செயற்கை நுண்ணறிவு என்றால் அதிகக் கணினிப் பயன்பாடு, ரோபாட்கள், முற்றிலும் கணினிகளே எல்லாம் செய்யும் எதிர்காலம் என்றெல்லாம் பலர் நினைக்கிறார்கள். நம்முடைய தினசரி வாழ்விலும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் புகுந்து வெகுநாட்கள் ஆகிறது. அன்றாட வாழ்வில் செயற்கை நுண்ணறிவின் பங்கைத் தெரிந்துகொள்ளும் முன் ஏஐ (Artificial intelligence) என்றால் என்ன என்று தெரிந்துகொள்ளுதல் அவசியம்.

காட்சி, ஒலி, உணரிகள் மூலம் பெறும் தகவல், மொழிமாற்றும் வல்லமை கொண்டு, மனிதர்கள் தங்கள் நுண்ணறிவால் முடிவெடுத்து செயலாற்றுவது போல கணினிச் செயல்பாட்டையும் மேம்படுத்தும் கோட்பாடு என ஆக்ஸ்ஃபோர்ட் அகராதி விளக்கம் கொடுக்கிறது.

சிறியதும் பெரியதுமாக நாம் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தாத இடமே இல்லை. மின்விசையைச் சொடுக்கினால் நம் வீட்டில் மின்விசிறி சுழல்கிறது. மின் உற்பத்தி ஆகும் இடத்தில் இருந்து மின்சாரம், பல மின்மாற்றிகள், பல வகையான மின் கம்பிகள் வழியாக நம் வீட்டு மின்விசிறிக்கு வந்து சேர்கிறது. நடுவில் ஸ்விட்ச் மூலம் ஒரு தடையை ஏற்படுத்தி இந்தத் தொடர்பை நிறுத்தி வைக்கிறோம். அந்த ஸ்விட்சைத் தட்டியவுடன் தடை நீங்கி தொடர்பு முழுதாகி மின்விசிறி செயல்படுகிறது. இதையே ரிமோட் மூலமும் செயல்பட வைக்க முடியும். பெரும்பாலும் கண்ணுக்குத் தெரியாத புறஊதாக் கதிர்கள் இந்தத் தடை நீக்குச் செய்தியை ரிமோட் கன்ட்ரோல் யூனிட்டுக்குத் தெரிவிக்கின்றன. இதனால் ரிமோட்டை அழுத்தியதும் மின்விசிறி சுழல்கிறது. அடுத்த நிலை தொழில்நுட்பத்தில், நாம் வீட்டின் உள்ளே வந்ததும் கையில் ரிமோட்டைக்கூடத் தொடாமல், ‘ஃபேன் போடு’ எனச் சொன்னால் அந்தக் குரல் கட்டளையைப் புரிந்துகொண்டு மின்விசிறி சுழலும். இது செயற்கை நுண்ணறிவு வகையில் வரும். ஆனால், இது அடிப்படை நிலை.

ஒரு நபர் வீட்டின் உள்ளே நுழைந்ததும் விளக்குகளும் மின்விசிறிகளும் தானே உயிர்கொள்வதும், உள்ளே வந்த நபர் களைப்பாகவும் வியர்வையுடனும் இருக்கிறார் என்பதை உணர்ந்து, கூடவே ஏசியும் அவருக்குப் பிடித்த அவர் வழக்கமாகக் கேட்கும் பாடல் ஒன்றையும் போட்டு, அவர் பாடல் வேண்டாம் என்றதும் அதை நிறுத்தி மன்னிப்பு கேட்டால் எப்படி இருக்கும்? இதுதான் செயற்கை நுண்ணறிவு என்பது. ஏற்கெனவே அந்த நபரைப் பற்றி இருக்கும் தகவல்கள், மனித அசைவு, வெப்பநிலை, முக உணர்வுகள், இணையத் தகவல்கள், எந்த மொழியில் பேசினாலும் மொழி மாற்றிப் புரிந்துகொள்ளும் திறன், குரல் கட்டளை இவற்றைக் கொண்டு கணினிகள் முடிவுகள் எடுப்பதும் அதைச் செயல்படுத்துவதும்தான் செயற்கை நுண்ணறிவு. ஒற்றை வரியில் சொல்வதென்றால் மனித மூளையைப் பிரதியெடுக்கும் முயற்சி.

இப்படிச் செயற்கை நுண்ணறிவு தானாக முடிவுகள் எடுப்பது பாட்டுப் போடவும் குளிர்சாதனத்தை இயக்கவும் மட்டுமின்றி பல துறைகளில் தேவைப்படுகிறது. இதெல்லாம் ஏதோ எதிர்காலச் சங்கதி என்று நினைத்தால் அது நம் அறியாமை. நம்முடைய நிகழ்கால அன்றாட வாழ்வில்கூடச் செயற்கை நுண்ணறிவு பல விதங்களில் உதவுகிறது. வருங்காலத்தில் இன்னும் சிறப்பாகச் செயல்படும். மனித மூளையைப் போலவே யோசிக்க முடியும் என்கிறார்கள். தினசரி வாழ்வில் ஏற்கெனவே பயன்பாட்டில் உள்ள செயற்கை நுண்ணறிவையும் எதிர்காலத் திட்டங்கள் சிலவற்றையும் தெரிந்துகொள்ளலாம்.

குரல் வழியாக மின் சாதனங்களைக் கட்டுப்படுத்துவது தற்போது ஓரளவு பயன்பாட்டில் உள்ளது. பலர் தங்கள் திறன் பேசியை, குரல் கட்டளை மூலம் உபயோகிக்கிறார்கள். விழித்திறன் சவால் உடையவர்களுக்கு இது மிக உபயோகமானது. வீட்டுச் சாதனங்களையும்கூட இயக்கலாம். அமேசானின் அலெக்ஸா, ஆப்பிளின் சிரி, கூகுள் அசிஸ்டென்ட் இதில் பிரபலமானது. நிறுவனம் வைக்கும் பெயர்களை மட்டுமின்றி நாமேகூடச் செல்லப் பெயர்கள் இட்டு அழைக்கலாம். கூகுள் அசிஸ்டென்ட்டில் ஜாவிஸ் எனும் பெயரைத் தேர்ந்தெடுக்கும் வாய்ப்புக்கூட இருக்கிறது. ஜாவிஸ் புகழ்பெற்ற மார்வெல் காமிக்ஸில் வரும் ஏஐ.

ஹோம் ஆட்டோமேஷன் வசதியைத் தரும் பல நிறுவனங்கள் இருக்கின்றன. ஐஓடி எனப்படும் இன்டர்நெட் ஆஃப் திங்க்ஸ் இந்த வீட்டுச் சாதனங்கள் கட்டுப்பாட்டைச் சாத்தியமாக்குகிறது. இணையத்தொடர்புடன் உள்ள எல்லாச் சாதனங்களும் இந்த ஐஓடி வகையில் வரும். தொலைக்காட்சி, மடிக்கணினி, குளிர்சாதனப்பெட்டி இவைதான் நமக்கு நினைவுக்கு வரும் சாதனங்கள். உங்கள் செல்லப் பிராணிக்கு ஒரு சிப்பை வைத்துவிட்டால், அலுவலகத்தில் உட்கார்ந்து கொண்டே அதைக் கண்காணிக்கலாம். இதயத்துக்கு பேஸ் மேக்கர் வைத்திருக்கும் பாட்டி தன் நெஞ்சு வலியைப் பெரிது படுத்தாமல், பேரனுடன் ஓடிப்பிடித்து விளையாடிக் கொண்டிருந்தால் அவர் பேஸ் மேக்கர் இதயத்துடிப்பின் அளவைக் கண்காணித்து மருத்துவர், மகன், மகள், பக்கத்து வீட்டுக்காரர், ஆம்புலன்ஸ் எல்லாருக்கும் தானே தகவல் சொல்லிவிடும். இந்தச் சிப்பும் பேஸ் மேக்கமரும் ஐஓடிதான்.

இந்தக் குரல் செயற்கை நுண்ணறிவைக் கொண்டு அடிப்படை மருத்துவ உதவிகளைச் செய்யும் தொழில்நுட்பம் தற்போது ஆய்வில் இருக்கிறது. வெளியூர் சென்று லேசான சளி இருமல் வந்தால், வழக்கமாக மெடிக்கலில் கேட்டு வாங்கி, சில மாத்திரைகள் சாப்பிடுவோம். ஒன்றிரண்டு நாளில் சரியாகவில்லை எனில் மருத்துவரைப் பார்ப்போம். இப்படி மெடிக்கலில் கேட்கும்போது அவர் எத்தனை நாட்களாக இப்படி இருக்கிறது, என்ன சாப்பிட்டீர்கள் போன்ற கேள்விகளைக் கேட்பார். கூட்டம் அதிகமாக இருந்தால் கேட்காமலேகூட இரண்டு மாத்திரை கொடுத்து அனுப்பிவிடுவார். கணினித் தொழில்நுட்பம் என்றால் மருத்துவர் கேட்கவேண்டிய எல்லாக் கேள்விகளையும் ஒன்று விடாமல் கேட்கும். இந்தச் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் கூடுதலாக நாம் எந்த ஊருக்குச் சமீபத்தில் சென்றோம், அங்கே தட்பவெப்பநிலை என்ன, பெருந்தொற்று நோய்கள் ஏதேனும் அந்த இடத்தில் பரவுகிறதா போன்ற தகவல்களைத் தானாகவே சேகரித்துக்கொள்ளும். நம்முடைய குரலைக் கொண்டு சளி, இருமல் தொந்தரவின் அளவையும் கணிக்கும். இதை எல்லாம் ஆராய்ந்து அடிப்படை மருத்துவ உதவிகளைப் பட்டியலிடும். மருத்துவரை அணுகுவது அவசியம் என்றால் உடனே அறிவுறுத்தும்.

வழிகாட்டுச் செயலிகளில் செயற்கை நுண்ணறிவின் பங்கு அதிகரித்துக்கொண்டே வருகிறது. கார்களை இயக்குவதும் செயற்கை நுண்ணறிவின் மூலம் ஏற்கெனவே சாத்தியமான ஒன்றுதான். சாலையில் இருக்கும் மேடு பள்ளங்கள், திடீரென வரும் வண்டி அல்லது மனிதர்கள் எல்லாவற்றையும் அறிந்துகொண்டு அதற்கேற்ப செயல்படும் தொழில்நுட்பம் இது. உயிர்களுக்கு அபாயம் ஏற்படுத்தலாம் என்பதால் இன்னும் சட்டப்பூர்வமாகவில்லை. மனிதர்கள் ஏற்படுத்தும் சாலை விபத்துகளைவிட, தொழில்நுட்பம் ஏற்படுத்தும் விபத்துகள் நிச்சயம் குறைவாகத்தான் இருக்கும். எனினும் தவறு என்றால் யாரைத் தண்டிப்பது என்பது முக்கியமான கேள்வி. காரின் உரிமையாளரா, தொழில்நுட்பமா யார் விபத்துக்குப் பொறுப்பேற்பது என்ற கேள்வியில் இருக்கிறது இதன் எதிர்காலம்.

நம் அன்றாடங்கள் இணையம் இல்லாமல் நகர்வதில்லை. சமூக வலைத்தளங்கள், செய்தித் தளங்கள், காணொளிகள் என நாம் எங்கு சென்றாலும் விளம்பரங்கள் நம்மைப் பின்தொடர்கின்றன. விளம்பரங்கள் தொந்தரவுதாம். அதிலும் சம்பந்தம் சம்பந்தம் இல்லாத விளம்பரங்கள் நம்மை இன்னும் கடுப்பேற்றும். இந்த இடத்தில்தான் செயற்கை நுண்ணறிவு சிறப்பாக வேலை செய்கிறது. நீங்கள் சுற்றுலா செல்லலாமா எனக் குடும்பத்துடன் பேசிக்கொண்டிருந்தாலே போதும். கூகுளில் தேடக்கூட வேண்டாம். பெரும்பாலான மின்னணு சாதனங்கள் நாம் பேசுவதை ஒட்டுக் கேட்டுக்கொண்டுதான் இருக்கின்றன. நாமாக செட்டிங்க்ஸில் தேடிப்போய் ஒட்டுக் கேட்காதே என்று சொல்லாதவரை நாம் பேசும் எல்லாமே தகவல்களாகச் சேகரிக்கப்படுகிறது. இதுவரை சென்று வந்த இடங்கள், செய்த சாகசங்கள் எல்லாமும்கூடத் தரவாகச் சேமிக்கப்படுகிறது. தரவுகளைக் கொண்டு மனிதர்களைப் புரிந்துகொள்கிறது ஏஐ.

வழக்கமாக நீங்கள் செல்வது மலைப்பிரதேசமா அல்லது கடற்கரை நகரமா, தங்கும் ஓட்டல், சாப்பிடும் உணவு, பயண மார்க்கம் எல்லாவற்றையும் செயற்கை நுண்ணறிவு வேகமாக ஆராய்ந்து உங்களுக்கு ஏற்ற பிரத்யேகமான விளம்பரங்களைக் காட்டும். வழக்கமாக ஐந்து நட்சத்திர விடுதியில் தங்குவீர்கள் என ஒரு விளம்பரத்தைக் காட்டினால் நீங்கள் ஆர்வம் காட்டவில்லை என்றால் விட்டுவிடாது. ஒருவேளை வழக்கத்துக்கு மாறாக வானத்தில் நட்சத்திரத்தைப் பார்த்துக்கொண்டே தங்க விரும்புகிறாரோ என யோசித்து டென்ட் தங்குமிடங்களைக் காட்டும். இப்படி அந்தந்த நேரத்து மனநிலையைத் தரவுகளாக மாற்றி அதற்கேற்ப செயல்படும்.

விளம்பரங்கள் மட்டுமில்லை, சமூக வலைத்தளங்களில் நீங்கள் பார்க்கும் விஷயங்கள் எல்லாமே இப்படிச் செயற்கை நுண்ணறிவின் மூலம்தான் உங்களுக்குக் காண்பிக்கப்படுகின்றன. நீங்களும் உங்கள் நண்பரும் ஒரே மாதிரியான நண்பர்களுடன், ஒரே மாதிரி பக்கங்களுக்கு விருப்பக் குறியிட்டிருந்தாலும் நீங்கள் இருவரும் பார்ப்பது வேறு வேறு பதிவுகளைத்தாம். நீங்கள் எந்த மாதிரி பதிவுகளை அதிகம் படிக்கிறீர்கள், விருப்பக் குறியிடுகிறீர்கள் என்பதைப் கொண்டே உங்கள் திரையில் பதிவுகள் தெரியும். காணொளிகளும் அப்படித்தான். விருப்பக்குறியை அழுத்தாவிட்டால்கூட எத்தனை விநாடிகள் அந்தப் பதிவு தெரியும் திரையில் இருக்கிறீர்கள் என்பதையும் கணக்கிடும். அதற்கேற்ப தொடர்புடைய பதிவுகள் வந்துகொண்டே இருக்கும்.

கடந்த ஆண்டு இறுதியில் சாட் ஜிபிடி எனும் ஓப்பன்ஏஐ மென்பொருள் சோதனை முறையில் மக்கள் பயன்பாட்டுக்கு வந்தது. குறைகள் இருந்தாலும் அமோக வரவேற்பைப் பெற்றது. இதைத் தொடர்ந்து கூகுள் பார்ட் எனும் உரையாடல் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் விரைவில் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சாட் ஜிபிடி சேகரிக்கப்பட்ட தகவல்களைக் கொண்டு மட்டும்தான் உரையாடலை நிகழ்த்தும். ஆனால், கூகுள் பார்ட் இணையச் செய்திகள், வானிலை, நம்முடைய தேடுதல் வரலாறு, இடம், காலம் எல்லாவாற்றையும் கணக்கில் கொண்டு பதில் தரும் என்கிறார்கள். கூடிய விரைவில், மனிதருடன் உரையாடுவது போன்ற துல்லியத்தை இந்த உரையாடல் செயற்கை நுண்ணறிவில் எதிர்பார்க்கலாம்.

கல்வித்துறையில் தேர்வு வைப்பது, காணொளி மூலம் கற்றலை எளிதாக்குவது எனக் கணினித் தொழில்நுட்பம் பெரியளவில் உதவுகிறது. ஒவ்வொரு மாணவரின் கற்றல் மற்றும் புரிதல் அளவு வெவ்வேறானது. அதிக மாணவர்கள் படிக்கும் இடங்களில் தனிக்கவனம் கொடுக்க முடியாததாலேயே பல பிள்ளைகள் கல்வியில் பின்தங்குகிறார்கள். கொடுக்கப்பட்ட கால அளவில் ஆசிரியர் எல்லா பிள்ளைகளையும் கவனிப்பதில் சிக்கலும் உள்ளது. செயற்கை நுண்ணறிவு மூலம் ஒவ்வொரு மாணவருக்கும் பிரத்யேக கற்பிக்கும் முறைகள், தேர்வுகள் எனத் தனிக் கவனம் செலுத்த முடியும்.

பாதுகாப்பு சார்ந்த செயற்கை நுண்ணறிவு அதிகம் கூட்டம் உள்ள இடங்களைக் கண்காணிப்பதில் உதவுகிறது. நூறு கேமராக்களை வைத்தால் அதைப் பார்க்க ஒரு ஜோடி மனிதக் கண்கள் போதாது. ஆனால், செயற்கை நுண்ணறிவு தானாகவே பாதுகாப்புக் குறைபாடு நிகழ்வுகளைக் கண்டறியும். ஆயிரக்கணக்கான முகங்களில் இருந்து நாம் தேடும் ஒற்றை நபரை விரைவாகக் கண்டுபிடிக்கிறது. எந்த ஒரு நபரின் புகைப்படத்தை வைத்தும் அவர் பற்றிய தகவல்களைச் சில நொடிகளில் திரட்டுகிறது. ஒருவர் தீப்பெட்டியை எடுத்தால் கையில் சிகரெட் இருக்கிறதா அல்லது பெட்ரோல் குண்டு இருக்கிறதா என்பதைப் பொறுத்து அபாயத்தை முடிவுசெய்யும் அளவுக்கும் இதன் திறன் எதிர்காலத்தில் வளரும்.

முகம், கண்விழி ஆகியவை கடவுச்சொல்லாக பயன்படுத்தப்படும் தொழில்நுட்பம் பல இடங்களில் உள்ளது. அதுவும் இதுவும் ஒன்றா என ஒப்பிடும் அடிப்படையான தொழில்நுட்பம் இது. தற்போது டீப்ஃபேக் தொழில்நுட்பம் இதில் குழப்பத்தை உண்டாக்குகிறது. உண்மையைப் போலவே போலி புகைப்படங்கள் வீடியோக்கள் வருவது அதிகரித்துள்ளது. இது கடவுச்சொல் மட்டுமின்றி செய்தி ஊடகங்களில் மேலதிக தாக்கத்தை ஏற்படுத்துகிறது. பிரபலங்கள் பேசுவதைப் போலவேகூட போலி வீடியோக்கள் வருகின்றன. ஆபாசப் புகைப்படங்கள், வீடியோக்களில் போலிகளை உருவாக்கி, பணம் பறிக்கும் குற்றம் உயர்கிறது. எது உண்மை எது போலி எனக் கண்டறிவதில் செயற்கை நுண்ணறிவின் துணை அவசியமாகிறது. முகத்தில் வெளிப்படும் உணர்வுகளை தொழில்நுட்பம் யூகிக்க முயல்வது செயற்கை நுண்ணறிவில் சாத்தியம். ஒரு நபர் சிரிக்கும் போதும் முறைக்கும் போதும் அவர் முகத் தசைகள் எப்படி மாறுகின்றன என்னும் தரவுகளைக் கொண்டு இது செயல்படுகிறது. டீப்ஃபேக் எனப்படும் ஆழப்போலி காணொளிகளை எதிர்கொள்ள முகத்தின் உணர்வு சார்ந்த செயற்கை நுண்ணறிவு தயாராகிறது.

கணினி சார்ந்த விளையாட்டுகளில் இருக்கும் கதாபாத்திரங்களின் குணம், உணர்வை வெளிப்படுத்தும் முறை, பேசும் வசனங்கள், பதில்கள் மனித உரையாடலைப் போலவே இருப்பது எனச் செயற்கை நுண்ணறிவு நிஜ உலக அனுபவத்தைத் தர உதவுகிறது. ஆனால், தீவிரத்தன்மை அதிகரித்துக்கொண்டே வருவது பிரச்னைதான். இதனால் மன அழுத்தம் உள்ளிட்ட பிரச்னைகளும் அதிகரிக்கிறது. செயற்கை நுண்ணறிவு விளையாடுபவர்களின் மனநலனையும் கருத்தில் கொள்ளுமாறு வடிவமைக்கப் படுகிறது. அதிகம் உணர்ச்சி வசப்படுபவராக இருந்தால் தோல்வியின் வீரியம் சற்று மட்டுப்படுத்தப்படும். கேவலமாகத் தோற்று மனமுடையாமல் இருக்கலாம். அழுத்தம் தரும் வகையிலான விளையாட்டுகளை வடிவமைக்காமல் இருப்பது இன்னும் எளிய வழி.

இங்கு குறிப்பிட்டிருப்பவை மிகச்சில. மனித மூளைக்கு அதிக வேலையில்லாத பல இடங்களில் ஏஐ பயன்படுகிறது. திரும்பத் திரும்ப பெரும்பாலும் ஒரே மாதிரி செய்ய வேண்டிய பணிகளில் மனித உழைப்பை வீணாக்க வேண்டியதில்லை. மனித வாழ்வை எளிதாக்குவதும் பாதுகாப்பாக்குவதும்தான் நோக்கம். ஆனால், பல நேரத்தில் பிரச்னையைக் கொண்டுவருவதில் முதல் காரணியாகத் தொழில்நுட்பமே இருக்கிறது. பிறகு அதைச் சரி செய்ய இன்னும் மேம்பட்ட தொழில்நுட்பம் வருகிறது. நீங்களே பாம் வைத்து நீங்களே கண்டுபிடிப்பீர்களா என்பது மாதிரி இருக்கிறது. பாம் வெடிக்காத வரை நல்லது என மனதைத் தேற்றிக்கொள்ள வேண்டியதுதான்.

(தொடரும்)

படைப்பாளர்:

இரா. கோகிலா. இளநிலை கணிப்பொறி அறிவியல் படித்தவர். சிறுவயதில் இருந்தே வாசிப்பில் ஆர்வம் உண்டு. புனைவுகளில் ஆரம்பித்த ஆர்வம் தற்போது பெரும்பாலும் பெண்ணியம், சமூகம், வரலாறு சார்ந்த அபுனைவு வகை புத்தகங்களின் பக்கம் திரும்பியிருக்கிறது. பயணம் செய்வது பிடிக்கும்.  கல்விசார்ந்த அரசுசாரா இயக்கங்களில் தன்னார்வலராகச் செயல்படுகிறார்.