“அப்பா, ஸ்கூலுக்கு லேட்டாயிருச்சு, என்னைக் கொண்டு போய்விடறீங்களா? ”

“இன்னைக்குச் சீக்கிரமா ஆபீஸ் போகணும், நீ காலேஜ் போகும் போது என்னை ட்ராப் பண்ணிட்டுப் போறியாடா தம்பி?”

“ஏங்க மழை வருது. ரொம்ப நேரமா பஸ் வரலை. வந்து என்னை பிக்கப் பண்ணிட்டு போறீங்களா?”

பள்ளி மாணவி தொடங்கி நடுத்தர வயதைக் கடந்த பெண் வரையில் பெரும்பாலான பெண்கள் இது போன்ற வேண்டுகோள்களை விடுப்பதைக் கேட்டிருப்போம். இயல்பாகக் கடந்திருப்போம். எல்லா வயதிலும், அதிக அளவிலான பெண்கள் தனது இயக்கத்திற்காக (mobility), வீட்டிலுள்ள ஆண்களின் வாகனங்களையோ, பொது போக்குவரத்தையோதான் சார்ந்திருக்கிறார்கள். தனக்கென்று வாகனம் வைத்துக்கொள்வதில் பெண்ணுக்கு என்ன தயக்கம்? ஒருவேளை வீட்டில் இருந்தாலும், ஓட்டுவதில் என்ன பிரச்னை?

நிறைய பெண்கள் சைக்கிள் ஓட்டுகிறார்கள்; டூவீலரில் பறக்கிறார்கள்; கார் ஓட்டிப் போகிறார்கள், அப்புறம் என்ன என்று கேட்பவர்களுக்காக இந்தப் புள்ளிவிவரம் – இந்தியாவில் சைக்கிள் ஓட்டுபவர்களில் சுமார் 25% மட்டுமே பெண்கள், டூவீலர் (மோட்டார் சைக்கிள்) ஓட்டுபவர்களில் 25% மட்டுமே பெண்கள், கார் ஓட்டுபவர்களில் கிட்டத்தட்ட 15% மட்டுமே பெண்கள். மீதி இருப்பவர்கள் மினிபஸ், பேருந்து, ஷேர் ஆட்டோ, ஆட்டோ, லோக்கல் ட்ரெயினில் பயணிக்கிறார்கள். இல்லாவிட்டால், வீட்டில் உள்ள ஆண்களின் வாகனங்களில், அவர்களை ஓட்டச் சொல்லி உட்கார்ந்து போகிறார்கள்.

சிறு வயதில் சைக்கிள் ஓட்டுவதிலிருந்து ஆரம்பிப்போம். ஏழெட்டு வயதில் சிறுவர், சிறுமியருக்கு சைக்கிள் ஓட்டக் கற்றுக் கொள்வது பெரிய சாகசம். வசதி இருக்கும் பெற்றோர் சொந்தமாக வாங்கிக் கொடுப்பார்கள். வசதி இல்லாத வீட்டுக் குழந்தைகள் வாடகை சைக்கிள் எடுத்து ஓட்டப் பழகுவார்கள். ஆண் குழந்தைக்கு இணையாகப் பெண் குழந்தையும் ஓட்டிப் பழகும், நன்றாகவே சைக்கிள் ஓட்டும். ஆனாலும், “பாத்து ஓட்டுடி, பொம்பளப் புள்ள கீழ விழுந்து கையைக் காலை ஒடச்சிக்கிட்டா, நாளைக்கு எவன் கட்டுவான்?” என்ற ஏச்சுகளோடு, வீட்டில் அடக்கியே வைப்பார்கள். சைக்கிள் ஓட்டுவதில் இருக்கும் கொஞ்ச சுதந்திரமும் வயதுக்கு வந்தவுடன், முற்றிலும் ஏறக்கட்டப்படும். அதுவரை சைக்கிளில் பள்ளிக்கூடத்திற்குப் போய்வந்து கொண்டிருக்கும் சிறுமிக்கு, அதற்குப் பிறகு தடைவிதிக்கப்படும். வீட்டு ஆண்கள் கொண்டு போய்விடுவார்கள். இல்லாவிட்டால், நடந்தோ பஸ்ஸிலோ போக வேண்டும்.

சைக்கிள் என்பது பெண்ணின் இயக்கத்திற்குப் பேருதவியாக இருக்கும் எளிய வாகனம். வயதுக்கு வந்த பெண்ணிடம் சைக்கிளைத் தந்தால் அவள் பள்ளிக்கு மட்டுமல்ல, விருப்பம் போல எங்கே வேண்டுமானாலும் சுற்றுவாள், அவளைக் கண்காணித்துக் கொண்டே இருக்க முடியாது என்று இந்த ஆணாதிக்கப் பொதுபுத்தி, “வயசுப்புள்ள எங்கயாவது விழுந்து வச்சா என்ன செய்யுறது? ” என்று அவள் ’பாதுகாப்பை’க் காரணம் காட்டி தடை போடும்.

’பெண்ணின் பாதுகாப்பு’ என்ற சப்பைக்கட்டு கட்டித்தான் பெரும்பாலான வீடுகளில் டூவீலருக்கும் தடைபோடுகிறார்கள். இளைஞர்கள் கல்லூரியில் படிக்கும் போதே பைக் ஓட்ட ஆரம்பித்துவிடுகிறார்கள். ஆனால், வசதியான வீட்டுப் பெண்களுக்குக்கூட டூவீலர் வாங்கிக் கொடுப்பதில்லை. இன்னும் சொல்லப் போனால், வேலைக்குப் போகும் பெண் தனது சம்பாத்தியத்தில் வண்டி வாங்க நிறைய வீட்டில் அனுமதி இல்லை. லோன் போட்டு கணவனுக்கு வாங்கிக் கொடுக்கும் பெண்ணுக்கு வண்டி இருக்காது. “பெண்ணுக்குச் சரியாக வண்டி ஓட்டத் தெரியாது”, “எங்கேயாவது கொண்டு போய் மோதிவிடுவார்கள்”, “அவர்களுக்குத் தொழில்நுட்ப அறிவு குறைவு, எதாவது பிரச்னை வந்து வண்டி நின்றுவிட்டால் சமாளிக்கத் தெரியாது” போன்ற பல காரணங்களைச் சொல்கிறது ஆணாதிக்கச் சமூகம். ஆனால், இவை அனைத்தும் கற்பிதங்களே.

இன்னும் சொல்லப்போனால், இது தான் உருவாக்கிய கற்பிதங்கள் என்று ஆணாதிக்கச் சமூகத்துக்கு நன்றாகத் தெரியும். இருந்தாலும், இவை திரும்பத்திரும்ப சொல்லப்பட்டு வருவதற்கான உண்மையான காரணம், பெண்ணின் இயக்கத்தைக் கட்டுப்படுத்துவதுதான். அவளைக் கூடுமானவரை வீடு என்ற தளத்திற்குள் அடைப்பதுதான் நோக்கம். தன் கட்டுப்பாட்டை மீறி அவள் சுதந்திரமாக இயங்கத் தொடங்கிவிட்டால் அவளது so called ’கற்பை’ எப்படிக் கண்காணிப்பது, cபெண்ணை அடக்கி வைக்க முடியாவிட்டால், அவள் தன் துணையைத் தானே தேர்ந்தெடுத்து, தன் வாழ்க்கையை வாழ ஆரம்பித்துவிட்டால்… ஜாதியக் கட்டமைப்பைக் காப்பாற்ற முடியாதே, மதங்களைக் கட்டிக் காக்க இயலாதே என்று அஞ்சுகிறது. அதற்காக, “நீ மென்மையானவள், வாகனங்களும் சாலைகளும் கடினமானவை, உன்னால் முடியாது” என்றெல்லாம் சொல்லி, பெண்ணை மூளைச்சலவை செய்கிறது.

பல பெண்கள் இதை நம்புவதுதான் சோகம். பெண்கள், லாரி, பேருந்து, ட்ராக்டர் ஓட்டுகிறார்கள், ரயிலை இயக்குகிறார்கள், போர்விமானத்தில் பறக்கிறார்கள், கப்பல் ஓட்டுகிறார்கள், விண்வெளிக்கு பயணிக்கிறார்கள், இன்னும் என்ன தயக்கம் தோழிகளே? முறையாகப் பயிற்சி பெற்றால் சைக்கிளோ டூவீலரோ காரோ உங்களுக்கு எதை ஓட்ட வாய்ப்பிருக்கிறதோ அதைத் தாராளமாக ஓட்டலாம். அதற்கேற்றவாறு உடை உடுத்திக் கொண்டால் இன்னும் வசதியாக இருக்கும். ஒரு வாகனத்தை ஓட்டுவதற்கு முன்பு, அதைப் பற்றி முழுமையாக அறிந்துகொள்வது அவசியம். வழியில் நின்றுவிட்டால், என்ன செய்வது, உதவிக்கு எந்த எண்ணை அழைக்க வேண்டும் போன்ற விவரங்களைக் கைவசம் வைத்திருங்கள். தொடர்ச்சியாக ஓட்ட, ஓட்ட சாலை பயம் போய்விடும். இன்னோர் உண்மை என்ன தெரியுமா, ஆண்களுடன் ஒப்பிடும் போது, பெண்கள் வாகனம் ஓட்டும் போது ஏற்படும் விபத்துகளின் எண்ணிக்கை மிகக் குறைவு என்று ஒரு புள்ளிவிவரம் கூறுகிறது. பெண்களிடம் இயல்பாகவே உள்ள ஜாக்கிரதை உணர்வும் இதற்கு ஒரு காரணம்.

வண்டி ஓட்டும் பெண்களுக்குச் சாலையில் சவாலாக இருப்பவர்கள், ஆதிக்க மனநிலை கொண்ட சக ஆண் ஓட்டுனர்கள்தாம். “இவங்கெல்லாம் வண்டி ஓட்ட வந்துட்டாங்க” என்ற இளக்காரப் பார்வையும், திடீரென அருகில் வந்து ஹாரன் அடிப்பதும், ஓவர்டேக் செய்வதுமாகத் தொந்தரவு செய்வார்கள். எந்த நிலையிலும் நிதானம் இழக்காமல் இருப்பது என்ற உறுதியுடன் வண்டி ஓட்டுவதில் மட்டும் முழுக் கவனத்தையும் செலுத்தினால், இவர்களைச் சமாளித்துவிடலாம்.

’Pedaling to Freedom’ என்ற ஆவணப்படத்தை 13 ஆண்டுகளுக்கு முன்பு பார்த்தேன். 90களின் துவக்கத்தில், புதுக்கோட்டை மாவட்டத்தில் அறிவொளி இயக்கத்தின் ஒரு பகுதியாக, பெண்களுக்கு சைக்கிள் ஓட்டக் கற்றுத்தருவதற்கு ஏற்பாடு செய்தார், அந்த மாவட்ட ஆட்சியராக இருந்த ஷீலா ராணி சுங்கத். இதனால் சுமார் ஒரு லட்சம் பெண்கள் சைக்கிள் ஓட்டக் கற்றுக்கொண்டார்கள். பெண்களின் சைக்கிள் ஓட்டும் அனுபவத்தையும், அவர்கள் வாழ்வில் அது ஏற்படுத்திய தாக்கத்தையும் படம் பேசுகிறது. படத்தில், கிராமத்துப் பெண்கள் தாம் சைக்கிள் கற்றுக்கொண்டதையும், ஓட்டுவதையும், பல இடங்களுக்குச் செல்வதையும் மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டது நெகிழ வைத்தது. இந்தப் படத்தை, கூடு பெண்கள் வாசிப்பரங்கத்தின் சார்ப்பில் மதுரையில் நடத்திய ’பெண் திரை’ என்ற பெண் இயக்குநர்களின் திரைப்பட விழாவில் திரையிட்டோம். படத்தைப் பார்த்த 65 வயது தோழி குமுதா, அடுத்த நாளே கார் ஓட்டிக்கொண்டு வந்தார். ஆச்சரியமாகப் பார்க்க, “கார் ஓட்டக் கத்துக்கிட்டு வருசக் கணக்காச்சுப்பா. ஆனாலும், அடிக்கடி ஓட்ட தயக்கமா இருந்துச்சு. நேத்து பார்த்த படத்தில் சைக்கிள் ஓட்டிய தோழிகள் பெரிய நம்பிக்கையைத் தந்தாங்க. கார் எடுத்துட்டு வந்துட்டேன்” என்றார். அவரைப் பார்த்து எங்களுக்கும் கார் ஓட்டும் ஆசை வந்தது.

அன்புத் தோழிகளே, வாகனம் ஓட்டும்போது கிடைக்கும் தன்னம்பிக்கையும் சுதந்திர உணர்வும் அற்புதமானது. சுயமரியாதையும் சுயசார்பும் சேர்ந்த கலவை அது. விரும்பும் இடத்திற்குச் செல்லலாம். விரும்பியதைச் செய்யலாம். வாழ்வில் புதிய சாளரங்களைத் திறந்துவிடும். உலகையே வலம் வரும் ஆசையைத் தூண்டிவிடும். உங்கள் வாய்ப்பு வசதிக்கேற்ப ஏதாவது ஒரு வாகனம் ஓட்டக் கற்றுக்கொள்ளுங்கள், தொடர்ந்து ஓட்டுங்கள். அன்புத் தோழர்களே, உங்களைச் சுற்றியிருக்கும் பெண்களை வாகனம் ஓட்டுமாறு ஊக்கப்படுத்துங்கள். அவர்களுக்குக் கற்றுக் கொடுங்கள். சமத்துவத்திற்கான பாதை அது.

படைப்பாளர்:

கீதா இளங்கோவன்

‘மாதவிடாய்’, ‘ஜாதிகள் இருக்கேடி பாப்பா’ போன்ற பெண்களின் களத்தில் ஆழ அகலத்தை வெளிக்கொணரும் ஆவணப் படங்களை இயக்கியிருக்கிறார். சமூக செயற்பாட்டாளர்; சிறந்த பெண்ணிய சிந்தனையாளர். அரசுப் பணியிலிருக்கும் தோழர் கீதா, சமூக வலைதளங்களிலும் தன் காத்திரமான ஆக்கப்பூர்வமான எழுத்தால் சீர்திருத்த சிந்தனைகளை தொடர்ந்து விதைத்து வருகிறார்.