உறவுகளில் மிக முக்கியமான உறவு எதுவாக இருக்கும்? முதன்மையான உறவு எந்த உறவாக இருக்கும்? அது யாருடனான உறவாக இருக்க முடியும்?
நம்மில் பெரும்பாலானவர்களின் பதில்கள் பெற்றோர்-பிள்ளைகள் அல்லது கணவன்- மனைவி என்ற பதிலாகத்தான் இருக்கும்.
ஆனால், முதன்மையான, முக்கியமான உறவு என்றால், அது கண்டிப்பாக நம்மைப் பற்றி முழுவதுமாக அறிந்த ஒரு நபர் உடனான உறவாகத்தானே இருக்க முடியும்? நம்மிடம் அதிக நேரம் செலவிட்ட ஒரு நபருடன் ஆன உறவாகத்தானே இருக்க முடியும்? அந்த நபர் உங்களைப் பற்றிய ரகசியங்களை எல்லாம் அறிந்தவராகத்தானே இருக்க முடியும்?
அப்படியானால் அந்த நபர் யார்? அந்த உறவு எது?
உங்கள் வாழ்வில் அந்த நபர் நீங்கள்தான். அந்த முக்கியமான உறவு உங்களுக்கும் உங்களுக்குமான உறவுதான். ஏனென்றால் உங்களைப் பற்றி நன்றாகத் தெரிந்தவர், உங்கள் வாழ்வில் நடந்தவை குறித்து அனைத்தும் அறிந்தவர் நீங்கள்தாம். இதுவரை ஒரு நிமிடம்கூட இடைவெளி இல்லாமல் அதிக நேரம் செலவிட்டதும் உங்களிடம்தான்.
அந்த முக்கியமான உறவு, நமக்கும் நமக்குமான ஓர் உறவு எப்படி இருக்கிறது? அதைத் தெரிந்துகொள்வது எப்படி?
இப்போது உங்களிடம் ஒரு கேள்வி வைக்கிறேன். உங்கள் கடந்த காலம் எப்படி எல்லாம் இருந்திருந்தால் உங்களுக்குப் பிடிக்கும்?
கடந்த காலத்தைப் பற்றி யோசிக்கும்போது பொதுவாக எல்லாருக்கும் ஏதோ ஒரு குறை இருந்து கொண்டுதான் இருக்கும். ஒவ்வொருவரும் கடந்த காலத்தைப் பொறுத்தவரை நிறைய விமர்சனங்களை வைத்திருப்போம். அது நம் பெற்றோரைக் குறித்ததாக இருக்கலாம், குழந்தைப் பருவம் குறித்ததாக இருக்கலாம் அல்லது, நம் கல்லூரிப் பருவம் குறித்ததாக இருக்கலாம்.
உயர்ந்த பதவியில் பணிபுரிந்து வரும் என்னுடைய தோழி ஒருவரிடம் அவருடைய பெற்றோரைக் குறித்தோ அல்லது அவருடைய பள்ளிப்பருவம் குறித்தோ ஏதாவது கேட்டால் சரியாக பதில் சொல்ல மாட்டார். கோபமும் எரிச்சலும் வரும். உடனே அந்த டாப்பிக்கை மாற்றி பேசுவார்.
ஒரு நாள் தன்னுடைய கடந்த காலம் குறித்து, இவ்வாறு பகிர்ந்து கொண்டார். “சிறுவயதில் வறுமையில் இருந்தேன். அப்பா ஒரு குடிகாரர். குடித்துவிட்டுச் சில நேரம் ரோட்டோரமாக விழுந்து கிடப்பார். என்னுடைய குழந்தைப் பருவம் மாதிரி வேறு யாருக்கும் அமையக் கூடாது”.
தான் விரும்பிய வாழ்க்கையை நல்லபடியாக அமைத்துக்கொண்டு மகிழ்ச்சியாகவே வாழ்ந்துவருகிறார். பெற்றோரைப் பற்றிக் கேட்பது என்பது ஓர் எளிமையான, சாதாரணமான கேள்வி. ஆனால், அவருக்கு ஏன் கோபமும் எரிச்சலும் வருகிறது?
ஏனென்றால், தன்னுடைய கடந்த காலத்தோடு தன்னை அடையாளப்படுத்திக்கொள்கிறார். அதுதான் தான் என நினைத்துக்கொள்கிறார்.
சில விஷயங்களில் நாமும் அப்படிதான். நம்முடைய கடந்த காலத்தோடு, கடந்தகால நிகழ்வுகளோடு நம்மை அடையாளப்படுத்திக்கொண்டிருக்கிறோம். சாதாரண காரியங்களுக்கு, கோபமும் எரிச்சலும் கொள்வோம். பிறரிடம் கடினமாகக்கூட நடந்துகொள்வோம். எளிமையான கேள்விக்கு எளிமையாக விடை அளிக்க முடிவதில்லை. ஏனென்றால், நம் பழைய அடையாளங்கள் பெரும்பாலும் எதிர்மறையானவை.
ஆனால், நீங்கள் உங்கள் கடந்த காலம் அல்ல. உங்கள் கடந்தகால அனுபவங்களும் அல்ல. அது கடந்து போன ஒன்று. அதை அப்படியே ஏற்றுக்கொள்ளலாம் இன்றும் இப்போதும். அதோடு நம்மை இணைத்துக்கொள்வதற்கும் அடையாளப்படுத்திக்கொள்வதற்கும் அவசியம் இல்லை.
ஆமாம் உண்மைதான், என் குழந்தைப் பருவம் நன்றாக இல்லை அதனால் என்ன?
உண்மைதான், எனது அப்பாவுக்குப் போதைப் பழக்கம் இருந்தது. அதனால் என்ன எனச் சொல்லி அதை ஏற்றுக்கொள்ளலாம்.
உங்கள் கடந்த காலத்தை நீங்கள் ஏற்றுக்கொள்ளாமல், மற்றவரிடம் சொல்லி, அவரிடம் இருந்து அங்கீகாரத்தை எதிர்பார்த்து, அவர் உங்களை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று நினைப்பது எந்த வகையில் சாத்தியம்?
அதுபோல உங்கள் கடந்த காலத்தைக் குறித்து, உங்களைக் குறித்து நீங்கள் குறைவாக மதிப்பிட்டுவிட்டு, அடுத்தவர் உங்களை நன்றாக மதிப்பிட வேண்டும் என்று எதிர்பார்த்தால் அது எப்படி நடக்கும்?
சரி, கடந்த காலம் போகட்டும். இப்போது இருக்கும் உங்களை உங்களுக்கு எந்த அளவு பிடித்திருக்கிறது? இப்போதும் அதே விமர்சனங்கள்தாம்.
உடல் எடை சிறிது குறைந்துவிட்டால் நன்றாக இருக்கும்.
தலையில் வழுக்கை மட்டும் விழாமல், முடி இருந்தால் நன்றாக இருக்கும். என்னைவிடத் தகுதி குறைந்தவர்கள் எல்லாம் லட்ச ரூபாய்க்கு மேல் சம்பாதிக்கிறார்கள். நானும் லட்ச ரூபாய்க்கு மேல் சம்பாதித்தால்தான் என்னால் நிம்மதியாக இருக்க முடியும்.
காதலை அவர் ஏற்றுக்கொண்டால் மட்டுமே என்னால் மகிழ்ச்சியாக இருக்க முடியும்.
மற்றவர்கள் உங்களை விமர்சிப்பது இருக்கட்டும். உங்களால் உங்கள் மேல் விமர்சனங்களை வைக்காமல் இருக்க முடிகிறதா?
நீங்கள் குண்டாக இருக்கிறீர்கள, உங்கள் தலை வழுக்கையாக இருக்கிறது, நீங்கள் குறைவாகச் சம்பாதிக்கிறீர்கள், அல்லது உங்களை ஒருவரும் காதலிக்கப் போவதில்லை என்பது உலகம் உங்கள் மேல் வைக்கும் விமர்சனங்கள் அல்ல. நன்றாக யோசியுங்கள். இவை அனைத்தும் நீங்கள் உங்கள் மேல் வைக்கும் விமர்சனங்கள்தாம்.
பொதுவாக ஒருவருடன் நாம் நல்ல உறவில் இருந்தால், அவரை நமக்கு மிகவும் பிடிக்கும். அவரை அப்படியே ஏற்றுக்கொள்வோம். மாற வேண்டும் என்று நிர்பந்திப்பது இல்லை. அவர் மீது விமர்சனங்கள் வைப்பதில்லை.
எனவே முதலில் நம்முடனான உறவைச் சரிப்படுத்திக்கொள்வோம். நம்மை நாம் அப்படியே ஏற்றுக்கொள்வோம். மாற்றக்கூடிய விஷயங்களை நல்லவிதத்தில் சொல்லிப் பழகுவோம்.
எடுத்துக்காட்டாக, நான் இப்போது சிறிது எடை கூடுதலாக உள்ளேன், அதனால் என்ன தேவைப்பட்டால், நான் குறைத்துக் கொள்ளலாம். நான் இப்போது இவ்வளவு சம்பாதித்துக்கொண்டு இருக்கிறேன், அதனால் என்ன இன்னும் நிறைய சம்பாதிக்கலாம். நான் எல்லாரையும் நேசிக்கிறேன்; எல்லாரும் என்னை நேசிக்கிறார்கள் என மாற்றிச் சொல்லலாம்.
முதலில் உங்களைக் கொண்டாட படியுங்கள். உங்களைக் கொண்டாட ஆரம்பியுங்கள். அதற்கான முதற்படிதான் உங்கள் மீதுள்ள விமர்சனங்களைக் கைவிடுவது. முடிந்த அளவுக்கு உங்களை நீங்களே பாராட்டிக்கொள்ளுங்கள். கடந்த காலத்தை எந்த விமர்சனமும் இல்லாமல் கடந்துவிட்ட ஒன்றாக மட்டும் பாருங்கள். நீங்கள் நீங்களாக இருப்பதில் மகிழ்ச்சியாக இருங்கள்.
முதலில் நமக்கும் நமக்குமான உறவை நன்றாக அமைத்துக்கொள்ளலாம். இந்த முதன்மையான உறவு சரியாக இருக்கும் பட்சத்தில், சுற்றியிருக்கும் உறவுகளும் சரியாகவே அமையும்.
எந்தச் சூழ்நிலையாக இருந்தாலும் சரி, விமர்சனங்கள் எதுவுமில்லாமல், உங்களுக்காகத் துணைநிற்கும் முதல் ஆளாக இருங்கள். ஏனென்றால், உங்கள் இறுதிமூச்சு வரை உங்களுடன் பயணிக்கப் போகும் நபரும் நீங்கள்தான்.
விமர்சனங்கள் எதுவும் இல்லாமல், நம்மை நாம் ஏற்றுக்கொள்வதன் மூலம் முதன்மையானதும், முக்கியமானதுமான, நமக்கும் நமக்குமான உறவைச் சரிசெய்துகொள்வோம். இந்த நொடிவரை வாழ்வின் சவால்களைச் சமாளித்து, எந்தத் தருணத்திலும் கைவிடாமல் (give up) வாழ்ந்துவரும் உங்களைக்கொண்டாடுங்கள்.
வாழ்வைக்கொண்டாடலாம்!
(தொடரும்)
படைப்பாளர்:
ஜான்சி ஷஹி
மனநல ஆலோசகர். மன நலத்திற்கான தெரப்பிகளையும் ஆற்றுப்படுத்துதலையும் வழங்கி வருகிறார். வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழவும், பிடித்த எதிர்காலத்தை அமைத்துக்கொள்ளவும், பொது மக்களுக்கு பயிற்சிப் பட்டறைகளை நடத்திவருகிறார். இவர் பெங்களூர் கிரைஸ்ட் பல்கலைக்கழகத்தில் மாணவர் மன நல ஆலோசகராக (student counsellor) பணியாற்றியது குறிப்பிடத்தக்கது.
நல்ல கட்டுரை 👌👌👌
நன்றி!💖