கும்பல் கும்பலாக வேலை நீக்கம், க்ரிப்டோகரன்சிகள் மதிப்பு பாதாளம் சென்றது என எதிர்மறை செய்திகளாக இருந்தது இந்த வருட தொழில்நுட்ப உலகம். வருட முடிவில் சாட்ஜிபிடி (ChatGPT) வைரல் செய்தி புது உற்சாகத்தைக் கொண்டுவந்திருக்கிறது தொழில்நுட்ப ஆர்வலர்கள் மத்தியில்.
ட்விட்டரை வாங்குவேன், வாங்க மாட்டேன், வேலையை விட்டு எல்லாரையும் அனுப்புவேன், திரும்ப நானே கூப்பிடுவேன் என குழப்பியடித்த நம் ட்விட்டர் முதலாளி எலான் மஸ்க்ன் பண உதவியுடன் தொடங்கப்பட்ட நிறுவனம்தான் ஓப்பன் ஏஐ. அவர் விலகிய பிறகு மைக்ரோசாப்ட் ஒரு பில்லியன் டாலர் கொடுத்து இணைந்தது. இரண்டாயிரத்து பதினைந்தில் சாம் அல்ட்மன் தொடங்கிய மொழி சார்ந்த நுண்ணறிவு நிறுவனம் இது.
கூகள் அசிஸ்டெண்ட், அமேசானின் அலெக்ஸா, ஆப்பிளின் சிரி என பல மென்பொருள்கள் செயற்கை நுண்ணறிவை மையமாகக் கொண்டவைதான். போன் செய்வது, பாடல் அல்லது படம் போடுவது, டிக்கட் புக் செய்வது போன்ற சிலவற்றை இவை செய்யும். பல நேரங்களில் வாடிக்கையாளர்களிடம் உரையாடும் சாட்பாட்கள் கிளிப்பிள்ளை மாதிரி பதிந்து வைத்த பதில்களையே திரும்பத் திரும்ப கொடுக்கும். நாம் கேட்கும் கேள்விக்கு மிகப் பொருத்தமான பதில்களைத் தரும் நுண்ணறிவுத் திறனைப் பெற கணினியால் முடியுமா என்ற கேள்விக்குப் பல நிறுவனங்கள் பதில்களை ஆய்வு செய்துகொண்டுதான் இருக்கிறார்கள். அப்படி ஒரு நிறுவனம்தான் ஓப்பன் ஏஐ. கூகுளின் தேடுபொறி மாதிரி ஏற்கெனவே இருக்கும் தகவலை வெறுமனே தேடித் தராமல் ஒரு மனிதன் அந்த இணைய தகவல்களைப் படித்து உணர்ந்து பதில் எழுதுவது போல மாற்றித் தர முயல்கிறது இந்த மென்பொருள்.
கேள்விகளையும் தேடுபொறியில் இடுவது போலச் சுருக்கமாக இல்லாமல் நாம் சாதாரணமாக சக மனிதரிடம் பேசும்போது எப்படிக் கேட்போமோ அப்படியே கேட்கலாம். பதில்கள் பெரும்பாலும் தேடுபொறியைப் போல விக்கிபீடியா, இணையதளம், செய்தித்தளங்களில் இருந்துதான் எடுக்கிறது இந்த மென்பொருள். ஆனாலும் இன்றைய தேதி வரையான துல்லியமான விவரங்கள் இல்லை. குறிப்பிட்ட காலம் வரை சேகரிக்கப்பட்ட விவரங்கள் மட்டும்தாம். பதில்கள் குறிப்பாக உங்கள் கேள்வி உள்ளீடுகளை வைத்துதான் என்பதால் எவ்வளவு விவரமாக, தெளிவாக உங்கள் கேள்வி இருக்கிறதோ அவ்வளவு தரமாக பதில் இருக்கும். (https://beta.openai.com/playground)
அதிக தகவல்கள் அடங்கிய நீளமான கேள்விகளுக்குப் பெரிய பொருத்தமான விளக்கமான பதில்களைத் தரும். செய்தித்தளங்கள் போல கட்டுரை எழுதித்தரும். கவிதை எழுதும். விளம்பர வாசகங்கள் எழுதும். கடவுளின் துகள், கருந்துளை, கணித சூத்திரங்கள், அறிவியல் கேள்விகள் என எதைப் பற்றி வேண்டுமானாலும் கேட்கலாம். வரும் பதில் இணையத்தில் ஏற்கெனவே இருக்கும் தகவல்களாக இருந்தாலும்கூட, புதிய வார்த்தைகள் கொண்ட இணையத்தில் எங்கும் இல்லாத பதில்தான் கிடைக்கும். திரும்பத் திரும்பத் கேட்டால் வேறு வார்த்தைகள் கொண்ட வேறு வேறு பதில்கள் கிடைக்கும். இதை மாணவர்கள் தங்கள் பள்ளிக்கூட கட்டுரை எழுதுவது முதல் இளைஞர்கள் காதல் கவிதை எழுதுவது வரை விதவிதமாகப் பயன்படுத்துகிறார்கள். கவிதை என்ன கணினி நிரல்கூட எழுதுகிறார்கள்.
ஓப்பன் ஏஐ மென்பொருளின் சாட்பாட் வடிவம்தான் சாட்ஜிபிடி. (labs.openai.com/auth/signup) இணையத்தில் இருக்கும் அதே தகவல்கள்தாம். எனினும் சொல்லும் விதத்தில்தான் வித்தியாசம் இருக்கிறது. சக மனிதனின் தொனியைப் பயன்படுத்துவதால் இது ஓர் உரையாடல் போல இருக்கிறது. எனவேதான் இந்த வைரல் பிரபலம். துல்லியமான, சரியான தகவல்கள் எனச் சொல்ல முடியாது. சமயங்களில் தவறான தகவல் மட்டுமின்றி இன, மத உணர்வுகளை கேலி செய்யும் வகையிலும்கூடப் பதில்கள் வருகிறது. இன்னும் சோதனை கட்டத்தில் இருப்பதால் இதெல்லாம் விரைவில் மேம்படுத்தப்படும் என்கிறார்கள்.
இப்படிக் கதை, கவிதை, கட்டுரை, கணினி நிரல் எல்லாவற்றையும் கணினி மென்பொருளே எழுதிவிட்டால் மனிதர்கள் வேலைவாய்ப்பு பறிபோகுமா என அச்சம் வேண்டாம். தானியங்கி மொழிபெயர்ப்பு மென்பொருள்கள் வந்தபோதும் இப்படியான அச்சம் எழுந்தது. ஆனால், இந்த மென்பொருள்கள் சுலபமாக மொழிபெயர்க்கும் வாய்ப்புகளை அதிகாமாக்கியது. சந்தை அதிகமானதால் வேலையும் அதிகமானது. துல்லியத்தைச் சரிபார்க்க மொழிபெயர்ப்பு அறிவுடைய மனிதர்களும் தேவைப்பட்டார்கள். அதிக மொழிபெயர்ப்பு பணிகள் உருவாகி, வேலைவாய்ப்பும் ஊதியமும் நன்றாகக் கிடைக்கும் துறையாக வளர்ந்திருக்கிறது.
இப்போதைக்கு சாட்ஜிபிடியில் கிடைக்கும் பதிலை கூகுளில் சரிபார்க்கும் அளவில்தான் அதன் தரம் இருக்கிறது. வருங்காலத்தில் கூகுளேகூட அரட்டை அடிக்கும் வகையில் தளத்தை மாற்றினாலும் ஆச்சரியமில்லை. தற்போது ஆங்கிலத்தில் மட்டும் கிடைக்கும் இந்தச் சேவை விரைவில் பல மொழிகளில் விரிவடையும்.
இந்த ஓப்பன் ஏஐ நிறுவனத்தின் மென்பொருள் மொழிசார்ந்து மட்டும் இயங்கவில்லை. படங்களையும் இப்படிப் புதிதாக உருவாக்கித் தருகிறது. நீங்கள் விளக்கமாக என்ன மாதிரி படத்தை வரைய விரும்புகிறீர்கள் எனத் தட்டச்சு செய்தால் போதும். ஸ்பானிஷ் சர்ரியலிச கலைஞர் சல்வடார் டாலி மற்றும் அனிமேஷன் படமான வால்ஈ ரோபா இரண்டையும் இணைத்து டால் ஈ என்ற பெயரில் உள்ள இணையதளம் இது. உங்கள் வார்த்தைகளைப் படமாக மாற்றித் தந்துவிடும். கையில் பச்சை நிறப் பேனாவை வைத்து எழுதிக்கொண்டிருக்கும் குட்டை முடியுடைய பெண் எனத் தட்டச்சு செய்தால் கிடைக்கும் படங்களைப் பாருங்கள்.
இப்படி ஒரு பெண்ணை புதிதாக உருவாக்கியது நான் உள்ளீடு செய்த எழுத்துகளும் இந்த மென்பொருளின் செயற்கை நுண்ணறிவும்தான். இப்படி ஒரு பெண்ணும் படமும் இணையத்தில் எங்கும் இல்லை. வார்த்தைகளைக் கொண்டு உடனடியாக உருவான பெண்தான் இவள்.
உங்கள் புத்தகத்திற்கு அட்டைப்படம் வடிவமைக்கக்கூட இதைப் பயன்படுத்தலாம். குறிப்பிட்ட வகை ஓவியம் அல்லது குறிப்பிட்ட ஓவியரின் சாயலைப் போல படம் இருக்க வேண்டும் என்றுகூடத் தட்டச்சு செய்யலாம். மேலே உள்ள படம் படித்துக்கொண்டிருக்கும் கிராமப் பெண்ணின் ஆயில் பெயிண்டிங் ஓவியம். ஓவியர் இளையராஜாவின் சாயலில் இருக்க வேண்டும் என்ற வார்த்தை கட்டளையைக் கொண்டு செயற்கை நுண்ணறிவு புதிதாக உருவாக்கிய ஓவியங்கள்.
பில்லியன் டாலர் முதலீடுகள் கிடைத்தாலும் இப்படிப் புதியவகை மென்பொருள்களை உருவாக்க செலவு அதிகம் பிடிக்கும். எனவேதான் இந்நிறுவனத்தின் தலைமை அதிகாரி பணம் ஈட்டும் வழிவகைகளைச் சிந்தித்துக்கொண்டிருப்பதாகத் தெரிவிக்கிறார். ஆகும் செலவைப் பார்த்தால் கண்ணு வேர்க்குது என ட்விட்டரில் புலம்புகிறார். அதிகம் பேர் பயன்படுத்தும் போதுதான் இத்தகைய மென்பொருள்கள் தரம் உயரும். துல்லியமாகவும் இருக்கும். பயன்படுத்துபவர்கள் கொடுக்கும் உள்ளீடுகள்தாம் இந்த மென்பொருள்களை மேம்படுத்தும். எனவேதான் தற்போதைக்கு இலவசமாக கிடைக்கும் வகையில் உள்ளன இந்த மென்பொருள்கள். ஆர்வம் உள்ளவர்கள் பயன்படுத்திப் பார்க்கலாம்.
(தொடரும்)
படைப்பாளர்:
இரா. கோகிலா. இளநிலை கணிப்பொறி அறிவியல் படித்தவர். சிறுவயதில் இருந்தே வாசிப்பில் ஆர்வம் உண்டு. புனைவுகளில் ஆரம்பித்த ஆர்வம் தற்போது பெரும்பாலும் பெண்ணியம், சமூகம், வரலாறு சார்ந்த அபுனைவு வகை புத்தகங்களின் பக்கம் திரும்பியிருக்கிறது. பயணம் செய்வது பிடிக்கும். கல்விசார்ந்த அரசுசாரா இயக்கங்களில் தன்னார்வலராகச் செயல்படுகிறார்.
தொடர் அருமை. தொழில்நுட்பம் குறித்த அனுபவம் இல்லாதவர்களுக்கும் புரியும் படி அமைந்திருக்கிறது.
வலைத்தளம் போல புகைப்படங்கள்/ அஞ்சல் தலைகள் போன்றவற்றை ஆண்டு, நாடு போன்று ஏதோ ஒருவிதமாக வகைப்படுத்தி, அந்த புகைப்படம் குறித்து, குறிப்புகள் எழுதும் படி ஏதாவது தொழில்நுட்பம் சொல்லித்தர முடியுமா?