பெண்களையும் தங்க நகைகளையும் பிரிக்க முடியாது என்றும் பெண்ணுக்குப் பொன் நகை மேல் இருக்கும் ஆசை எந்த வயதிலும் தீராது என்றெல்லாம் சொல்கிறார்கள். பொருளாதாரம் மோசமாக இருக்கும் காலகட்டத்திலும், நகைக்கடை விளம்பரங்களுக்கும், நகைக்கடைகளில் மக்கள் கூட்டத்திற்கும் குறைவே இல்லை.

ஆதி சமுதாயத்தில் பெண்ணும் ஆணும் வேட்டையாடிய விலங்குகளின் எலும்புகளைக் கோத்து காதில், கழுத்தில், இடுப்பில் அணிந்துகொண்டார்கள். காட்டு மலர்களைச் சூடிக்கொண்டார்கள். மன்னர் காலத்தில் அரசிக்கு இணையாக அரசனும் தங்கம், முத்து, வைர நகைகளை அணிந்திருந்தான். நாகரீக வளர்ச்சியில், படிப்படியாக ஆண்கள் நகை அணிவது குறைந்து, பெண்கள் அணிவது கூடியுள்ளது.

பெண்ணைச் சொத்தாகக் கருதும் ஆணாதிக்க சமுதாயத்தில் பெண்களுக்கு நகைகளைப் பூட்டி, வெளியே செல்லாமல் வீட்டுக்குள்ளேயே இருக்கச் செய்தார்கள். பெண்ணுக்குப் பொன் நகைதான் அழகு என்றும், அது அவளின் சொத்து என்றும், அதுதான் அவளுக்குப் பொருளாதாரப் பாதுகாப்பு என்றும் மூளைச் சலவை செய்தார்கள்.

பெண்ணிற்கு எதற்கு தங்க நகைகள்? பெண்ணுக்கு நகைதான் அழகு சேர்க்கிறது என்கிறார்கள். அழகு என்பதற்கான விளக்கம் ஒருவருக்கொருவர் மாறுபடுகிறது. ஒரு பேச்சுக்கு நகைதான் பெண்ணுக்கு அழகு என்று வைத்துக்கொண்டால், வெளிநாட்டுப் பெண்கள் இந்தியப் பெண்கள் அளவிற்கு நகை அணிவதில்லை, மிஞ்சிப் போனால் சிம்பிளாக ஒரு தோடு, மெலிதான செயின் என்று அணிகிறார்கள், அது தங்கமாகக்கூட இருக்காது; அவர்கள் அழகாக இல்லையா? படிப்பிலும் வேலையிலும் தனது ஆளுமையிலும் தன்னிறைவு பெற்ற அந்தப் பெண்களுக்குத் தங்க நகை ஒரு பொருட்டாக இல்லை. அவர்கள் பெரும்பாலும் நகை அணிவதில்லை. தங்கநகை அணியும் பெண்தான் அழகு என்பது ஒரு கற்பிதமே.

சராசரி குடும்பத்தில், ஒரு பெண் குழந்தை பிறந்தவுடனேயே நகை சேர்க்க ஆரம்பிக்கிறார்கள். எதற்கு? நாளைக்கு அவளுக்குக் கல்யாணம் செய்யும்போது நகைகள் வேண்டுமே, அதற்கு! அவள் வயதுக்கு வந்தவுடன், குடும்பத்தினரின் நகை சேர்க்கும் வேகம் கூடும். எதிர்பாராமல் வரும் பணம், தீபாவளி போனஸ் என்று குடும்பத்திற்கு வரும் பணமெல்லாம் பெண் குழந்தைக்கு நகையாக மாறும். கடன் வாங்கியாவது, “பொம்பளப் புள்ள காதுல கழுத்துல, பொட்டுத் தங்கம் இல்லாமல் இருந்தால் நல்லா இருக்காது” என்று கம்மல், செயின், மூக்குத்தி, வளையல் என்று மாட்டிவிடுவார்கள். வயதுக்கு வந்த பெண்ணுக்கான கட்டுப்பாடுகளுடன், நகைக்கான பாதுகாப்பும் சேர்ந்து அவள் இயல்பாக வெளியே போவதைத் தடை செய்யும். “செயினை யாராவது அத்துட்டுப் போயிடுவாங்க, வீட்லயே இரு” என்பார்கள். அந்தக் குழந்தையால் வெளியே போய் விளையாட முடியாது, தனியாகக் கடைக்குப் போக முடியாது. அவள் சுதந்திரத்தைத் தடை செய்வதில், அவளுக்கான வெளியை வீடாக மட்டுமே சுருக்குவதில், அவள் அணியும் தங்க நகைகளுக்குப் பெரிய பங்கு இருக்கிறது. நகை அணியாத கீழ்தட்டு உழைக்கும் பெண்களுக்கு, எல்லா இடங்களுக்கும் இயல்பாக போய்வரும் சுதந்திரம் இருப்பதைக் காணமுடிகிறது.

கல்யாணத்தின்போது, வரதட்சணையின் முக்கிய அங்கமாக இன்று தங்க நகைகள் மாறியுள்ளன. வரதட்சணையை ஒழிக்க வேண்டும் என்று சட்டம் இயற்றிவிட்டோம். பெண்கள் வரதட்சணை தரக் கூடாது, ஆண்கள் வாங்கக் கூடாது என்று பரப்புரை செய்கிறோம்; ஆனால், அதன் முக்கியப் பகுதியாக இருக்கும் தங்க நகைகளைப் பற்றி ஏன் பேசுவதில்லை?

வறுமையில் இருக்கும் அடித்தட்டு மக்கள்கூடப் “பொண்ணுக்குக் கால்பவுன் கம்மல், மூக்குத்தி போடுறோம்” என்று தங்கத்தை வைத்துத்தான் கல்யாணப் பேச்சை ஆரம்பிக்கிறார்கள். நடுத்தர வர்க்கமும் மேல்தட்டும் வசதிக்கேற்றாற் போல் 25 பவுன், 50 பவுன், 100 பவுன் என்று பேசுகிறார்கள். வரதட்சணையில் பெண்ணுக்கு தங்க நகைதான் முதலில், அதற்குப் பிறகு தான் ரொக்கம், டூவீலர், கார், வீடு, நிலம் என்று கிராஃப் ஏறும்.

கல்யாணத்திற்கு தரும் நகைகளைப் பிறந்த வீட்டுச் சீதனம் என்கிறார்கள். பெண்ணுக்கு ஏதாவது ஒரு கஷ்டம் வரும்போது, அதனை அடமானம் வைத்தோ, விற்றோ சமாளித்துக்கொள்வாள் என்று பெற்றோர் எண்ணுகிறார்கள். “இது ஒரு இன்வெஸ்ட்மெண்ட்” என்கிறார்கள். இதில் எனக்கு உடன்பாடில்லை. முதலில் பெண் குழந்தையைத் தற்சார்புடன் வளர்க்கிறோமா என்ற கேள்வியிலிருந்து இதனை ஆரம்பிக்க வேண்டும்.

பெண் குழந்தையை, அவள் விரும்பும் படிப்பை படிக்க வைத்து, பொருளாதாரத் தற்சார்புடன் இருப்பதற்குத் தன் காலில் நிற்கும் தகுதியை வளர்த்து, வேலை பார்க்க வைத்து, எந்தப் பிரச்னையையும் சமாளிப்பதற்கு உடல், மனத் தகுதியை மேம்படுத்துவதுதானே சரியான, ஆரோக்கியமான வளர்ப்பாக இருக்கும். இதனைச் செய்ய ஆணாதிக்கச் சமுதாயம் தயாராக இல்லை. ஏனென்றால், இப்படியெல்லாம் வளரும் பெண் குழந்தை சுயமாகச் சிந்தித்து முடிவெடுப்பாள். ஆணாதிக்கம் திணிக்கும் கருத்துகளை ஏற்க மாட்டாள். தன் துணையைத் தானே தேர்ந்தெடுப்பாள். அதன் விளைவாக ஆணாதிக்க கட்டமைப்பும், ஜாதியமும், மதமும் உடைந்து போகுமே என்று பொதுச் சமுதாயம் பயப்படுகிறது. இதையெல்லாம் பூசி மொழுகத்தான், பெண் குழந்தையைத் தனது சுயநலத்திற்காகக் கட்டுப்படுத்தி வளர்த்துவிட்டு, “எவ்வளவு நகை போட்டு உனக்குக் கல்யாணம் செய்கிறேன் பார்; உனக்காக, உன் நல்ல வாழ்க்கைக்காக எவ்வளவு செலவு செய்கிறேன் பார்” என்று அந்தச் சமுதாயத்தின் பிரதிநிதிகளான, ஆணாதிக்கச் சிந்தனையுள்ள அப்பாவும் அம்மாவும் சொல்கிறார்கள்.

Crop frontview of indian bride is drinkinkg cocktail in traditional attire

“எனக்கு நகை போடப் பிடிக்கலை, வேண்டாம்” என்று சொல்லும் பெண்கள் பலர் இருக்கிறார்கள். அவர்களிடம், “நாளைக்கு உனக்கு ஏதாவது கஷ்டம்னா, இந்த நகை உனக்கு கைகொடுக்கும்” என்பார்கள்; என்னவோ நகை மட்டுமே கல்யாணத்திற்குப் பிறகு அவளுக்கு வரும் எல்லாப் பிரச்னைகளையும் தீர்க்கும் என்பது போல.

அண்மையில் கேரளாவில் மரணமடைந்த விஸ்மயாவிற்கு நூறு பவுன் நகை போட்டு அவர் பெற்றோர் கல்யாணம் செய்து கொடுத்திருந்தாலும், மருத்துவப் படிப்புக்கான தேர்வுக் கட்டணமாக 5,500 ரூபாயை, அடித்து உதைக்கும் கணவனிடம் கேட்க விரும்பாமல் அம்மாவிடம் தான் கேட்டிருக்கிறார். அப்போது, சீதனமாகத் தரப்பட்ட அந்த நூறு பவுன் நகை துளிக்கூட அவருக்கு உதவவில்லை என்பதுதான் நிதர்சனம். ஆற்றல் மிக்க ஆளுமையாக பெண்ணை வளர்ப்பதுதான், எல்லா நிலைகளிலும் அவளுக்கு கைகொடுக்கும், தங்க நகை அல்ல.

தம் வீட்டுப் பெண்களுக்கு நகைகளைப் பூட்டி, பொது நிகழ்ச்சிகளுக்கு, பொது இடத்திற்கு ஆண்கள் அழைத்துச் செல்வது, “தமது அந்தஸ்தைக் காட்டுவதற்குத்தான்”. இது பெண்ணை சொத்தாகக் கருதுவதன் வெளிப்பாடுதான். தன்னை ’நடமாடும் நகை ஸ்டேண்டாக’ வைத்திருக்கிறார்கள் என்று உணராமல் பெண்களும் தங்க நகைகளுக்கு ஆசைப்படுகிறார்கள். நகை போட்டுக்கொண்டு, பெண்கள் நினைத்த இடத்துக்கு இயல்பாகச் செல்ல முடியாது; சுதந்திரமாகப் பயணம் போக முடியாது. எப்போதும் நகையைப் பாதுகாப்பதில்தான் முழுக்கவனமும் இருக்கும். தொல்லையைத் தோளில் மட்டுமல்ல, கை, காது, மூக்கு என்று எல்லா இடங்களிலும் போட்டுக் கொண்டு அலைய வேண்டும்.

அன்புத் தோழியரே, நகை எந்தவிதத்திலும் பெண்ணுக்கு உரிய உரிமைகளையும், சுதந்திரத்தையும் அளிப்பதில்லை. அதை ஒரு முதலீடாக (இன்வெஸ்ட்மெண்ட்) நீங்கள் கருதினால், அஞ்சலக சேமிப்பு, வங்கி சேமிப்பு, பிக்ஸட் டெபாசிட், மியூச்சுவல் ஃபண்ட் என்று எத்தனையோ வழிகள் உள்ளன. அதைப் பற்றிய அறிவை வளர்த்துக்கொண்டு, அதில் முதலீடு செய்வதுதான் புத்திசாலித்தனம். எல்லாவற்றுக்கும் மேலாக, கல்வி கற்று, அறிவையும் தகுதியையும் திறன்களையும் வளர்த்துக்கொண்டு வாழ்க்கையைத் துணிவுடன் எதிர்கொள்ளும் பெண்ணே பேரழகு, தோழர்களே!

படைப்பாளர்:

கீதா இளங்கோவன்

‘மாதவிடாய்’, ‘ஜாதிகள் இருக்கேடி பாப்பா’ போன்ற பெண்களின் களத்தில் ஆழ அகலத்தை வெளிக்கொணரும் ஆவணப் படங்களை இயக்கியிருக்கிறார். சமூக செயற்பாட்டாளர்; சிறந்த பெண்ணிய சிந்தனையாளர். அரசுப் பணியிலிருக்கும் தோழர் கீதா, சமூக வலைதளங்களிலும் தன் காத்திரமான ஆக்கப்பூர்வமான எழுத்தால் சீர்திருத்த சிந்தனைகளைத் தொடர்ந்து விதைத்து வருகிறார்.