நவம்பர் நான்காவது வியாழனன்று Thanksgiving நாள் கடைபிடிக்கப்படுகிறது.

செப்டம்பர் 1620இல், மேஃப்ளவர் என்ற சிறிய கப்பல் இங்கிலாந்து, பிளைமவுத் (Plymouth) நகரிலிருந்து 102 பயணிகளோடு புறப்பட்டு, 66 நாட்களுக்குப் பின் அமெரிக்காவின் ஹட்சன் (Hudson River) ஆற்றின் முகப்பில் உள்ள கேப் கோட் (Cape Cod) முனையை அடைந்தது. பயணிகள் என்று அவர்களைச் சொல்வதைவிட, தப்பித்து வந்தவர்கள் என்று சொல்வதே பொருத்தமாக இருக்கும்.

ஒரு மாதத்திற்குப் பிறகு அவர்கள், மேஃப்ளவர் கப்பலில், மாசசூசெட்ஸ் (Massachusetts) விரிகுடாவைக் கடந்தனர். அங்கு அவர்களின் சொந்த ஊரான, இங்கிலாந்து, பிளைமவுத் ஊரின் நினைவாக, பிளைமவுத் என்ற ஊரை அமெரிக்காவில், நிர்மாணிக்கத் தொடங்கினர்.

ஆனாலும் முதல் குளிர்காலம் முழுவதும், அவர்களில் பெரும்பாலானவர்கள் கப்பலில் தான் இருந்தனர். பலரும் ஸ்கர்வி மற்றும் தொற்று நோய்களால் பாதிக்கப்பட்டனர். இதனால், அவர்களில் பாதிப் பேர் மட்டுமே கரை சேர்ந்தனர்.

கரையில் இறங்கிய போது பூர்வீக அமெரிக்கரிடமிருந்து அன்பான வரவேற்பைப் பெற்றனர்.

அதற்கு அடுத்த ஆண்டு, அதாவது 1621ஆம் ஆண்டு, நவம்பர் மாதம், புதிதாக வந்தவர்கள், தங்களின் முதல் சோள அறுவடையை வெற்றிகரமாக நடத்தி, பூர்வீக மக்களுக்கு நன்றி சொல்லும் விதமாக விருந்து கொடுத்தனர். இதுவே Thanksgiving / நன்றி நவிலல் விழா கொண்டாடப்படுவதற்கான காரணம் என்று சொல்லப்படுகிறது. சிலர் இதை மறுக்கிறார்கள்.

Thanksgiving விழா ஒவ்வொரு காலகட்டத்திலும் வெவ்வேறு தேதிகளில் கொண்டாடப்பட்டுள்ளது. 1863ஆம் ஆண்டு ஆபிரகாம் லிங்கனால் நான்காவது வியாழன் Thanksgiving விழா என்று அறிவிக்கப்பட்டது. அதன் பிறகு இன்று வரை, நவம்பர் நான்காவது வியாழனன்று Thanksgiving விழா கடைபிடிக்கப்படுகிறது.

இது மதச்சார்பற்ற விடுமுறையாகக் கொண்டாடப்படுகிறது. குடும்ப விழாவாக, மாபெரும் விருந்தாக இது அமையும். வான்கோழியை முழுதாகச் சமைத்து உணவு மேடையில் வைத்து, குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் இணைந்து உணவு உண்பார்கள். இணை உணவுகளும் சமைத்து, சாப்பாட்டு மேசையை நிரப்பி விடுகிறார்கள். விருந்தில் தவறாமல் பூசணிக்காய் வைத்துச் செய்யப்படும் இனிப்பும் பரிமாறப்படும்.

முடிந்த அளவிற்குக் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் இணைவதற்கு முயற்சி செய்வார்கள். நாம் பொங்கலுக்கு ஊர் போவது போலத்தான். பொதுவாக மூன்று தலைமுறை இணைந்து கொண்டாடுவதால், சண்டைக்கும் பஞ்சமிருக்காது என இளைய தலைமுறை இது குறித்துக் கேலி செய்யும்.

Thanksgiving விழா காலகட்டத்தில், வான்கோழி சமைப்பதற்கு என்றே தனித்துவமான பாத்திரங்கள் விற்கப்படும். பொதுவாக வான்கோழியை ஓரிரு நாட்களுக்கு முன்பே மசாலா சேர்த்து ஊறவைத்து பேக் செய்வார்கள். ஊறவைப்பதற்கு, ஊசி (syringe) மூலம் மசாலாக்களைக் கரைத்து ஏற்றுவார்கள். மேலே இருக்கும் கம்பி rack இல் வான்கோழியை வைத்து, கீழ் பாத்திரத்தில், காய்கறிகளை ஒரு வரிசை அடுக்குவார்கள். வான்கோழி வேக வேக கீழே இறங்கும் மசாலா தண்ணீரில், கீழே இருக்கும் காய்கறி வெந்து விடும்.

குடும்பம் வர முடியாமல் தனியாகக் கொண்டாட வேண்டிய சூழ்நிலையில் இருப்பவர்களுக்குப் பொது நிறுவனங்கள் விருந்து கொடுப்பது உண்டு.

மேலும் பல நிறுவனங்கள் உணவுப் பொருட்களைச் சேகரித்து ஏழைகளுக்கு உணவு வழங்குகின்றன. இவ்வாறு ஏழைகளுக்கு உதவும் நாளாகவும் பல இடங்களிலும் கடைபிடிக்கப்படுகிறது.

இன்று சமயச் சார்பற்ற விழாவாகக் கொண்டாடப்பட்டாலும், இது அடிப்படையில் இங்கிலாந்தில் சமய விழாவாக, அறுவடை நாளாகக் கொண்டாடப்பட்ட விழாவின் தொடர்ச்சியாகவே உள்ளது. இன்றும் கிறிஸ்த வழிபாட்டு நாட்காட்டி, நன்றி நவிலல் விழா முடிந்த பிறகு வரும் ஞாயிறு அன்று தான் தொடங்குகிறது. கிறிஸ்துமஸுக்கு ஆயத்தமாகும் ‘திருவருகை காலத்தின்’ தொடக்க நாளாகவும் அந்த ஞாயிறே அமைகிறது. இவையெல்லாம், இங்கிலாந்து வழிபாட்டு முறையின் நீட்சியாகவே தெரிகிறது.

இந்தக் காலகட்டத்தில் பெர்சிமன் என்னும் இந்தப் பழம் பழுக்கும். பல மரங்கள், கிளை கொள்ளாத அளவிற்குக் காய்த்து, பழுத்துத் தொங்கும்.

பல வீடுகளில் பழங்களைப் பறித்து வீட்டின் முன் வைத்து விடுவார்கள். தேவையானவர்கள் எடுத்துக்கொள்ளலாம். நேற்று எங்கள் பக்கத்து தெரு ஆள் எனக்குக் கொடுத்த பழங்கள்.

இக்காலகட்டத்தில், இலையுதிர் காலம் தொடங்கும். அதனால் உதிர்வதற்கு ஆயத்தமாகும் இலைகள் நிறம் மாறத் தொடங்கும். நாளின் அளவு ஏறத்தாழ பத்து மணி நேரமாகக் குறைந்து இரவின் அளவு ஏறத்தாழ பதினான்கு மணி நேரமாக மிகுதியாகத் தொடங்கும். நாட்கள் செல்லச் செல்ல இரவின் அளவு இன்னமும் மிகுதியாகும். இவையெல்லாம் கடும் குளிர் காலம் வரப்போகிறது என்பதைக் கட்டியம் கூறும் அறிகுறிகள்.

பொதுவாக அலங்காரங்கள் ஆரஞ்சு நிறத்தில் இருக்கும். பல இடங்களில் கிறிஸ்துமஸ் அலங்காரமும் இணைந்தே இருக்கும்.

ஆண்டுதோறும், நியூயார்க் நகரத்தில் Thanksgiving விழா அணிவகுப்பு ஒன்றை மேசிஸ் வணிக நிறுவனம் (Macy’s Thanksgiving Day Parade) நடத்துகிறது. 9:00 மணி முதல் மதியம் 12:00 மணி வரை நடக்கும் இந்த மூன்று மணிநேர அணிவகுப்பு தான் உலகின் மிகப்பெரிய அணிவகுப்பு. NBC தொலைக்காட்சியில் இது ஆண்டு தோறும், நேரடியாக ஒளிபரப்பப்படுகிறது.

Thanksgiving விழா நாளுக்கு மறுநாள், பொருட்கள் வாங்கும் விழா (Black Friday). அன்று பலவிதமான தள்ளுபடிகள் கிடைக்கும். அதனால், வியாழன் அன்று மாலை முதலே கடைகளுக்கு முன் கூட்டம் கூடிவிடும். அந்தக் குளிரில் Sleeping Bag கொண்டு போய் கடை முன் காத்திருந்து பொருள் வாங்கிய காலம் எல்லாம் உண்டு. ஏனென்றால், சில பொருட்கள் முதலில் செல்லும் சிலருக்கு மட்டும், மிகமிகக் குறைந்த விலையில் கிடைக்கும். இப்போதெல்லாம் Online இல் பொருட்கள் வாங்கத் தொடங்கிய பின் கூட்டமெல்லாம் கிடையாது. ஆனாலும் விற்பனை களைகட்டும். பெரும்பாலும் கிறிஸ்துமஸ் விழாவிற்கு உறவினர், நண்பர்களுக்குக் கொடுக்க நினைக்கும் பரிசுப் பொருட்களை அன்று வாங்கிவிடுவார்கள்.

ஆனாலும் பெரும்பாலும் வாங்கப்படும் பொருட்கள், தேவையில்லாத பொருட்களாகவே, விலை குறைவு என்பதற்காக செய்யும் வெட்டி செலவாகவே அமையும் என்பது மறுக்க முடியாத உண்மை.

படைப்பாளர்:

பாரதி திலகர்

தீவிர வாசிப்பாளர், பயணக் காதலர்; தொன்மை மேல் பெரும் ஆர்வம் கொண்டவர். அயல்நாட்டில் வசித்து வந்தாலும் மண்ணின் வாசம் மறவாமல் கட்டுரைகள் எழுதிவருகிறார்.