் அவளை மோசமானவளாகத்தான் ஆண்களும் அவர்களுக்கு அடிபணிந்து இருக்கும் பெண்களும் பார்க்கிறார்கள். டாட்டூ போட்டுக்கொள்வது இளைய சமுதாயத்திற்குத் தன்னம்பிக்கையின் வெளிப்பாடாகத் தெரிகிறது. தனது சூழலில் இருந்து தனித்து நிற்கவும் பிறரது கவனத்தை ஈர்க்கவும் தனித்துவமாக ஒருவர் தெரிவதற்கும் இந்தக் கலை உதவுகிறது. மலைவாழ் மக்களில் இரு பாலினரும் பச்சை குத்திக்கொள்கிறார்கள்.            

இந்தச் சமூகம் கட்டமைத்த எல்லைக்குள் ஒருவர் அடங்கவில்லை என்றால் அவர்கள் குறித்த சமூகக் கண்ணோட்டமும் விதவிதமாக மாறுபடுகிறது. நமக்கு உகந்ததாக நடக்காத, நாம் நினைத்தது போல இருக்காதவர்களைத் தான் நாம் அதிகம் ஆராய்கிறோம். டாட்டூ போடுவது மூலமாக நோய்த்தொற்று, ஒவ்வாமை போன்றவை ஏற்படலாம் என்று சொல்கிறார்கள். எந்த ஒரு விஷயத்தையும் தனக்குத் தேவையா இல்லையா என்று ஆராய்ந்து தெரிவு செய்யும் உரிமை பெண்களுக்கும் உண்டு. அதன்படி தனக்கு டாட்டூ வேண்டுமா, வேண்டாமா என்பதையும் அந்தப் பெண்ணின் முடிவுக்கே விட்டுவிடுங்களேன்.

(தொடரும்)

படைப்பாளர்:

கனலி என்ற சுப்பு

‘தேஜஸ்’ என்ற பெயரில் பிரதிலிபி தளத்தில் கதைகள் எழுதி வருகிறார். சர்ச்சைக்குரிய கருத்துகளை எழுதவே கனலி என்ற புனைபெயரில் எழுதத் தொடங்கியிருக்கிறார்.