விலங்குகளும் பாலினமும் – 8

ஆண் விலங்கும் பெண் விலங்கும் உடல் ரீதியாக வேறு மாதிரியாகத் தெரிவது இயல்புதான். ஆண் சிங்கத்தின் பிடரி, ஆண் மயிலின் தோகை போன்றவை பெண் விலங்குகளைக் கவர்வதற்கு உதவுகின்றன. சில ஆண்விலங்குகளின் கொம்புகள் மற்ற ஆண்களுடன் சண்டையிட்டு ஆதிக்கத்தை நிறுவ உதவுகின்றன. மற்றபடி ஆண் விலங்குக்கும் பெண் விலங்குக்கும் அடிப்படை உடலியல் மற்றும் இயங்கியலில் எந்த மாற்றமும் இருப்பதில்லை. உணவு தேடவும் வேட்டையாடவும் தேவைப்படும் திறன்கள், ஆண்/பெண் இருவகை விலங்குகளிலும் இருக்கும்.

ஆனால் உணவுக்குப் பெண் விலங்கை மட்டுமே நம்பியிருக்கும் ஒரு ஆண் விலங்கு உண்டு. “நீயின்றி நானில்லை அன்பே” என்று சும்மா பேச்சுக்குக் கவிதை வாசிக்கிற ரொமான்ஸெல்லாம் இல்லை. நிஜமாகவே அந்த விலங்கால் தனித்தியங்க முடியாது. அதன் உடல் கூட, பெண்ணைச் சார்ந்து வாழ்வதற்கென்றே அமைக்கப்பட்டிருக்கிறது!

தூண்டில் மீன்

ஆழ்கடலில், சராசரியாக 300 மீட்டர் ஆழத்துக்குக் கீழே வசிப்பவை தூண்டில் மீன்கள் (Angler fishes). தலைக்கு மேல் கொம்பு போல நீட்டிக்கொண்டிருக்கும் தூண்டில் போன்ற அமைப்பில் ஒளியைக் காட்டி, அந்த ஒளிக்கு ஈர்க்கப்பட்டு அருகில் வரும் மீன்களை இவை வேட்டையாடுகின்றன. ஃபைண்டிங் நீமோ திரைப்படத்தில் இந்த மீனை சந்தித்திருக்கலாம்.

ஆண் தூண்டில் மீன்

தூண்டில் மீன்களின் புகைப்படத்தைப் பார்த்தாலே அது ஆணா பெண்ணா என்று சொல்லிவிடலாம். இதற்கு கடல்சார் ஆராய்ச்சியாளராக இருக்கவேண்டிய கட்டாயமில்லை – தூண்டிலுடன் இருப்பது பெண் மீன். தூண்டில் இல்லாமல், அளவில் மிகச்சிறியதாக ஒரு துணுக்கு போல இருப்பது ஆண் மீன்.

பெண்மீன் ஆண்மீனை விட பல மடங்கு பெரியது. சில தூண்டில்மீன் இனங்களில், பெண்மீனின் நீளம் ஆண்மீனைப் போல 60 மடங்கும், எடை ஆண்மீனோடு ஒப்பிடும்போது 5 லட்சம் மடங்கும் கூடுதலாக இருக்குமாம்! ஆண்மீன்களுக்குத் தூண்டில் கிடையாது, அளவிலும் அவை சிறியவை, அவற்றால் வேட்டையாடி உணவு தேடிக்கொள்ள முடியாது. இரைமீன்கள் வந்தாலும் அவற்றைக் கடித்து விழுங்க முடியாது.

சில ஆண்மீன்களுக்கு சரியான இரைப்பை மற்றும் குடல் அமைப்பு கூடக் கிடையாது. அவற்றின் உடலில் மூன்று வெளி உறுப்புகள் மட்டுமே தனித்திறன் கொண்டவையாக இருக்கின்றன. பெண்மீனின் உடலிலிருந்து வரும் வேதிப்பொருட்களை நுகர்வதற்காக பெரிய மூக்கு, பெண்மீனை அடையாளம் காண்பதற்காகப் பெரிய கண்கள், பெண்மீனைக் கடித்து கவ்விப் பிடிப்பதற்காக வலுவான தாடையில் சிறு பற்கள்.

ஆண் தூண்டில் மீன் முகம்

“நான் கண்கள் கொண்டதே உன்னைப் பார்ப்பதற்காகத்தான் அன்பே”, என்ற பொருள்படும் காதல் பாடல்களை நினைத்துக்கொள்ளுங்கள். தூண்டில் மீன்களின் உலகில் அதுதான் நிதர்சனம். ஆண்மீனின் ஒவ்வொரு செல்லும் பெண்மீனுக்கானது மட்டுமே.

கண், மூக்கு எல்லாவற்றையும் பயன்படுத்தி ஒரு சரியான பெண்மீனைத் தேடிக் கண்டறிந்தபிறகு, ஆண்மீன் உடனடியாகப் பெண்மீனைக் கவ்விப் பிடிக்கிறது. பிறகு உமிழ்நீரில் சில வேதிப்பொருட்களை சுரந்து, பெண்மீனின் மேல் தோலையும், தன் வாயின் ஒரு பகுதியையும் கரைக்கிறது! இரண்டு உடல்களின் ரத்த நாளங்களும் நேரடியாக இணைகின்றன. மீளவே முடியாத ஒரு பிணைப்பில் தன் உடலைப் பெண்மீனின் உடலோடு இணைத்துக்கொள்கிறது ஆண்மீன்!

காலப்போக்கில் அந்த ஆண்மீனின் கண்கள் செயலிழந்துவிடும், உள்ளுறுப்புகளும் வேலை செய்யாது. உயிரணுக்கள் சார்ந்த உறுப்பு மட்டுமே செயல்படும் நிலைக்கு ஆண்மீன் வந்துவிடும். பெண்மீன் உண்ணும் உணவிலிருந்து ரத்த ஓட்டத்தின்மூலம் ஆண்மீனுக்கும் சத்துக்கள் கிடைக்கும். பெண்மீனின் உடலில் ஒட்டிக்கொண்ட ஒரு சிறு தசையைப் போல ஆண்மீன் தன் மிச்ச வாழ்நாளைக் கழிக்கும்!

இரண்டு ஆண் மீன்கள் ‘ஒட்டிக் கொண்டிருக்கும்’ பெண் தூண்டில் மீன்

இதைப் பாலியல் ஒட்டுண்ணித்தனம் (Sexual parasitism)என்று அழைக்கிறார்கள் விஞ்ஞானிகள்.  தன் வாழ்நாள் முழுவதும் பெண்மீனுக்கு உயிரணுக்களைத் தரும் ஒரு சிறு தசையாக மட்டுமே ஆண்மீன் இருக்கும். இனப்பெருக்க காலம் வரும்போது பெண்மீனின் உடலிலிருந்து கிடைக்கும் வேதி சமிக்ஞைகளால் ஆண்மீனின் தசையும் தூண்டப்பட்டு உயிரணுக்கள் உருவாகும். சில இனங்களில் உள்ள பெண்மீன்களால் ஒரேநேரத்தில் 8 ஆண்மீன் உடல்களைத் தன் தசையுடன் இணைத்துக்கொள்ள முடியும்! அந்த இனங்களில், வாழ்நாள் முழுக்க 8 ஆண்மீன் தசைகளுக்குப் பெண்மீன்கள் உணவளிக்க வேண்டியிருக்கும்.

ஒருவேளை ஆண்மீன் தேடித் தேடிப் பார்த்தும் பெண்மீன் கிடைக்காவிட்டால் என்ன ஆகும்?

ஆண்மீன் பட்டினியால் சாகவேண்டியதுதான்…. வேறு வழியில்லை!

1920ம் ஆண்டு இந்தப் பண்பு முதன்முதலில் கண்டுபிடிக்கப்பட்டது. அதன்பிறகு இதைப் பல கோணங்களில் ஆராய்ந்த விஞ்ஞானிகள், இது ஏன் நிகழ்கிறது என்பதையும் விளக்குகிறார்கள். ஆழ்கடலில் உணவு மிகவும் குறைவு.

ஆணும் பெண்ணும் இரண்டறக் கலந்துவிட்டால், அடுத்த தலைமுறையை உருவாக்குவதற்கான முட்டைகளையும் உயிரணுக்களையும் தயாரிக்க பாதி அளவு உணவு மட்டுமே போதுமானதாக இருக்கும். ஆகவே இந்தப் பண்பு தூண்டில்மீன்களுக்கு சாதகமானதாகவே இருக்கிறது.

மற்ற ஆண் விலங்குகளோடு போட்டி போட வேண்டியிருந்தால்தான் ஆண்மீனுக்குப் பெரிய உடலும் தசைப்பிடிப்பும் தேவைப்படும். இணை சேர்வதற்கு ஒரே ஒரு பெண்மீனையும் கொஞ்சம் இரையையும் தேடவே போராடவேண்டியிருக்கிற ஆழ்கடலில், ஆண்மீனுக்கான கூடுதல் உடல் வலு தேவையற்றது என்பதால் பரிணாம வளர்ச்சியில் அது காணாமல் போய்விட்டது.

சமீப காலங்களில் இன்னும் ஒரு சுவாரஸ்யமான ஆராய்ச்சியும் நடந்துகொண்டிருக்கிறது. ஒருவரிடமிருந்து இன்னொருவருக்கு உறுப்புகளை மாற்றி வைக்கும்போது, அந்த உறுப்புகளை அயல் உடல் நிராகரிக்கும் வாய்ப்பு உண்டு (Organ rejection). ஆனால் ஆண்மீனின் உடலோடு பெண்மீன் சேரும்போது அப்படி எதுவும் நிகழ்வதில்லை. அந்த தசையைப் பெண்மீனின் உடல் நிராகரிக்காமல் ஏற்றுகொள்கிறது.

அப்படியானால் இந்த மீன்களில் உள்ள எதிரணுக்களும் நோய் எதிர்ப்பு மண்டலமும், ஆண்மீனின் தசையை ஏற்கும் அதே நேரம், பெண்மீனை வேற்று ஆபத்துக்களிலிருந்து பாதுகாக்கும்படியாகவும் துல்லியமாக அமைக்கப்பட்டிருக்கவேண்டும். அது எப்படி சாத்தியம் என்று விஞ்ஞானிகள் தேடிக்கொண்டிருக்கிறார்கள். ஆராய்ச்சி முடிவுகள் வரும்போது அது மனிதர்களின் உறுப்பு மாற்ற அறுவை சிகிச்சை, நோய் எதிர்ப்பு மண்டலம் ஆகியவை பற்றிய சில முக்கியக் கேள்விகளுக்கு பதில் தருவதாக இருக்கலாம்.

“பெண்களை நம்பியிருக்கும் ஆண் விலங்குகள்” பட்டியலில்,  ஒரு பிரபலமான விலங்கின் பெயரும் அடிக்கடி இடம்பெறும். அது எந்த அளவுக்கு உண்மை? ஏன் அப்படி நிகழ்கிறது?

தொடர்ந்து பார்க்கலாம்!

தொடரின் முந்தைய பகுதி:

படைப்பு:

நாராயணி சுப்ரமணியன்

கடல் சார் ஆய்வாளர், சூழலியல் ஆர்வலர் மற்றும் எழுத்தாளர் என்ற பன்முக ஆளுமை இவர். தமிழ் இந்து உள்ளிட்ட முன்னணி இதழ்களில் சூழலியல், கடல் வாழ் உயிரினங்கள் குறித்து தொடர்ச்சியாக எழுதி வருபவர்.